தமிழ் நாட்டின் தேவை, ஓர் இடதுசாரி அரசியல் திருப்பம்! ஓர் இடதுசாரி மாற்றணி!

$articleData->title

தமிழ் நாட்டின் தேவை, ஓர் இடதுசாரி அரசியல் திருப்பம்! ஓர் இடதுசாரி மாற்றணி!

திமுக – அதிமுக எனும் இரு துருவ ஆட்சி முறை சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நாட்டில் தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், அது திமுக – தவெக எனும் இரு துருவமாக முடிந்து போகுமா என்கிற கேள்விகள் உள்ளன. அதிமுக சிதறுண்டு வருகிறது. தவெக ஒரு புதிய அரசியல் சக்தியாக எழுந்துள்ளது. பிஜேபியிலிருந்து வெளியேறிய அண்ணாமலை ஒரு தமிழ்நாட்டு பிஜேபியை உருவாக்குவதில் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது, இது தவிர பலதரப்பட்ட சக்திகளும் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி பேசி வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில், தமிழ்நாடு அரசியல் களம் இரு துருவ அரசியல் தாண்டி பல வகைப்பட்ட அரசியல் சக்திகளின் களமாக, நிலையற்ற களமாக, புதிய அரசியல் சக்திகளுக்கான இயங்காற்றல் மிக்க களமாக மாறி வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய அரசியல் சூழல், இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கான வெளியைத் திறந்து விட்டிருக்கிறது. ஓர் இடதுசாரி அரசியல் மாற்றணிக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகி இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் சிபிஐ – சிபிஐஎம் – சிபிஐஎம்எல் இணைந்து ஓர் இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். இடதுசாரிகளின் அரசியல் அறுதியிடலை காட்டும் விதத்தில்  அக்டோபரில் திருச்சியில் மாநில அளவிலான ஓர் இடதுசாரி எழுச்சிப் பேரணியை நடத்துவது என திட்டமிட்டிருக்கிறோம். நமது போராட்டத் திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இடதுசாரி பிரகடனம் ஒன்றும் கூட வெளியிடப்பட இருக்கிறது. பேரணியை மாபெரும் வெற்றியடைய செய்திட மொத்த கட்சியும் பணியாற்றிட வேண்டும்.

 

அரசியல்ரீதியாக இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கான வாய்ப்பு, வெளி அதிகரித்து இருக்கும் அதே வேளையில், சமூக, பொருளாதாரரீதியில் பார்த்தாலும் அத்தகைய இடதுசாரி வளர்ச்சிக்கான வெளி அதிகரித்து இருப்பதாகவே தெரிகிறது. தவெக மாற்றத்திற்கான கட்சி என கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த போதிலும், ஆட்சி மாற்றம் என்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. திமுகவைப் போலவே, தவெகவும் இந்தித் திணிப்பு, நீட் போன்றவற்றை எதிர்ப்பதாக, மாநில உரிமைகளைக் காப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், தமிழ்நாட்டுப் பொருளாதார சூழலில், கல்வியில், தனியார் ஆதிக்கத்துக்கு எதிராக. தனியார்மயமாக்கத்திற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதே அதன் முதல் அறிவிப்பாக இருந்தது. நம்மைப் போன்ற சங்கங்கள் எதிர்த்ததன் காரணமாகத்தான் அது கைவிடப்பட்டது. 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்குவோம் எனும் முழக்கங்கள், வெற்றி முதலீட்டாளர் மாநாடுகள் விஜய் தலைமையிலான தவெக அரசு கார்ப்பரேட் நலனைப் பேணுவதில் மும்முரமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், பணி நிரந்தரம், கூலி உயர்வு கோரிப் போராடும், தூய்மைப் பணியாளர், டாஸ்மாக் தொழிலாளர் உள்ளிட்ட, தொழிலாளர் பிரச்சனைகளில் தொழிலாளர் ஆதரவு அரசாக காணப்படவில்லை. சாதியாதிக்கப் படுகொலைகள், தாக்குதல்கள், போதைப் பொருள் நடமாட்டம், பெண்கள் மீதான தாக்குதல்கள் போன்ற திமுக அரசு விமர்சனத்துக்கு உள்ளான பிரச்சனைகள் இன்னும் கூட அப்படியேதான் தொடர்கின்றன. பதவியேற்ற நாளன்று விஜய் சொன்னது போன்று சமூகநீதி ஆட்சி என்பது இன்னும் துவங்கவில்லையோ எனும் கேள்விகளையும் எழுப்புகிறது. அப்படிப் பார்க்கும் போது, தவெக அரசும் சாமானியர்களின் அரசு அல்ல, கார்ப்பரேட் ஆதரவு மற்றும் ஆதிக்க சக்திகளின் அரசுதான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகத்தான் இருக்கிறது.

