சட்டமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுக்கு ஒரு உறுப்பினர் கூட கிடையாது. ஆனால், தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை பற்றி பேசப்பட்டது. அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது ஒன்று சொல்கிறார். நம்மளெல்லாம் தேவதைகள் என்றார். தூய்மைப் பணியாளர்களெல்லாம் தேவதைகள் என்றார். எனக்கு இதில் தொழிலாளிகளோட, பெண் தொழிலாளிகளோட பேச வேண்டிய ஒரு விஷயம் இருக்கிற மாதிரி நான் நினைத்தேன். நான் சொல்கிற கருத்து அப்படியே பரவலாக வரவேற்பைப் பெறுமா, எ்ன்பதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படவில்லை. பெண்களை, பொதுவா மனிதர்களை, மனிதர்களா நடத்துனா போதும். அதுக்கு மேல நாம் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. இப்ப தேவதை அப்படின்னு சொல்றாங்க. இந்தப் புகழ்ச்சியின் மூலமா நமக்கு என்ன கிடைக்கும்? நீ தேவதை, நீ தேவதை, நீ தேவதை அப்படின்னு வரிசையா ஒவ்வொருத்தரையும் பார்த்து சொல்லிட்டா, நம்முடைய எந்த பிரச்சனை தீரும்?
இந்த மாதிரி சொல்வதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கு. குறிப்பாக பெண்கள் கவனமா இருக்கணும். எதில் கவனமா இருக்கணும்னா, தாய்மையைப் போற்று என்கிறார்கள். அன்பை போற்றலாம், பாசத்தை போற்றலாம், நேசத்தை பாராட்டலாம். அன்பு, பாசம், நேசம் எல்லாமே இருக்கிற நட்பு; அன்பு, பாசம், நேசம் எல்லாமே இருக்கிற தோழமை—இது எல்லாத்தையுமே போற்றிப் புகழலாம். ஆனா தாய்மையில புகழறதுக்குப் பின்னாடி வஞ்சகம் இருக்கு.
தாய்மை தாய்மை தாய்மை தாய்மை, பெண் தான் தாய், பெண் தான் தாய் அப்படின்னு புகழும்போது அதுக்குள்ள ஒரு பெரிய வஞ்சகம் இருக்கு. என்ன சொல்றாங்க? நல்ல தாய் என்கிறார்கள்.
அதாவது பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணை நீ பெர்ஃபெக்ட் விக்டிமா (perfect victim) இருக்கணும் என்கிறார்கள். அப்படியென்றால், நீ பாலியல் வன்முறைக்குள்ளாகிவிட்டால் அப்படியே சோகமா இருக்கணும், நார்மலா நடக்கவே கூடாது. நீ வந்து எப்பவும் அழுதுகிட்டே இருக்கணும். எப்பவும் யார் மேல புகார் சொன்னியோ அந்த ஆளோட பேசவே கூடாது. மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு குடுத்திருக்காங்க. பெர்ஃபெக்ட் விக்டிம், அதாவது கச்சிதமான, இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிற பாதிப்புக்குள்ளானவராக அந்தப் பெண் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்கள். 21-ஆம் நூற்றாண்டில் இப்பதான் இந்தத் தீர்ப்பு வருது.
சட்டமன்றத்தில் நீண்ட காலமா ஒரு அசிங்கம் இருந்தது. அந்த அசிங்கம் இப்பதான் போச்சு. அந்த அசிங்கம் என்னவென்றால், யாராவது ஒரு எம்.எல்.ஏ. முதல் முறையா பேச்சை ஆரம்பிக்கிறார் என்றால் அதுக்குப் பெயர் கன்னிப் பேச்சு. கேவலமான வார்த்தை. ஆணுக்கு அந்த பெயர் இருக்கா? விதவை ஆணுக்கு இருக்கா? கன்னி ஆணுக்கு இருக்கா? பல விஷயமும் பாத்தீர்கள் என்றால், அவை பெண்ணின் மீது சுமத்தப்பட்ட விலங்கு. பெண்ணின் மூளைக்கு, பெண்ணின் காலுக்குப் போடப்பட்ட விலங்கு. அது மாதிரிதான் தாய்மையைப் போற்று. தாய்மையைப் போற்று என்றால், நீ எப்பவும் பொறுப்பா பாத்துட்டு இருக்கணும். என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிட்டே இருக்கணும். அப்படியே பூமியைப் போல தாய் இருக்கணும். பூமி தாங்கிட்டே இருக்கும், அது மாதிரி தாயும் தாங்கிட்டே இருக்கணும். பெண் எப்படி இருக்கணும்? நல்ல தாயாக இருக்க வேண்டும். ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறேன்?
