கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு: பாசிச எதிர்ப்புப் போராட்ட சவால்!

$articleData->title

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு: பாசிச எதிர்ப்புப் போராட்ட சவால்!

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா என்பது கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செழுமையான மற்றும் புகழ்பெற்ற வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு நிகழ்வு மட்டுமல்ல, இன்றைய சவால்களை எதிர்கொள்வதற்கு வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கானதாகும். இன்று ஆர்எஸ்எஸ்ஸூம்கூட தனது நூற்றாண்டைக் கொண்டாடி வருகிறது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு (பிப்ரவரி 1948 இல் சர்தார் படேல் பயன்படுத்திய அந்த வார்த்தைகளையே மீண்டும் சொல்வதானால்) சுதந்திரத்திற்கு ஆபத்து நேராமல் இருக்க ஆர்எஸ்எஸ்-ஐத் தடை செய்த அதே இந்திய அரசு, இன்று ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. இன்று, ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பதனாலேயே, அதன் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும், மிக முக்கியமாக பாசிச ஆர்எஸ்எஸ்-க்கு மிகக் கூர்மையான சித்தாந்த எதிரியாக இருந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டதாக, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சவக்குழி தோண்டப்பட்டுவிட்டதாக முன்னிறுத்தப்படுகிறது. இந்தப் பரப்புரைத் தாக்குதலை முறியடித்து, இருபதாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும், ஏகாதிபத்தியத்தையும் பாசிசத்தையும் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்ட அதே துணிச்சலையும் நெஞ்சுருதியையும் மீண்டும் வெளிப்படுத்துவதே இன்று  இந்திய கம்யூனிஸ்டுகள் நம்முன்னுள்ள முதன்மையான சவாலாகும்.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் 1848 இல் கம்யூனிஸ்ட் அறிக்கையை (Communist Manifesto) எழுதியபோது, ஐரோப்பாவில் உடனடியாக நிகழும் என்று எதிர்பார்த்த புரட்சி நிகழவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆயினும், கம்யூனிஸ்ட் அறிக்கை நவீன காலத்தின் உலகளாவிய உன்னத .நூலாக (global classic) மாறியிருக்கிறது என்றால், அந்த நூல் ஏற்படுத்திய உத்வேகமும், அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த மகத்தான மக்கள் போராட்டங்களும் புரட்சிகர எழுச்சிகளுமே அதற்குக் காரணம். அதுவே மார்க்சியத்தின் வரலாற்றுச் சக்தியாக இருந்துள்ளது; உலகை ஆராய்வது மட்டுமல்லாமல், அதை மாற்றியமைப்பதும்தான் அதன் நோக்கம். கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் பிரபலமாக வலியுறுத்தியது போல்: "தத்துவஞானிகள் உலகத்தை பல்வேறு வழிகளில் விளக்கியிருக்கிறார்கள்; ஆனால் முக்கியமானது அதை மாற்றியமைப்பதே ஆகும்."

   இந்த உணர்வோடுதான் இந்திய கம்யூனிஸ்டுகள் தற்போதைய சூழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்றியமைப்பதற்கான வழிகளைக் காண வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளின் பெரும்பகுதி, ஆர்எஸ்எஸ் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டே இருந்தது. ஆர்எஸ்எஸ்-இன் மிகப்பெரிய சித்தாந்த எதிரியாகவும், இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் நிலைத்து நிற்கும் போராளியாகவும் விளங்கும் கம்யூனிஸ்ட் இயக்கம், பாசிச முகாமிற்குப் பதிலடி கொடுத்து, இறையாளுமையுள்ள, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு எனும் இந்திய அரசியலமைப்பின் தோற்றத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.

  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கால் நூற்றாண்டு காலம் காலனித்துவ ஆட்சியின் கீழ் கழிந்தது. இது காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால பன்முகத் தேடலின் ஒரு சிறந்த அத்தியாயமாக அமைந்தது. தனது சித்தாந்தத் தெளிவு மற்றும் போர்க்குணமிக்கத் தீர்மானத்துடன், கம்யூனிஸ்ட் இயக்கம் பல நேரங்களில் சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் திசையையும் நிர்ணயித்தது. முழுச் சுதந்திரத்திற்கான அழைப்பை விடுத்தது முதல், சுதந்திரப் போராட்டத்தை ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்துடனும், தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்கான போராட்டத்துடனும் இணைத்தது வரை, நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகளை புதிய அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான குடியரசு வடிவத்திற்கு மாற்றியது வரை, கம்யூனிஸ்ட் இயக்கம், இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வின் சக்திவாய்ந்த அச்சாணியாகவும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவைப் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையிலும், திட்டமிடப்பட்ட பொருளாதார முறையிலும் நிலைநிறுத்துவதற்கான அரணாகத் திகழ்ந்தது.

