தொழிலுக்கான வரையறை என்ன? 9 பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட உச்சநீதிமன்ற அமர்வம் என்ன சொல்கிறது?

$articleData->title

4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு

1978 ம் ஆண்டு வி. ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வம் பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் வாரியம் ( BWSSB) எதிர் ஏ. ராஜப்பா வழக்கில் ( BWSSB வழக்கு) தொழில் தகராறு சட்டம் 1947 , பிரிவு (2j) படி தொழில் என்பதற்கு பரந்த வரையறையை வழங்கி இருந்தது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த்  தலைமையிலான 9 பேர் அரசிலமைப்புச் சட்ட அமர்வு - 20.08.2026 தேதியில் வழங்கிய தீர்ப்பானது, 1978 BWSSB வழக்கின் சரித்தன்மை குறித்த பரிந்துரை (reference) மீது வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு நிறுவனம் தொழில் என்ற வரையறைக்குள் வருகிறதா  என்பதை அறிய 1978 BWSSB வழக்கின் தீர்ப்பு மூன்று பரிசோதனைகளை (triple test) எடுத்துக்கொண்டது.

        1)     அந்த நிறுவனம் முறைப்படியான, கட்டமைக்கப்பட்ட விதத்திலான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

        2)     அதை நடத்துவதில் முதலாளி, தொழிலாளி இருவரின் கூட்டுறவு (co-operation) இருக்க வேண்டும்.

        3)     நிறுவனத்தின் பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி அல்லது விநியோகம் என்பது மனித தேவைக்கானதாகவும் விருப்பங்களை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

உருவாக்கப்பட்டுள்ள இந்தப்  பரிசோதனைகள் ‘சட்டத்தின் விசாரணையில்’ தாக்குப்பிடித்து நிற்குமா என்பதுதான் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்ட கேள்வி.

விசாரணையைத் துவங்கிய 9 பேர் அமர்வம் நான்கு  எழு வினாக்களை எழுப்பிய காலத்துக்குள்ளாகவே, நவம்பர் 21, 2025 முதல் புதிய தொழில் உறவு சட்டத் தொகுப்பு 2020 அமலுக்கு வந்துவிட்டது. அப்படி இருக்கையில் பரிந்துரை தேவையற்றதாக, காலாவதியாகிவிட்ட (otiose) பின்னரும் கூட 9 பேர் அமர்வம் வழக்கை தொடர்ந்து நடத்தியது. 

9 பேரில் நீதிபதிகள் டி. தத்தா, வி. புயன், பி. வி. நாகரத்தினா, சி. எஸ். நரசிம்ஹா ஆகியோர் வேறு வேறு வார்த்தைகளில் இதன் மீது மேற்கொண்டு செல்ல தேவை இல்லை என்று சொல்லிவிட்டனர்.

ஒரு பக்கம் இது நிலுவையில் உள்ள வழக்குகளுக்குப் பொருந்தாது என்பதும், மறுபுறம் சட்டமே நீக்கரவு செய்யப்பட்டு விட்டதால் இந்தச்  சட்டத்தின் கீழ் புதிய வழக்குகள் பதிய முடியாது என்பதும் உள்ள நிலையில், இது ஒரு கற்பனாவாத கேள்வியாகி விடுகிறது.

எப்படி இருந்த போதும் தொழில் உறவு சட்டத் தொகுப்புகளின் கீழ் வரும் வழக்குகளுக்கு BWSSB வழக்கு தீர்ப்பு நங்கூரமாக (sheet anchor) இருக்க வேண்டியதில்லை என்பதை அமர்வு சொல்லிவிட்டது இப்படிச் சொல்வதன் மூலம் தொழில் உறவு சட்டத் தொகுப்பு 2(p)ன் படி தொழில் என்பதற்கான விளக்கவுரையை  எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழி வகுத்துள்ளது எனலாம். அதே சமயம், நீதிபதி நாகரத்னா BWSSB வழக்கில் வளர்த்தெடுக்கப்பட்ட சட்டவியல் வெளிச்சத்தில் 2(p) பார்க்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய மாறுபட்ட தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார். 