நல்ல மனிதராக இருக்க வேண்டும். ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், நல்ல மனிதரா இருக்கணும். சக மனிதரை நேசிக்கணும். யாருக்குப் பாதிப்பு வந்தாலும் நேசக் கரம் நீட்டணும். எந்த அநீதி நடந்தாலும் அதை எதிர்க்கணும். ஆனா அதுக்குப் பதிலா என்ன சொல்லித்தருகிறார்கள். தாய்மையைப் போற்றுவோம். தாய்மையைப் போற்றுவோம்னா நம்ம தலையில மிளகாய் அரைக்கிறான்னு அர்த்தம். பெண்கள் நீங்க எப்பவுமே உங்களை தாய் தாய் தாய், பொறுமையானவள் பொறுமையானவள் பொறுமையானவள், அன்பானவள், எதையும் சகித்துக் கொள்பவர்கள் என்று புகழ்ந்து தேய்த்து மிதிப்பதற்கு இடம் தந்துவிடக் கூடாது.
நாம் எல்லாத்தையுமே தலைகீழா புரட்டிப் போடணும். எல்லா அதிகார உறவுகளையும் கேள்விக்கு உள்ளாக்கணும். எல்லா அதிகார உறவுகளையும், குடும்பத்தில் இருக்கிற அதிகார உறவு வரைக்கும்.
காலங்காலமாக இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள். அவனும் ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவனாக இருப்பான், ஆனா அவனுக்குக் கீழே மிதிக்கிறதுக்கு ஒரு பெண் வேணும். இவரோட கதையே கேவலமா இருக்கும், இவரோட கதையே ரொம்ப ரொம்ப அவமரியாதைக்கு உள்ளானவரா இருப்பாரு. ஆனா இவர் என்ன எதிர்பார்ப்பாரு? இவரு காலுக்கு கீழே மிதிக்கிறதுக்கு ஒரு பெண் வேணும் அப்படின்னு எதிர்பார்ப்பாரு. அதனாலதான் நாம் என்ன சொன்னோம் என்றால், பெண்களுக்கு வந்து நாம் ஜாதி சொல்லவில்லை. பெண்களுக்கு நாம் அவங்களுடைய வர்க்கம் சொல்லவில்லை. பெண்களுக்கு நாம் அவங்களுடைய மதம் சொல்லவில்லை. அதனாலதான் என்ன சொன்னோம் என்றால் அருந்ததியர், ஆதி திராவிடர், அனைத்து சாதி ஏழைகள், பெண்கள் இவர்களுடைய ஒற்றுமையைக் கட்டமைக்கிற, இவர்களின் மூலமாக தமிழ்நாட்டுடைய சமூகத்தை மாற்றி அமைக்கிற ஒரு கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது அப்படின்றதுதான் மாநகராட்சிப் போராட்டத்தில நாம் துவக்கி வைத்த விஷயம்.
இப்போ நீங்க ஒன்றை கணக்குல வைக்கணும். ராஜ்மோகன் சொல்றாரு 'தேவதை'ன்றாரு. சரி, இந்தத் தேவதைன்றத நீங்க ரொம்ப நல்ல பொருள்லதான் சொன்னீங்கன்னு வச்சுப்போம்.. இப்ப தேவதைன்றாங்க, தமிழ்நாட்டு கிராமப்புறங்கள்ல இருக்கிற பள்ளிக்கூடங்கள்ல இருக்கிற கழிப்பறைகளை, அறைகளை 32,000 பேர் சுத்தப்படுத்துறாங்க. இந்த 32,000த்தில் எனக்குத் தெரிஞ்சு 31,000 பெண்கள்தான். ராஜ்மோகன் மொழியில் சொன்னால் இவங்க எல்லாம் தூய்மைத் தேவதைகள். இந்த 32,000 தூய்மைத் தேவதைகளுக்கு எவ்ளோ சம்பளம் 6,000 ரூபா.
