'ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணி: சுதந்திரமாக நடமாடிய ஒரு பாலியல் குற்றவாளியும் ஊழல் நிறைந்த அமைப்பும்

$articleData->title

ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணி

  அகில இந்திய மாணவர் கழகம்


கிரானைட் தொழில் அதிபர் "ஜெம் கிரானைட்" வீரமணி, பல சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக வீரமணிக்குச் சட்ட விதிகளிலிருந்து நடைமுறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளதையும் ஊழலில் ஊறிப்போன ஒரு அமைப்பையும் இவ்வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பென் டிரைவுடன் சமர்ப்பிக்கப்பட்ட காணொளியில் காணப்படுவது வீரமணிதான் என்பதை ஆகஸ்ட் 29 அன்று பெருநகர சென்னை காவல்துறை உறுதி செய்தது. 'தி இந்து' நாளிதழின் செய்தியின்படி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்கு உதவியதற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கிஸ்லைன் மேக்ஸ்வெல்லின் பாத்திரத்தோடு, வீரமணியின் பெண் உதவியாளர் சாந்தியின் பங்கை ஒப்பிடலாம் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உண்மையில், வீரமணியுடன் தொடர்புடைய ஒரு தற்கொலை வழக்கும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விளிம்புநிலை மக்களின் சுரண்டல்

போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முகசுந்தரம், இவ்வழக்கினை மூடிவிட காவல்துறை எடுத்த முயற்சியைத் தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது மிகுந்த கவலை அளிக்கிறது. திமுக ஆட்சியின் போது காவல்துறையினர் ஆரம்பத்தில் இவ்வழக்கினை மூடிவிட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசாங்கமும் அதே போன்றதொரு முடிவை எடுக்க முயன்றது என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, இவ்வழக்கில் நீதி வழங்குவதில் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளின் ஆர்வம் உண்மையிலேயே கேள்விக்குரியதாகவே உள்ளது.

மேலும், வீரமணிக்கு இரையாகும் விளிம்புநிலைச் சிறுமிகளை உருவாக்கும் சாதி-வர்க்கச் சிக்கல் மிகவும் வெளிப்படையானதாக உள்ளது. இது, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி, வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவது குறித்து 1950களில் கேத்லின் கௌஃப் எழுதிய நூல்களை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

'தி இந்து' நாளிதழ் செய்தியின்படி, வீரமணி பல ஆண்டுகளாக 12 முதல் 16 வயதுடைய சிறுமிகளைத் தொடர்ந்து குறிவைத்துள்ளார். சிறு தொகைப் பணம், விளையாட்டு காலணிகள், சாக்லேட்டுகள், செல்போன்கள் ஆகியவற்றைக் காட்டி அவர் குழந்தைகளைக் கவர்ந்துள்ளார். நிதி உதவி தேவைப்படும் சிறுமிகள் கண்டறியப்பட்டு அணுகப்பட்டுள்ளனர்; இதன் மூலம் அவர்கள் சுரண்டப்பட்டு, 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான தொகைகளைக் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வீரமணி குழந்தைகளை ஹோட்டல்களில் நடக்கும் விருந்துகளுக்கு அழைத்துச் சென்றதும் அவர்களை ஆடம்பரக் கார்களில் ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது.

"டிஆர்பி ரேட்டிங்கை விட வாழ்க்கையில் வேறுபல விஷயங்கள் உள்ளன"

சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிகழ்வுகளின் காணொளிகளையும் காட்சிப் பிம்பங்களையும் ஊடகங்கள் எவ்வித கூருணர்வுமற்ற முறையில் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, அவற்றை வெளியிடவோ அல்லது பரப்பவோ ஊடக நிறுவனங்கள், இடைத்தரகர்கள், டிஜிட்டல் தளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உண்மையில், "டிஆர்பி ரேட்டிங்கை விட வாழ்க்கையில் வேறு சில முக்கியமான விஷயங்களும் உள்ளன" என்று நீதிபதி குறிப்பிட்டுக் கூற வேண்டியதாயிற்று. மேலும், அத்தகைய காட்சிகள் செய்தி விவாதங்களின் போது ஒளிபரப்பப்பட்டால், "இதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அஞ்சி, மற்ற பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராமல் போகக் கூடும் என்ற வெளிப்படையான சாத்தியக்கூறு உள்ளது" என்றும் நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

