மாற்று இடதுசாரி அரசியல் பாதையை, புரட்சிகர இடது அரசியல் பாதையை, வளர்ச்சிக்கான மாற்றுத் திட்டத்தை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, மாநில உரிமைகள் போன்ற அனைத்து விசயங்களிலும் ஒரு மாற்றுப் பார்வையை, பாதையை, திட்டத்தை கொண்டது சிபிஐஎம்எல் கட்சி.
தமிழகத்தின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள், தலித்துகளின் சமத்துவம், பெண்ணுரிமை போராட்டங்கள் முதல் வீரமிக்க பிரிக்கால் ஆலைத் தொழிலாளர் போராட்டம் தூய்மைப் பணியாளர்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் வரை சிபிஅய்(எம்எல்) முன்னணியில் நின்று வருகிறது. சேத்தூர், மாடக்கோட்டை முதல் தஞ்சை மணலூர், சென்னை மாதவரம் வரை மக்கள் போராட்ட இயக்கத்தில் எண்ணற்ற தோழர்கள் தியாகம் செய்த வரலாறு கொண்ட கட்சி. சுற்றுச் சூழல் பிரச்சனைகளான கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் முதல் உழைக்கும் வர்க்கப் போராட்டங்களான மோடி அரசின் தொழிலாளர் அடிமைச் சட்டத்துக்கு எதிராக, நூறு நாள் வேலைத் திட்ட ஒழிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராடி வரும் கட்சி சிபிஅய்(எம்எல்) லிபரேசன்.
அரசியல் அமைப்புச் சட்டம் காக்க, ஜனநாயகம் காக்க, மாநில உரிமை காக்க, இந்தி - சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க, சிறுபான்மை மக்கள் உரிமை காக்க, வேலை, கூலி, ஒடுக்கப்பட்டோரின் சமூக மரியாதைக்காக விடாப்பிடியாக போராடி வரும் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி.
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முதன்மையாகக் கொள்ளும் அதே வேளை, திமுகவின் பார்வையிலிருந்து, காங்கிரசின் பார்வையிலிருந்து, வேறுபல கட்சிகளின் பார்வையிலிருந்து ஒரு மாறுபட்ட, வேறுபட்ட பார்வையை தமிழக மக்கள் மத்தியில் முன்வைக்கும் விதமாக, சிவப்புக் கொடி ஏந்தி, மூன்று நட்சத்திரக் கொடி ஏந்தி, எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து தேர்தல் களமாட முன்வந்திருக்கிறது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி.
பீகார் மாநிலத்தில் அங்கீகாரம் பெற்றதாக திகழும் சிபிஐஎம்எல் கட்சி, அசாமில் பழங்குடி மக்கள் மாநில உரிமைக்காகப் போராடும் கர்பி-ஆங்-லாங் கில் ஒரு தொகுதியிலும், இந்தியா கூட்டணியின் பகுதியாக ஒரு தேயிலைத் தோட்டப் பழங்குடியினர் தொகுதியிலும் போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் இடது முன்னணியோடு 10 இடங்களில் தொகுதி உடன்பாடு கொண்டிருக்கிறது. கேரளத்தில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழ் நாட்டில் சிபிஐ(எம்எல்) லிபரேசன் தனித்துக் களம் காண்பது, மாநிலம் முழுவதும் சுமார் 10 - 15 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறது. 35 - 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், பிஜேபி கூட்டணியைத் தோற்கடிப்பதை தனது முதன்மை நோக்கமாக, தலையாய நோக்கமாக கொண்டிருப்பதால், சிபிஅய்(எம்எல்) போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பாதியாக குறைத்துக் கொண்டிருக்கிறது.
பாசிசத்தை வீழ்த்திட வாக்களியுங்கள், மாற்று அரசியலுக்கு, ஒடுக்கப்பட்டோர் உரிமைக் குரலுக்கு வாக்களியுங்கள், சிபிஅய்(எம்எல்) லிபரேசன் கட்சிக்கு வாக்களியுங்கள், மூன்று நட்சத்திரக் கொடி சின்னத்தில் வாக்களியுங்கள் என தமிழக வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது!
