கடந்த திமுக ஆட்சியின் இறுதியாண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை மய்யமாகக்கொண்டு மக்கள் போராட்டங்கள் தீவிரம் பெற்றன. ஆனால், தவெக ஆட்சி பதவியேற்ற நாளிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவிட்டன. இன்னும் சரியாகச் சொல்வதெனில், பதவியேற்புக்கு முன்பே குதிரை பேரம் பற்றிய சர்ச்சைகள் துவங்கிவிட்டன. தவெக "மக்களின் தேர்தல் அறிக்கை 2026"இல், திருக்குறள் வழியில் அறத்தின் பாற்பட்டு "கண்ணியமான வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு" என்ற தலைப்பில் 'ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்' என்று சொல்கிறது; "இன்பம்" என்ற பிரிவின் கீழ் 'மக்கள் அரசு: உண்மை மற்றும் நேர்மையான நிர்வாகம்' என்ற தலைப்பின் கீழ் லஞ்சத்திற்கு எதிராக, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக ஜீரோ சகிப்புத்தன்மை என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறது. தவெக அரசின் "100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" என்று தமிழ், ஆங்கில நாளிதழ்களில் வெளியான முழுப் பக்க விளம்பரங்களில், '717 மதுபானக் கடைகள் மூடல்', 'போதைப் பொருள் ஒடுக்குவதற்கான 65 சிறப்பு அதிரடிப் படைகள்' என்றெல்லாம் பெருமை பேசப்படுகிறது. ஆனால் கள யதார்த்தமோ வேறாக இருக்கிறது.
தவெக வாக்குறுதியும் துரோகமும்
பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் எனப் பல்வேறுபட்ட பிரிவினரும் போராடிவருகின்றனர். இந்நிலையில் 31.08.2026 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஊதிய உயர்வு ஏறத்தாழ 100% என்றாலும் கூட, 23 ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பின்னரும் அவர்கள் பெறுகிற தொகை ரூ.28,680/- முதல் ரூ.33,023/- வரை மட்டுமே; இதே கால அளவில் பணியாற்றுகிற தமிழ்நாடு அரசின் கடைநிலை ஊழியர் பெறுகிற ஊதியத்தில் இது ஏறத்தாழ 50% மட்டுமே. அரசு அறிவித்த இதரப் பயன்களும் கூட அவர்களுக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டியவையே. முந்தைய அரசுகளைப் போலவே இந்த அரசும் பணி நிரந்தரக் கோரிக்கையை நிராகரிப்பதன் மூலம், கண்ணியமான வாழ்வுக்கான காலமுறை ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் பணியாளர் உரிமைகளையும் மறுக்கிறது;
தவெகவின் ஊழல் எதிர்ப்பு நாடகம்:
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ள காலி மதுபாட்டிலைத் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எந்த மாற்று ஏற்பாட்டையும் இந்த அரசு செய்யவில்லை. தனியாரைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்யுமாறு வாய்மொழி உத்தரவை வழங்கியிருக்கிற நிர்வாகம், அந்தச் செலவினங்களுக்கு ஒரு பைசா கூட தருவதில்லை. இந்தத் திட்டத்திற்கு ஒரு கடைக்கு ஒரு மாதத்துக்கு ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை செலவாகிறது. இந்தச் செலவினங்களைச் சரிகட்ட மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க நிர்வாகமே தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கிறது. நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி தொழிலாளர்கள் 10 ரூபாய் கூடுதலாக வாங்க வேண்டும் அல்லது அவர்கள் கையிலிருந்து செலவழிக்க வேண்டும். ஊதிய உயர்வாக வாங்கும் தொகை முழுவதும் அதற்கே போய்விடும். ஆனால் தொழிலாளர்களோ, பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க வேண்டாம். பணி நிரந்தரம் வேண்டும்; காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மதுக்கடைகளே வேண்டாம். எங்களுக்கு மாற்று வேலை வேண்டும் என்கிறார்கள்.
தவெக அரசின் அறிவிப்பில் ஊதிய உயர்வோடு சேர்ந்து, காலி மதுபாட்டில் பிரச்சனைக்கான தீர்வையும் டாஸ்மாக் தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருந்தனர்; ஜூன் மாதத்திற்குள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதியளித்த அரசு ஆகஸ்டு மாதம் முடிந்த பிறகும் கண்டு கொள்ளவில்லை. எனவே செப்டம்பரில் டாஸ்மாக் தொழிலாளர் போராட்டம் மீண்டும் வெடித்தது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடைபெறுகிற போராட்டம் என்று ஒருதலைபட்சமாக செய்திகள் பரப்பப்படுகின்றன. உண்மையில் காலி மதுபான பாட்டில் பிரச்சனைதான் இந்தப் போராட்டத்தின் மய்யமான அம்சம்; ஊதிய உயர்வாகக் கொடுத்ததை திரும்பப் பிடுங்குவதற்கு எதிரானதே இப்போராட்டம். ஊழலின் ஊற்றுக் கண் பெருமுதலாளிகள், ஆட்சியாளர்கள், அரசாங்க உயரதிகாரிகளின் முக்கூட்டில்தான் இருக்கிறது. அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் டாஸ்மாக் தொழிலாளரின் சம்பளத்தையும், குடிக்கு அடிமையானவரின் குடும்ப வருமானத்தையும் பிடுங்கிக் கொண்டு இரு பிரிவினரையும் மோதவிட்டு, தன்னை ஊழல் எதிர்ப்புப் போராளியாகக் காட்டிக்கொள்கிறது தவெக அரசு.
