ஆகஸ்ட் 15 அன்று, நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து இன்னுமொரு சுதந்திர தின உரையை ஆற்றியுள்ளார், இது அவரது 13 வது ஆகஸ்ட் 15 உரை. 2014ல் அவர் ஆட்சிக்கு வந்தது முதல் சில ஆண்டுகளில், அவரது உரைகள் சில உடனடி உள்நாட்டு விசயங்கள், உலகளாவிய விசயங்கள் பற்றியதாக இருந்தன. இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டே அப்போது குறியாக இருந்தது. 2022 க்குப் பிறகு, குறி நேராக 2047க்கு மாற்றப்பட்டது, இப்போது, அவரது அரசாங்கம்கூட புறக்கணிக்க முடியாத, மக்கள் மனங்களிலுள்ள முதன்மையான கவலைகள் குறித்துகூட வெளிப்படையாகவே அமைதி காக்கிறார். உதாரணமாக, அமைச்சர்கள் ராஜினாமா செய்வது என்பது பாஜகவின் கலாச்சாரத்திலே கிடையாது என்று ஆணவமாகப் பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வைத்த வரலாறு காணாத ஜந்தர் மந்தர் போராட்டங்கள் பற்றி மோடியின் 80 நிமிட உரையில் எதுவுமில்லை.
ஆயினும், ஜந்தர் மந்தர் பேய் அவரின் மொத்த உரையையும் விழுங்கிவிட்டது. இப்போது இந்தியாவெங்கும் அனைவரிடத்திலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஜென்ஸி சொல்லை ஒரு முறைகூடப் பயன்படுத்தாமல், இளைஞர், இளைஞர் என 52 முறை கூறிவிட்டார். ஆனால், இப்போது ஜென் ஆல்பாவைக் கூட போராடத் தள்ளியுள்ள நொறுங்கிப்போன கல்வி, தேர்வு முறை பற்றி வாய் திறக்கவில்லை. அவர் மங்கிப்போன பழைய வாக்குறுதியையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இளைஞர்களுக்குத் தந்த ஒரே வாக்குறுதி ஆண்டுக்கு ஒரு கோடி வேலைகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவுக்கான (AI) பயிற்சி வழங்கப் போகிறாராம். எதார்த்தத்தில், பல்வேறு துறைகளில் AI இன் தாக்கத்தால் வேலைகள் அழிக்கப்பட்டு, பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 25 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக நிதி ஆயோக் கூறுகிறது. ஆனால், மோடி இலவச ஆன்லைன் பயிற்சி குறித்து பேசுகிறார். எஸ்.அய்.ஆர் குறித்தோ, எழுத்துப்பிழைகள், பொருத்தமின்மை என்ற அற்ப காரணங்களைச் சொல்லி பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பது குறித்தோ, பீகார் தேர்தல்களுக்கு முன்பு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் கூறிய வாக்குறுதி பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை, ஆனால், குடும்பத்தினர் பற்றிய விவரங்களைப் புதுப்பித்து பதிவேற்றம் செய்து, மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு உதவுமாறு இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஜென்ஸி பற்றியோ ஜந்தர் மந்தர் குறித்தோ எதுவுமே பேசாத மோடி, சங்கிகள், உள்நாட்டு எதிரிகள் என்று பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சு சொற்களில் புதிய சொல் ஒன்றை அறிமுகப்படுத்தினார்: துக்டே துக்டே கும்பல், நகர்ப்புற நக்சல், அந்தோலன்ஜீவி, தேச விரோதி ஆகியவற்றிற்குப் பின்னர், இப்போது "திமாகி நக்சல்" அல்லது அறிவுஜீவி நக்சல். தொடர்ந்து கிரண் ரிஜிஜு, மாவோயிஸ்ட் ஆதரவாளர்களும், 370வது பிரிவை ஆதரிப்பவர்களும்தான் என்று விளக்கமளித்தார். ஆனால், மோடியோ தனது உரையில் இன்னும் பின்னோக்கிச் சென்று, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்கிய அறிவுஜீவிகளும் கூட ‘திமாகி நக்சல்கள்தான்’, என்றார்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் இடதுசாரி முகாம் அதிகாரம் பெற்றிருந்ததையும் மக்கள் நலன் மற்றும் குடிமக்கள் உரிமை, தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், வன உரிமைகள் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை நடைமுறைப்படுத்திய தேசிய ஆலோசனைக் குழுவின் பங்கையும்தான் சுட்டிக் காட்டினார்.