இந்திய தேர்தல் வரலாற்றின் ஆரம்ப காலங்களில், எதிர்க்கட்சி நீரோட்டத்தின் முன்னணியாக உருவெடுத்தது முதல், நாடு விடுதலை பெற்ற பத்து ஆண்டுகளுக்குள், இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகமாகப் பயணிக்கத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள், காங்கிரஸ் அல்லாத முதல்  அரசாங்கத்தை ஒரு மாநிலத்தில் அமைத்தது வரையிலும் தெலுங்கானா, நக்சல்பாரி போன்ற புரட்சிகர மக்கள் எழுச்சிகளை உருவாக்கியது வரையிலும், கம்யூனிஸ்ட் இயக்கமானது வெகுஜன எழுச்சி மற்றும் தீவிரமான முன்னேற்றத்தின் சிறந்த கட்டங்களைக் கண்டுள்ளது. ஆயினும், கடந்த மூப்பது ஆண்டுகளில், குறிப்பாக 2014 முதல், இடதுசாரிகள் தேர்தல் அரங்கில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளனர் என்கிற உண்மையை மறுக்க முடியாது. முன்னெப்போதும் கண்டிராத அளவிலான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் எழுச்சி மற்றும் உறுதிப்பாட்டின் பின்னணியில் பார்க்கும்போது இந்த வீழ்ச்சி இன்னும் கூடுதலாகத் தெரிகிறது.

   இந்தியா இத்தகைய நிலையை அடைந்தது எப்படி என்பது இன்றைய விவாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட, தனியாக ஆய்வு செய்திட வேண்டிய விஷயமாகும். 2025 அக்டோபரில் தனது பாசிச சித்தாந்த செயல்பாட்டின் நூறு ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்எஸ்எஸ்-இன் தொடர் பயணத்தை, 1990களின் முற்பகுதியில் தொடங்கிய தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற நவதாராளவாத கொள்கைகளைத் தீவிரமாகப் இந்தியா பின்பற்றி வரும் பின்னணியில், தற்போதைய சூழலை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை, குறிப்பாக 1970களின் அவசரநிலை காலத்திலிருந்து, அவ்வப்போது சீர்குலைப்பது, பல்வேறு வகையான சட்டத்திற்குப் புறம்பான வன்முறைகள் மற்றும் கொடூர சட்டங்களை நிறுவனமயமாக்குவது ஆகியன, பல வழிகளில் சர்வாதிகார ஆட்சி முறைக்கான ஒரு வார்ப்பை (template) தயார் செய்தன. அது இப்போது ஈவிரக்கமின்றி ஜனநாயக நிறுவனங்களை முழுமையாகக் கைப்பற்றும், விதிமுறைகளைத் துணிச்சலாக தலைகீழாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

  அணிசேரா கொள்கை, மூன்றாம் உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய வெளியுறவுக் கொள்கைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்லும் திறனைப் பிரதிபலித்தன. ஆனால், அமெரிக்காவிற்கு நிரந்தரமாக, போர்த்தந்திர ரீதியிலான அடிபணிதல் கொள்கையைப் பின்பற்றுவது, இஸ்ரேலுடன் போர்த்தந்திர ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் இணக்கத்தை வளர்த்து வருவது, உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பின்னணியில் எழுந்த இந்திய தேசியவாத்தை, பாகிஸ்தான், சீனா, தற்போது வங்காளதேசம், போன்ற அண்டை நாடுகளுடனான போட்டியாகவும் மோதலாகவும் சர்ச்சைகுரிய வகையில் சீரழிந்து போகச் செய்துள்ளது ஆகியவற்றின் மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கையானது குறுகியும் இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய பார்வை குறைந்தும் போய்விட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஆர்எஸ்எஸ், தனது வெறுப்பு நிறைந்த, குறுங்குழுவாத, பிரத்தியேக இந்துத்துவா கருத்தியலை, ஒருபோதும் பாதுகாப்பு இல்லாத, கையறுநிலை கொண்ட இறுகிப்போன இந்தியத் தேசியவாதத்துடன் இணைக்கிறது.

