இன்னும் அதிகமான ஒற்றுமையுடனும் வலுவான உறுதியுடனும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை வீறுநடை போடட்டும்

[செப் 19 - 20 ஜலந்தரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் (ஏஐகேஎம்) 5வது தேசிய மாநாட்டில் தோழர் திபங்கர் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்]

$articleData->title

அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் (ஏஐகேஎம்) 5வது தேசிய மாநாட்டில் தோழர் திபங்கர்

அகில இந்திய விவசாயிகள் மகாசபை 5வது மாநாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கம் (பிகேயு), பஞ்சாப், ஹரியானாவின் இரு முன்னணி விவசாய அமைப்புகளான ஜமூரி விவசாயிகள் சபை, பக்டி சம்பால் ஜட்டா ஆகியன ஏஐகேஎம் பதாகையின் கீழ் ஒன்றிணைந்ததுதான்.


விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்தி வரும் தொடர் அபாயத்துக்கு மத்தியில், விவசாயிகள் இயக்கம் ஏகாதிபத்தியத்தின் தீவிரமான  அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இச்சமயத்தில், டெல்லி எல்லையில் வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்த மூன்று அமைப்புகள், புதிய சிவப்பு-பச்சை கொடியை ஏற்று, ஒரே அமைப்பாக இணைந்திருப்பது மிகவும் உத்வேகமளிக்கும் ஒரு வளர்ச்சியாகும்.

இந்த மூன்று அமைப்புகளும் கம்யூனிச பாரம்பரியத்தில் இருந்து தோன்றியவை; எனவே, இந்தியாவின் தீவிரமடைந்து வரும் விவசாய நெருக்கடிக்கு தீர்வாக அமையும் விவசாயப் புரட்சி என்ற கம்யூனிச செயல்திட்டத்திற்கும், கம்யூனிச இயக்கத்திற்கும் இந்த ஒருங்கிணைப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகையால், உழவர் இயக்கத்தில் உள்ள கம்யூனிச அணுகுமுறை குறித்த சில அடிப்படைகளை இந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

இயல்பாகவே விவசாயிகள் பொறுமையானவர்கள், பயிர்கள் வளரும் வரை எப்படி காத்திருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். விவசாயத்தின் உள்கட்டமைப்பு நெருக்கடிகள் எங்கும் பரவியுள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் பயிர் இழப்புகளை விவசாயிகள் நன்கு அறிவார்கள். மேலும் நீண்ட கால நெருக்கடியைச் சமாளிக்கத்தக்க விடாமுயற்சியும் மீள்திறனும் அவர்களுக்கு உண்டு.

விவசாயிகளின் இந்தப் பொறுமையையும் விடாமுயற்சியையும் பழமைவாதத்தின் அடையாளங்களாக கம்யூனிஸ்டுகள் தவறாகப் புரிந்து கொள்வதில்லை. விவசாயிகளை சமூகப் பிற்போக்குத்தனத்தின் கோட்டையாக கம்யூனிஸ்டுகள் பார்ப்பதில்லை. மாறாக, உழவர் சமூகம், தாம் உயிர் வாழ்வதற்காக போராடுவது மட்டுமின்றி, சமூக மாற்றத்திற்கான நீண்ட நெடிய போராட்டத்தையும் முன்னெடுக்கும் ஒரு போராட்ட சக்தியாகவே கம்யூனிஸ்டுகளால் அங்கீகரிக்கப் படுகிறது. 

அதனால்தான், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கமாகத் தொடங்கிய கம்யூனிச இயக்கம், உழவர் சமூகத்தின் மாபெரும் புரட்சிக ஆற்றலை விரைவில் கண்டறிந்தது. சோசலிசத்தின் முக்கிய அடித்தளமாக தொழிலாளர் - உழவர் கூட்டணி அமையும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தது. 

அதேசமயம் கம்யூனிஸ்டுகள், விவசாயிகளை ஒருபடித்தான சமூகமாக கருதுவதில்லை. விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பல பொதுவான பண்புகளையும் பாதிப்புகளையும் பகிர்ந்து கொண்டாலும், விவசாய சமூகத்திற்குள் அல்லது விவசாயம் சார்ந்த மக்கள் மத்தியில், பணக்கார விவசாயிகள் தொடங்கி நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விளிம்புநிலை விவசாயிகள் வரை பல்வேறு வர்க்கங்கள் உள்ளன என்ற உண்மையை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மறந்ததில்லை.