டாஸ்மாக் தொழிலாளரின் போராட்டம் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு அலட்சியம் காட்டுமானால், போராட்டம் மீண்டும் வெடிக்கும்.
போதையில்லாத் தமிழ்நாடு என்ற தவெகவின் வாய்வீச்சு:
டாஸ்மாக் தொழிலாளரின் போராட்டத்திற்கு அக்கம் பக்கமாகவே, டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தப் போராட்டங்களில் பெண்கள்தான் முன்னணியில் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் சொன்னார்: “ஒரே வார்த்தை, டாஸ்மாக் வேணாம்”. தவெகவின் தேர்தல் அறிக்கை, “முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும். இதன் மூலம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதைப் பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும்” என்று சொல்லித்தான் பெண்களிடம் வாக்குகள் பெற்றது. தமிழ்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள், கொலைகள், பள்ளி, கல்லூரிகளில் கஞ்சாப் புழக்கம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. கோவை கல்லூரி மாணவர் அமுதனும், திருவொற்றியூர் பள்ளி மாணவர் தனுசும் கொல்லப்பட்ட சம்பவங்கள் நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் “போதை என்ற மரத்தின் ஒருசில கிளைகளை வெட்டியிருக்கிறோம். போதை எனும் முழு மரத்தை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது, 100 நாட்களில் முடியும் பணியல்ல” என்ற விளக்கம் அளிக்கிறார். மதுவிலக்கு அமைச்சரோ தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிறார். போதைப் பொருள் பட்டியலிலிருந்து டாஸ்மாக் மதுபானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது போலும்.
மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதற்கு கள்ளச்சாராயம் துவங்கி, சங்க கால இலக்கியம், உலக நாடுகளின் அனுபவங்கள் எல்லாவற்றிலிருந்தும் வாதங்கள் வைக்கிறார்கள். மதுக்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை பற்றி தேர்தலுக்கு முன்பு பேசிய விஜய் ஆட்சியில் அமர்ந்தவுடன் மாற்றிப் பேசுகிறார். கொரோனா காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தபோது பலரும் குடிக்காமல்தான் இருந்தனர். மக்களை மத போதை, மது போதையில் வைத்திருப்பது கார்ப்பரேட் சார்பு ஆட்சியாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது.
நாட்டு விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய இரண்டு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1971இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு மீண்டும் 1974இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிற டாஸ்மாக் 1983இல் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. 2003இல் ஜெயலலிதா டாஸ்மாக்கில் சாராய சில்லறை விற்பனையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகளும் அப்போதிருந்தே துவங்கிவிட்டன. 2015இல் காந்தியவாதி சசிபெருமாள் மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்தபோது, மதுவிலக்கிற்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரம் பெற்றன. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவே தனது முதல் கையெழுத்து என்று அறிவித்தார் கருணாநிதி. மக்கள் போராட்டங்களை இறுமாப்புடன் அலட்சியப்படுத்தி, மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சட்டசபையில் அறிவித்த அதிமுக, தோல்வி பயத்தின் காரணமாக படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு அடையாளப்பூர்வமாக 500 கடைகளை மூடிவிட்டு அமைதியாகிவிட்டது. அதற்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மதுவிலக்குப் பற்றி பேசுவதைக் கூட நிறுத்திவிட்டன. இந்த நிலையில்தான் போதையில்லாத் தமிழ்நாடு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த விஜய் அரசு டாஸ்மாக்கை மூடுவதை சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டது.
நான் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்பவர்களையும் விட மாட்டேன் என்று மோடி சொன்னதைக் கேட்டோம். இப்போது இதே வசனத்தை விஜய்யிடமிருந்து கேட்கிறோம். போதையில்லாத் தமிழ்நாடு என்று விஜய் தேர்தலுக்கு முன் சொன்னார். இப்போது போதையில்லா பாரதம் என்று மோடி சொல்கிறார். அமித்ஷாவும் சொல்கிறார். இந்த ஒற்றுமை தற்செயலானதுதானா? தனியார்மயமாக்கத்தில் தவெக அரசு முந்தைய திமுக அரசையும் தாண்டிச் சென்றுவிடும் போல் தோன்றுகிறது.
5 ஆண்டுகள் அரசுப் பணியில் அனுபவம் பெற்ற ஒப்பந்தப் பணியாளர் நிரந்தரம் செய்யப்படுவர் என்ற தவெகவின் வாக்குறுதியை, புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர் நிரந்தரப் பணியாளராக இருக்க மாட்டார்; அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது தவெக ஆட்சி முடியும் வரை ஒப்பந்த தொழிலாளராக அனுபவம் பெற வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும் போலும்.
எப்படியாயினும், இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பெண்கள் அமைப்புகளும், குடிமைச் சமூகமும் முன்னெடுக்கும் போராட்டங்கள்தான் பணிநிரந்தரம், உண்மையான பொருளில் ஊழல் ஒழிப்பு, போதையில்லாத் தமிழ்நாட்டை யதார்த்தமாக்கும்.
