வேலையின்மையிலிருந்து, கடன் சங்கிலியில் இருந்து விடுதலை பெற ஒன்றிய பாஜக ஆட்சி, தவெக ஆட்சிகளை எதிர்த்துப் போராட அவிகிதொச 7வது மாநில மாநாடு அறைகூவல்

$articleData->title

அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு

அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு 2026 அக்டோபர் 26 அன்று மாலை  தோழர்கள் நாகபூஷன்-ராம் நரேஷ் ராம்-டிகேஎஸ் ஜனார்த்தனன் அரங்கில் (புதுக்கோட்டை,  விஜய் பேலஸ்) கொடியேற்றத்துடன் துவங்கியது. சங்கத்தின் கொடியை மத்திய பார்வையாளர்,  அவிகிதொச தேசிய ஒருங்கிணைப்பாளரும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான தோழர் நிவாஸ் பிரகாஷ் ஏற்றினார். இகக(மாலெ) அவிகிதொச தலைவர்களும் பிரதிநிதிகளும் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் பொது மாநாடு தொடங்கியது. தோழர்கள் ஜானகிராமன், மணிமேகலை, ஜெசிந்தா, நாராயணன், ஈஸ்வரி, முருகேசன், நாகப்பன் ஆகிய 7 பேர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியது. தோழர் ஜோதிவேல் வரவேற்புரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்  எஸ்.குமாரசாமி மாநாட்டைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை வாழ்த்திப் பேசிய பின், சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் என்.குணசேகரன் மாநாட்டுப் பிரகடனத்தை முன்வைத்தார். 

அக்டோபர் 27, இரண்டாம் நாள் பிரதிநிதிகள் அமர்வில், முன்வைக்கப்பட்ட மாநாட்டுப் பிரகடனத்தின் மீது, பிரதிநிதிகள் கருத்துகள், ஆலோசனைகளை முன் வைத்தனர். 23 மாவட்டங்கள், 40க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள்  நிலம், வேலை, கடன் நெருக்கடி, வீட்டுமனை, வீடு பிரச்சனைகள் மீது விடாப்பிடியான போராட்டங்களை நடத்த வலியுறுத்திப் பேசினர்.

மாநாட்டை வாழ்த்தி, இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் சோ.பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி.ரெங்கசாமி, ஏஅய்சிசிடியூ மாநில சிறப்புத் தலைவர் டி.சங்கரபாண்டியன், ஏஅய்கேஎம் மாநிலச் செயலாளர் அய்யந்துரை, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில அமைப்பாளர் ரேவதி, புரட்சிகர இளைஞர் கழக பொதுச் செயலாளர் ஜி.தனவேல், நீதிக்கான மக்கள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் அ.சிம்சன், அவிகிதொ சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் பாலசுந்தரம், மத்திய பார்வையாளர் நிவாஸ் பிரகாஷ் மற்றும் பலரும் வாழ்த்திப் பேசினர். தோழர் நிவாஸ் உரையை தோழர் கே.ஜி. தேசிகன் தமிழாக்கம் செய்தார்.

ஏறத்தாழ 350 பேர் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மாநாடு, 57 பேர் கொண்ட பொதுக்குழு, 25 பேர் கொண்ட  செயற்குழு,‌ 11பேர் கொண்ட நிர்வாகக் குழுவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. மாநிலத் தலைவராக எஸ்.ஜானகிராமன், மாநிலப் பொதுச்செயலாளராக தோழர் சி.ராஜசங்கர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக வீ.மூ.வளத்தான், மாசிலாமணி, ஈஸ்வரி, முருகேசன், ஆகியோரும் செயலாளர்களாக மணிமேகலை, நாராயணன், ஜெசிந்தா, தவச்செல்வன் ஆகியோரும் மாநில ஆலோசகராக என்.குணசேகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இகக(மாலெ) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வீ. சங்கர் மாநாட்டை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டுத் தீர்மானங்களை சி.ராஜசங்கர் முன்மொழிய மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது. சிவப்பு, வெள்ளை உடைகளில் வந்திருந்த கணிசமான பெண் பிரதிநிதிகள் மாநாட்டை வண்ணமயமாக்கினர். இறுதியாக தலைவர்கள், தொண்டர்கள் கவுரவிக்கப்பட்டனர். பாசிச பாஜக ஆட்சியை வெளியேற்ற கிராமப்புரப் பாட்டாளிகளை அணிதிரட்ட உறுதியேற்கும் எழுச்சி முழக்கங்களுடன் மாநாடு நிறைவுற்றது. 

