ஜூலை 20 – பாசிச ஆட்சியாளர்களுக்கோர் கருப்பு நாள். இந்திய இளைஞர்களுக்கோர் சிவப்பு நாள். ஜென் Z எழுச்சி நாள். அது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும். பாசிச ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தை இளைய தலைமுறையினர் அடிபணியச் செய்த நாளாக வரலாற்றில் நினைவு கூரப்படும். நியாயத்துக்காக, அமைதியாக அணிவகுத்துப் போராடிய இளைஞர் – மாணவர் மீது ஏவப்பட்ட கொடுங்கோன்மையின் அடையாளமாக இருக்கும். கல்வி-வேலை குறித்த பிரச்சனைகளை அரசியல் பிரச்சனைகளாக மாற்றிய நாளாக இருக்கும்.
வினாத்தாள் கசிவுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனும் ஒற்றை கோரிக்கையில் எழுந்த இயக்கம். ‘இது யுபிஏ அல்ல, என்டிஏ. எங்களுக்கு பதவி விலகிப் பழக்கமில்லை’ என்ற பாசிச ஆட்சியாளர்களை புறமுதுகிட்டு ஓடோட செய்தது மாபெரும் ஜென் Z இயக்கம்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தர்மேந்திர பிரதான் பதவி விலகல் முடிவு அல்ல, ஒரு துவக்கம். போராட்டம் நின்றுவிடவில்லை. அது கல்விக்கான – வேலைக்கான ஒரு ஜென் Z இயக்கத்திற்கு, ஜென் Zன் மற்றுமொரு இயக்கத்திற்கு வித்திட்டிருக்கிறது. தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி எழுந்த இயக்கம் இன்று, இளைஞர் – மாணவர்களை ஜூலை 20ல் ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கிட உத்தரவிட்ட ‘அமித்ஷாவே பதவி விலகு, மக்கள் விரோத மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு’ எனும் முழக்கங்களாக வடிவெடுத்து வருகின்றன.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்…
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறைகூவல் விடுத்தது. அய்சா (AISA) அறைகூவல் விடுத்தது. இடதுசாரி மாணவர் இயக்கங்கள் போராட்டத்தில் உடனிருந்தனர். சமூக ஊடகங்களின் ஆழமான பரவல் அற்புதங்களை நிகழ்த்தியது. அதன் காரணமாக, ஜூலை 20 அன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் ‘நாடாளுமன்றத்திற்குச் செல்வோம், நியாயம் கேட்போம்’ என நாடாளுமன்றம் நோக்கி படை எடுத்தனர். பெல்லட் புல்லட்டுகளும், கண்ணீர்ப் புகை குண்டுகளும் ஏகே 47களும் ஆயுதம் ஏதுமற்ற, அமைதிப் போராட்டத்தை அதன் முன்னோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. மும்பையில் ஓர் இளம் பெண் ஒற்றை ஆளாக நின்று, போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி, சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வைத்தார். அந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாகியது. பீகாரில் அய்சா மாநிலத் தலைவர்கள், திபங்கர் மிஸ்ரா, சபா அஃப்ரீன் உள்ளிட்ட அனைவருமே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐஎம்எல் கட்சியின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் சந்தீப் சௌரவ், ஜேஎன்யு பல்கலைக் கழகத்தின் முன்னாள் தலைவர், அய்சா தலைவர் தனஞ்சய் ஆகியோரும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. முழுமுற்றாக இணக்கத்துடன் செயல்பட்ட மாணவர்களை மதவெறி அடிப்படையில் துண்டாட முயற்சிக்கிறது பிஜேபி. மேற்கு வங்கத்தில் கைதுசெய்யப்பட்ட 16 பேரில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் ஒரு அய்சா மாணவரை குறிவைத்து தாக்கி இருக்கிறார்கள் முகமூடி அணிந்த பிஜேபி - ஆர் எஸ் எஸ் காரர்கள்.
