செப்டம்பர் 13, 2026 அன்று டெல்லி, ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் புலம் பெயர் தொழிலாளர் உரிமைச் சங்கம் (Migrant workers’ rights forum) உதயமானது. புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகள், வேலை, பணியிடப் பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பது இந்த சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். வரலாற்று ரீதியாக புலம் பெயர் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக இருந்து வந்த போதிலும், அவர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள். 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் 50 கோடி தொழிலாளர்களில் சுமார் 15 கோடி பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். இது மொத்த தொழிலாளர் படையில் ஏறத்தாழ 30% ஆகும்.
கோவிட் காலத்திய முன்னறிவிப்பற்ற பொது முடக்கம் பெரும் பகுதி புலம்பெயர் தொழிலாளரை வெளியேற்றியது. அவர்களின் வாழ்க்கை மோசமானது. கடந்த 12 ஆண்டுகளில் மோடி ஆட்சி கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், வாக்காளர் தீவிரத் திருத்தம், பல்வேறு தொழிலாளர் விரோத பாசிசச் சட்டங்கள் புலம்பெயர் தொழிலாளர் உட்பட தொழிலாளர் வர்க்கத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இருந்தபோதும் இவர்களைத்தான் பாஜக தனது ஆதரவுத் தளமாக பயன்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள்.
ரூ. 10,000 - 12,000 ஊதியத்திற்காக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியதை எதிர்த்து டெல்லி தலைநகர் மண்டலத்தில் போராடிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள். தொடர் வறுமை, நிலையற்ற வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வந்த அவர்களின் சமூக பொருளாதார பாதிப்புகள் அந்த போராட்டத்தின் மூலம் வெளி வந்தது. இந்தியத் தொழிலாளர்களில் 90% பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். பெரும்பான்மையோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். குடும்பத்தோடு இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. கூலி திருடப்படுகிறது. பாதுகாப்பற்ற பணிச் சூழலால் மரணத்தை எதிர்கொள்கிறார்கள். பணிபுரியும் இடத்தில் இவர்களின் குடியுரிமை செல்லாததாக அறிவிக்கப்படும் போது, நீண்ட காலமாக சொந்த ஊர்களை விட்டு வெளியே இருப்பதால் அங்கும் கூட அவர்களது சமூக வேர்களும் குரல்களும் பலவீனமாகிப் போய்விட்டன. உலகம் முழுவதும் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் புலம் பெயர் சமூகங்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு, வாக்காளர் தீவிர திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மூலம் இவர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதுவும் அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் சந்தேகத்துக்குரிய சமூகமாகப் பார்ப்பதும், அவர்கள் மீது தாக்குதலும் நடைபெறுகின்றன. அதுபோலவே பீகார், ஜார்க்கண்ட், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தாக்குதல்களை எதிர் கொள்கின்றனர்.
சமூக, பொருளாதார நிச்சயமின்மையும், அதோடு கூடவே, குடியுரிமை மீதான தாக்குதலும் சேரும் போது சமூக, அரசியல் என்ற பொருளில் பெரும் எண்ணிக்கையிலான இவர்களின் இடம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தங்களுக்குச் சொந்தமானது எது எனும் நெருக்கடியைச் சந்திக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பு பொருளாதாரத்துக்கு மிகவும் மையமானதாக இருப்பது நகைமுரணாகும்.
இந்த மாநாட்டில் பேசிய சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் திபங்கர், புலம்பெயர் தொழிலாளர்களை அமைப்பாக்குவது நமக்கு புதிய பணி அல்ல; ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அது இன்னும் அவசரமானதாகி உள்ளது என்றார். தொழிலாளர்களின் சொந்த மாநிலங்களிலும் அவர்கள் பணி புரியும் மாநிலங்களிலும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சிபிஐ(எம்எல்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வினோத் சிங், பிற நாடுகளில் பணிபுரியும் நம் நாட்டு தொழிலாளர்களுக்கு நாம் உதவிக் கரம் நீட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
டெல்லியைச் சேர்ந்த தோழர் ஸ்வேதா ராஜ், நகர்ப்புற திட்டமிடல் குறித்த கேள்விகளை எழுப்பினார். எல்லா இடங்களிலும் மேம்பாலங்களும் சாலைகளும் கட்டப்படுகின்றன ஆனால் நகரத்தை உருவாக்கி இயக்கும் தொழிலாளர்கள் நகரத் திட்டமிடலின் ஒரு பகுதியாக கருதப்படுவதில்லை என்றார். ஒரு சிறிய அறையில் 10 அல்லது 12 தொழிலாளர்கள் தங்கும் நிலையில், அங்கு அவர்கள் ஒரே நேரத்தில் தூங்க வழி இல்லாததால் மாறி, மாறி தூங்கும் நிலையே உள்ளது என்று குறிப்பிட்டார். அவர்கள் குடியிருப்புகள் எந்த நேரமும் இடிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதையும் சுட்டிக்காட்டினார். அடையாள ஆவணங்கள் இல்லாததால் பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் இலவச பேருந்துப் பயண வசதியைக் கூட இழந்துள்ளனர் என்றார். இவற்றோடு புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் அட்டைகள் பெறுவதும் சிரமமான காரியமாக உள்ளது என்றார்.
