அண்மைய மாணவர் போராட்டங்களைத் தனித்தனியான எதிர்ப்புச் சம்பவங்களாக ஒருவர் பார்த்தால், அது தற்போதைய தேசியச் சூழலை மிகத் தவறாகப் புரிந்துகொள்வதாகும். அத்தகைய புரிதல், இந்த இயக்கத்தை அதிருப்தியின் தற்காலிக வெளிப்பாடாகவே கருதும். மேலும், இறுதியில் அது நீர்த்துப் போய்விடும் என்றும் கருதும். இன்றைய இயக்கம், மக்களின் கடந்த கால மனக்குறைகளின் படிவுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை இதுகாறும் புறக்கணிக்கப்பட்டிருந்தன; திரிக்கப்பட்ட அடுக்குகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தன.
ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகும்போது அதை முதலில் அடையாளம் கண்டு, அதற்காகக் குரல் கொடுக்கும் சமூகப் பிரிவினராக எப்போதும் மாணவர்களே இருக்கின்றனர். 2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முதன்முதலில் ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு, இந்திய திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, அந்நிறுவனத்தின் மாணவர்கள் 139 நாட்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரு.சவுகானுக்கு உரிய கல்வித் தகுதிகள் இல்லாத குறையை, ஆர்எஸ்எஸ் - பாஜகவுடன் அவருக்கு இருந்த நெருக்கம் ஈடுசெய்தது.
2015 ஜூன் முதல் அக்டோபர் வரை நடந்த இந்தப் போராட்டங்களே முதல் எதிர்ப்பு நடவடிக்கையாகும். அரசாங்கத்திற்குச் சவால் விடும் எந்தவொரு போராட்டத்தையும் எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும் வழக்கமான உத்தியாக, போராட்டக்காரர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி அரசாங்கம் எதிர்வினையாற்றியது. திரு.சவுகான் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலும் அவரது பதவிக்காலம் 14 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அரசாங்கத்தின் வெற்றி தற்காலிகமானதாகவே இருந்தது.
கடந்த காலப் போராட்டங்கள்
இத்தகைய மனக்குறைகளைத் திரித்துக்கூறுவதன் மூலம் அடக்கிவிட முடியாது — இது அரசாங்கங்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடினமான பாடமாகும். உரிய கவனம் செலுத்தப்பட்டு தீர்க்கப்படாவிட்டால், அவை தங்களது வடிவத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் திரும்பி வரும்; இதையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம். நெட் அல்லாத உதவித்தொகையை மீண்டும் வழங்கவும் உயர்த்தவும் கோரிய 'யுஜிசியை முற்றுகையிடுவோம்' இயக்கம்; 'ரோஹித் வெமுலாவுக்கு நீதி' கோரிய இயக்கம்; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது புனையப்பட்ட தேசத்துரோக வழக்குகளுக்கு எதிரான போராட்டங்கள்; 'நஜீப் எங்கே' இயக்கம்; சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம், ஜேஎன்யு, டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடந்த கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்கள்; சம குடியுரிமை இயக்கம் – இவை அனைத்தும் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். 2012 நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் போன்ற இந்தியாவின் சமூக - பாலின நீதி இயக்கங்கள், மக்களைத் திரட்டவும் பிரச்சினைகளைக் கண்டறியவும் தீர்வு காணவும் இளைஞர்களுக்குத் துணிச்சல் உண்டு என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்து வந்த பொதுமுடக்கங்களும் கல்வி அமைப்பினுடைய ஒழுங்கமைவின் மீது மேலும் ஒரு தாக்குதலை நடத்தின. ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலமாக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மீது புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அரசாங்கம் திணித்தது. கல்வி அமைப்பில் இக்கொள்கையின் நீண்டகால விளைவுகள் இனிமேல்தான் தெரியவரும் என்றாலும் பிரச்சினைகள் இப்போதே மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன. அதிகாரக் குவிப்பு, கொள்கைகளை மையப்படுத்தல், ஊழல் ஆகியவையே புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கியுள்ள அமைப்பின் சாராம்சமாகும். இம்முறையும் மாணவர்களே இதை முதலில் எதிர்த்தனர். ஜந்தர் மந்தர் 1.0 இயக்கம் இந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்தது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை நிகழ்வு, ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் கீழ் மல்யுத்த வீரர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றிலும் மாணவர்கள் பங்கேற்றனர். காவல்துறையின் கொடூரத் தாக்குதல், தன்னிச்சையான முதல் தகவல் அறிக்கைகள் உடன் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அலட்சியம் ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.