லட்சக்கணக்கான ஜென் Z இளைஞர்கள் டெல்லி வீதிகளில் அணிவகுத்ததற்கு அந்த அறைகூவல்கள் மட்டுமே காரணம் அல்ல. மோடி ஆட்சியால், பாசிச சர்வாதிகாரத்தால், வேலை – கல்விப் பிரச்சனைகளால் ஜென் Z இளைஞர்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் கோபக் கனலின் அடையாளம் அது. அதுதான் முதன்மைக் காரணம். அந்த கோபக் கனலை, அறச் சீற்றத்தை, நியாயத்திற்கான எழுச்சியை ஊதி, பெருங் காட்டுத் தீயாக்குவதில் அந்த அறைகூவல்கள் கண்டிப்பாக ஒரு திட்டவட்டமான பங்காற்றி இருக்கின்றன. அமைப்பு இல்லை. தலைவர் இல்லை. ஆனால், லட்சக்கணக்கானோர் வீதிகளில் அணிவகுத்தனர். அதுதான் இந்த ஜென் Z இயக்கத்தின், ஜூலை 20ன் சிறப்பு.
கல்வி-வேலை கோரி தொடரும் போராட்டம்
அந்த இயக்கம் நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் மனிதாபிமானமற்ற, கொடுங்கோன்மைத் தன்மையை, பாசிச மோடியும் ஆட்சியாளர்களும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. கல்வி தனியார்மயமாக்கம், கல்வி மாஃபியாமயமாக்கம் எப்படி ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. பாசிச சர்வாதிகார ஆட்சியாளர்களின் நவதாராளவாத கொள்கைகள், உலகமயமாக்க கொள்கைகள், கல்வியை ஈவிரக்கமற்ற வியாபாரமாக, லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி இருப்பதை விமர்சிக்கிறது. சிதிலமடைந்து கொண்டிருக்கும் கல்வி முறையின் முடைநாற்றம்தான் வினாத்தாள் கசிவுகளும் இதர முறைகேடுகளும் எனச் சொல்கிறது. தேசிய தேர்வு முகமை என்பது ஒரு பித்தலாட்டம் என்கிறது. புதிய கல்விக் கொள்கை எப்படி ஜென் Z இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட புதியதோர் போர் என்பதை விளக்குகிறது.
ஆகவேதான், ஜூலை 20 ஜென் Z எழுச்சி, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான, தேசிய தேர்வு முகமைக்கு எதிரான, கல்விச் சீர்திருத்தங்களுக்கான தொடர் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. அந்த போராட்டத்தை இன்னும் பல கல்வி வளாக மாணவர்களும் தற்போது தொடர்கிறார்கள்.
போராடும் ஆல்ஃபா தலைமுறை
ஜென் Z தலைமுறை (14 – 29 வயதுள்ளவர்கள்) மட்டுமல்ல, அவர்களது இளைய தலைமுறையான ஆல்ஃபா தலைமுறையும் (2 - 13 வயதுள்ளவர்கள்) பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளுக்காக, மேலான கல்விக்காக, புதிய வகுப்பறைகளுக்காக, அதிக ஆசிரியர் நியமனத்துக்காக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் கூட டெல்லி போராட்டத்தில் இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பீகாரில், உத்தர பிரதேசத்தில் அவர்களும் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பீகாரில் அய்சா தலைமை தாங்கி நடத்திய சாலையோரப் பள்ளிகள் போராட்டம், உபியில் நடந்துவரும் போராட்டம் ஆகியன ஆல்ஃபா தலைமுறையினரின் போராட்டம் எழுந்து வருவதற்கோர் உதாரணம் ஆகும்.
ஜென் Z தொழிலாளர்கள்
ஜூலை 20 எழுச்சியில் பெருமளவு கவனிக்கப்படாத மற்றுமொரு பிரிவு இளைய தொழிலாளர்கள். இளைய தொழிலாளர்கள் ஜென் Z போராட்டத்துக்கு பெரும் ஆதரவாக இருந்துள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம் ஆகும். இதே இளைய தொழிலாளர்கள்தான், நோய்டாவில், மானேசரில், பானிப்பட்டில், சூரத்தில் ஏப்ரல், மே மாதங்களில் எழுந்த தன்னெழுச்சியான தொழிலாளர் பேரெழுச்சிக்கு காரணமாக இருந்தனர். ஊதிய உயர்வுக்காக மிகப்பெரும் போராட்டம் நடத்தி யோகியின் உத்தர பிரதேச அரசையும் ஹரியானா மாநில அரசையும் அடிபணியச் செய்தனர். ஓரளவு ஊதிய உயர்வும் பெற்றனர்.
