நெதன்யாகு பதவியிழப்பு, ட்ரம்புக்கு பின்னடைவு, தனது முறைக்காகக் காத்திருக்கும் நரேந்திர மோடி!

$articleData->title

நெதன்யாகு பதவியிழப்பு, ட்ரம்புக்கு பின்னடைவு, தனது முறைக்காகக் காத்திருக்கும் நரேந்திர மோடி!

பிரேசில், செர்பியாவில் தீவிர வலதுசாரிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது ஏகாதிபத்தியத்தின் இதயப் பகுதியான அமெரிக்கா - இஸ்ரேலிலிருந்தும் இன்னும் கூடுதலாக   ஊக்கமளிக்கும் செய்திகள் வந்துள்ளன. இஸ்ரேலில், 120 உறுப்பினர்களைக் கொண்ட  ('நெசெட்' என அழைக்கப்படும்)  நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களுடன் மிகப்பெரிய அணியாக இருந்தாலும் அவர் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார். அரபுக் கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றி ஒரு முக்கிய சக்தியாக எழுந்து நெதன்யாகுவின் தோல்வியை உறுதி செய்ததுதான், இந்தத் தேர்தலின் மிகவும் குறிப்பிடத்தக்க விளைவாகும். அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் (மேலவை), பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் அறுதிப் பெரும்பான்மை பெற்றதன் மூலம், எஞ்சியிருக்கும் பதவிக்காலத்திற்கு டிரம்ப் ஒரு ‘பயனற்ற வாத்து’ அதிபராகவே இருப்பார். குடியரசுக் கட்சியின் பல பாரம்பரிய கோட்டைகளில் ஜனநாயகக் கட்சியினர் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்; சில இடங்களில், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


கடும் வெறுப்புக்குள்ளான தன்னுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களிடத்தில் எழுந்த கோப அலையைத் தாமதமாக உணர்ந்த டிரம்ப், இஸ்ரேல் உடனான தனது அரசாங்கத் தொடர்பை விலக்கிக் கொள்வது போல் நடித்தும், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தும் சேதத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். மேலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யவும் இலவசங்களை அறிவித்து வாக்குகளை விலைக்கு வாங்கவும் அவர் முயற்சித்தார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை; அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் அவருக்கு உரிய பதிலடி கொடுத்து, ஏராளமான முற்போக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போது அமெரிக்காவில் முதல் முஸ்லிம் செனட்டராக அப்துல் எல்-சயீத் மிச்சிகனிலிருந்தும், முதல் கறுப்பினப் பெண் ஆளுநராக கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் ஜார்ஜியாவிலிருந்தும், முதல் பூர்வகுடி அமெரிக்கப் பெண் ஆளுநராக (நியூ மெக்சிகோவின்) டெப்ரா ஹாலண்ட்டும், முதல் பாலஸ்தீனிய-அமெரிக்க மாநில செனட்டராக அபெர் கவாஸ் நியூயார்க் மாநில செனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


அண்மையில் நியூயார்க் (சோஹ்ரான் மம்தானி), சியாட்டில் (கேட்டி வில்சன்), லாஸ் ஏஞ்சல்ஸ் (நித்யா ராமன்), வாஷிங்டன் டி.சி. (ஜெனீஸ் லூயிஸ் ஜார்ஜ்) ஆகிய மாநகரங்களில் நான்கு இளம் சோசலிச மேயர்களை அமெரிக்காவிற்கு வழங்கியது. இந்த மாறிவரும் அரசியல் போக்கு, டொனால்ட் டிரம்ப்பின் இரண்டு ஆட்சி காலத்திலும் காணப்பட்ட தீவிர வலதுசாரி இனவெறி அரசியலையும் இப்போது 'டிரம்பிசம்'  என்று அழைக்கப்படும் அரசியல் மற்றும் கொள்கைகளையும் எதிர்த்துத் தோற்கடித்திடும் ஒரு முக்கியமான இடதுசாரி மாற்றத்திற்கான ஆற்றலை வழங்கியுள்ளது. "டிரம்ப்-நெதன்யாகு கூட்டணியால் ஈரான் மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போர், பாலஸ்தீனத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையின் பேரழிவுத் தாக்கங்களுக்கு (இத்தாக்கங்கள் சர்வதேச அளவில் மட்டுமன்றி, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலிலும் அரசியல் களத்திலும் கூட உணரப்படுகின்றன) மத்தியிலும் இந்த ஆற்றல் தன்னை அறுதியிட்டுக் கொண்டுள்ளது.” குறைந்த ஊதியம், பொது நலத்திட்டங்களுக்கான அரசின் செலவினக் குறைப்பு, அதிகரித்துள்ள ராணுவச் செலவுகள், உயர்ந்து வரும் போர்ச் செலவுகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வும் வாழ்வாதார நெருக்கடிகளும் அமெரிக்க உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மிகக் கடினமாக்கியுள்ளன. 