வாக்காளர் பட்டியல் மவுனம்
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 60 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் என்ன ஆனார்கள் என்கிற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் காக்கின்றன. நாடு முழுவதும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாரின் கொடும்பாவி எரிக்கப்படுகிறது. ஆனால், வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த ஒத்துழைப்பு வழங்கினார் என அவர் புகழ்ந்து தள்ளுகிறார். அரசியல் கட்சிகளின் மவுனம் என்பது அவர்களின் சுயதிருப்தி மனப்பான்மையா, இறுமாப்பா அல்லது பிஜேபியின் அரசியல் ஜித்து விளையாட்டுகள் குறித்த அறியாமையா என்பது தேர்தலின் போக்கிலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதும்தான் தெரியும். ஒருவேளை, இந்த முறை தேர்தலில் பிஜேபியின் இலக்கு மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களைச் சார்ந்த முஸ்லீம்கள் மட்டுமே, தமிழ்நாடு அல்ல என்று இருக்குமோ?.
பிஜேபி – அதிமுக – என்டிஏ கூட்டணியை தோற்கடிப்போம்!
”வளர்ந்த இந்தியாவில், வளர்ந்த தமிழகம்” எனும் முழக்கத்துடன் பிஜேபி வந்திருக்கிறது. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு மாதம் ரூ 2500 என அதிமுக வாக்குறுதி அளிக்கிறது. சகல தந்திரங்களையும் பயன்படுத்தி அதிமுகவை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறது பிஜேபி. கடந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அதிமுகவும் பிஜேபியோடு சேர்ந்தால் வெற்றி பெறமுடியும் என கணக்குப் போட்டு அதனோடு சேர்ந்து கொண்டுவிட்டது. ஆனால், இதர மாநிலங்கள் போல வளர்ச்சி விசயத்தில் திமுகவோடு போட்டியிடுவது கடினம் என பிஜேபி கருதுவதால், தமிழ்க் கடவுள் முருகனைப் பயன்படுத்தி மதவெறிக்குத் தூபம் போட முயற்சிக்கிறது. திருப்பரங்குன்றம் மலை முருகக் கடவுளுக்கே எனச் சொல்லி மதவெறியைத் தூண்டி விட்டு அங்கு ஒற்றுமையாக வாழும் மக்களைத் துண்டாட முயற்சிக்கிறது. திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் அயோத்தி என அழைக்கிறது. அயோத்தியாக இல்லை என்றாலும், மண்டைக்காடு, மீனாட்சிபுரங்களுக்குப் பிறகு அவற்றிற்கொத்த ஒன்றாக திருப்பரங்குன்றத்தை மாற்றிட தீவிர முயற்சி செய்துவருகிறது. ஆர்எஸ்எஸ் அரசியல் சார்பு நீதிபதிகளும் அதற்கு உடந்தை.
மற்றொரு புறம், சமூக, சாதீய அணிசேர்க்கையை தனக்கு சாதகமாக மாற்றிட முயன்று வருகிறது. தென்மண்டல பட்டியிலின மக்கள், வணிக சமூகத்தினர், மேற்கு மண்டல பிற்படுத்தப்பட்ட மக்கள், வட மண்டல வன்னியர்கள் என அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் தனது வலைப்பின்னலைப் பரப்பிட கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தின் முற்போக்கு விழுமியங்களைச் சிதைத்திடுவதை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் கதாநாயகர்களை, குறிப்பாக பெரியாரை தரக்குறைவாக பேசுவது, அவர் தூக்கிப்பிடித்த முற்போக்கு கொள்கைகளை தனது மதவெறி கண்ணாடி மூலம் பார்த்து சிதைக்க முயற்சிப்பது, தனி மனித கடவுள் (முருகர் போன்ற) நம்பிக்கையை, மதவெறியைத் தூண்ட பயன்படுத்துவது என பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வரிப் பங்கீட்டு விகிதாச்சாரத்தைக் குறைத்து, அதை உத்தரப் பிரதேசம் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களுக்குத் திருப்புவது, புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியைத் தரமறுப்பது, இந்தியைத் திணிப்பது, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவது அதற்காக, பொருளாதாரப் பாரபட்சம் காட்டுவது, ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க முடியாது எனச் சொல்வது என பல வழிகளில் தமிழக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது பிஜேபி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை அகற்றி அதனிடத்தில் பிற்போக்கு மனு நீதியை சட்டமாக்கி அதன் அடிப்படையில் இந்து ராஷ்ட்ராவை அமைத்திடும் திசையில் முன்னேறி வருகிறது. மாநில உரிமைகளை மறுத்து, பறித்து, அதிகாரங்கள் அதீத மத்தியத்துவமாக்கப்பட்ட ஒரு மைய அரசை, ஒற்றை ஆட்சி முறையை, பாசிச ஆட்சி முறையை உருவாக்குவதை தனது கனவாக கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிவது, அமெரிக்க விவசாயப் பொருட்கள் இறக்குமதிக்கு வரியே கிடையாது என ஒப்புக் கொள்வதன் மூலம் இந்திய விவசாயத்தை அழிப்பது, இஸ்ரேல் – அமெரிக்க நாடுகளின் ஆக்கிரமிப்பு போர்களை ஆதரிப்பது என மோடி தலைமையிலான பிஜேபி அரசு செய்து வரும் மக்கள் விரோதச் செயல்களுக்கு அளவே இல்லை.
தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மூலம் இந்திய தொழிலாளர்களை அடிமைகளாக, உரிமை ஏதுமற்றவர்களாக ஆக்குவது, நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்து, கிராமப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டத்தை தீவிரப்படுத்துவது, மின்சார வாரியத்தைத் தனியார்மயமாக்குவது, மின் கட்டணத்தை உயர்த்துவது என மோடி அரசின் மக்கள் விரோத செயல்களின் பட்டியல் மிக நீண்டது.
இந்தப் பின்னணியில், இந்துத்துவ மதவெறி, ஆதிக்க சாதிவெறி, கார்ப்பரேட் லாபவெறி பாசிச பிஜேபியையும் அதன் தமிழக கூட்டாளிகளையும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்பது தமிழ்நாட்டு மக்களின் தலையாயக் கடமை ஆகி இருக்கிறது.
திமுக ஒரு மாற்றணியா?
நாடு தழுவிய அளவில் பார்க்கும்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக, பிஜேபிக்கு எதிராக இருக்கும் ஓரிரு கட்சிகளில் திமுக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மாநில உரிமைகள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு, மனுநீதி எதிர்ப்பு போன்ற அம்சங்களில் திமுக முன்னணியில் உள்ளது. பிஜேபிக்கு எதிரான எதிர்க்கட்சி அணியான இந்தியா அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியாகவும் இருக்கிறது.
ஆனால், ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்கிடுவதற்காக கார்ப்பரேட் முதலாளிகளிடம் மண்டியிடவும் அதற்காக, தமிழ் நாட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காவுகொடுத்திடவும் தயாராக இருக்கிறது. நலத் திட்டங்கள் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உரிமைகளைக் கேட்கக் கூடாது எனும் அணுகுமுறையை மேற்கொள்கிறது. இந்த அணுகுமுறை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானது. ஒரு துண்டு நிலம் வேண்டும் என்பது விவசாயத் தொழிலாளரின் முதன்மையான கோரிக்கை. அதை நிறைவேற்ற இந்த அரசு தயாராக இல்லை. வீடு, வீட்டுமனைப் பட்டா, கடனிலிருந்து விடுதலை ஆகியன இன்று தமிழ் நாட்டு மக்களின் முதன்மை கோரிக்கைகளாக எழுந்து வந்துள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு திமுக அரசு தயாராக இல்லை.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. சாதி ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. காவல் நிலையப் படுகொலைகள், சித்திரவதைகள் அதிகரித்திருக்கின்றன. அரசு மற்றும் காவல் நிர்வாகம் காவிமயமாகி இருக்கிறது. அவற்றைத் தடுத்திட எந்தப் பெரிய முயற்சியையும் காணமுடியவில்லை.
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தது போன்றவை வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆனால், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தவிர, கல்வி தனியார்மயமாக்கம் உள்ளிட்ட வேறெந்த மக்கள் விரோத அம்சங்களையும் மாற்றிட திமுக அரசு தயாராக இல்லை. விபி-கிராம்-ஜி க்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக அரசு தொழிலாளர் அடிமைச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை.
பிஜேபி முருக பக்தர் மாநாடு நடத்தும் என்றால் தமிழ்க் கடவுள் முருகன் மாநாட்டை திமுக நடத்துகிறது. கோவில்களை அறநிலையத் துறையிடமிருந்து விடுவிக்க வேண்டும் என பிஜேபி சொல்கிறது என்பதற்காக, கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் ஏழை மக்கள் தமது குடியிருப்புகளிலிருந்து அகற்றப்படுகிறார்கள். இப்படி பல உதாரணங்களைக் கூற முடியும்.
திராவிட பொருளாதார மாடல் என்பது குஜராத் பொருளாதார மாடலுக்கு மாற்றாக முன்வைக்கப்படுகிறதே தவிர அது மக்கள் சார்பு மாடலாக, உழைக்கும் மக்களுக்கான வளர்ச்சி மாடலாக இல்லை.