இந்த மாநாட்டிற்காக ஜலந்தருக்கு யாருடைய பெயரை நீங்கள் சூட்டியுள்ளீர்களோ, அந்த சுவாமி சஹஜானந்த் சரஸ்வதியின் காலத்திலிருந்தே, கம்யூனிஸ்டுகள், நமது சமூகத்தில் வரலாற்று ரீதியாக மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், விளிம்புநிலை விவசாயிகள் மீதுதான் முதன்மையாக கவனம் செலுத்தியுள்ளார்கள். அதுதான், வங்கத்தின் மாபெரும் தெபாகா இயக்கம், கேரளாவின் புன்னப்புரா-வயலார், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா அல்லது பஞ்சாபின் முஸாரா லெஹர் ஆகியவற்றின் வாரிசாக நக்சல்பாரி உழவர் எழுச்சி தோன்றக் காரணமானது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரின் புரட்சிகர உழவர் இயக்கம் குறித்து, ”பீகாரின் பற்றியெறியும் வயல்வெளிகளிலிருந்து ஒரு அறிக்கை” என்ற, விபரங்களால் நிறுவப்பட்டதோர் பதிவை நாங்கள் வெளியிட்டோம். அந்தப் புத்தகத்தின் முன்னுரையில், இந்தியாவின் விவசாயப் போராட்டங்களில் வீசும் கிழக்கு, மேற்கு காற்றுகளுக்கு (சித்தாந்தங்களுக்கு) இடையிலான மோதலைப் பற்றி தோழர் வினோத் மிஸ்ரா குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் நடந்த மாபெரும் விவாதத்தின் போது, சோசலிசத்தின் முன்னேற்றத்தை கீழைக் காற்றாகவும், மேற்கத்திய முதலாளித்துவத்தை மேற்குக் காற்றாகவும் உருவகப்படுத்தி மாவோ பயன்படுத்திய ‘‘மேற்கத்திய காற்றுக்கு எதிரான கீழை காற்று’ என்ற உருவகத்தை தழுவி அவர் பயன்படுத்தினார். இந்தியச் சூழலில், பசுமைப் புரட்சி நெருக்கடியின் பின்னணியில், மகாராஷ்டிராவிலிருந்து சரத் ஜோஷியால் தொடங்கப்பட்டு வளர்ந்து வந்த பணக்கார விவசாயிகளின் இயக்கத்திற்கு ‘மேற்கு காற்று’ என்ற உருவகத்தை தோழர் வி.எம் பயன்படுத்தினார். அதே சமயம் ‘கீழை காற்று’ என்பது கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான பீகாரின் புரட்சிகர உழவர் இயக்கத்தைக் குறித்தது.

இந்த இரண்டு காற்றுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி எல்லைப் போராட்டத்தில் சந்தித்து, கார்ப்பரேட்டுக்கு ஆதரவான விவசாயச் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தன. ஒரு பரந்த கார்ப்பரேட் எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புச் சூழலில் அவை ஒருங்கிணைந்து செயல்படுவதை அந்த இரு காற்றுகளுக்கு இடையிலான அடிப்படை முரண்பாடு தடுக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியது. கிழக்கு-மேற்கு முரண்பாடு என்பது இந்தியாவின் கிழக்கு, மேற்குப் பகுதிகளுக்கு இடையிலான, புவியியல் ரீதியான முரண்பாடு அல்ல; அது இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிற்குள்ளும், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட் தலைமையிலான விவசாயிகள் இயக்கம் உறுதியாக நின்றுள்ளது. மேலும் பீகாரில் நிலச்சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலப்பிரபுத்துவ சக்திகள் இரத்தக் களரியை ஏற்படுத்துவோம் என்று அச்சுறுத்திய பின்னணியில், 1857 ஆம் ஆண்டின் மாபெரும் சுதந்திரப் போரின் 153வது ஆண்டு நினைவு நாளான மே 10, 2008 அன்று, ஏஐகேஎம் தனது பயணத்தைத் தொடங்கியது.

கார்ப்பரேட் மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக இந்தியாவின் விவசாய மக்களைப் பாதுகாக்கவும், பாசிசத்திலிருந்து விடுபடுவதற்காக இந்தியா முன்னெடுத்து வரும் போரை வலுப்படுத்தவும், சமத்துவ சமூக அமைப்பைக் கோரும் நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுக்கவும், மேலதிக வலிமையுடனும், புதுப்பிக்கப்பட்ட உறுதியுடனும் புரட்சிகர உழவர் இயக்கத்தின் பயணம் இன்று ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்ட நெடிய பயணத்தில், அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் 5வது மாநாடு மாபெரும் வெற்றி பெற சிபிஐ(எம்எல்) வாழ்த்துகிறது.



13 October, 2026