“நிலம், விவசாயம் மற்றும் சுதந்திரத்தை” காப்பாற்ற இந்திய நாட்டின் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் உடனடியாக ஒன்றுபட வேண்டும்" என அகில இந்திய விவசாயிகள் மகாசபை (AIKM) செப்டம்பர் 20,21 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தனது 5வது அகில இந்திய மாநாட்டில் அறைகூவல் விடுத்தது.
செப்.20 விவசாயிகள்– தொழிலாளர்கள் ஒற்றுமைப் பேரணி
AIKM-ன் 5வது அகில இந்திய மாநாடு ஒரு பேரணி, பொது மாநாட்டோடு துவங்கியது. செப்டம்பர் 20 ல், ஜலந்தரில் உள்ள தேஷ்பக்த் யாத்கார் வளாகத்தில், தியாகி பகத்சிங் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விவசாயிகள்– தொழிலாளர்கள் ஒற்றுமைப் பேரணியில் (கிசான் – மஸ்தூர் ஏக்தா பேரணி”யில்), பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக் கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டமான அந்த பொது மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. திரைகள் அமைக்கப்பட்ட பூங்கா, வளாகத்தின் மற்ற அரங்குகள் மட்டுமல்லாமல், சாலைகளிலும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடியே தங்கள் தலைவர்களின் உரைகளைக் கேட்க வேண்டியிருந்தது.
“வயல்களையும், விவசாயத்தையும், சுதந்திரத்தையும் காப்போம்; கார்ப்பரேட் கொள்ளையின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்!” என்பது மாநாட்டின் முக்கிய முழக்கமாக இருந்தது.
AIKM தேசியத் தலைவரும் முக்கிய விவசாயத் தலைவருமான ருல்து சிங் மான்சா, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி, தியாகிகள் நினைவிடத்தின் அருகே சங்கக் கொடி ஏற்றியதுடன், திறந்தவெளி பொது மாநாடு துவங்கியது.
சிபிஐஎம்எல் லிபரேஷன் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர்,RMPI பொதுச் செயலாளர் தோழர் மங்கத்ராம் பாஸ்லா, ஜமூரி கிசான் சபா தலைவர் தோழர் டாக்டர் சத்னாம் சிங் அஜ்னாலா, AIKM பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம் சிங், செயலாளர் புருஷோத்தம் சர்மா, ஜமூரி கிசான் சபா பொதுச் செயலாளர் தோழர் குல்வந்த் சிங் சந்து; RMPI பஞ்சாப் மாநிலச் செயலாளர் தோழர் பர்கத் சிங் ஜம்ராய், சிபிஐஎம்எல் லிபரேஷன் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் ராஜ்விந்தர் சிங் ராணா ஆகியோர் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் ஆவர்.
ஜம்ஹூரி கிசான் சபாவின் மாநிலத் தலைவர் டாக்டர் சத்னாம் சிங் அஜ்னாலா தொடங்கி வைத்தார். புருஷோத்தம் சர்மா மற்றும் பர்கத் சிங் ஜம்ராய் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மங்கத்ராம் பாஸ்லா எழுதி, பதௌர் சங்கீத மண்டலி பாடிய ஒரு கஸலும் நிகழ்ச்சியில் பாடப்பட்டது.
சிபிஐஎம்எல் லிபரேஷன் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் முக்கிய உரையை நிகழ்த்தினார். RMPI பொதுச் செயலாளர் தோழர் மங்கத் ராம் பாஸ்லா சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும் AIKM தேசியப் பொதுச் செயலாளருமான தோழர் ராஜா ராம் சிங்; JKS பொதுச் செயலாளர் குல்வந்த் சிங் சந்து; AICCTU பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி; அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் தோழர் சத்யதேவ் ராம்; மத்தியப் பிரதேச கிசான் சங்கர்ஷ் சமிதியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சுனிலம்; அகில இந்திய விவசாயிகள் சங்கம் - அஜய் பவன் ( AIKS - CPI) தேசியத் துணைத் தலைவர் பல்தேவ் சிங் நிஹால்கர்; பஞ்சாப் கீர்த்தி கிசான் யூனியனைச் சேர்ந்த தோழர் நிர்பய் சிங்; பஞ்சாப் மஸ்தூர் முக்தி மோர்ச்சா தலைவர் கோபிந்த் சிங் சஜ்லி; தேஹாத்தி மஸ்தூர் சபா தலைவர் தர்ஷன் நஹர்; AISA மாணவர் சங்க தலைவர் அமீன் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
மாநாட்டை முன்னிட்டு, அகில இந்திய கிசான் சபாவின் தலைவர் தோழர் அசோக் தவாலே, பொதுச் செயலாளர் தோழர் பிஜு கிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் சத்யவான் ஆகியோரும் தங்கள் அமைப்புகளின் சார்பில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.