பீகார் சட்டமன்ற உறுப்பினர் சந்தீப் சௌரவ், இவ்வளவு துன்பங்களுக்கு இடையிலும் புலம்பெயர் தொழிலாளர்களை பாஜக தன் வசப்படுத்தி வைத்துள்ளதை குறிப்பிட்டவர், நமது பாரம்பரிய ஆதரவு தளத்தின் சில பிரிவுகளும் கூட அந்த வலை பின்னலுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றார். ஆகவே, ஒரு அரசியல் இலக்கு சார்ந்த, அமைப்பு சார்ந்த விதத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் திரட்டப்படுவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
ஏஐசிசிடியு துணைத் தலைவர் தோழர் கிளிஃப்டன் தனது உரையில், பொது முடக்கத்தின் போது ரயில் தண்டவாளத்தின் வழியே நடந்தே வீடு திரும்பிய தொழிலாளர்கள் ரயிலில் சிக்கி உயிரிழந்ததை நினைவு கூறும் வகையில் மே 7ஆம் தேதியை புலம்பெயர் தொழிலாளர் நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னல்களை வெளிக்கொண்டுவர ஒரு வலுவான சமூக ஊடகக் குழு நமக்கு வேண்டும் என்றார்.
ஏஐசிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் வீ.சங்கர் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள், கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நீடித்த போர்க்குணமிக்க இயக்கத்தை நடத்த அழைப்பு விடுத்து மாநாட்டை நிறைவு செய்தார்.
ஒவ்வொரு மாநிலமும் தங்களது மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ற வடிவில் சொந்த அமைப்புகளை உருவாக்க வேண்டும். அவை தொழிற்சங்கம், மன்றம், அல்லது புலம்பெயர் தொழிலாளர் வலைப் பின்னல், ஆய்வு குழுக்கள் இன்ன பிற வடிவங்களில் இருக்கலாம். அவற்றை ஒன்றிணைக்கும் தளமாக புலம்பெயர் தொழிலாளர் உரிமைச் சங்கம் செயல்படும். இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல சட்டத் துறையினர் பிரிவு, ஆராய்ச்சி, ஆய்வுக்குழு, செயலகம் உள்ளிட்ட துணைக் குழுக்கள் உருவாக்க வேண்டும் எனவும்.
ஏஐசிசிடியு, அயர்லா, மற்றும் அய்லாஜ் ஆகியவை இணைந்து அந்தந்த மாநிலத்திற்கே உரிய கோரிக்கை சாசனத்தை உருவாக்கி பின்னர், அவை ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய அளவிலான சாசனமாக உருவாக்கப்படலாம். மே 7, 2027 தேசிய புலம்பெயர் தொழிலாளர் தினத்தில் பெங்களூருவில் தேசிய மாநாட்டை நடத்தி கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றலாம் எனவும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த 24 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் மோகன், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஏஐசிசிடியு பொதுச் செயலாளர் ராஜீவ் டிம்ரி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விவாதத்திற்கான தாளை தோழர் ஆகாஷ் முன் வைத்தார்.
மாநாட்டில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 140 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் மோகன், ஹீரா பஸ்வான் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். மாநாட்டுத் தலைமைக் குழுவில் தமிழ்நாட்டின் தோழர் மோகன் இடம்பெற்றிருந்தார்.