2005ல் உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு, ஜெய்பிர் சிங் வழக்கில் BWSSB தீர்ப்பானது தொழிலாளர்களுக்குச் சாதகமாக உள்ளது; முதலாளியைப் பற்றி கவலைப்படவில்லை என்று சொல்லித்தான் மறு வரையறை செய்யச் சொல்லி பரிந்துரைத்திருந்தது. 

முதலாளியும் தொழிலாளியும் பேச்சுவார்த்தை மேடையில் சமமற்றவர்களாக உள்ள நிலையை அங்கீகரிப்பதாகத்தான் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 42 ஆனது நியாயமான மனிதாபிமானமிக்க பணி நிலைமைகள் பற்றியும், உறுப்பு 23 ஆனது  யாசக நிலை, மற்ற வடிவங்களிலான கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பற்றியும் பேசுகிறது. அவற்றின் இன்றைய மாறிய வடிவங்களில் அந்தப் பாதுகாப்புகள் மிகவும் தேவையானதாகவே உள்ளன.

சட்டங்கள் தொழிலாளர்க்கு சாதகமாக உள்ளன என்ற பார்வை உள்ளது. எந்தக் காரணமும் சொல்லாமல் ஒருவரை பணிநீக்கம் செய்வது சாதாரண நடைமுறையாக இருக்கும்போது, பணி நீக்கத்துக்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்பது சுமையாக தெரிகிறது.

இந்தச் சூழலில் அம்பேத்கர் “அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை என்பதற்கு மறுபெயர் தனியார் முதலாளிகளின் சர்வாதிகாரமே” என்று சொன்னது நினைவு கூறத்தக்கது.

13 நீதிபதிகள் அமர்வின் 1973 கேசவானந்த பாரதி தீர்ப்பானது சமூக, பொருளாதார, அரசியல் நீதி என்பது அரசியல் சாசன அடிப்படைக் கட்டமைப்பின் பகுதியாகும் என்பதை அங்கீகரித்திருக்கிறது.1947க்குப் பிறகும் கூட தொழிலாளிக்கும் முதலாளிக்குமிடையிலான சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறதே ஒழிய குறையவில்லை. ‘தொழில் செய்வதை எளிதாக்குதல்’ என்பதன் மூலம் அது இன்னும் அதிகரித்துள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தின்  பகுதி 4 (part 4)ன் சமூக நீதி பாதுகாப்பு என்பது இப்போது கூடுதல் தேவையாக உள்ளது.

1947ம் ஆண்டின் தொழில் தகராறு சட்டமானது, தொழில் அமைதிக்கான அடிப்படைப் பாதுகாப்புகளையும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தொழில் என்ற வரையறையிலிருந்து விதிவிலக்கு அளிப்பதானது குறைந்தபட்ச பாதுகாப்பிலிருந்து தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு ஒப்பானதாகும். BWSSB வழக்கின் தீர்ப்பு இந்தச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யும் விதம் மருத்துவமனைகள், கல்லூரிகள், பல்வேறு சேவை நிறுவனங்களையும் தொழில் என்ற வரம்புக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு எல்லோருக்கும் கிடைப்பதை உறுதி செய்திருந்தது. 

தொழில் தகராறு சட்டத்தை நீக்கிவிட்டு வந்திருக்கும் தொழில் உறவு சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் பாதுகாப்புகள் குறித்து குறுகிய வரையறையைக் கொண்டதாக உள்ளது. ஆகவே நாம் அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதி என்ற உத்தரவாதத்திற்கு எப்போதுமே திரும்பிச் செல்ல வேண்டும். 

( உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி கோபால் கவுடா மற்றும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க தேசியத் தலைவர் வழக்கறிஞர் மைத்திரேயி கிருஷ்ணன் இணைந்து தி இந்து ஆங்கில நாளிதழிலில் எழுதிய  கட்டுரையிலிருந்து. தமிழாக்கம் - தேசிகன்)

15 September, 2026