அந்தச் சட்டங்கள் எல்லாம் உரிமைகள் விரிவாக்கத்திற்கும், கொள்கைகளை உருவாக்குவதிலும் அவற்றை நிர்வகிப்பதிலும் குடிமக்கள் தங்கள் கருத்து சொல்வதற்கு அனுமதியளிக்கிறது என்பதுதான் மோடியின் பிரச்சனை. காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட 1894 ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றி, சமூக, சுற்றுச் சூழல் தணிக்கை, ஒப்புதல் பெறுதல், இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றம் ஆகியவற்றைக் கட்டாயமாக்கி நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 உருவாக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டிலேயே, அச் சட்டத்தை மூழ்கடிக்கும் முயற்சியுடன்தான் தனது ஆட்சியை மோடி தொடங்கினார். ஆனால், அதில் அவர் வெற்றி பெற முடியவில்லை. பல ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது, வன உரிமைச் சட்டம் வேண்டுமென்றே அமல்படுத்தப்படாமைக்கும் விதி மீறலுக்கும் பலியாகியுள்ளது, இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக, சட்டப்படியான வேலைவாய்ப்பு உத்தரவாதத்திற்கான அனைத்து அடிப்படை அம்சங்களையும் தலைகீழாக மாற்றி ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இமயமலைப் பிராந்தியத்தில் நிலச்சரிவுகளும், பருவநிலை பேரழிவுகளும் அதிகரித்துக் கொண்டு வரும் நேரத்தில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு ஆபத்தான விகித்தை எட்டிக் கொண்டிருக்கும் போது, காடுகளை அழிப்பதற்கு எதிராக, இந்திய கடலோரப் பகுதிகள் பலவீனமடைந்து வருவதும், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வரும் போது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதி மீறல்களை தனது அரசாங்கம் வெளிப்படையாகவே செய்வதில் மோடி பெருமை கொள்கிறார். 99 சதவீத இந்திய கடற்கரைகள் ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்பதிலிருந்து ‘முன்னேறிச் செல்லும் பகுதியாக’ தமது அரசாங்கம் மாற்றியுள்ளது என்று சொல்லும் மோடி, எவ்வித விளக்கமும் இன்றி, இந்திய கடற்கரையின் பெரும் பகுதியை அதானி குழுமத்திடம் ஒப்படைத்து இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்கள் மீதான அதானி பிடியை வலுப்படுத்தச் செய்துள்ளார்.
