நிலம் : என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

$articleData->title

பழனி கோவில் நில அபகரிப்பு

ட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் நிலப் பிரச்சினை பேசு பொருளாகி உள்ளது. தேர்தலின் போது இகக (மா லெ) வெளியிட்ட மக்கள் போராட்ட பிரகடனத்தில் பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட நிலப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி இருந்தது. தேர்தல் முடிந்த பின் மதுரை மேலூரில் ‘நில உரிமை மாநாடு’ நடத்தப்பட்டது. கிராமப்புர நிலமற்ற ஏழைப் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட மாநாட்டில், ஆதிக்க சக்திகள், அரசு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பிலுள்ள பஞ்சமி நிலம் தலித்துகள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும், வீட்டுமனையற்ற அனைத்து சாதி குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட வேண்டும், வாழத்தகுந்த வீடு வழங்க வேண்டும், வீட்டுமனை, வீடு உரிமையை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட மாநாடு, இந்தக் கோரிக்கைகளின் மீது தவெக அரசின் கவனத்தை ஈர்க்கிற வகையில் தொடர் போராட்டங்களை நடத்துவதென்றும் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பஞ்சமி நிலம் தொடர்பாக விரிவான தீர்மானத்தை நிறைவேற்றி பரந்த மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றது.

 

பழனி கோவில் நில அபகரிப்பு சூடு பறந்து கொண்டிருக்க கரூர் இனாம் நிலப் பிரச்சினை அனல் பறக்கும் பிரச்சனையாக கவனம் ஈர்த்தது. இதில் சிறீரங்கம் கோவில் 400 கோடி நில அபகரிப்பு பிரச்சனையும் சேர்ந்து கொண்டுள்ளது. 1963 இனாம் ஒழிப்புச் சட்டப்படி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கோவில் நிலமாக்கியதை எதிர்த்து நீண்ட காலமாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிற வகையில் த வெ க ஆட்சி அரசாணை பிறப்பித்தது. கரூர் இடைத்தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வாக்குகளை அறுவடை செய்யும் திட்டத்தோடு செய்யப்பட்டிருந்தது. சமயம் பார்த்துக் கொண்டிருந்த பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் திராவிட கட்சிகள் வழியிலேயே தவெக வும் செல்வதாக தங்கள் (தவெக, பாஜக பக்கம் வராத) ஏமாற்றத்தை தவெக ஆட்சியின் மீதான தாக்குதலாக மாற்றினர். விஜய் கிறித்துவர், நிதியமைச்சர் கிறித்துவர் என தூக்கிக் காட்டி கிறித்துவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறி இந்துத்துவத்தை உசுப்பிவிட பாஜக கும்பல் முயன்று பார்க்கிறது. உயர்நீதிமன்றமும் தன் பங்குக்கு தாளாத வறுமையில் “வாக்குரிமை இல்லாத” கடவுள்களுக்கு வக்காலத்து வாங்கியது. இனாம் சட்டத்தின்படி பிரச்சனையை அணுகுவதற்கு மாறாக இந்துத்வா அரசியலுக்கு எண்ணெய் ஊற்றியது.

 

தவெக அரசு பிறப்பித்த ஆணை நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்துக் கிடக்கிறது. இனாம் ஒழிப்புச் சட்டம் வந்தபோது தமிழ்நாடு முழுவதும் 13 லட்சம் ஏக்கர்கள் அடையாளம் காணப்பட்டன. அவை விவசாயிகளுக்கு கிடைத்ததா? புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 414 கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களைப்பெற கம்யூனிஸ்ட்கள் போராடினர். 67 முதல் ஆட்சி நடத்திவரும் திராவிட கட்சிகள் இதன்மீது கவனம் செலுத்தவில்லை. காங்கிரசின் மிராசுகள் ஆதரவு நிலச்சீர்திருத்தத்துக்கு மாறாக “மிராசுகளின் முதுகெலும்பை உடைத்த”, நிலச் சீர்திருத்தம் கொண்டுவந்த திமுகவும் கவனம் செலுத்தவில்லை. 1963 நிலப்பதிவேடுகளின்படி தமிழ்நாடு முழுவதுமுள்ள இனாம் நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைப்பதை ‘மாற்றம்’ கொண்டுவர ஆட்சியைப் பிடித்த தவெக செய்ய முயற்சித்திருக்கலாம். திமுகவை பின்பற்றி கொண்டு வந்திருக்கும் தவெக வின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை இதுபற்றி பேசியிருக்க வேண்டும். பேசவில்லை. எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக வும் பேசவில்லை. “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்தாலும்” காங்கிரஸ், விசிக அய்யுஎம்எல் கட்சிகள் பேசியிருக்க முடியும்.  ஏனோ பேசவில்லை.


பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி விவசாயிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அடுத்த நாளே தொழிலமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சரை சாட்சியாக வைத்துக் கொண்டே கையகப்படுத்தப்பட்ட நிலம் வேறு தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். தொழில் வளர்ச்சி, ட்ரில்லியன் பொருளாதாரம் பற்றி ஆவேசமாக பேசிய திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை. விவசாய நிலத்தை தொழில் திட்டங்களுக்கு தரமாட்டோம் என்பதே பரந்தூர் விவசாயிகளின் நாள் போராட்டம். விஜய் விவசாயிகளுக்கு அளித்த ஆதரவும் அதற்காகத்தான்.

 

விவசாயிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்காததால் இகக(மாலெ) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து தங்கள் குரலை வலுவாக எழுப்பின. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, குறிப்பிட்ட தொழில் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் அந்த தொழில் கைவிடப்படுமானால் அந்த நிலத்தை விவசாயிகளிடையே திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்பதை மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச் செயலாளர்கள் அழுத்தமான குரலில் வலியுறுத்திக் கூறினர்.

 

அன்றாடம் தொழிலதிபர்களை முதலமைச்சர் சந்தித்து முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாகச் சொல்லும் தவெக அரசு புதிய புதிய தொழில் திட்டங்களை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் நிலத்தை விழுங்கும் திட்டங்கள். விவசாயத்தை அழிக்கும் முதலீடுகள். சுற்றுப்புறச் சூழலை சீரழிக்கும் நகர்வுகள். தவெக வின் தேர்தல் வாக்குறுதிகள் என்னாகும்? இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கூட, தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட அடுக்கடுக்கடுக்கான தொழில் திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

விசிக வின் வன்னி அரசு சமூகநீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது தலித் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமூகநீதி  சக்திகளின் அவாவை கிளறிவிட்டுள்ளது. பஞ்சமி நிலப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. மேலூர் நில உரிமை மாநாட்டின் போது, நமது அமைச்சர் இருக்கிறார். அவரே நேரில் வந்து பஞ்சமி நிலத்தை பெற்றுத்தருவார் என நம்பிக்கையூட்டி பேசினார்கள். ஆனால், அமைச்சர் பஞ்சமி நிலப்பிரச்சனை அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்பது ஒரு இரவில் நடக்கக் கூடியதல்ல. அதற்குரிய அரசியல் தயாரிப்புடன் உறுதியுடன் அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவாரென்பதே 1994 முதல் போராடி வரும் மக்களது எதிர்பார்ப்பு. அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முன்வருவாரானால் தவெக ஆட்சியை அதை நோக்கி கொண்டுவர முயற்சிப்பாரேயானால் மக்கள் அவருடன் கரம் கோர்க்க தயாராகவே உள்ளனர். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் தொடர்பான 134 ஆண்டுகால பிரச்சினை ஒரு புதிய நல்ல திருப்பத்தை எட்டும். அது மிகப்பெரிய ‘மாற்றமாக’ இருக்கும்.

 

வீட்டுமனை வீடு தொடர்பான விவாதம் சட்டப் பேரவையில் முன்வந்தது. விவாதத்தில் முந்திக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் 2.30 லட்சம் பட்டாக்கள் தரப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 60 ஆண்டுகளில் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் பட்டா வழங்கப்பட்டது பற்றியும், வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது பற்றியும் புள்ளி விவரங்கள் இருக்கும். ஆனால் வீட்டுமனைப் பட்டா பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஒரு எடுத்துக்காட்டு. மேலூர் ஒன்றியத்தில் உள்ள 19 கிராமங்களில் கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை திரும்ப எடுத்துக்கொள்ளப் போவதாக/ரத்து செய்யப் போவதாக தாசில்தார் அறிக்கை அனுப்பியுள்ளார்! இதன் பொருள்? பேப்பரில் பட்டா இருக்கும். இடம் உரியவருக்கு போய்ச் சேர்ந்திருக்காது (ஒப்படை செய்யப்பட்டிருக்காது). சிலகாலம் கழித்து பட்டா ரத்து செய்யப்படும். வேறு ஒருவர் பெயரில் பட்டா வழங்கப்படும். இந்த விவாதத்தில் பேசிய அதிமுக பழனிசாமி நீர்நிலை புறம்போக்குகளில் வீட்டுமனை பட்டா வழங்கமுடியாது என்று ஆட்சியாளர் குரலில் பேசினார். ஏரிகளையும் குளங்களையும் விழுங்கிய திராவிட ஆட்சிகள்/அமைச்சர்கள் நீர்நிலை புறம்போக்குகளுக்காக கண்ணீர் சிந்துவது நமக்கும் கண்ணீரை வரவழைக்கிறது!

 

தமிழ்நாட்டில் வீட்டுமனை இல்லாத குடும்பங்கள் எண்ணிக்கை, குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை, கோவில், மடம் நிலங்களில் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களுடன் தவெக நிதிநிலை அறிக்கை முன் வந்திருக்க வேண்டும் அல்லது விதி 110 ன் கீழ் முதலமைச்சர் இந்த விவரங்களை அறிவித்து வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும், பட்டா கேட்டு பல பத்தாண்டுகளாக அலைந்து கொண்டிருப்போருக்கு பட்டா வழங்கப்படும், கோவில், மடங்களில் குடியிருப்போரது பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்திருக்கலாம். அப்படி அறிவித்திருந்தால் இதை ‘மாற்றத்தின்’ ஆட்சி என மக்கள் கொண்டாட முடியும். இது மற்றுமொரு ‘ஆட்சி’ மட்டுமே என்று கூறப்படுவதாக ஆகிவிடாதா?


