“நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 3% (4.16 கோடி) பங்குகளை மோடி அரசு அவசர அவசரமாக விற்று ரூபாய் 1263 கோடியை அறுவடை செய்துள்ளது. அரசுப்பங்கு 69.47% ஆக விழுந்துள்ளது. நவரத்னா என பெருமைபட பேசப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் அய்ந்து மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் (அந்தமான்-நிகோபார்) வரை கால்பதித்து அகில இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ரூ. 69 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 70 ஆண்டுகளில் ரூ.70 ஆயிரம் கோடி சொத்து மதிப்பைக் கொண்ட நிறுவனமாக தழைத்துள்ளது. பழுப்பு நிலக்கரியிலிருந்து மின்னுற்பத்தி செய்யத் தொடங்கிய இந்நிறுவனம் சூரிய ஒளி, காற்றாலை என விரிந்து அணுமின்னுற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆல்போல் தழைத்துள்ள என்எல்சி நிறுவனம், 65 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பச்சைபசேலென தழைத்து வளர்ந்த வயல்களை அழித்து வளர்ந்த நிறுவனம். நெய்வேலியை சுற்றியுள்ள, கம்மாபுரம், கோபாலபுரம், சாத்தப்பாடி, முத்துகிருஷ்ணாபுரம், அஜிஸ்நகர், கங்கைகொண்டான் உள்ளிட்ட 44 கிராமங்களின் 36,825 ஏக்கர் நிலங்களை அபகரித்து வளர்ந்த நிறுவனம். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்காமலும் வாக்குறுதிப்படி நிரந்தர வேலை வழங்காமலும் வீட்டுமனை இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு, இழப்பீடு வழங்காமலும் ஏமாற்றி வருகிற ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம். இந்திரா நகர் மக்கள், மாற்று குடியிருப்பு கேட்டு, இழப்பீடு கேட்டு இந்த நிமிடம் வரை போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்து வரும் இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கிவருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.3,670 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ஒட்டுமொத்த மின்துறையை (உற்பத்தி, விநியோகம்) அதானி அம்பானிகளிடம் தாரைவார்ப்பதே மோடி அரசின் கொள்கை. தமிழ்நாட்டின் 5000 ஏக்கர் பரப்பில் சோலார்மின்சாரம் தயாரித்து வரும் அதானி ஜார்க்கண்டிலும் ஒரிசாவிலும் கால்பதிப்பதை எதிர்த்து பழங்குடி மக்கள் அஞ்சாமல் போராடி வருகின்றனர். நிலம் தந்த விவசாயிகள், உழைப்பைத் தந்த தொழிலாளர், அவர்களை உழைப்புக்கு தயார் செய்து தந்த பெண்கள் இவர்கள் அனைவரும், ஒட்டுமொத்த சமூகமாக உருவாக்கிய தேச வளத்தை, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது மட்டுமே மோடி-அமித்ஷா கொள்கை. சமூகம் உருவாக்கிய தேசவளத்தை அதானி, அம்பானிக்கு தாரை வார்ப்பது தேச விரோதம்.
பீகாரில் 1100 ஏக்கர் நிலத்தை மாதம் 1 ரூபாய் குத்தகைக்கு 33 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளது அங்குள்ள அரசு. இதில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 6 ரூபாய் வீதம் வாங்கிக் கொள்ள நிலம் கொடுத்த பீகார் அரசு அதானியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது யாருக்கு லாபம்? அதானிகளுக்கு லாபம். நுகர்வோருக்கு பெரும் நட்டம். தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் மோடி ஆட்சியில் அதானி மயம், அம்பானி மயமாகி இருக்கிறது.
என்எல்சி பங்குகளை வாங்கியவர்கள் இயக்குநர்களாக வந்து உட்காருவார்கள். மின்சார விலையை உயர்த்த உத்தரவு போடுவார்கள். இன்று யூனிட் 3 ரூபாய்க்கு விற்கும் என்எல்சி மின்சாரம் விலை ஏறும். தமிழ்நாட்டில், 20 லட்சத்துக்கு மேற்பட்ட பம்ப் செட் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 200 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் சாமான்ய மக்கள், விசைத்தறி உரிமையாளர், தொழிலாளர் தெருவில் நிற்பார்கள். மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மின்சார திருத்தச்சட்டம் இதை நோக்கியே நாட்டை இழுத்துச் செல்கிறது. பங்கு விற்பனைகள் வெறும் அரசுக்கு பணம்திரட்டும் முயற்சியல்ல. நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளும் திட்டமாகும்.
ஆகவே, தேச வளங்கள் அம்பானி, அதானிகளுக்கு தாரை வார்க்கப்படுவதை கண்டிக்கிறோம் விவசாயிகளால், தொழிலாளரால், உழைப்பாளி மக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான தேச வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசவிரோத திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்.எல்.சி யின் மூன்று சதவீத பங்குகள் விற்பனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பல ஆயிரக்கணக்கான தொழிலாளரின் வேலை வாய்ப்பு சிதைக்கப்படும், அருகாமை மாவட்டங்களின் மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு பறிபோகும், வியாபாரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் பாதிக்கப்படும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
ஆகவே என்.எல்.சி யின் பங்குகள் விற்பனையை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளரை நிரந்தரப்படுத்திட வேண்டும்
நிலம், வீடு கொடுத்து காத்திருக்கின்ற விவசாயிகளுக்கு சட்டப்படியான இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.
என்எல்சியால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை முழுவதுமாக மீட்டெடுக்க என்எல்சியும் ஒன்றிய மோடி அரசும் பொறுப்பேற்று செய்து முடிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் மீது இகக (மா லெ), இகக(மா), இகக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் விவசாயிகள், தொழிலாளர், அனைத்து தரப்பு மக்களை அணிதிரட்டிட வேண்டும். முன்பு இதுபோல் பங்கு விற்பனை செய்யப்பட்டபோது நெய்வேலி தொழிலாளர் வர்க்கம், இடதுசாரி கட்சிகள், வணிகர்கள், கடலூர் மாவட்ட பொது மக்களின் எழுச்சிமிக்க போராட்டம், விற்பனை செய்யப்பட விருந்த பங்குகளை ஜெயலலிதா ஆட்சியை வாங்கும் படி கட்டாயப்படுத்தியது.
பங்குவிற்பனை வேண்டாமென்று மோடி ஆட்சிக்கு கடிதம் எழுதியுள்ள தவெக ஆட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வாங்குவதில் மும்முரமாக இறங்கி உள்ளது. கடிதம் எழுதியதோடு நின்றுவிடக்கூடாது என தமிழக மக்கள், தமிழ்நாடு தொழிலாளர் வர்க்கம், ஜெ ஆட்சியை இறங்கிவரச் செய்ததை நினைவுபடுத்தி தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாக வேண்டும்.