அவிகிதொச 7வது மாநில மாநாட்டுத் தீர்மானங்கள் 

அஞ்சலி தீர்மானம் 

  1. நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கத்தை கிராமப்புரங்களில் வேரூன்றச் செய்ததிலும் விவசாயத் தொழிலாளர், கிராமப்புரத் தொழிலாளரை அரசியல் களத்தில் வெற்றிகரமாக மேலெழுந்து வரச்செய்ததிலும் பெரும் பங்களிப்பைச் செய்த தோழர்கள் நாகபூஷன் (அக்9) - ராம்நரேஷ் ராம்(அக் 26) - டிகேஎஸ் ஜனார்த்தனன் (அக் 27) நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மாநாடு, அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலியைச் செலுத்துகிறது.

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் போரால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்களுக்கு, ருஷ்ய-உக்ரேன் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அண்மையில் மறைந்த, நீண்டகால கட்சி ஊழியர் தோழர் பாண்டியன் (சென்னை) உள்ளிட்டு 6வது மாநில மாநாட்டிலிருந்து இது வரையிலும் மறைந்த அவிகிதொச, இகக(மாலெ) தோழர்களுக்கும் பல்வேறு இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அரசியல், பண்பாட்டு ஆளுமைகளுக்கும், தொழிலாளர் வர்க்க இயக்க முன்னோடிகளுக்கும் கார்ப்பரேட், பாசிச எதிர்ப்பு விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கும் கார்ப்பரேட் எதிர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் உயிர்நீத்தவர்களுக்கும், கொரோனா கொடும்  கிருமி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், இடி, மின்னல் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கும் பட்டாசு வெடி விபத்து, மலக்குழி சுத்தம் செய்தல், தூய்மைப்பணி, தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர் உள்ளிட்ட பணியிட இறப்புக்கு ஆளானவர்களுக்கும் இந்த மாநாடு தனது அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பிரேசில் மக்கள் தீர்ப்புக்கு வாழ்த்து! 

  1. உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு பெரும் உற்சாகம் அளிக்கிற வகையிலும்,  அடாவடி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க வல்லரசு அரசியலுக்கும் அவரது பிரேசிலிய தீவிர வலதுசாரி கூட்டாளி போல்ஸனரோவுக்கும் பலத்த அடிகொடுக்கிற வகையிலும் 4வது முறையாக லூலாவை வெற்றிபெற வைத்த லத்தின் அமெரிக்காவின் பிரேசில் தேர்தல் முடிவை மாநாடு வரவேற்கிறது. உலகம் முழுவதும் மக்கள் சார்பு கொள்கைகளுக்காக மக்கள் போராட்டங்கள் தீவிரம் பெற்று வரும் வேளையில், பிரேசில் லூலா அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு அழுத்தமான ஆதரவளிக்கிற வகையில் பிரேசில் மக்கள் தீர்ப்பை மாநாடு வரவேற்று வாழ்த்துகிறது. 

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்

  1. இந்திய குடிமக்கள் 13 கோடிக்கு மேற்பட்டோரது வாக்குரிமையைப் பறித்து கொடூர குற்றம் புரிந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும்; தேர்தல் ஆணையர் தேர்வு தொடர்பான 2023 திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென ஒன்றிய அரசை மாநாடு வலியுறுத்துகிறது. நாட்டு மக்களின் வாக்குரிமையை மீட்டெடுக்கவும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையைப் பாதுகாக்கவும் நாடுதழுவிய அளவில் நடக்கும் மாணவர், இளைஞர், குடிமக்கள் நடத்திவரும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை மாநாடு முழுமனதுடன் ஆதரிக்கிறது. எல்லாவகையிலும் இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய மாநாடு உறுதி ஏற்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடி வரும் இளைய தலைமுறையின் போராட்டங்களை மூர்க்கத்தனமாக நசுக்கத் துடிக்கும் பாசிச மோடி அரசாங்கத்தை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