கோரிக்கைகளும் தீர்மானங்களும்
1)அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் பணிக்கு ஆளெடுக்கும் இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டும். அந்தப் பதிவுகளில் முதன்மை வேலையளிப்பவர், பணியிட விவரம், கூலி விவரங்கள், முன் தொகை, குடியிருப்பு, அவசரகால தொடர்பு எண்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
2) தொழிலாளர்களை ஏமாற்றுபவர்கள், அடைத்து வைப்பவர்கள், கூலித் திருட்டில் ஈடுபடுபவர்கள், கொத்தடிமை முறையில் தொழிலாளர்களை வைத்திருப்பவர்கள், குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துபவர்கள், பாதுகாப்பற்ற பணிச் சூழல், வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆகிய ஒப்பந்தக்காரர்கள், வேலைக்கு ஆளை அனுப்பும் ஏஜெண்டுகள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3) தங்கள் நிறுவனத்தில் நடைபெறும் ஊதியம், பாதுகாப்பு, தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்ட மீறல்களுக்கு முதன்மை வேலையளிப்பவரே பொறுப்பு. ஒப்பந்ததாரர்கள், துணை ஒப்பந்ததாரர்கள் மீறலில் ஈடுபட்டாலும் முதன்மை வேலையளிப்பவரே பொறுப்பாக்கப்பட வேண்டும்.
4) புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலைச் சந்திக்கும் போதும், அவரது சுதந்திர இயங்குதலுக்கு தடை விதிக்கும் போதும், அவரது ஊதியத்தைப் பிடித்தம் செய்வது, அச்சுறுத்துவது, துன்புறுத்துவது, சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாத தருணம், குழந்தைத் தொழிலாளர்களை, வளரிளம் பருவத்தினரை தீங்கு விளைவிக்கும் வேலைகளில் அமர்த்துவது ஆகிய தருணங்களிலும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 23, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1976, குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 ஆகியவற்றைக் கறாராக அமல்படுத்த வேண்டும்.
5) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவ வசதி, உணவிடம், ஓய்வறை, தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்கான வசதிகள், தங்களது அடையாள அட்டைகளை தங்கள் பாதுகாப்பிலே வைத்திருப்பதற்கான உரிமை, சட்ட உதவி, சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடு, உழைத்த சம்பளத்தை திரும்ப பெறுவதற்கும் காயம் பட்டாலோ உயிரிழப்பு ஏற்பட்டாலோ அவருடைய மறு வாழ்க்கைக்கான ஏற்பாடுகள், அவர்கள் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
6) பணி செய்யும் நகரங்களில், மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல், அவர்கள் பணி செய்யும் இடங்களிலிருந்து சொந்த ஊருக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
7) சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான பயணக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். பணி செய்யும் இடத்தில் விபத்து அல்லது மரணம் நேர்ந்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
8) மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணித்த ஒருவர் கூட கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என இந்திய சட்டங்களும் இயற்கை நீதியும் சொல்கிறது. மாநிலத்துக்குள்ளோ, மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்தோ அல்லது நாடு விட்டு நாடு சென்றோ இறக்க நேரிடும் தருணங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர் உடல் சொந்த ஊருக்கு கண்ணியத்துடனும் குறித்த காலக்கெடுவுக்குள்ளும் அவர்கள் குடும்பத்தினர் வசம் சேருவதை உறுதி செய்ய வேண்டும்.
9) வாழ்க்கைக்கான ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, மிகை நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம், தொழிலாளர் ஈட்டுறுதி, வருங்கால வைப்பு நிதி, பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகியவை கறாராக அமல்படுத்தப்படுவதையும் தொழிலாளர் பாதுகாப்புகள் விரிவுபடுத்தப்படுவதையும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஒப்பந்தக்காரர் ராஜ்ஜியம், பாதுகாப்பற்ற வேலை, சங்கமாக அமைப்பாவதை தடுக்கும் நடைமுறை ஆகியவை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
10) மொழி, பிராந்திய அடையாளம், மதம், தேசியம் ஆகியவற்றின் அடிப்படையிலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வகையான அன்னியர் வெறுப்பும் நிறுத்தப்பட வேண்டும்.. ஏதோ ஒரு காரணத்தினால் அவரது வாக்குரிமை பறிபோகும் நிலை வரும்போது, நடைமுறை சிக்கல், இடைவெளிகளை சரி செய்யும் விதம் சிறப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