இப்போ இந்த இடத்தில்தான் ஒரு கோரிக்கையைக் கேட்கிறோம். தாய்மை தாய்மை தாய்மை என்கிறீர்கள், தூய சக்தி தீய சக்திங்கறீங்க, ஆனா மகப்பேறு விடுப்பு குடுக்க மாட்டேங்கிறீங்க. பெண்ணு, அவதான் புள்ள பெத்துக்கணும். 10 மாசம் வயித்தில் சுமந்ததை இறக்கி வைக்கணும். அதுதான் மகப்பேறு. அந்த மகப்பேறு வலி, வேதனை. அது பெண்ணோட வாழ்வோடு பிரிக்க முடியாத ஒரு பகுதி. அந்தப் பெண்ணுக்கு மகப்பேறுக்கு முன்பும் பின்பும் லீவு தரணும். நாகரிக சமூகத்தோட சாதாரண அளவுகோல். ஒரு நாகரிக சமூகம், அந்தச் சமூகத்தினுடைய பெண்களுக்கு மகப்பேறுன்கிறது இதை யாராவது சொல்லித் தரணுமா?
திரு. ஜோசப் விஜய் எவ்வளவு படம் நடிச்சிருக்காரு? எவ்வளவு தூரம் பெண்களைப் பத்திப் பேசிருக்காரு? ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா நீங்கெல்லாம் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு தருவது சம்பந்தமாகப் "பரிசீலிக்கிறோம்"னு சொல்வதற்கு நீங்க கூச்சப்படணும். என்ன பரிசீலிக்கணும் இதில்? நீங்க சட்டமன்றத்துல ஏதேதோ 110 விதியின் கீழ் அறிவிக்கிறீங்க! 110 விதியின் கீழ் அறிவிப்பு ஜெயலலிதா செஞ்சாங்க, ஸ்டாலின் செஞ்சாங்க, அப்புறம் இப்ப விஜய் செய்யலாம். 110 விதியின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற அரசு, அரசின் கீழ் இருக்கிற அனைத்து விதமான பணியாளர்களுக்கும் பெண் பணியாளர்களுக்கும் "இன்று முதல் நான் அறிவிக்கிறேன் மகப்பேறு விடுப்பு கிடைக்கும்", என்று அறிவித்தால் முடிஞ்சு போச்சே! இது செய்யறதுக்கு என்ன பெரிய தயாரிப்பு? நிதிநிலை பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
அதே மாதிரி மாதவிடாய் கால விடுப்பு. பெண்ணுக்குத்தான் வரும், ஆணுக்கு வராது. பெண்ணுக்கு எப்ப மாதவிடாய் வருதோ அப்பதான் சமூகம் தழைக்கும். சமூகம் மேல மேல போகும். தலைமுறை தலைமுறையாக மானுடம் வாழ வேண்டுமென்றால், மானுடம் தழைக்க வேண்டுமென்றால் பெண் ஒரு பருவத்தில் மாதவிடாய் எய்த வேண்டும். இந்த மாதவிடாய் இன்னும் கஷ்டம்னா கஷ்டம், அது ரகசிய கஷ்டம். சொல்லிக்கக் கூட முடியாது, பகிர்ந்துக்கக் கூட முடியாது. இப்பதான் போய் சானிட்டரி பேடை ஓப்பனா வாங்குறதுக்குத் தயாராகுறாங்க. அதுலயும் நிறைய பேருக்கு சானிட்டரி பேடை பயன்படுத்த முடியாது. அதுக்கு பதிலா துணிதான். அந்தத் துணியைத் துவைச்சுக்கணும், இந்த நாகரிக சமூகத்தில் மாதவிடாய் கால விடுப்பு—இது என்ன பெருசா பேசணுமா?
அம்பிகா திரைக் கலைஞர், ரொம்ப ரொம்ப புத்திசாலித்தனமாகவும் அதே நேரம் நம்ம மேல அனுசரணையாகவும் சரியாகவும் பேசினாங்க. அவங்க என்ன கேட்டாங்கன்னா, அஞ்சும் மூணும் எட்டு; அஞ்சும் மூணும் எட்டுன்றதுக்கு பெருசா பேசணுமான்னு கேட்டாங்க. ரொம்ப சாதாரணமா இவங்க கோரிக்கையெல்லாம் நீங்க நிறைவேற்றணும். அதுக்கு எதுக்கு இவ்வளவு உட்காத்தி வச்சுட்டு "நாங்க வந்து இடம் கொடுத்திருக்கோம்" அப்படிலாம் பேசுறதுக்கு இதுல என்ன விஷயம் இருக்கு அப்படின்னு சொன்னாங்க.