இருப்பினும் மறுமுனையில், உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் உயர்ந்ததையும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்கப் பெருமுதலாளி குழுவினர்களின் பேராசை, கொள்ளை ஆகியவற்றுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைவையும் உருவகப்படுத்துகிற அருவருக்கத்தக்க செல்வக் குவிப்பை, டிரம்பின் 'மாகா' (MAGA) அமெரிக்கா இப்போது கொண்டாடுகிறது. டிரம்ப் நிர்வாகத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குடியேற்றவாசிகளுக்கு எதிரான இனவெறிப் போர், குடியேறிய சமூகங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கும் வாழ்க்கையைப் பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது; அமெரிக்கா அரசின் 'ஐஸ்' (ICE - குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை) எந்திரத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாதம், வன்முறை, இராணுவமயமாக்கல் ஆகியவையே இதற்குக் காரணமாகும். காசாவில் நடக்கும் இனப்படுகொலையையும் இஸ்ரேலால் பாலஸ்தீனம் கொடூரமாக ஆக்கிரமிக்கப்படுவதையும் கண்டிக்கும் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் செல்வாக்கு செலுத்தும் இஸ்ரேலிய குழுவுடன் (Israel lobby) இணைந்து செயல்படும் டிரம்ப் நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


இந்தப் பின்னணியில், ஜனநாயகக் கட்சி முகாமிற்குள் உள்ள பெரும் பிரிவினர் பைடன் காலகட்டத்தின் திவால்தன்மை, பாசாங்கு, கோழைத்தனத்தைக் கண்டித்து, துணிச்சலான மக்கள் சார்பு செயல்திட்டத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்; இது கோடீஸ்வரர்கள் மீது சொத்து வரி, தொழிலாளர்களுக்கு வாழ்வூதியம், பொது சுகாதாரம், கல்வித் துறையில் கூடுதல் நிதியை, மேம்பட்ட சேவைகளை வலியுறுத்துகிறது. மேலும், வளங்களை விழுங்கி சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் பிரம்மாண்ட தரவு மையங்களுக்குத் தடை விதிக்கவும் கடுமையான வேலையின்மையையும் அனைத்துத் துறைகளிலும் சீர்குலைவையும் ஏற்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பொறுப்பற்ற பயன்பாட்டிற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவும் இது கோருகிறது. அமெரிக்க மக்கள் வழங்கிய இந்த இடைக்காலத் தேர்தல் தீர்ப்பிற்கு எதிராக எந்தவொரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியிலும் ஈடுபட டிரம்ப் ஆதரவாளர்கள் துணியவில்லை; ஆனால் இதை 'வரலாற்றில் ஒரு மாபெரும் பின்னடைவு' என்று வர்ணித்ததன் மூலம், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற அவைகளுடன் தனது நிர்வாகம் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் என்பதை டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.


நெதன்யாகு ஆட்சியின் தோல்வியும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் டிரம்ப் நிர்வாகத்தின் பாரிய வீழ்ச்சியும் இந்தியாவில் பெரும் வரவேற்புக்குரிய அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் அச்சுக்குத் தனது திட்டமிட்ட வகையிலான அடிபணிதலின் பலிபீடத்தில்  இந்தியாவின் நலன்களையும் கண்ணியத்தையும் மோடி அரசாங்கம் பலியிட்டுள்ளது. டிரம்ப், நெதன்யாகுவின் இனவெறி, இஸ்லாமிய வெறுப்பு, சர்வாதிகார மாதிரிகளிலிருந்து சங் பரிவார் கூட்டத்தின் உள்நாட்டு அரசியல் கொள்கைகள் பெருமளவில் கடன் பெற்றுள்ளன. டிரம்பிசத்திற்கு எதிராக அமெரிக்க வாக்காளர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இதே வேளையில், மோடியின் பிம்பத்தை உயர்த்துவதற்காக டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து சமூக ஊடக வாழ்த்துச் செய்திகளையும் தொலைபேசி அழைப்புகளையும் பெறுவதற்கு, மாதம் 2,25,000 டாலர் செலவில் இரண்டு அமெரிக்க தரகு நிறுவனங்களை மோடி அரசாங்கம் பணியமர்த்தியுள்ளது என்பதை நாம் அறிகிறோம்! 


டிரம்பின் வரிப் போர், இழிவுமிக்க இந்திய எதிர்ப்புக் கருத்துகள் குறித்த அதிர்ச்சியூட்டும் மௌனமும் அதே டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து பணம் கொடுத்துப் பாராட்டுகளைப் பெறுவதும் 'விஸ்வகுரு' என்ற வீராப்புக்குப் பின்னால் ஒளிந்துள்ள மோடி அரசாங்கத்தின் பரிதாபகரமான நிலையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவை அனைத்து முனைகளிலும் ஆழமான பேரழிவுப் பாதையில் தள்ளியுள்ள, டிரம்ப், நெதன்யாகுவின் இந்தக் கோழைத்தனமான இந்தியக் கைப்பாவையை நிராகரிக்க இந்திய மக்களாகிய நாம் இப்போது தயாராக வேண்டும்.


தலையங்கம்,

எம்எல் அப்டேட், 

தொகுதி. 29 / எண். 46 

தமிழாக்கம்: விஜி 


24 November, 2026