 

மோடி அரசு, ஒன்றிய அரசு எதிர்ப்பு குறித்து திமுக கடைபிடித்த மோதல் போக்கு என்பதற்கு மாறாக, ஒன்றிய நிதியைப் பெற வேண்டும் என்கிற முகாந்தரத்தில் தவெக அரசு ஒரு சமரசப் போக்கைக் கடைபிடிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதற்கான சில அறிகுறிகள் தற்போதே தென்படுகின்றன. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூட முந்தைய திமுக அரசும் தயாராக இருக்கவில்லை. தற்போதைய தவெக அரசும் தயாராக இல்லை. 100 நாள் வேலை பற்றிய முணுமுணுப்பு கூட இல்லை. கிராமப்புரத்தில் மக்கள் வேலை இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். விபி-கிராம்-ஜி யை திரும்பப்பெற சட்டமன்றத்தில் தீர்மானம் கூட இயற்றப்படவில்லை. தொகுதி மறுவரையறை போன்ற விசயங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அதற்கு எதிராக மொத்த தமிழ் மக்களையும் திரட்டி, அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றத் தயாராக இல்லை. மாநில உரிமைக் காவலன் எனும் பெயர் வெறும் வெற்று முழக்கமாக முடிந்து போகுமா எனும் கேள்விகளும் எழத் துவங்கியுள்ளன.

 

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களுக்கும் மேலாகி விட்டது. மக்களால் ஊழலற்ற ஆட்சி என தற்காலிகமாக, காணப்படுகிறது. ஆனால், ஊழல் அதிமுகவினர் பலரும் தவெகவில் இணைந்துள்ள பின்னணியில் அந்தப் பெயர் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

விவசாயிகள் விரோத பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அரசு கைப்பற்றிய நிலங்களை விவசாயிகளிடம் திருப்பித் தரும் திட்டம் இல்லை என்பதை தொழிலமைச்சர் சொல்லிவிட்டார். விவசாயிகள் வாழ்வை முன்னேற்றும் திட்டம் எதையும் வேளாண் பட்ஜெட்டில் காணமுடியவில்லை. வாக்குறுதிப்படி, கடன்கள் முழுமையும் கூட ரத்து செய்யப்படவில்லை.

 

மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விசயத்திலும் கூட, பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. கஜானா காலி என வெள்ளை அறிக்கை வெளியிட்டு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது என கூறிவிட்டது தவெக அரசாங்கம். 5 ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது, பழைய பென்சன் திட்டத்தை திரும்ப கொண்டு வருவது, வேலையற்றோர் நிவாரணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. வேலை வாய்ப்பு என்பது வெறும் திறன் மேம்பாட்டுத் திட்டமாக உருமாற்றம் அடைந்து விட்டது.

                          

பெண்கள் மாநிலம் முழுவதும் கட்டணமில்லாப் பயணம் செய்யலாம் எனும் வாக்குறுதி, அரைகுறையாக, மாவட்ட மட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும், வெட்டிக் குறுக்கப்பட்ட திட்டமாக மாற்றப்பட்டு, அக்டோபர் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வந்திருக்கிறது. 6 சிலிண்டர் வாக்குறுதி 3 ஆக குறைக்கப்பட்டு, பொங்கல் முதல் அமுலுக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு வெற்றி உரிமைத் தொகை ரூ.2500 இன்னும் கானல் நீராகவே இருக்கிறது.

 

இத்தகைய பின்னணியில், தவெக அரசு மற்றுமொரு திமுக அரசாகத்  திகழ்கிறதே தவிர ஒரு மாற்றத்திற்கான அரசுக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

 

திமுகவின் பங்கு என்பது தாங்கள் ஏற்கனவே போட்ட திட்டங்களை சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசுவது என்பதாக மட்டுமே இருக்கிறதே தவிர, தமிழ் மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக, போராட்டங்களைக் கட்டமைப்பதாக இல்லை. அதிமுக, பாமக தமது பாஜக ஒன்றிய ஆட்சியை ஆதரிக்கும் போக்கைத் தொடர்கின்றன.

 

எனவே, உழைக்கும் மக்கள் போராட்டங்களை உயர்த்திப் பிடித்து, தமிழ்நாட்டில் ஓர் எதிர்க்கட்சிப் பாத்திரத்தை ஆற்ற வேண்டிய பணியும் இடதுசாரிகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. மாறியிருக்கும், மாறி வரும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில், இடதுசாரி மாற்றணி, இடதுசாரி அரசியலின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் திசையில் நாம் தீவிரமாக பணியாற்றிட வேண்டும், அதற்கு மொத்த கட்சியும் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

(2026 ஆகஸ்டு 30 அன்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற இகக(மாலெ) மாநில ஊழியர் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட அறிக்கையிலிருந்து.)

 

 

 


15 September, 2026