1000 திற்கு மேற்பட்ட கிராமக் குடியிருப்புகளில் வசிக்கும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்களது நிலமும் வாழ்வாதாரமும் அபகரிப்புக்கு ஆளாகி வருகிறது. வனச்சட்டம் 2006ன்படி மலைவாழ் பழங்குடி உழவர்களுக்கு நிலம் உரிமையாக்கப்படவில்லை. வன உரிமைச் சட்டத்தை மிக மோசமாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான வகையில் காப்புக் காடுகள் என ஆக்கிரமித்துக் கொண்டு பழங்குடி மக்களை துன்புறுத்தி வருகிறது. மேகமலை, வருசநாடு (தேனி மாவட்டம்) பகுதிகளில் உள்ள 98 கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்ற கெடுபிடி செயல்களை செய்து வருகிறது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் 10000க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசும் மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடுவதாக உறுதி அளித்துள்ளது. பழங்குடி போராட்ட முன்னணியும் பழங்குடி மக்களின் நிலம், வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்கப் போராடி வருகிறது.


பல லட்சம் குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும், கோவில் மடம் நிலங்களில் குடியிருக்கும் சாமான்ய மக்கள் குடியிருக்கும் இடத்தை சொந்தமாக்க வேண்டுமென பல பத்தாண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். திமுக ஆட்சி இதை கண்டுகொள்ள வில்லை. 2018ல் குடியிருப்பவருக்கு சொந்தமாக்க அதிமுக போட்ட அரசாணைக்கு நீதிமன்றம் போட்ட தடையை நீக்குவதற்கு இரண்டு கட்சிகளுமே முயற்சிக்கவில்லை. 


தமிழ்நாட்டில் விவசாய நிலம் சுருங்கி வருகிறது. 70களில் 60% ஆக இருந்த விவசாயப் பரப்பு இப்போது 36%ஆக சுருங்கி விட்டது. காடுகள் பரப்பு சுருங்கி வர, தரிசு நிலப்பரப்பு 22%ஆக அதிகரித்துள்ளது. 90கள் தொடங்கி தாறுமாறான நகர்ப்புர மயமாக்கம், தொழில் மயமாக்கத்தால் இத்தகைய பேராபத்து நடந்துள்ளது. 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைய மேலும் மேலும் நிலத்தை, விவசாயத்தை விழுங்கச் செய்யப் போகிறதா தவெக அரசு?

 

நிலம் தாய். அனைத்துக்கும் அதுவே ஆதாரம். அது விவசாய நிலமாக விவசாயிகளிடம் இருக்க வேண்டும். மக்களது வாழ்விடமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுஞ்சோலைகளாக இருக்க வேண்டும். அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் இடமளிப்பதாக இருக்கவேண்டும்.

 

ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. 60 ஆண்டுகால திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். நிலம் தொடங்கி, அந்த ஆட்சிகளின் தவறான பொருளாதார கொள்கைகளால் புறக்கணித்துள்ளனர். திமுக ஆட்சி கொண்டு வந்த நிலவங்கி ஏற்படுத்துவதற்கான சட்டம் விவசாயிகள், ஜனநாயக சக்திகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. திராவிட மாடல் திமுக ஆட்சியின் தோல்விக்கு அது ஒரு முக்கிய காரணம். சமூகநீதி மேலோட்டுக்கு கீழே நாளும் ஆழமடைந்து வரும் ஏற்றத்தாழ்வு காரணமாகவே திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். 


புதிய ஆட்சி சொல்கிற “மாற்றம்” நிலத்திலிருந்து தொடங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி முதன்மையாக எழுப்பிய நிலப்பிரச்சனை மிகமிகச் சரியானது என்பதை தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. நிலத்துக்கான போராட்டத்தை, நிலமற்ற உழைக்கும் மக்கள், ஏழை விவசாயிகள், இடதுசாரிகள் தொடர்வார்கள். அக்டோபர் 15 இடதுசாரிகள் பேரணி நிலப் பிரச்சனையை முதன்மை அரசியல் பிரச்சனையாக கொண்டுவர முடிவுசெய்துள்ளது. நிலமே வாழ்வாதாரம். நிலமே ஜனநாயகம்.  மேலே வரிசைப்படுத்தப்பட்டுள்ள நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தவெக ஆட்சி நில அமைச்சகம் ஒன்று ஏற்படுத்திட வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், கார்ப்பரேட் சார்பு நில உறவுக்கு முடிவு கட்டி மக்கள் சார்பு நில உறவு மறுசீரமைப்பைக் கொண்டுவர வேண்டும். என்ன செய்யப் போகிறது தவெக ஆட்சி?

 


15 September, 2026