மாற்றுத் திறனாளி இளைஞரான சபரி வர்மன், தான் நடத்தும் சிறு கடையில் குட்கா வைத்திருந்தார் என்று கைது செய்யப்பட்டு, அநியாயமாக சாகடிக்கப்பட்டுள்ளார். இயற்கை மரணம் என்றார்கள். உடற்கூராய்வில் அவர் உடலில் 19 இடங்களில் காயங்கள் என்றவுடன் கைது படலத்தை ஆரம்பித்தார்கள். சிறைக்குள் தகராறு செய்ததால் சிறையிலிருந்த மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதால் இறந்து போய்விட்டார் என்று முதல்வர் விஜய் கையிலுள்ள காவல்துறை கதை சொல்கிறது. முதலில் மூன்று வார்டன்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். பின்னர், சிறைக் கைதிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சபரி வர்மனின் மனைவி தன் கணவரின் கொலைக்கு நீதி வேண்டும் என்கிறார். இரண்டு அமைச்சர்கள் கொடுத்த நிதியை வாங்க மறுத்துவிட்டார். கடந்த ஆட்சியின்போது அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டபோது, சாரி சொன்னா போதுமா சி.எம் சார். பதவி விலகுங்கள் சி.எம்.சார் என்றார் இன்றைய “சி.எம் சார்” விஜய். இதுவரை முதல்வர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன் பாலியல் குற்றங்களுக்கு அரசும் முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார் விஜய். ஆனால் ஜோசப் விஜய் ஆட்சியில்,“இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டதல்ல, சமூக ஒழுங்கும் தனிமனித ஒழுக்கமும் சம்பந்தப்பட்டது என்கிறார். முந்தைய ஆட்சியில் நடந்தால் அது ஊழல். தன்னுடைய ஆட்சியில் அது சிறு தவறு, அவ்வளவுதான். யாரும் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள், இது எங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள் என்று கர்ஜித்தார் கரூரில். ஆனால், யாரும் லஞ்சம் கேட்டால் சும்மா விடமாட்டேன் என்று சொல்லவில்லை. அதனால்தானோ என்னவோ, பழனி மலையடிவாரத்தில் 100 கோடி ரூபாய் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். ஆம், தவறு நடந்துள்ளது என்கிறார்கள் அமைச்சர்கள். அது ஊழல் கிடையாதாம். அந்த நிலத்தை பதிவு செய்யக் கூடாது என்று 15.09.2025, 16.11.2025, 25.12.2025 ஆகிய தேதிகளில் தங்கள் அரசு கடிதம் எழுதியுள்ளது என்று அசராமல் அறிவிக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததே 10.05.2026ல்தான். ‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய் நடித்த ‘கொசக்சி பசபுகழ்’ கதாபாத்திரத்தின் உண்மை நபரான ‘சோனம் வாங்சுங்’, தற்போது நீட் ஊழலுக்குக் காரணமான மோடி அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லியில் 20 நாள்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், விஜய்யோ, கொள்கை எதிரி! பாஜகவின் ஊழலுக்கு எதிராகவோ, வாங்சுங்கிற்கு ஆதரவாகவோ வாய் திறக்கத் தயாரில்லை. மாறாக, உலகறிந்த ‘குட்கா’ஊழல் பேர்வழியான விஜயபாஸ்கர் போன்றவர்களை அதிமுகவிலிருந்து தவெகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். தவெகவைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள் விற்று பிடிபட்டால் அவர்களை சொந்த ஜாமீனில் விடும் விஜய்யின் காவல்துறை, சபரி வர்மன் போன்றவர்களை அடித்தே கொல்கிறது.
தவெக அரசு பதவியேற்றவுடன் அரசுக்கு எதிராக பேசுகிறது என்று சொல்லி சில சமூக வலைத் தளங்களை தடை செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவு நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது என்றாலும், தவெக பற்றி விமர்சனம் செய்தார் என்பதற்காக ஊடகவியலாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்து, அவருடைய செல்பேசியைப் பறித்து வைத்துக் கொண்டு அராஜகமாக, அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது முதல்வர் விஜயின் கீழுள்ள காவல்துறை. சபரி வர்மனின் காவல் கொட்டடிக் கொலையும் மனித உரிமைக்கு எதிராக, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகவியலாளர் விஜயன் மீது நடத்தப்படும் தவெக அரசின் காவல்துறையின் அத்துமீறலும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. எதையெல்லாம் திமுக அரசின் குற்றம் எனச் சொல்லி, ‘மாற்றம்’ வேண்டுமெனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றினாரோ அதே மக்கள் விரோதச் செயல்கள் அதிவேகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன விஜய் ஆட்சியில். பெண்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, இளைஞர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையைவிட, ஆட்சியைத் தக்க வைக்க ‘குதிரை பேரம்’, ஆட்சியை விமர்ச்சித்தால் ‘அடக்குமுறை’, தனியார்மயக் கொள்கை அமலாக்கம் என்றுதான் தவெக அரசு முனைப்பாக உள்ளது. ‘நலம் டி.என்.’ என ஆரம்பித்து, அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டிற்காக மக்களிடம் நிதி கேட்கிறது தவெக அரசு. பல கோடிகள் சம்பாதித்தவர் கொடுக்கமாட்டாராம். இது அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து அனைத்தையும் தனியார் மயமாக்குவதற்கான திட்டம். தேர்தலுக்குமுன், தேர்தலில் மக்களிடத்தில் இருந்த மாற்றத்திற்கான வேட்கையை, சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தவெக, ஆட்சிக்கு வந்ததும் ஓரிரு மாதங்களிலேயே உண்மை முகத்தை காட்டத் துவங்கிவிட்டது. ஆனால், மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். போராடத்துவங்கி விட்டார்கள். “மாற்றத்தை“ கொண்டுவரும் வரை ஓயமாட்டார்கள்.