'கார்ப்பரேட் ஆட்சி’ அதாவது இந்தியாவின் அதானி-அம்பானிமயமாக்கலால் ஏற்றுக்கொள்ளும்படி வார்த்தெடுக்கப்பட்ட வெறுப்புணர்வின் திட்டமிட்ட பைத்தியக்காரத்தனத்தின் பிடியில் சிக்கிய ஒட்டுமொத்த நாடும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரங்களைக் கண்டும் காணாமல் இருந்தது. எனவே, அசுர பலம் கொண்ட பாசிச நடைமுறைகளை எதிர்க்கவும் சவால் விடவும் மரபுசார்ந்த பேச்சு, எழுத்து வடிவிலான போராட்டக் கருவிகள் போதுமானதாக இல்லை.
அண்மைய போராட்டங்களில் திரண்ட இந்த மக்கள் கடலானது, கடந்த காலப் போராட்டக் கிளை நதிகள் மூலமாகவும் பல ஆண்டுகளாகப் படிந்துள்ள மனக்குறைகளின் படிவுகள் மூலமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அவசரநிலைக்கு எதிரான போராட்டங்களில் தனது பங்கு குறித்து பெருமை பேசிக் கொண்டாடும் ஒரு அரசாங்கம், அந்தப் போராட்டமும் கூட குஜராத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர் இயக்கத்திலிருந்தே தொடங்கியது என்பதை மறந்துவிட்டது நகைமுரணாகும். தான் தனித்துவமானது, போராட்டங்கள் தன்னை ஒன்றும் செய்துவிடாது என்று அரசாங்கம் கற்பனை செய்து கொள்வது அதன் திமிர்தனமாகும்.
மாறுபட்ட போராட்ட முறை
ஜென் இசட் தலைமுறையினரின் அரசியல் பங்கேற்பு, போராட்டங்கள் நடத்தப்படும் விதத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நையாண்டியையும் மரபு மீறலையும் அரசியலின் ஒரு வடிவமாகக் கொண்டு, அரசியல் களத்தில் மீம்களையும் குறுங்காணொளிகளையும் மழையாகப் பொழிந்த ஒரு புயலாக ஜென் இசட் இருந்தது; கொண்டாட்டமாக இருப்பதே இங்கு அரசியல் எதிர்ப்பாக இருந்தது. இந்த உணர்வைக் கண்ட முதல் இயக்கம் ஜந்தர் மந்தர் 1.0 அல்ல. கோவிட்-க்குப் பிந்தைய காலகட்டத்திலிருந்து, குறிப்பாக, மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் சமூக ஊடகங்களை மேலோட்டமாக ஆராய்ந்தாலே இன்ஸ்டாகிராம், ரெட்டிட் போன்ற தளங்களும் இளைஞர்களால் நடத்தப்படும் யூடியூப் அலைவரிசைகளும் எதிர்ப்பு மற்றும் சவாலுக்கான களங்களாக மாறியுள்ளதை அறியலாம்.
சமூக ஊடகங்களில் கைதேர்ந்த ஜென் இசட் தலைமுறையினர், முந்தைய தலைமுறையினரின் வாட்ஸ்அப் வழி அனுப்பப்படும் அபத்தங்களால் சோர்வடைந்து, அரசியலில் ஈடுபடுவதற்கான தங்களின் சொந்த விதிகளைக் கொண்டு வந்தது இயல்பானதே. ஜென் இசட் தலைமுறையினருக்கு, போராட்டங்கள் என்பது 'உள்ளடக்கத்தை' உருவாக்கும் களமாக மாறிவிட்டன; மேலும் நகைச்சுவையான காணொளிகளில் காவல்துறை தங்களின் அதிகார பிம்பத்தை இழந்த ஒரு துணைக் கதாபாத்திரமாக மாறியுள்ளது, இது காவல்துறை ஆட்சிக்கு அஞ்ச மறுப்பதை எதிரொளிக்கிறது. எவ்விதத் தயக்கமுமின்றி, எதையும் நேரடியாக அணுகும் பாங்கைக் கொண்ட ஜென் இசட் தலைமுறையினர், அரசியல் தலைவர்கள் பல ஆயிரம் கோடிகளைச் செலவிட்டுத் தங்களைப் பற்றித் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருந்த செயற்கையான பிம்பங்களை எளிதாகத் தகர்த்தெறிந்துள்ளனர்.
