தவெக அரசு பதவியேற்று நான்கு மாதங்களுக்குள் 12 அரசாரணைகளை வெளியிட்டு, எதிர்ப்பின் காரணமாக இரண்டொரு நாள்களிலேயே அவற்றைத் திரும்பப் பெற்றும் உள்ளது. திரும்பப் பெற்றது நல்லதுதான். ஆனால், அப்படி முதலில் வரும் உத்தரவுகளுக்கான காரணம் என்ன?. முதலில் விஜய்யின் ஆஸ்தான சோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலை தமிழ்நாடு அரசின் செலவில் தன்னுடைய தனி ஆலோசகராக நியமித்ததில் ஆரம்பமானது. வரிசையாக வந்து இப்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்கள் தர வேண்டியதில்லை என அரசாணை வெளியிட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாக செப்டம்பர் 29ம் தேதியே அதை திரும்பப் பெற்றது. இது ஏதோ தவெக அரசால் தவறுதலாக தெரியாமல், புரியாமல் வெளியிடப்பட்டு, சுட்டிக் காட்டிய பின்னர் திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா என கேள்வி எழுகிறது. வட்டாட்சியர் ஒருவர், இடதுசாரி கட்சி உறுப்பினர்களைக் கணக்கெடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார். எதிர்ப்பு கிளம்பியவுடன் அது வட்டாட்சியரே தன்னிச்சையாகப் போட்ட உத்தரவு, அதற்கும் அரசிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லப்பட்டது. அடுத்து நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து, அகில இந்திய மாணவர் கழகத்தின் தேசியத் தலைவர் நேகா, தமிழ்நாடு வந்த சமயத்தில், (அப்போது அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்) கல்லூரி மாணவர்கள் யாரும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டங்களுக்கோ, கரப்பான்பூச்சி கட்சியின் கூட்டங்களுக்கோ போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரிக் கல்வித் துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தவுடன் முதல்வருக்கு இது தெரியாது என்று சட்டப் பேரவையில் சப்பைக்கட்டு கட்டினார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர். இந்த இரண்டு உத்தரவுகளும் மிகத் தெளிவாக இடதுசாரிக் கட்சிகளைக் குறி வைத்துதான் வெளியிடப்பட்டன என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அப்போதே இதற்குப் பின்னணியில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்க்குமார் இருப்பதாகவும், அவர் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்டவர், அவரின் செயல்பாடுகள் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை ஒத்திருக்கிறது அதனால், அவர் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன. இப்போது வந்த அரசாணை மிகவும் ஆபத்தானது. காவல்துறையின் காட்டாட்சிக்கு வழிவகுக்கக் கூடியது, தவெக ஆட்சிக்கு வந்தபின்னர், நாட்டில் பாலியல் குற்றங்கள், ஆணவக் கொலைகள், சாதியாதிக்கக் கொலைகள், போதை விற்பனை, அதனால் கொலைகள் என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, நடக்கும் குற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிதான் மேற்கொள்ளப்படுகிறது. தவெகவின் இந்த நான்கு மாத ஆட்சியில், 500க்கும் மேற்பட்ட கொலைகள் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தவெகவினர் பல குற்றவாளிகளை காப்பாற்றுவது மட்டுமின்றி. பல வழக்குகளில் அவர்களே குற்றவாளிகளாக உள்ளனர் எனச் செய்திகள் வருகின்றன.
காவல்துறையின் அத்துமீறல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மாணவர், இளைஞர் போராட்டமாக இருந்தாலும் சரி, டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, நீட் எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி காவல்துறையினர் ஒடுக்குமுறையைக் கையாள்கின்றனர். பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்குள்ளேயே சென்று மாணவர்களைக் கைது செய்கிறார்கள். சமீபத்தில் திருநெல்வேலி கங்கை கொண்டானில், சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்பதற்காக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு மக்கள் அங்கிருந்து புறப்பட்ட போது, அப் பகுதி காவல் ஆய்வாளர், மனு கொடுக்கப் போகக் கூடாது என்று தடுத்து நிறுத்த, தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பொதுமக்களில் ஒருவரை காவல் ஆய்வாளர் ஓங்கி அடிக்கிறார். சுற்றுச் சூழலைக் கெடுக்கும் ஆலையை எதிர்த்து மனு கொடுக்கக் கூட செல்லக் கூடாது என்று காவல்துறை தடுக்கிறது. மனு கொடுக்கச் செல்லவே தடை செய்யும் தவெக அரசின் காவல்துறை, போராட்டங்களுக்கு எப்படி அனுமதி கொடுக்கும்.
கடந்த திமுக ஆட்சியின் போதே, காக்கி உடைக்குள் காவி ஒளிந்து கொண்டுள்ளது என்ற விமர்சனங்கள் வந்தன. தகவல் தருவது எங்கு மறுக்கப்படுகிறதோ, அங்கு ஊழல் துவங்கிவிட்டது என்பதே பொருள். தகவல் உரிமைச் சட்டம்தான் அரசு நிர்வாகத்தின் பல ஊழல்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆணையும் எதிர்ப்பின் காரணமாக வழக்கம்போல் திரும்பப் பெற்று விட்டாலும், தவெக அரசு இதை திரும்பக் கொண்டு வருமா எனத் தெரியவில்லை. ஏனென்றால், ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு திட்டங்களை, கொள்கைகளை, தெரிந்தோ தெரியாமலோ, தவெக அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டு வருவது போல தெரிகிறது. பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசத் தயங்குகிறார் விஜய். சட்டமன்றத்தில் பாஜக பற்றி யார் பேசினாலும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. தன்னுடைய தாயாரைப் பற்றி தவறாகப் பேசியது பாஜக தலைவர் என்ற போதிலும், அந்தப் பழியையும் திமுகவின் மீதே போடுகிறார்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று தன்னுடைய கூட்டணிக்கு பெயர் வைத்த மறுநாளே, தவெக அமைச்சர்கள் பலரும் கலவர ஊர்வலமான இந்து முன்னணியின் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். உலக சுற்றுலா நாள் ஆன செப்.27 அன்று இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக, “ராம் யாத்ரா” என்ற பெயரில் அபிநய நாட்டியாஞ்சலி எனும் குழுவினருடன் சேர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளை காவி உடையில் நடனமாடச் செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி, அந்தக் குழந்தைகளை பல மணி நேரம் நிற்க வைத்திருக்கிறார்கள். இது ஒரு புறம் மனித உரிமை மீறல். மறுபுறம், இதுதான் மதச் சார்பற்ற அரசா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதனால்தான் தமிழ்நாடு முதல்வர், தவெக தலைவர் தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம் மதமும் சம்மதம் என்று பேசியுள்ளாரோ? எம்மதமும் சம்மதம் என்பதற்குத் தவறான முன்மாதிரியாக அல்லவா இவை இருக்கின்றன.
முற்போக்கு விழுமியங்களுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டில், பிற்போக்கு நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அது கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே இனி சாத்தியம்.