திமாகி நக்சல் என்ற சொல் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் விஷயங்களில் அறிவாற்றல் கொண்ட மூளையின், அறிவுஜீவிகளின் 'திமாக்' அல்லது மூளையின் முக்கிய பங்கைக் குறிக்கிறது, இதைக் கண்டு மோடி அரசாங்கம் ரொம்பவே பயப்படுகிறது. எல்லா வகையிலும் அதைத் தடுத்து நிறுத்த விரும்புகிறது. இந்தச் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், இந்தியாவின் புகழ்பெற்ற அறிவாளிகள், கலாச்சார ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு, திட்டமிட்டு துன்புறுத்தப்பட்டு வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மோடி தனது சுதந்திர நாள் உரையில், திமாகி நக்சல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது, நாடெங்கிலுமுள்ள அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை, செயற்பாட்டாளர்களை அரசும் சங்கிகளும் குறி வைத்துத் தாக்குவதற்காக தீய நோக்கத்துடன் சொல்லப்பட்ட மறைமுகச் செய்தியாகும். " குடிமைப் பாதுகாப்பிற்கான துடிப்பு மிக்க வலைப் பின்னலை" உருவாக்குவதற்கு மோடி கொடுக்கும் அழுத்தமானது, அநேகமாக, மக்கள் மீது அதிக அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் மக்கள் போராட்டங்களை, இயக்கங்களை ஒடுக்குவதற்காக ஓய்வு பெற்ற அக்னி வீரர்களைப் பயன்படுத்தி அரசு-தனியார் கூட்டு அமைத்து ஒரு புதிய படையை உருவாக்குவதற்கும் சங்கிக் குண்டர் படைகளை சட்டபூர்வமாக்குவதற்குமான ஒரு சமிக்ஞையாக இருக்கலாம். மக்கள் மூளைகளைக் கண்காணிக்கும் இந்த அபத்தமான யோசனையானது, மக்கள் மனங்களைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவது மற்றும் அவர்களின் வெளிப்பாடுகளை ஒழுங்குபடுத்துவது போன்ற சங்கிகளின் நடைமுறையிலிருந்து வருகிறது. இந்த ‘சிந்தனை காவல்’ என்பது அச்சமூட்டும் வகையில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ என்கிற நாவலில் வரும் கொடுங்கோன்மை மனப் பிறழ்ச்சியுடன் ஒத்திருக்கிறது.
மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் ஷேக் முகமது ஹபீஸ் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலும், தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் பரிதாபகரமான நிலைமைகளை அம்பலப்படுத்தியதற்காக அவரது தந்தை முகமது மாஃபிக் கொலை செய்யப்பட்டதும், இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு உந்து சக்தியாக மாறியுள்ள ஜந்தர் மந்தரின் துணிவுமிக்க உணர்வை, எழுச்சியை, எதிர்ப்பை நசுக்குவதற்கு பாஜகவும் சங்கிக் கூட்டங்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு வரும் வன்முறை மற்றும் பயங்கரத்தின் வகை மாதிரியைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், கரப்பான் பூச்சி போன்றதொரு இழிவான, மனிதாபிமானமற்ற ஒரு சொல்லை பெருமையின் அடையாளமாக, எதிர்ப்புத் தளமாக மாற்றியுள்ளது ஒரு தலைமுறை. அதை நிச்சயமாக மோடியின் ‘திமாகி நக்சல்’ எனும் வஞ்சகச் சொல்லால் அச்சுறுத்தவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது.
பாசிஸ்டுகள் தொடர்ந்து உள்நாட்டு எதிரிகளைத் தேடுகிறார்கள், எதிரியை அடையாளம் காண ஒரு புதிய சொல் தேவையாகியுள்ளது என்பதானது அவர்களின் முந்தைய சொற்களஞ்சியம் வேலைக்காகவில்லை என்பதின் ஒப்புதலே ஆகும். நக்சலிசம் என்பது கம்யூனிசத்தின் இந்திய துணைச் சொல் மட்டுமே. 'திமாக்' அல்லது மூளையை நக்சலிசத்துடன் இணைப்பதன் மூலம், பாசிச ஆக்கிரமிப்பு, நிர்வாகத் தோல்வி மற்றும் கார்ப்பரேட் கொள்ளை ஆகியவற்றின் இன்றைய சூழலுக்கு எதிராக கம்யூனிச கருத்துகள் வளர்ந்து வருவதையும் அவற்றின் எதிரொலிப்பையும் மோடி ஒரு வகையில் ஒப்புக் கொண்டுள்ளார். அறிவாற்றலும் மனசாட்சியும் மதவெறியை, குருட்டு நம்பிக்கையை வெற்றி கொள்ளட்டும். மனம் உண்மையிலேயே பயமின்றி இருக்கட்டும்.
எம்எல் அப்டேட் தலையங்கம்
18-24 ஆகஸ்ட் 2026
தமிழாக்கம் - சங்கந்தம்பி
