வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (எஸ்ஐஆர்-ஐ) ரத்து செய்; இந்திய தேர்தல் ஆணையத்தை மாற்றியமை!

$articleData->title

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (எஸ்ஐஆர்-ஐ) ரத்து செய்;

ஒரு எதிர்ப்புப் போராட்ட நாளாக காந்தி பிறந்தநாள் இந்த அளவிலும் இந்த வகையிலும் சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு மக்களால் ஒருபோதும் கொண்டாடப்பட்டதில்லை. ஆயுதமற்ற சாதாரண மக்களின் அமைதிவழி வெகுமக்கள் எதிர்ப்புப் போராட்ட வலிமையை உலகுக்கு உணர்த்திய ஒரு புகழ்மிகுத் தலைவராக ஒட்டுமொத்த உலகமும் காந்தியை அங்கீகரிக்கிறது. இந்த ஆண்டு அவரது 157 வது பிறந்தநாளன்று காந்தியின் அந்த மரபு இந்தியா முழுவதும் உண்மையிலேயே மீண்டும் உயிர்பெற்றது. டெல்லியின் அரணமைக்கப்பட்ட ஜந்தர் மந்தரைச் சுற்றி அச்சமூட்டும் வகையில் பாதுகாப்புப் படையினர் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது; அதனை மீறிச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவ செயற்பாட்டாளர்களும் பிற குடிமக்களும் மீண்டும் மீண்டும் கொடூரமாகக் கைது செய்யப்பட்டது; அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காவல் பேருந்துகளிலிருந்து தப்பி வெளியேறி மீண்டும் எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டது; அல்லது மும்பையில் ஒரு ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் ஒரு குழுவாக தேசிய கீதத்தைப் பாடியது; இது போன்ற காட்சிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் நம் நினைவில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். போராடும் மக்கள் அமைதிவழிப் போராட்டத்தின் காந்திய மரபைக் கையில் எடுத்தபோது, தற்போதைய அரசாங்கமோ மிருகத்தனமாக ஒடுக்கும் காலனித்துவ ஆட்சி முறைக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.


ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தவறுதலாக நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமையையும் திரும்ப அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போது இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் அணிதிரளும் புள்ளியாக மாறியுள்ளன. தனது சொந்த தேர்தல் ஆணையத்தைத் தேர்ந்தெடுக்க அன்றைய அரசாங்கத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கிற, தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் முழுவதுமான சட்டப் பாதுகாப்பை வழங்கி, அவர்களைச் சட்ட வரம்பிற்கு மேலானவர்களாக நிறுத்திய 2023 ஆம் ஆண்டின் சட்டத்தைத் திரும்பப் பெறுவதும் அவசியமாகும். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான அதிரடியான புலனாய்வு அறிக்கையும் அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'நெருக்கடி மேலாண்மை', 'சேதக் கட்டுப்பாட்டு' முயற்சிகளும் நீண்டகாலமாக கனன்று கொண்டிருந்த மக்களின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான, ஒருதலைப்பட்சமான செயல்பாடு, தேர்தல் ஆணையத்திற்குள் மற்ற ஆணையர்கள் ஓரங்கட்டப்பட்டது, எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலைச் சரிசெய்கிறோம் என்ற பெயரில் அப்பட்டமாக அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டது, மென்பொருள் தில்லுமுல்லுகள் நடந்தது, இவையனைத்தையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது. அரசமைப்புக்கு எதிரான எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் இந்திய தேர்தல் ஜனநாயகத்திற்கும் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படைக் கொள்கைக்கும் இழைக்கப்பட்டுள்ள மாபெரும் நிறுவனரீதியான பெரும் மோசடியை தேர்தல் ஆணையம் வெளியிடும் ஒவ்வொரு சுற்றறிக்கையும் சான்றளிக்கிறது.

13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது குறித்து நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'விடுபட்ட' அனைத்து வாக்காளர்களையும் ஒரு மாதத்திற்குள் தொடர்புகொள்ளுமாறு அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது! வாக்காளர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதன் யதார்த்தத்தைக் கண்டு தேர்தல் ஆணையம் இப்போது ஏன் விழித்துக்கொண்டது? தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் உள்ள 'விடுபட்ட' என்ற சொல், உண்மையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகளைத் திரிக்கும் வகையில் தன்னிச்சையாகவும் திட்டமிட்டும் வாக்காளர்களை நீக்கியதன் மறைமொழியாகும். அக்டோபர் 1 அன்று தேர்தல் ஆணையம் இந்த அண்மைய சுற்றறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து மக்கள் விசாரணை ஒன்றை சிபிஐ(எம்எல்) தோழர்கள் பாட்னாவில் நடத்திக் கொண்டிருந்தனர். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் கட்சி போட்டியிட்ட இருபதில், பத்து தொகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது வாக்குச்சாவடிகளில், ஜூன் முதல் செப்டம்பர் வரை வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் ஒரு கணக்கெடுப்பைக் கட்சி தோழர்கள் மேற்கொண்டனர்; அதாவது, இப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை இந்திய தேர்தல் ஆணையம் செய்யச் சொல்லிக் கேட்கும் அதே வேலையைத்தான் அவர்கள் செய்தார்கள் - எஸ்ஐஆர்-க்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலை எஸ்ஐஆர்-க்கு முந்தைய ஜூன் 2025 பட்டியலுடன் ஒப்பிட்டு நீக்கப்பட்ட வாக்காளர்களின் கண்டறிதலைச் செய்தார்கள். அதிர்ச்சியூட்டும் 17 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் தவறான முறையில் நீக்கப்பட்டிருப்பதை இந்தக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது.