பாதிக்கப்பட்டவர்களை கவனத்தில் கொள்ளாமல் பழிசுமத்தும் அரசியல் விளையாட்டு

வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த நிகழ்வு, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு போட்டிக்கு வழிவகுத்துள்ளது. மேலும் இது பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது எந்தவித கூருணர்வுமற்ற முறையில் நடத்தப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் வீரமணிக்கு உள்ள தொடர்புகள், இது ஒரு கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைப்பின் பிரச்சினை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. வழக்கை மூடி மறைப்பதில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றுக்கொன்று கூட்டு வைத்துள்ளதாக தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சரும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், விசாரணையைத் தடுத்து நிறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை திமுக மறுத்துள்ளது. வீரமணியைப் பாதுகாக்க தனது அரசாங்கம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையில், வீரமணிக்கு எதிரான வழக்கு அரசாங்கத்திற்குத் தெளிவாகத் தெரிந்திருந்த நிலையிலும் கடந்த ஜூலை 6 அன்று கூட சில தவெக அமைச்சர்கள் வீரமணியுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அன்றைய நாள் ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளுபுடி அவர்களும் அதே மேடையைப் பகிர்ந்து கொண்டார். இதேபோல், திமுக, தவெக தலைவர்களுடன் வீரமணிக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த பல பதிவுகளும் படங்களும் சமூக ஊடகங்களில் உலாவி வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2013 ஆம் ஆண்டிலேயே வீரமணிக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பழிசுமத்தும் அரசியல் விளையாட்டு ஒவ்வொரு கணமும் தீவிரமடைந்து வருகிறது.

முக்கியமான சில கேள்விகள்!!

இந்த வழக்கின் சில அண்மைய நிகழ்வுகள் வீரமணியின் செல்வாக்கைச் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி எம்.பி.ரஞ்சன் குமார், கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே வீரமணி, சாந்தியின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சென்னை காவல்துறையிடம் முறைப்படி புகார் அளித்திருந்ததாக அண்மையில் அறிவித்துள்ளார். மேலும், தான் முதலில் அப்போதைய தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் என்.கண்ணனை அணுகியதாகவும் அவர் அந்தத் தகவலைச் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.அருணிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இந்தப் பின்னணியில், எழுப்பப்படும் சில முக்கிய கேள்விகள்:

 * காவல்துறையினரிடம் 2024 ஆம் ஆண்டிலேயே பெயர்களும் காணொளிக் காட்சிகளும் இருந்திருந்தால், அதிகாரப்பூர்வ வழக்கு விசாரணை ஏன் 2025 அக்டோபரில் மட்டுமே தொடங்குகிறது?

 * காங்கிரஸ் நிர்வாகி ஏன் இந்த வழக்கு தொடர்பாக மற்றவர்களை அணுகவில்லை?


 * காவல்துறை எந்தவிதமான ஆதாரங்களையும் கண்டறியாமல் போனதற்கு முந்தைய அரசாங்கத்தின் பங்கு என்ன?


 * ஜூலை 6 அன்று சில தவெக அமைச்சர்கள் ஏன் வீரமணியுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர்?


 * சிறப்பு நீதிபதியின் உத்தரவுக்கு முன்பு, காவல்துறையினர் வழக்கினை மூடிவிடும் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏன் இரு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டன?

 

* காவல்துறையினர் இதற்கு முன்பு வழக்கினை மூடிவிடும் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்த நிலையில், மறுவிசாரணை எப்படி இவ்வளவு விரைவாக புதிய ஆதாரங்களைக் கண்டறிந்தது?


 * காவல்துறையினர் அசல் காட்சிகளை திடீரென மீட்கக் காரணமாக இருந்தது எது?


இப்போது, 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனர் ஆர்.வீரமணிக்கு எதிரான போக்ஸோ வழக்கு, அது தொடர்பான பிற விவகாரங்களை விசாரிக்கத் தமிழ்நாடு காவல்துறை நான்கு பேர் கொண்ட, அனைத்து மகளிர் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அரசியல் களத்தின் பல்வேறு துருவங்களில் உள்ள கட்சிகளும் முதலாளிகளால் தங்கள் விருப்பப்படி வளைக்கப்படலாம் என்பதற்கும் தாராளவாத ஜனநாயகத்தில் சட்டம் எவ்வாறு கேலிக்குள்ளாக்கப்படலாம் என்பதற்கும் இவ்வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். காவல்துறையிலும், பல்வேறு அரசியல் கட்சிகளிலும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களைக் கைது செய்வது உட்பட இவ்வழக்கு சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.




28 October, 2026