மீண்டும் வேண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம்

  1. நாட்டிலுள்ள கிராமப்புர வறிய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழித்துக்கட்டி, வேலை வாய்ப்பு உத்தரவாதத்தின் மீது கொடும் தாக்குதலை நடத்தியுள்ள மோடி அரசாங்கத்தை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆண்டுக்கு 200 நாள்கள் வேலையும்; நாளொன்றுக்கு ரூ 1000 ஊதியமும்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தி தொழிலாளரை வேலையிலிருந்து விரட்டியடிக்கும் கருவிழி, விரல் ரேகை படம் எடுக்கும் முறையை நீக்க வேண்டும்; திட்டத்தை விவசாயத்துக்கும் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி மேம்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது. தேர்தல் வாக்குறுதிப்படி, நிபந்தனைகள் எதுவுமின்றி 25 நாள்கள் வேலை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். விவசாய, கிராமப்புர தொழிலாளருக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.10,000, இலவச மருத்துவக் காப்பீடு, வேலைசெய்யும் இடத்தில் மரணமுற்றால் நிவாரணம் ரூ. பத்து லட்சம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும். காவிரி நீர் வராததாலும் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருள் விலை உயர்வாலும் துயரமடைந்துள்ள விவசாய, கிராமப்புர தொழிலாளருக்கு துயர் துடைப்பு நிவாரணமாக தவெக அரசு ரூ.10,000 வழங்கிட வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்ட இயக்கங்களை நடத்தவும் மாநாடு முடிவுசெய்கிறது.

வீட்டுமனை, வீடு அடிப்படை உரிமையாக்கிட வேண்டும்.

  1. வீட்டுமனை, வீடு வறிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாகவும் அடையாளமாகவும் உள்ளது. ஒன்றிய, மாநில ஆட்சிகளின் கவர்ச்சிகரமான பல திட்ட அறிவிப்புகளுக்குப் பிறகும் மாநிலத்தில் பல பத்து லட்சம் கிராமப்புர வறிய மக்கள் வாழத்தகுந்த வீடுகள் இல்லாமலும், குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா இல்லாமலும் பல தலைமுறைகளாக துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். திமுக ஆட்சியில், 22 லட்சம் பட்டாக்கள் கொடுத்துள்ளோம்; தவெக ஆட்சியில் 27 லட்சம் பட்டாக்கள் கொடுக்கப் போகிறோம் என்ற வெற்று அறிவிப்புகள் தொடர்ந்து வருகின்றன. அதேவேளை, வீட்டுமனை இருந்தால்தான் அரசாங்கத் திட்டங்களில் வீடு கிடைக்கும் என்ற தவறான நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன.

இந்த அருவருக்கத்தக்க நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடு, வீட்டுமனை இல்லாதவர், குடிமனைக்கு பட்டா இல்லாதவர்களின் கணக்கெடுப்பை நடத்திட வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனையுடன் கூடிய வீடு, குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். அரசு வசமுள்ள நிலங்களை வகை மாற்றம் செய்து வீட்டு மனை, வீடு திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கிட வேண்டும். ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் வீடுபெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

முற்போக்கான தீவிர நிலச் சீர்திருத்தக் கொள்கை வேண்டும்

  1. மிட்டா, மிராசுகளின் முதுகெலும்பை ஒடித்த கட்சி எனப்பேசினாலும் ‘நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என ஆய்வு நூல்கள் வந்தாலும் கடந்தகால திராவிட ஆட்சிகள் முற்போக்கான தீவிர நிலச் சீர்திருத்தத்தை செய்யத் தவறிவிட்டன. அதனாலேயே மக்கள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தவெக ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். விவசாயத்துக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் புத்துயிர் ஊட்டுகிற வகையில் மக்கள் சார்பு நில மறு விநியோகக் கொள்கையை தவெக ஆட்சி செயல்படுத்திட வேண்டும். நில உச்சவரம்பின் அளவைக் குறைப்பது, கோவில், மடம், அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகளை ரத்து செய்வது, குத்தகை சாகுபடியாளர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்குவது, பஞ்சமி நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தலித்துகளுக்கே வழங்குவது, மத நிறுவன நிலங்களில் குடியிருப்போருக்கு நிலத்தை சொந்தமாக்குவது, வன உரிமைச் சட்டம் 2006ன்படி பழங்குடி மக்களுக்கு நில உரிமை வழங்குவது, இனாம் நிலங்களை அபகரிக்க முயலும் கோவில் நிர்வாக முயற்சிகளை முறியடிக்க, வழக்குகளைக் காட்டி இழுத்தடிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி, இனாம் ஒழிப்புப் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட மக்கள் சார்பு நில மறு விநியோக நடவடிக்கைகளை  தவெக அரசு அவசர அடிப்படையில் செயல்படுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறது.

