டாஸ்மாக் தொழிலாளர்களின் எழுச்சி மிக்கப் போராட்டம், சென்னை எம்ஆர்எஃப் ஆலைத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமையிலான குழு அனைத்துப் பொறுப்புகளிலும் வெற்றி என்ற பின்னணியில் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் கோவையில் 12.07.2026 அன்று மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமையில் நடந்தது. ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் வீ.சங்கர் மற்றும் ஆலோசகர் தோழர் எஸ்.குமாரசாமி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தேசியக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டின் தொழிலாளர் வர்க்கச் சேர்க்கை, தமிழ்நாட்டின் பல்வேறு அரங்கங்களிலும் மாவட்டங்களிலும் ஏஅய்சிசிடியு தலைமையில் நடக்கும் வேலைகள், நடக்க வேண்டிய வேலைகள், ஏஅய்சிசிடியு நடத்திக் கொண்டிருக்கும் சில வழக்குகள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொடர்பான கோபால் கவுடா கமிட்டி பரிந்துரைகள் ஆகியவை பற்றி தாள் முன்வைக்கப்பட்டது.ஏஐசிசிடியு தேசிய செயற்குழு கூட்டத்தில் தோழர் எஸ் கே உரை இடம்பெற்ற ஒருமைப்பாடு ஜூலை இதழும் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தொழிலாளர் வர்க்கம் பற்றிய ஒரு பரந்த பார்வை தரும் தாள் மீது அடுத்த கட்ட வேலைகள் பற்றிய முன்வைப்புகள் அடிப்படையில் வெவ்வேறு அரங்க வேலைகளை முன்னெடுக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் கருத்துகள் முன்வைத்தனர். விவாதங்களைத் தொடர்ந்து தோழர்கள் எஸ்.குமாரசாமி மற்றும் வீ.சங்கர் உரையாற்றினர்.
கூட்டத்தில், ஆகஸ்ட் 9 அன்று “மோடி அரசே பதவி விலகு” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் பெருந்திரள் தொழிலாளர்களுடன் நடத்தப்பட வேண்டும்.
‘வரலாற்றை மற, வலியை மறவோம்’ என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 13 அன்று சென்னையில் நடக்கவுள்ள தூய்மைப் பணியாளர் அணிதிரட்டலை வெற்றிகரமாக்க வேண்டும்.
‘பிரிக்கால் இருவர் விடுதலை’ தொடர்பாக சட்ட அமைச்சர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும்.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், எல்ஏ பில் 47/2008 உள்ளிட்ட, தமிழ்நாட்டு தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் பரப்புரை மற்றும் அணிதிரட்டல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இடதுசாரி வெகுமக்கள் அமைப்பு ஒருங்கிணைப்பு செப்டம்பரில் திட்டமிடும் நிகழ்ச்சியில் கவுரவமான எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டும்.
தோழர் குமாரசாமி தனது உரையில்,
தமிழ்நாட்டின் தொழில் நிலைமை, தொழிலாளர் நிலைமை பற்றிய சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்களை புதுமைப்பித்தன் “துன்பக் கேணி” சிறுகதையிலும் மகாகவி பாரதியார் “கரும்புத் தோட்டத்திலே” கவிதையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.
திருவள்ளூரில் நடந்த அம்மோனியா விஷவாயு கசிவு விபத்தில் ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்த பழங்குடியின பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு “படுகொலை”. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முர்மு அவர்கள் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போதுதான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. தமிழக மக்கள் தொகை 7 கோடிப் பேரில் 4 கோடி பேர் தொழிலாளர்களாக இருப்பார்கள். கிராமப்புரத் தொழிலாளர்களின் கூலி மட்டம் மிகவும் சரிந்து உள்ளது. நம் சங்க உறுப்பினர்களை வாயு, திரவம், திடம் என வகையினங்களாக பிரிக்க முடியும்.
4 கோடி தொழிலாளர்களில் 10 லட்சம் -15 லட்சம் பேரை வருடத்தில் இரண்டு முறையாவது சந்திக்க முடியும் என்று சொன்னால் அதைத்தான் தொழிற்சங்க இயக்கத்தின் வீச்சாக கருத முடியும்.
தொழிற்சங்க இயக்கம் குறுகிய அடித்தளத்தில் இயங்குகிறது பாட்டாளி வர்க்க இயக்கமோ பரந்து விரிந்த ஒன்றாகும். நமது வேலைகளில் குறுகிய தன்மை நிலவுகிறது.
தோழர் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” நூலை ஒரு நாவலை படிப்பது போல படிக்க வேண்டும். தோழர் லெனின்- கத்துக்குட்டித்தனம் பற்றியும் தொழில் நேர்த்தி பற்றியும் பேசுகிறார். மக்களுக்கு திறம்பட சேவை செய்ய வேண்டும் என்று சொன்னால் தொழில் நேர்த்தி வேண்டும் என்று கூறினார்.
இறுதியாக உரையாற்றிய தோழர் சங்கர், ‘ஒன்றிய அரசு, ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. குறைந்த பட்ச கூலி, பணி நிலைமைகள் அனைத்தையும் அதானி அம்பானி போன்ற முதலாளிகளுக்கு ஏற்ப மாற்றி வருகிறது. அதனால்தான், வட மாநிலங்களில் தொழிலாளர்கள் அவர்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக அரசின் கடைசி காலத்தில் கிளர்ந்தெழுந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டமும் பல்வேறு உழைக்கும் மக்கள் போராட்டங்கள்தான் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டியது. தவெக அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் என போராட்டக் களத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏஅய்சிசிடியு இந்த தருணத்தைக் கைப்பற்ற வேண்டும். எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். போராட்டக் களத்தைக் கட்டமைக்க வேண்டும்‘ என்று கூறினார்.