தோழர் மங்கத் ராம் பாஸ்லாவின் உரையாற்றுகையில், "பஞ்சாபில் துவங்கியுள்ள விவசாய சங்கங்களின் ஒற்றுமை அலை நாடு முழுவதும் பரவி, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை ஒன்றுபடத் தூண்டும். என்றார். RSS–BJP-யின் சித்தாந்தம் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், சிறுபான்மையினர், ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது. இந்த அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு நாட்டின் புரட்சிகர, ஜனநாயக மற்றும் தேசபக்த சக்திகளின் பரந்த ஒற்றுமை இன்றைக்கு மிகஅவசியமாக உள்ளது என்றார். பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு “மாற்றம்” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தாலும், அரசு அலுவலகங்களில் தியாகி பகத்சிங் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் படங்களை வைத்ததைத் தவிர, மாநிலத்தில் அர்த்தமுள்ள எந்த மாற்றமும் காணப்படவில்லை... பொருளாதாரத் துறையிலும், காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது... பாஜகவின் பொய்யான கூற்றுகளை பஞ்சாப் மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும், வரவிருக்கும் தேர்தலில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காக எந்த சமரசமுமின்றிப் போராடும் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தோழர் ராஜா ராம் சிங், ”காசா, ஈரான் மீதான தாக்குதல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களையும் வளமான நிலங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கைப்பற்ற முயற்சித்து வருகிறது; வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.இந்திய அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக மோடி அரசு டிரம்ப் நிர்வாகத்தின் முன் பணிந்திருந்தாலும், இந்திய நாட்டின் விவசாயிகளும் தொழிலாளர்களும் இத்தகைய நடவடிக்கைகளை உறுதியாக எதிர்ப்பார்கள். ஜலந்தரில் உருவாக்கப்பட்டுள்ள விவசாய சங்கங்களின் ஒற்றுமை, நாடு முழுவதும் விவசாயிகள் இயக்கத்தை வலுப்படுத்தும்" என்று கூறினார்.
பிரதிநிதிகள் அமர்வு
மாலை 6 மணிக்கு பாபா ஜ்வாலா சிங் அரங்கில் பிரதிநிதிகள் அமர்வு தொடங்கியது. பிரதிநிதிகள் அமர்வை நடத்துவதற்காக ஏழு பேர் கொண்ட தலைமைக்குழு, ஐந்து பேர் கொண்ட வழிகாட்டுக் குழு மற்றும் ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டன. 21 மாநிலங்களில் இருந்து மொத்தம் 876 பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர். இவர்களில் 50 பேர் பெண்கள்.
வரவேற்புக் குழுத் தலைவரான ஓய்வுபெற்ற IAS அதிகாரி கன்சிங் பன்னுவின் வரவேற்புரையுடன் அமர்வு தொடங்கியது. மோடி அரசின் வளர்ச்சி மாதிரியை அவர் கடுமையாக விமர்சித்தார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், உலகை ஆதிக்கம் செலுத்துவதற்காக அனைத்து வழிகளையும் பயன்படுத்தி வரும் நிலையில், அனைத்து போராடும் அமைப்புகளும் மக்கள் சார்பு சக்திகளும் ஒன்றுபட்டு, இந்தச் சுரண்டல்காரர்களை எதிர்கொள்ள தங்களது கூட்டு சக்தியை கணிசமாக வலுப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
அதன்பின், AIKM பொதுச் செயலாளர் தோழர் ராஜா ராம் சிங் அரசியல்–அமைப்பு அறிக்கையை விவாதத்திற்காக முன்வைத்தார்.
அரசியல்–அமைப்பு அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாள் வரை மூன்று அமர்வுகளில் தொடர்ந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 61 பிரதிநிதிகள் விவாதங்களில் பங்கேற்றனர். பல்வேறு ஆலோசனைகளுடன் அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது.
மாநாடு 153 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. ( தமிழ்நாட்டில் இருந்து தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தோழர்கள் சந்திரமோகன், அய்யந்துரை, அருணாச்சலம், ராஜாங்கம் மற்றும் தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திருநாவுக்கரசு தேர்வு செய்யப்பட்டனர்)
அதனைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியக் குழு, 57 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்தது. (தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் சந்திரமோகன் மற்றும் அருணாச்சலம் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.)
தேசிய நிர்வாகக் குழு ஒருமனதாக, தோழர் டாக்டர் சத்னம் சிங் அஜ்னாலா அவர்களை அகில இந்தியத் தலைவர் ஆகவும், தோழர் புருஷோத்தம் சர்மா அவர்களை தேசியப் பொதுச் செயலாளர் ஆகவும் தேர்ந்தெடுத்தது. முன்னாள் தேசியத் தலைவர் தோழர் ருல்துசிங் மான்சா, கௌரவ உறுப்பினராக தேசிய நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம் சிங், புரவலராக (Patron) நியமிக்கப்பட்டுள்ளார்.