உள்ளாட்சித் தேர்தல்களை விரைந்து அறிவிக்க

  1. தேர்தல் ஜனநாயகப் பாதையில் அதிகாரத்துக்கு வந்துள்ள தவெக, உள்ளாட்சி ஜனநாயகத்தை மறுத்து அதிகாரிகள் ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது. தவெக ஆட்சியின் இந்த ஜனநாயக விரோதச் செயலைக் கண்டிப்பதோடு விரைந்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டுமென மாநாடு வற்புறுத்துகிறது.

நினைவுச் சின்னங்கள்

  1. வரலாற்றுச்சிறப்புமிக்க கோவை சின்னியம்பாளையம் தியாகிகளுக்கும், கார்ப்பரேட் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கொல்லப்பட்ட தூத்துக்குடி தியாகிகளுக்கும் அரசு நினைவுச்சின்னங்கள் எழுப்பிட வேண்டும். தொழிற்சங்க ஜனநாயகத்துக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகவும் வீரமிக்க வகையில் போராடியதுமட்டுமின்றி கிராமப்புர தொழிலாளரை அவிகிதொசவில் அணிதிரட்டிய பெருமைக்குரிய பிரிக்கால் தொழிலாளரது போராட்டத்தில் அநீதியாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 2011 டிசம்பர் முதல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி இருவரையும் கருணை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அவர்களது விடுதலையைக் கோரி வரும் டிசம்பரில் எஅய்சிசிடியூ நடத்த உள்ள மாநிலம் தழுவிய இயக்கத்தில் பங்கு பெறுவதென்றும் மாநாடு முடிவு செய்கிறது.

“சமூகநீதி” அரசு செயல்பட வேண்டும்

  1. தமிழ்நாடு முழுவதும் தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் உரிய இடுகாடு, சுடுகாடு வசதிகளின்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நாமக்கல் மாவட்டப் பகுதியில் பிணத்தை எரியூட்டுவதற்கு அனுமதிக்க வேண்டி பொதுவெளியில் உயர்சாதி பிரதிநிதிகளது காலில் விழுந்து வணங்கும் வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலுள்ள கல்விக் கூடங்களில் தலைவிரித்தாடிய சாதி ஆணவக் கொடூரங்கள் மேற்கு மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. கோவையில் பள்ளி மாணவன் அகிலன் சாதிய துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட கொடூரச்செய்தி நாகரிக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. காதல் வெறுப்பு சாதி ஆணவக் கொலைகள், பெண்கள், சிறுமிகள் மீது தொடரும் ‘வீரமணி வகை’ வன்முறைகள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமூகக் கொள்கைகளை தவெக ஆட்சி விரைந்து செயல்படுத்திட வேண்டும். பொது சுடுகாடு/இடுகாடு முறையை கொண்டுவருவது, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை விரைந்து கொண்டு வருவது, நீதிபதி சந்துரு, அருணாஜெகதீசன் ஆணையங்களின் பரிந்துரைகளைச்  செயல்படுத்துவது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை விரைவாக நிறைவேற்றிட வேண்டும். இதன்மூலம், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டில், தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுமிகள், விளிம்புநிலைப் பிரிவினர் ஆகியோரது பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த தேவையான சமூக நடவடிக்கைகளை ‘சமூகநீதி’ அரசு என பிரகடனம் செய்து கொண்டுள்ள தவெக ஆட்சி தாமதமின்றி செய்திட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.கார்ப்பரேட் திட்டங்களைக்   கைவிட    வேண்டும்

தீவிர காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும், சுற்றுச் சூழலையும் மேலும் மோசமாக  நாசப்படுத்தும் ஹைட்ரோகார்பன், சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட கார்ப்பரேட் பெருந்தொழில் திட்டங்களையும் மீனவர் வாழ்வை, சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தையும் தவெக ஆட்சி கைவிட வேண்டுமென்று மாநாடு வலியுறுத்துகிறது.