   இத்துடன், தீவிர வலதுசாரி எழுச்சியின் சர்வதேச சூழலையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். காசாவில் மாதக்கணக்கில், இடைவிடாத இனப்படுகொலையை இஸ்ரேல் தொடர முடிகிறது; எந்த ஒரு முக்கிய ஐரோப்பிய நாட்டிடமிருந்தும் ஒரு கண்டனமோ அல்லது கவலையோகூட இல்லாமல் வெனிசுலா போன்ற ஒரு சுதந்திர நாட்டின் ஜனாதிபதியை அமெரிக்க ஜனாதிபதியால் கடத்த முடிகிறது. இந்தியாவில் இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சியை, இத்தகைய உலகளாவிய போக்கின் மற்றொரு உதாரணமாக நாம் காணலாம். பண்டைய ஐரோப்பிய காலகட்டத்திலும் கூட, பாசிசம் என்பது தேசியத் தனித்தன்மைகளுடன் கூடிய ஒரு சர்வதேச நிகழ்வாகவே இருந்தது. இந்திய வகை பாசிசத்திலும் இதுவேதான் நிலைமை. அரசின் அடக்குமுறை மற்றும் மையப்படுத்தப்பட்ட தன்மையில் மட்டும் நம்முடைய கவனமிருந்தால், இதை மற்றொரு சர்வாதிகார மாதிரியாக மட்டுமே நாம் கருதக்கூடும். ஆனால், மூர்க்கத்தனமான இந்து மேலாதிக்க தேசியவாதம், கொடிய முஸ்லிம் எதிர்ப்பு, சிறுபான்மையினர் எதிர்ப்பு வன்முறை ஆகியவற்றைக் கட்டமைக்கப்படும் இந்த மாதிரியை நாம் காணும்போதுதான், இன்றைய இந்திய வகை பாசிசமானது, ஒரு முழு அளவிலான பாசிசத் திட்டத்திற்கு சற்றும் குறைவானது அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.

   தேர்தல் முறையும் நாடாளுமன்றக் கட்டமைப்பும் சம்பிரதாயபூர்வமாகத் தொடர்வதை வைத்து, பாசிச அச்சுறுத்தல் எல்லாம் இல்லை என உத்தரவாதமாக நம்புபவர்களுக்கு, இந்தியாவை முழுமையாகஒரு கட்சி ஆதிக்கத்தைநோக்கித் தள்ளுவதற்காக முழு தேர்தல் முறையும் எவ்வாறு மாற்றியமைக்கப்படுகிறது என்பதற்கு தற்போது போதுமான அறிகுறிகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவுவதிலிருந்து, தங்களுக்கு ஏற்றவாறு வாக்காளர்களை நீக்கி, வாக்காளர்ப் பட்டியலைத் தயாரிப்பது வரை, இந்தியாவில் தேர்தல்கள், முன்னமே தயாரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை நடைமுறைப்படுத்து வதற்கான நிர்வாக அமைப்பு முறையாக (managed system) மிகவேகமாகச் சுருக்கப்பட்டு வருகிறது. அடுத்த சுற்று நடக்கவிருக்கும் தொகுதி மறுவரையறை (delimitation), நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையைத் திணிப்பதற்கான அச்சுறுத்தல் ஆகிய அனைத்தும் சேர்ந்து, இன்றுவரை இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மையக் கருவாகத் திகழ்ந்த தேர்தல் முறைக்குச் சாவு மணி அடிக்கக் .கூடும்.

   இந்த நாட்டை பாசிசம் முழுமையாக வியாபிக்கும் திட்டத்தை முறியடிப்பதே தற்போதைய சூழலில், இடதுசாரிகள் முன் உள்ள மையச் சவாலாக உள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழலையும் உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் கொள்ளை மற்றும் பேரழிவிலிருந்து காப்பது, அனைத்து இந்திய மக்களின் அரசமைப்புச் சட்டரீதியான உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, குறிப்பாக மாற்றுக் கருத்து வைத்துக் கொள்வதற்கான உரிமையைப் பாதுகாப்பது, இந்தியா எனும் பன்முகத் தன்மையின் ஒவ்வொரு அங்கத்தினுடைய பன்முகப்பட்ட தன்மையையும், கண்ணியத்தையும் உயர்த்திப் பிடிப்பது - இவை அனைத்தும், இந்த இக்கட்டான காலகட்டத்தில், கட்டமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள உடனடி சவால்கள் ஆகும். இந்திய சுதந்திரம் என்கிற பொதுவான நோக்கத்தை அடைவதற்காக, கம்யூனிஸ்டுகள், சுதந்திரப் போராட்டத்தின் போது, பல்வேறுபட்ட கருத்தியல் நீரோட்டங்கள் மற்றும் சக்திகளுடன் இணைந்து போராட வேண்டியிருந்தது போலவே, தற்போது பாசிசத்திடமிருந்து இந்திய சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய இந்த முக்கியமான கட்டத்திலும், ஜனநாயகம் மற்றும் நீதிக்கான பரந்த அடிப்படையிலான கூட்டணியை கம்யூனிஸ்டுகள் மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கும்.

தமிழாக்கம்- சங்கர்

 

 

08 February, 2026