அந்தப் பின்னணியில் பார்க்கும் போது, தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு மாற்று அரசியலை, உன்னதமான வாழ்வை அளிப்பதற்கான ஆட்சியாக திமுக ஆட்சி இல்லை.
தவெக, நாதக ஒரு தீர்வாகுமா?
தமிழ் நாட்டு இளைஞர்கள் மத்தியிலான மாற்றத்திற்கான தேடுதலின் காரணமாக, மாறிமாறி திராவிட கட்சிகளே ஆட்சிக்கு வரும் சூழலுக்கு எதிரான அதிருப்தியின் காரணமாக, தவெக விஜய் செல்வாக்கு பெற்று வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். ஆனால், அவரது திமுக எதிர்ப்பு என்பது தூக்கலாகவும், கொள்கை எதிரியாக சொல்லப்பட்ட பிஜேபி எதிர்ப்பு மிகக் குறைவாகவும் பேசக்கூடிய அவரது அணுகுமுறை, கேள்விகளை எழுப்புகிறது. பிஜேபி – அதிமுக கூட்டணிதான் தமிழக மக்களின் முதன்மை அபாயம் என தவெக வரையறுத்துச் சொல்லத் தயாராக இல்லை. வெகுநீண்ட இழுபறிக்கு பின்பு தவெக தலைவர் விஜய், இப்தார் விருந்தில் ‘மதச்சார்பற்ற சமூகநீதியில்’ எந்த சமயத்துக்கும் இடமளிக்கமாட்டோம் என அறிவித்திருக்கிறார். இவ்வாறு அறிவித்துள்ள தவெக, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் அமைதி காப்பதை தமிழ்நாடு மறந்திடாது. பாசிச பிஜேபியை அதன் கூட்டாளிகளை இந்த நாட்டு மக்களின், தமிழ்நாட்டு மக்களின் முதன்மை அபாயமாக அடையாளம் காணத் தவறும், எந்தவொரு கட்சியின் மதச்சார்பற்ற அரசியல் என்பது எந்த நேரத்திலும் தடம் புரண்டு போவதற்கும் அரசியல் சந்தர்ப்பவாதமாக சீரழிந்து போவதற்குமே வாய்ப்புள்ளது. அதற்கு ஏராளமான கடந்த காலச் சான்றுகள் உள்ளன. தமிழ் நாட்டின், தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்தோ, மாநில வளர்ச்சி குறித்தோ, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்கள், கொள்கைகள், அணுகுமுறைகள் குறித்தோ ஒரு மாற்றுப் பார்வை, மாற்றுத் திட்டம், மாற்றுக் கொள்கை எதையும் தவெக முன்வைத்ததாக தெரியவில்லை. எனவே, தவெக தமிழ் நாட்டுக்கான மாற்றாக இருக்க முடியாது.
சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிப்பதாகச் சொல்லிக் கொண்டு, பிற்போக்கு தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முந்தைய கட்டத்தில் எழுந்த முற்போக்கு திராவிடவாதம்/ தமிழ் தேசியவாதத்துக்கு எதிராக பிற்போக்கு கொள்கைகளைக் கொண்டதாகவே இருக்கிறது. உழைக்கும் மக்களை சோம்பேறிகளாகச் சித்தரிப்பது, மாடு மேய்ப்பதை மிகச் சிறந்த தொழிலாகச் சொல்வது உள்ளிட்ட பல நிலைப்பாடுகள் தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை. வேட்பாளர்களில் பாதி பேர் பெண்கள் என்பதைத் தவிர பெண்களுக்கு சமத்துவம் சம உரிமை நாதகவில் இல்லை. பெரியார்தான் தமிழ் மக்களின் முதல் எதிரி என்பதாகச் சித்தரிக்கும் சீமானின் அரசியல், மறைமுகமாக தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங்களைச் சிதைப்பதாக, பிஜேபியின் பழமைவாதத்துக்கு பிற்போக்குத்தனத்துக்கு உதவுவதாகவே இருக்கிறது. இத்தகைய பின்னணியில், நாதக வின் பிற்போக்கு அரசியல் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்.
இடதுசாரிகளே ஒரே மாற்று!
தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரே அரசியல் மாற்று புரட்சிகர இடதுசாரி அரசியல்தான். தமிழ்நாட்டை முற்போக்குப் பாதையில் செலுத்துவதற்கான மாற்றுப் பாதை, பொருளாதாரப் பார்வை, சாதியாதிக்கத்தை ஒழிப்பதற்கான அரசியல் சமூக கண்ணோட்டம், பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் பண்பு, முற்போக்கு கலாச்சாரத்தை, முற்போக்கு விழுமியங்களைக் காத்திடும் திறன் படைத்தது இடதுசாரி அரசியல்தான்.
