காசி சங்கமம் என்ற பேரால் காசி போல் இராமேசுவரத்தையும் ஆன்மீக திருத்தலமாக்க பெருமுயற்சி நடந்து வருகிறது. இராமேசுவரத்தின் 64 தீர்த்தங்களில் மூழ்கி பாப விமோசனம் பெற இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் குவிகிறார்கள். ஆனால் இங்குள்ள பூர்வகுடி மீனவ சமுதாயம் குடியிருக்க முடியாமல், நாடற்ற அகதிகள் போல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏறத்தாழ 70 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ராமேசுவரத்தில் வாழும் மீனவ சமுதாயம் குடியிருக்கும் இடத்துக்கு உரிமை இல்லாமல் திண்டாடி வருகிறது. வனவட்டாரத்தில் முத்துராமலிங்கத்தேவர் நகர், இராஜகோபால் நகர், நேதாஜி நகர், பூலித்தேவன் நகர், சேதுபதிநகர், தெற்குகரையூர், இராமகிருஷ்ணாபுரம், சேரான்கோட்டை, மீனவர் காலனி, நடராஜபுரம், புதுரோடு உட்பட மீனவ மக்கள் தங்களுடைய சொந்த செலவில் வீடுகள் அமைத்து நகராட்சி, ஊராட்சி வீட்டுவரி, சொத்துவரி, மின் இணைப்புகள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற குடியுரிமைக்கான ஆவணங்கள் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. எப்போது வேண்டுமானாலும் குடியிருக்கும் மீனவ மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ 2000 பேர்களை பலி கொண்ட 1964-ன் பெரும்புயலால் துடைத்தெறியப்பட்ட தனுஷ்கோடியில் உயிர் பிழைத்த மீனவ மக்கள், இராமேஸ்வரம், நடராஜபுரம், இராமகிருஷ்ணாபுரம், சேரான்கோட்டை, தெற்குகரையூர் போன்ற பகுதிகளில் குடிசைவீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். அடுத்த பத்தாண்டுகளில் முத்துராமலிங்கத்தேவர் நகர், இராஜகோபால் நகர், நேதாஜி நகர், பூலித்தேவன் நகர், சேதுபதி நகர் போன்ற மீனவர் குடியிருப்புக்களாக விரிவடைந்தன.
மேற்கண்ட மீனவர் குடியிருப்பிலுள்ள மக்கள் தங்களது வாழ்விட உரிமைக்காக இராமேஸ்வரம் வனவட்டாரத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி வனத்துறையிடம் விண்ணப்பித்தனர். அப்போது சிவகங்கை வனத்திட்ட அலுவலர்….
மீனவமக்களின் குடியிருப்பு பகுதிக்கான விதிவிலக்கத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு அரசிதழ் வெளியீடு மூலம் எண்: 3 பதிவு எண்: 890 நாள் : 24.01.2013 வன வட்டாரத்தின் 1718.08 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 1616.08 ஹெக்டேர் பரப்பளவாகக் குறைத்தும் மேற்கண்ட வனவட்டாரம் காப்புவனமாக (ரிசர்வ் பாரஸ்ட்) அறிவிப்பும் செய்தார்.
காப்பு வனமாக கடற்கரை சமவெளிப்பகுதியையும் அமைத்திட சுற்றுச்சூழல் விதிகள் அனுமதிக்கிறதா? காப்பு வனத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பறவையினங்கள், மிருக இனங்கள் ஏதும் இல்லை. நிலத்தடி நீர் கூட 16 தனிமங்கள் கலந்தே இருக்கின்றன. உணவுச்சங்கிலித் தொடர்பில் மாமிச பிராணிகளும், பறவைகள் மட்டுமே உயிர் வாழமுடியும். இப்பகுதியில் காப்புவனம் என்பது சரியானது தானா?
கார்ப்பரேட் சாமியார்களின் கோயில், தங்கும் விடுதிகள் அமைப்பது திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து அத்தி மரத்தினாலான அத்திவரதர் சிலையை தனுஷ்கோடி கொண்டு வந்து கோயில் அமைத்தும், சுற்றுலா வணிகத் திட்டங்கள் மூலம் கோபுரத்துடன் கூடிய தொலை நோக்கி அமைத்து, ராமர் சென்ற இலங்கையை பார்க்கச் செய்வது, இராணுவ திட்டங்களுக்கான அனுமதி, மேலும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டக்குழுக்கள் தங்குவதற்கு நட்சத்திர தங்கும் விடுதியும், மேலும் ஹெலிகாப்டர், சிறிய ரக விமானம் இறங்குதளம் அமைத்திட முயற்சியும், இலங்கைக்கு நேரடி சாலை அமைத்திடும் திட்டம் போன்றவைகள் இராமேஸ்வரம் வன வட்டாரத்தில்தான் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் தீவின் வட பகுதி பாக்ஜலசந்தி கடலும், தென்பகுதி மன்னார் வளைகுடா கடற்கரையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காற்றாலை அமைக்கவும், மீத்தேன் ஹைட்ரோகார்பன், எண்ணெய் வளங்களைக் கொள்ளையிட உள்கட்டமைப்பு வழிகள் ஏற்படுத்திக் கொள்ளவும் காப்புவனமே பயன்பாட்டு பகுதியாக அமையும்.
மீனவமக்களுக்கு விதிவிலக்கு அளித்து அவர்களுடைய குடியிருப்பு நிலப்பகுதியை மாவட்ட வருவாய் துறையிடம் ஒப்படைக்க தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் அரசு ஆணை பிறப்பிக்காமல் 2002-லிருந்து மவுனம் சாதித்து வருகிறார். மாவட்ட வருவாய்த்துறையும் தான் கொடுத்த நிலப்பகுதியை திரும்பப் பெற முயற்சி எடுக்கவில்லை. இதனால் இங்கு வாழும் பூர்வகுடி மக்களை அகதிகளாக, வாழிட உரிமையற்றவர்களாக்கி உள்ளனர்.
கடற்கரை ஒழுங்காற்று மண்டலம், சுற்றுப்புறச் சூழல் துறை, வனத்துறை, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளின் கீழ்வரும் ராமேஸ்வரம் இடியாப்பச்சிக்கலில் மாட்டிக்கொண்டு துயரப்படுகிறது. இப்பகுதி மக்கள் கண்ணியமான வாழ்விட உரிமைக்காக பல தலைமுறைகளாக போராடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 17 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மாவட்டக் கமிட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான பூர்வகுடி மீனவர்கள், அனைத்து சமுதாய ஏழைகள் வாழ்விட உரிமையின்றி தவிக்கிறார்கள் போராட்டம் தொடர்கிறது.
சே. முருகானந்தம்- திலீபன்
ராமேசுவரத்தில் இருந்து..
