பருவநிலை மாற்றங்களால் ஜூலையில் இரண்டாவது கோடையை தமிழக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். லாபத்துக்கான ‘முதலாளித்துவ வளர்ச்சி மாதிரி’, சுற்றுச்சூழல் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திட்டமிடப்படாத, ஊழல், கொள்ளைக்கான நகர்மயமாக்கம், ஆறு, ஏரி, கண்மாய், குளம், குட்டை, என அனைத்தையும் மாசுபடுத்தி வருகிறது. திடக்கழிவு மேலாளுமை நவீனப்படுத்தப்படாததால் தூய்மைப் பணியாளர்கள் பலவித நோய்களுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். மலக்குழி மரணங்களும் நிகழ்கின்றன. பெரும் ஆலைக் கழிவுகளும் கண்மூடித்தனமான பிளாஸ்டிக் நுகர்வுக்கு வழிவகுக்கும் கொள்கைகளும் பருவநிலை மாற்றத்தில் ஆபத்தான தாக்கம் செலுத்துகின்றன.
ஒரு அதிர்ச்சி செய்தி! அய்க்கிய அமெரிக்கா, சிங்கப்பூரிலிருந்து காகிதக் கழிவுகள் என்று ஸ்ரீபதி பேப்பர் & போர்டு லிமிடெட் கம்பெனிக்கு இறக்குமதி செய்யப்பட்ட கண்டைனர்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது அதில், பெட் (PET)பாட்டில்கள், உடைந்த பீங்கான்கள், கண்ணாடி பாட்டில்கள், தெருவைக் கூட்டி அள்ளிய குப்பைகள், பிளாஸ்டிக் பேக்குகள், இன்ன பிற இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அறிவுறுத்திய நிலையில், வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறக்குமதி செய்த ஸ்ரீபதி கம்பெனி கழிவுப் பொருட்களை துபாய்க்கு அனுப்ப அல்லது இந்தியாவிலேயே அழிக்க அனுமதி கோரியிருந்தது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு முக்கியத்துவமானது.அவர், ஸ்ரீபதி பேப்பர்ஸ் எதிர் சுங்கத்துறை ஆணையர் (2026 MHC 2215) தீர்ப்பில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற முடியாது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையானது சுற்றுச்சூழல் சீரழிவு, சுற்றுச்சூழல் சுமைகளை காலனித்துவ முறையில் மாற்றுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதையும் உள்ளடக்கியது என்றும் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பானது நீதிமன்ற வழக்கை சுங்க வகைப்பாடு, வணிக ரீதியிலான சிரமங்கள் எனப் பார்க்காமல், கழிவு இயக்கத்தின் சட்டக் கோட்பாடுகள் மற்றும் அரசியல் பொருளாதாரத்திற்குள் அணுகியதே முக்கியத்துவமானதாகும். இந்தத் தீர்ப்பில், 2016ஆம் ஆண்டின் அபாயகரமான திடக் கழிவுகள் மேலாளுமை மற்றும் எல்லை கடந்த இயக்க விதிகளின் 15(2)ஐ பாசல் கன்வென்ஷனில் ( Basel convention ) சட்ட விரோத கடத்தல் பிரிவு (9) உடன் நீதிமன்றம் இணைத்துப் பார்த்தது.
தொலைதூரம், செலவு ஆகிய காரணங்களைக் காட்டி கழிவுகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய (துபாய்க்கு) கம்பெனி கோரியதை நீதிமன்றம் சரியாகவே நிராகரித்துவிட்டது.நடுநிலையான உலக வர்த்தக உறவுகள் என்று சொல்லிக்கொண்டு, பணக்கார நாடுகளுக்கு சுத்தமான காற்று, ஒழுங்குபடுத்தப்பட்ட கழிவகற்றல், அதிக நுகர்வு என்றும், ஏழை நாடுகளுக்கு நச்சு எச்சங்கள், பாதுகாப்பற்ற பணிச் சூழல், சுற்றுச்சூழல் எனவும் இருப்பதை அங்கீகரித்த தீர்ப்பு, “கழிவு காலனித்துவம்” என்பது ஒரு விபத்தல்ல, திட்டமிட்ட வழிமுறை என்று வெகு அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இறையாளுமை என்பது வெறும் எல்லைகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல என்று குறிப்பிட்ட நீதிமன்றம், நச்சு சுமையை மறுப்பதற்கான மக்களின் உரிமையையும் உள்ளடக்கியது என்று தீர்ப்பு தெளிவுபடுத்தி உள்ளது. திடக்கழிவுகளை கொட்ட அனுமதிக்கும் சட்ட அமைப்பானது, சுற்றுச்சூழல் அடிமைத்தனத்துக்கான கருவியாக மாறிவிடும் என்றும் சொல்லி உள்ளது.
இது, சட்டவிரோத செயலின் சுமையை துறைமுகத் தொழிலாளர், தூய்மைப் பணியாளர்கள், கண்டைனர் யார்டுகள், மறு சுழற்சி தளங்களுக்கு அருகில் வாழ்பவர்கள் மீது ஏற்றி விடுவதாக அமையும் என்று சொல்லிவிட்டு, சுற்றுச்சூழல் நீதி என்பது கழிவுகளை சுவாசிக்கவும், தொடவும், சுமக்கவும், அதற்கு அருகிலேயே வாழவும் நிர்பந்தப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் இருந்து தொடங்க வேண்டுமென்கிறது. தொடர்ந்து, “மாசுபடுத்துபவரே பணம் செலுத்த வேண்டும்”(polluter pays principle) என்ற கோட்பாடு சரியானது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தத் தீர்ப்பினை ஒரு கட்டளையாக ஏற்று சுங்கத்துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாடு வாரியம், ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டுமென்று அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் (AILAJ) வேண்டுகோள் விடுத்துள்ளது.