வேங்கை வயல் தலித்துகளுக்கு நீதி வேண்டும்

10. தமிழர் நாகரிகம், பண்பாட்டு மரபு மீதும் தமிழ்நாட்டின் முற்போக்கு மானுட வரலாற்றின் மீதும் தொடுக்கப்பட்ட அருவருப்பான தாக்குதலாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வேங்கை வயல் தலித்துகள் அருந்தும் தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட கொடும் இழிவு நடந்தது. அதைவிடவும் கொடூரமாக அந்தச் செயலுக்கு தலித்துகளையே குற்றவாளிகளாக்கி வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. சமூகநீதி கொள்கைப் பிரகடனத்தை அறிவித்துள்ள தவெக ஆட்சி, சமூக அநீதிக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளான வேங்கை வயல் தலித்துகளுக்கு நீதி வழங்கும் விதமாக விரைந்து மறுவிசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; குற்றம்சாட்டப்பட்டுள்ள தலித்துகளை விடுவிக்க வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

தூய்மைப் பணியாளர், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

  1. சென்னையில் தொடங்கி நடந்துவரும் தூய்மைப் பணியாளர்களின் சமூகநீதி, சமத்துவம், சமூக கண்ணியத்துக்கான போராட்டத்தை மாநாடு முழுமனதுடன் ஆதரித்து ஒருமைப்பாடு தெரிவிக்கிறது. மாநிலம் முழுவதுமுள்ள தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து, அனைத்துவகை தூய்மைப் பணியாளர்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியத்தை செயல்படுத்திட வேண்டும். தவெக தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனைத்துவகை தூய்மைப் பணியாளர்கள் தூய்மைக் காவலர் அனைவரையும் நிரந்தரப்படுத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஊழியர்கள் அனைவருக்கும் பணிநிரந்தரத்துடன் மாற்று அரசுப்பணி வழங்கிட வேண்டுமென்ற அவர்களது நியாயமான கோரிக்கையை தவெக அரசு  ஏற்று விரைந்து செயல்படுத்திட வேண்டுமென மாநாடு கோருகிறது. நிரந்தரமின்றி பணியாற்றிவரும் சத்துணவு பணியாளர், திட்டத் தொழிலாளர், செவிலியர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

பரந்தூர் விவசாய நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்

  1. தவெக தேர்தல் வாக்குறுதிகள் படி விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை மாநாடு ஆதரிக்கிறது; விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறது. கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது. கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை மாற்று தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

பல்கலைக் கழக சட்டத்தைக் கைவிட வேண்டும்

  1. கல்வியை வணிக மயமாக்கவும் கல்வியில் சமூகநீதியை மறுக்கவும் ஆபத்தான தேசிய கல்விக் கொள்கை 2020 அய் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதை பின்பற்றி புற்றீசல் போல் தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்கும் புதிய பல்கலைக் கழக சட்டத்தை தவெக ஆட்சி திரும்பப்பெற வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது. கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்தும் விதமாக மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்திட வேண்டுமெனவும் தவெக அரசை மாநாடு வலியுறுத்துகிறது.

மார்ச் 23 இடதுசாரி பேரணி வெல்க!

15. இகக(மாலெ), இகக, இகக(மா) ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகள் சேர்ந்த இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு, 2027 மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று திருச்சியில் மாபெரும் இடதுசாரி பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது. கிராமப்புர தொழிலாளர், உழைக்கும் மக்களின் அரசியலான இடது அரசியலை முன் களத்துக்கு கொண்டுவர எத்தனித்துள்ள இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கில் விவசாய, கிராமப்புர தொழிலாளியை அணிதிரட்டி பேரணியை மாபெரும் வெற்றிபெறச் செய்ய அவிகிதொச மாநில மாநாடு உறுதி ஏற்கிறது.

 

10 November, 2026