எது சேவை? எது நீதி? யாருக்கு நீதி?

தலையங்கம்

$articleData->title

பட்டினப்பாக்கத்தில் மீனவர் வாழ்க்கையை அழித்து அங்கு ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் கட்டுவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது தவெக அரசு.

தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு திறந்த வெளிச் சிறைக்காக ஒதுக்கி வைத்திருந்த 31.37 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாலும், அவர்கள் கல்விச் சேவை புரிவதால், தமிழ்நாடு அரசு அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள இடத்திற்குப்பதிலாக, அவர்கள் தரும் வேறு இடத்தை அரசு ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தமிழ்நாடு அரசைப் பார்த்து கேட்கிறது. காசுள்ளவர், காவிக்கு நெருக்கமானவர் என்றால் உச்ச!  நீதிமன்றத்தின் தராசு கூட தலை கீழாகத் தொங்கும் போல. 


சட்ட விரோதமாக, வம்படியாக அரசினுடைய நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு நீதிமன்றமாக வழக்கை இழுத்தடித்து வந்தது சாஸ்திரா. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் காவல்துறை உதவியுடன் அரசு அதை மீட்க வேண்டும் என்று 9.1.2026ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சாஸ்திரா பல்கலைக்கழகம். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்  அரசு நிலத்தை அடாவடியாக ஆக்கிரமித்தது குற்றம் என்று சொல்லவில்லை. மாறாக, அந்த இடத்திற்குப் பதிலாக அவர்கள் தரும்  மாற்று இடத்தை பரிசீலிக்கச் சொல்லியுள்ளது.

ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இப்போது உச்ச நீதிமன்றத்தில் சொன்னதுபோல் தாங்கள் கல்விச் சேவை புரிவதாக சாஸ்திரா பல்கலைக் கழகம் சொன்னதற்கு, சென்னை உயர்நீதிமன்றம், “எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், பொதுச் சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் இந்த எதிர்மனுதாரர்கள்,  பொதுமக்களுக்குப் பெரும் தீங்கை இழைத்துள்ளனர்.  இந்த வழக்கில், எதிர்மனுதாரர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நயா பைசா கூட செலுத்தாமல், 20.62 ஏக்கர் அரசு நிலத்தை அனுபவித்து வந்துள்ளனர்.” என்று சொன்னது. ஆனால், தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் அமர்வு இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. இவர்கள் யாருக்கான நீதியைப் பேசுகிறார்கள். ஏழை மக்கள், அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருக்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்திருந்தாலும் அந்த மக்களின் வாழ்விடங்களை புல்டோசர்கள் கொண்டு அழித்து, அநியாயத்திற்கு அந்த மக்களை நடுவீதியில் நிர்கதியற்றவர்களாகச் செய்யும் இதே உச்ச நீதிமன்றம், சாஸ்திரா பல்கலைக் கழகத்திற்காக அரசை விட்டுக் கொடுக்கச் சொல்கிறது. 

பரம்பரை பரம்பரையாக, வனங்களில் வாழும் பழங்குடி மக்களை, துணை இராணுவத்தையும் காவல்துறையையும் கொண்டு அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்க உத்தரவிடும் உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மேக மலைப் பகுதியில் காலங்காலமாக வாழும் மக்களை அவ்வாறு விரட்டியடிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சாஸ்திரா பல்கலைக் கழகம் பல ஆண்டுகளாக கல்விச் சேவை புரிந்து வருவதால், அந்த இடத்திற்குப் பதில் மாற்று இடத்தைப் பெற்றுக் கொண்டால் என்ன என்று கேட்கிறது. சட்டவிரோதமாக நாற்பது ஆண்டுகளாக அரசின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தாலும் அவர் கல்விச் சேவை! செய்து வருகிறாராம். குற்றவாளி இல்லையாம். ஆனால், ஆண்டாண்டு காலமாக மலைப் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் குற்றவாளிகளாம். அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களாம். எப்படி இருக்கிறது இவர்களுடைய நீதி!

பாபர் மசூதியை இடித்தார்கள். ராமர் பிறந்த இடம் என்று கதைத்தார்கள். கடைசியில் இதே போன்றுதான் உச்ச நீதிமன்றம் சொன்னது. பாபர் மசூதி இருந்த இடத்தை ராமர் கோயிலுக்குக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் தரும் மாற்று இடத்தில் நீங்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று. ராமர் பிறந்த இடம் என்கிற பொதுப் புத்திக்காக அவ்விடத்தை விட்டுக் கொடுக்கலாமே என்று இஸ்லாமியரிடம்  சொன்ன உச்சநீதிமன்றம், இப்போது கட்டணக்கொள்ளை வாயிலாக கல்விச் சேவை செய்து கொண்டிருக்கும் சாஸ்திரா பல்கலைக் கழகத்திற்கு அரசையே விட்டுக் கொடுக்கச் சொல்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தவெக அரசு சொல்லுமா?. அரசின் வசம் இருக்கிற சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ரகசியக் கடிதம் எழுதியவராச்சே தமிழக முதல்வர் விஜய். ஜி.எம்.ஆர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் விஜயை வந்து பார்த்துவிட்டு சென்றபின்னர்தான் இந்த கடிதம் எழுதப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன. அதேபோல், ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தார் விஜயை வந்து பார்த்துவிட்டுச் சென்ற பின்னர்தான் தாய் மாமன் தங்க மோதிரத் திட்ட அமுலாக்கம் அறிவிக்கப்பட்டு, மோதிரம் செய்வதற்கு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது விஜய் அரசு.  இந்தியாவில் உள்ள நிறுவனங்களை லண்டனுக்கு அழைத்துச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட காலியாக இருப்பதாகச் சொல்லும் அரசு கஜானாவிலிருந்து ஆறேழு கோடிகள் செலவு செய்தவர் திரு.விஜய். இவ்வாறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவே நாளும் பொழுதும் செயல்பட்டுக்  கொண்டிருக்கிற விஜயின் அரசு, சாஸ்திரா பல்கலைக் கழகத்திற்கு எதிராகப் பேசுமா? 

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தனியார் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் எல்லாம் நீர் நிலைகளை, அரசு நிலங்களை ஆக்கிரமித்துதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தவெக அமைச்சரவையில் உள்ளவர்களும்கூட அவ்வாறுதான் தங்கள் கல்விச் சேவையை! செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சாஸ்திராவுக்கு சாதகமாகப் பேசியிருப்பதானது இந்த கல்வி வியாபாரிகளுக்கு நல்ல கொண்டாட்டமாகிவிடும். பட்டினப்பாக்கத்தில் மீனவர் வாழ்க்கையை அழித்து அங்கு ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் கட்டுவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்திலேயே, புதிய தலைமைச் செயலகம் கட்ட அக்கறை காட்டுகிறார் என்றால், அதனால் உண்மையில் பயனடையப் போவது யார்? நாளை, எங்கள் வாழ்க்கை பறிபோகிறது என்று இந்த மீனவர்கள்  எந்த நம்பிக்கையில் இந்திய உச்சநீதிமன்றத்தை நாட முடியும். ஆகையால், இதுபோன்ற புதிய! நீதிக்கு எதிராக மக்கள்  பேச வேண்டும். இல்லையென்றால், நீதி என்பதற்கு பொருள் இல்லாமல் போய்விடும்.“.....வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் – அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”! என்று சுப்ரமணியப் பாரதியார் சொன்னதுபோல் இங்கே சதி நடப்பது தெளிவாகத் தெரிகிறது.



29 September, 2026