ஒன்றோடொன்று இணைந்த போராட்டங்கள்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள், வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தைப் போல உணர்வுப்பூர்வமான பிரச்சினை அல்ல என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இது மீண்டும் ஒரு தவறான புரிதலாகும். எஸ்ஐஆர்-க்கு எதிரான போராட்டங்கள் மாணவர் இயக்கத்தின் மற்றொரு ஆற்றல்வாய்ந்த திருப்பமாகும்.
வேலைவாய்ப்புகளில் கார்ப்பரேட் ஏகபோகம், செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியும் அதைக் கட்டுப்படுத்தலும் பொதுத்துறையிலிருந்து அரசாங்கம் வெளியேறுவது, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியால் ஏற்படும் உலகளாவிய மோதல்களின் விளைவுகள் ஆகியவற்றுக்கு அரசாங்கத்தைக் கேள்வி கேட்கவும் பொறுப்பேற்க வைக்கவும் இளைஞர்களிடம் பல மனக்குறைகள் உள்ளன. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களில்தான் அவர்கள் தங்கள் அரசியல் விருப்பங்களையும் மனக்குறைகளையும் வெளிப்படுத்த முடியும். இருப்பினும், தேர்தல் முறையே சிதைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டால், பொறுப்பேற்கச் செய்ய இளைஞர்கள் அமைதியான போராட்டங்களை மட்டுமே நம்பியிருக்க முடியும்.
போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே காவல்துறைக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் அளித்திருந்தது. திரு.சவுகானை எதிர்த்தவர்களும் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நின்றவர்களும் தடியடிகளையும் முதல் தகவல் அறிக்கைகளையும் எதிர்கொண்டனர். இப்போது, ஜனநாயக எழுச்சியை நசுக்க போராட்டக்காரர்கள் மீது அமைதிப் பத்திரங்கள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும், இதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது; அகில இந்திய மாணவர் கழக தலைவர் நேஹா போரா அமைதிப் பத்திரத்தில் அண்மையில் கையெழுத்திட மறுத்தது, எதிர்ப்பு எவ்வாறு சட்டமறுப்பாக மாறும் என்பதைக் காட்டுகிறது. மிருகத்தனமான வலிமையின் மூலம் போராட்டங்களை முழுமையாக அடக்கிவிட முடியும் என்று அரசாங்கம் கற்பனை செய்வது ஒரு மாயையாகும். மாணவர்களை, ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களை மௌனமாக்கவும் சிறையில் அடைக்கவும் 1967-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஜந்தர் மந்தரை அறிவிக்கப்பட்ட போராட்டக் களத்திலிருந்து நீக்கியதன் மூலம், மோடி தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையே நீக்கியுள்ளது. அமைதியான போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஜந்தர் மந்தராக மாறுவதே இதை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாகும். நமது கல்வி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக ஜனநாயக விரோதப் போக்குகளால் அழிக்கப்பட்ட ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு படியாகவே, மாணவர் பேரவைத் தேர்தல்களை மீண்டும் நடத்தக் கோரி இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் போராட்டங்கள் அமைந்துள்ளன.
வெறுப்பு அரசியலால் ரத்தம் சிந்தும் ஒரு நாட்டில், பரந்த அளவில் சொல்லப்போனால் ஒரு சமூகத்தில், இளைஞர்கள் நகைச்சுவையுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். போராட்டக் களத்திலும் இளைஞர்களை நீங்கள் காணலாம்; குறுங்காணொளிகளிலும் அவர்களை நீங்கள் காணலாம். நாம் கற்பனை கூட செய்து பார்க்காத வழிகளில் பொது மனசாட்சியை வெளிக்கொணர்ந்து, இந்த இரண்டு தளங்களையும் விட்டுக்கொடுக்க இளைஞர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் தான் ஜனநாயகத்தின் பொது சுகாதார நிலையங்கள்; அச்சுறுத்தல்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அவர்கள் எதிர்ப்பைக் கட்டமைக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சமூகத்தின் பிற பிரிவினரையே சாரும். ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான செயல்முறை இப்போதுதான் தொடங்கியுள்ளது.
தி இந்து – தலையங்கப் பக்கம் - நவம்பர் 10, 2026
தமிழாக்கம்: விஜி