வலதுசாரி பொருளாதார கொள்கைகளின் ஆதிக்கம், கூட்டணி அரசியல் போன்ற பல காரணங்களால் தமிழ் நாட்டில் இடதுசாரி அரசியல் ஒரு மாற்று அரசியலாக முன்வர முடியவில்லை. ஆனால், சிபிஐ(எம் எல்) இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம் முதலே தமிழ் மக்களின் கலாச்சார, மொழி மற்றும் சுயாட்சி உரிமைகளை இடதுசாரி அரசியலின் ஒரு பகுதியாக உயர்த்திப் பிடித்திருக்கிற அதே வேளை, மக்கள் விடுதலைப் போராட்டங்களை வலியுறுத்தி இருக்கிறது. நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தை தமிழ் நாட்டின் கிராமப்புறங்களில் தீவிரமாக நடத்தி இருக்கிறது. அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் முற்போக்குக் கொள்கைகளை அங்கீகரித்து இருக்கிறது. அவற்றை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திட பங்களித்து இருக்கிறது.
உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்று. இந்துத்துவ மதவெறி, ஆதிக்க சாதிவெறி, கார்ப்பரேட் லாபவெறிக்கு எதிராக, ஜனநாயகத்திற்காக, அறிவியல்பூர்வமான முற்போக்கு விழுமியங்களுக்காக, அரசமைப்புச் சட்டத்தின் மூலமான ஆட்சிக்காக, ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முகப்பட்ட தன்மைக்காக விடாப்பிடியாகப் போராடி வருகிறது.
சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு குறித்தது மட்டுமே என்பதாக சுருக்கப்படக் கூடாது. சமூக நீதி என்பது சமூக, பொருளாதார அரசியல் அரங்குகளில் சமத்துவம் குறித்ததாகும் எனச் சொல்வதுதான் இடதுசாரி அரசியல் பார்வை.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது முதலாளிகள், செல்வச் சீமான்களின் வளர்ச்சி அல்ல, தமிழ் மக்களின், தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வளர்ச்சியாகும்.
இன்றைய தமிழ்நாட்டுக்குத் தேவை இடதுசாரி மாற்றமே.
அத்தகைய இடதுசாரி அரசியலே, இடதுசாரி மாற்றுப் பாதையே, புரட்சிகர அரசியல் பாதையே தமிழ்நாட்டுக்கான மாற்றுப் பாதை, மாற்று அரசியல் என்பதை தமிழ் நாட்டு மக்கள் முன் வைப்பதற்காகத்தான் சிபிஅய்(எம் எல்) கட்சி சிவப்புப் பதாகையை உயர்த்திப் பிடித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்கிறது.
பிஜேபியையும் அதன் தமிழ்நாட்டுக் கூட்டாளிகளையும் தோற்கடிப்போம்!
புரட்சிகர இடதுசாரி அரசியலுக்கு,
மக்கள் ஜனநாயக மாற்று அரசியலுக்கு,
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்போம்!
மூன்று நட்சத்திர கொடி சின்னத்தில் வாக்களிப்போம்!
சிபிஐஎம் எல் கட்சிதான் தமிழக மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு மாற்று அரசியலை, மாற்றுப் பாதையை வழங்கக் கூடிய ஒரே கட்சி என கருதுகிறோம். ஆனால், சிபிஐஎம் எல் லிபரேசன் 10-15 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது.
அதே நேரத்தில், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு முதன்மை அபாயம் பிஜேபி-அதிமுக-என்டிஏ கூட்டணிதான் என உறுதிபட வரையறுத்திருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, சிபிஐஎம்எல் போட்டியிடாத தொகுதிகளில், இடதுசாரிகளையும், விசிக வையும் உள்ளடக்கிய, மதவெறி எதிர்ப்பு கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது.
திமுகவை விமர்சிக்கும் அதேவேளையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கக் கோருவதில் முரண்பாடு ஏதுமில்லை. அரசியல் என்பது சிக்கலானது. சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வும் சிக்கலானதாகவே இருப்பது தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், பாசிச பிஜேபி-அதிமுக கூட்டணியை வீழ்த்திட, மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க கோருவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமையாகும். விமர்சனமற்ற ஆதரவுதான் பிரச்சனைக்குரியது. விமர்சனபூர்வமான ஆதரவு என்பது தவிர்க்கமுடியாத ஒரு அரசியல் நிலைப்பாடு என்பதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.