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களைப் பெருமளவில் நீக்குவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சேர்ப்பதற்கும் படிவம் 6, படிவம் 7 ஆகியவற்றை பாஜகவும் இந்தியத் தேர்தல் ஆணையமும் ஆயுதமாக்கியுள்ளன. படிவத்தின் விதிகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட உரிமையாகும்; எனவே, படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் தன்னிச்சையானவை, அங்கீகாரமற்றவை, சட்டவிரோதமானவை என அம்பலமாகியுள்ளன. ஆனால், எந்த விளக்கமும் அளிக்காமல் அந்த சர்ச்சைக்குரிய விதிகளைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இருப்பதாகக் கூறும் தேர்தல் ஆணையத்தின் முயற்சி, இப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த்-தாலேயே மறுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 'ஜென் ஷீ' வாக்காளர்கள் சேர்க்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது தெளிவாகிறது. முதன்முறை வாக்களிப்பவர்களை சட்டப்பூர்வமாகச் சரிபார்க்கக்கூடிய உறுதிமொழியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழியே படிவம் 6 ஆகும். நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைவதற்காக படிவம் 6-ஐ நிரப்புமாறு கட்டாயப்படுத்தியதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் அதனை தவறாகவும் கூட பயன்படுத்துகிறது. இது அப்பட்டமான சட்டவிரோதமாகும்; முதல் நாளிலிருந்தே எதிர்ப்பு இருந்தபோதிலும் தேர்தல் ஆணையம் இந்த முறைகேட்டைத் தொடர்ந்து செய்து வருகிறது.

தகுதியான வாக்காளர்களை நீக்குவதற்காகப் படிவம் 7-ஐ பெருமளவில் தவறாகப் பயன்படுத்தியது இதைவிடக் கொடூரமானதாகும். பெரும்பாலும் இஸ்லாமிய வாக்காளர்களையும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்கும் வாய்ப்புள்ள வாக்காளர்களையும் குறிவைத்து, முன்னதாகவே நிரப்பப்பட்ட படிவம் 7-களின் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பல செய்திகள் வெளிவந்துள்ளன. படிவம் 7-இன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீதான நடவடிக்கையாக வாக்காளர்கள் நீக்கப்படும் ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட நீக்கப்படும் வாக்காளர்களுக்கு முறையான அறிவிப்புகளும் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால், பெருமளவிலான பெயர் நீக்கத்திற்குப் பலியான வாக்காளர்களின் அனுபவம் இதுவாக இல்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் குறிவைத்துப் பெயர் நீக்கும் நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில்தான் அரங்கேறியுள்ளன. நீதித்துறை அதிகாரிகளால் கூட தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்ட வாக்காளர்களை நீக்கக் கோரி, மேற்கு வங்கத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியே 2.54 லட்சம் எண்ணிக்கையிலான படிவம் 7 மேல்முறையீடுகளைத் தமது தீர்ப்பாயத்தின் முன் தாக்கல் செய்தார் என, இப்போது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 11-ன் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி இந்திரஜித் சாட்டர்ஜி வெளிப்படுத்தியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு அறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில் உள்ள 19 தீர்ப்பாயங்களுக்கு முன்னால் உள்ள 16,10,311 வாக்காளர் நீக்க மேல்முறையீடுகள் எப்படி வந்தன என்பது குறித்து அல்லது அதற்கான அங்கீகாரம் குறித்துத் தனக்கோ, அல்லது சக தேர்தல் ஆணையரான விவேக் ஜோஷிக்கோ அல்லது மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கோ எந்தவொரு விவரமும் தெரியாது என்று தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து புகார் அளித்திருந்தார்.

காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு மையமாக விளங்கிய இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதிகாரத்தைப் பிரித்தளிக்கும் கோட்பாடு, பரஸ்பரக் கட்டுப்படுத்தலும் அதிகாரச் சமநிலையும் கொண்ட அமைப்புமுறை ஆகியன தற்போது மிகக் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளன. தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்தி இருக்கக் கூடிய, கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், இந்த மாபெரும் தேர்தல் மோசடியைச் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்கியிருந்தது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் அக்டோபர் 6 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, சட்டமியற்றும்துறை-நீதித்துறையின் எல்லைகளை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக அமைந்திருக்கக்கூடும்; நல்லவேளையாக அது இப்போது கைவிடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு நிறுவனரீதியான ஆதரவு மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்திய மக்களின் முதிர்ச்சியையும் விழிப்புணர்வையும்,இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்கள் நம்பியிருக்கக்கூடிய பாஜக-அல்லாத அரசியல் அமைப்புகள், சிவில் சமூகங்கள், மாற்று ஊடகங்களையுமே இந்திய ஜனநாயகத்தின் இருத்தல் தற்போது கிட்டத்தட்ட முழுமையாக சார்ந்துள்ளது. சற்றே தாமதமாக நடந்த இந்தியா கூட்டணியின் செப்டம்பர் 30 ஆம் தேதி கூட்டமும் இடதுசாரி மாணவர் செயற்பாட்டாளர்கள், பிற ஜென் ஷீ போராட்டக்காரர்கள், முற்போக்கு சக்திகள், மாற்று ஊடகச் செயற்பாட்டாளர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத எதிர்க்கட்சிகளின் பெருகிவரும் அறுதியிடலுமே பாசிசப் பிடியை உடைத்தெறியும் ஒரு தீர்மானகரமான ஜனநாயக மாற்றத்திற்கான நம்பிக்கையை உணர்த்துகின்றன.


28 October, 2026