மக்கள் போராட்டங்கள்
சர்வாதிகார ஆட்சியாளர்களின் கொள்கைகள் இந்திய சமுதாயத்தின் இளைய தலைமுறையினரை போராட்டப் பாதைக்குச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கிறது. போராடாமல் அவர்கள் வாழ இயலாது என்கிற நிலைமைக்குத் தள்ளி இருக்கிறது. கல்விப் பிரச்சனைகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகிறார்கள். வேலை வேண்டும் என இளைஞர்கள் போராடி வருகிறார்கள். ஊதிய உயர்வு வேண்டும் என இளைய தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். பணி நிரந்தரத்திற்காக அமைப்பாக்கப்படாத இளைய தொழிலாளர்கள் போராடுகிறார்கள். விவசாயத்தை லாபகரமாக்க வேண்டும் என இளைய விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
ஆகவேதான், தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரிய இயக்கம், இன்று மோடியை பதவி விலகக் கோரும் இயக்கமாக, மோடியை ஆட்சியை விட்டு வெளியேற்றும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.
வெள்ளையனே வெளியேறு நாள்!
மோடியே வெளியேறு என முழங்கும் நாள்!
ஜூலையை அடுத்து ஆகஸ்ட் வருகிறது. ஆகஸ்ட் இயக்கமாக அது உருவெடுக்கிறது. ஆகஸ்டில் நாடு முழுவதும் ஜென் Z இளைஞர்களின் எழுச்சியை வடிவமைத்திட வேண்டும். அதற்காகப் பணியாற்றிட வேண்டும்.
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்க நாள்! மக்கள் விரோத மோடியே, ஆட்சியை விட்டு வெளியேறு என முழங்கும் நாள்! தொழிலாளர்களை அடிமைகளாக்கும் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்தது மோடி ஆட்சி. 100 நாள் வேலை எனும் உரிமையை ஒழித்து, விபி-கிராம்-ஜி கொண்டு வந்து வேலைகளை ஒழித்தது. அதனால்தான், ”வேலை கொடு” எனும் இயக்கம் இன்று நாடு முழுவதும் கிராமப் புறங்களில் எழுந்து வருகிறது. விவசாயத் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக வழங்கிடு, அதனை தொகுதி மறுவரையோடு இணைக்கக் கூடாது என பெண்கள் போராடி வருகிறார்கள். நகர்ப்புறங்களில் வேலை கேட்டு, வேலை கிடைக்கும் வரை நிவாரணம் கேட்டு ஜென் Z இளைஞர்கள் போராடி வருகிறார்கள். தமிழ் நாட்டு முதல்வர் விஜய் உட்பட பல மாநில முதல்வர்களும் அளித்த வேலை வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. வேலை, நிவாரண வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜென் Z போராடி வருகிறது.
வீடு, வீட்டு மனை, நிலம், பட்டா, கடனிலிருந்து விடுதலை, குறைந்தபட்ச ஊதியம் ஆகியன தமிழ் நாட்டு மக்கள் கோரிக்கைகளாக எழுந்து வருகின்றன. அதற்கான போராட்டங்களைக் கட்டமைக்கும் மாதமாக ஆகஸ்ட் அமைந்திடும்.
ஆகஸ்ட் 15:சூளுரைக்க வேண்டிய நாள்!
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய நாளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர நாள் வருகிறது. அன்றைய நாள், பாசிச ஆட்சியாளர்களின் இந்து ராஷ்டிர கனவை தவிடுபொடியாக்கிட சூளுரை ஏற்கும் நாளாக அமைந்திட வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தை அகற்றி அதனிடத்தில் மனு (அ)நீதியை சட்டமாக்கத் துடிக்கும் சரவாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்ப்பறை முழங்கிட வேண்டிய நாள். நாட்டை காவிமயமாக்கிட முயற்சிக்கும் ஆர் எஸ் எஸ் - பிஜேபியின் அட்டூழியங்களை எதிர்த்திட வேண்டிய நாள். சர்வாதிகாரிகளிடமிருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய நாள். இந்திய சுதந்திரத்தை அமெரிக்க – இஸ்ரேல் காலடிகளில் அடகு வைக்கும் மோடியை அம்பலப்படுத்த வேண்டிய நாள்.
ஆகஸ்ட் இயக்கம் –
இந்திய தாய்த் திருநாட்டின் ஜென் Z இளைஞர்கள் முதல் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் எதிரான மோடியே பதவி விலகு என முழங்கும் இயக்கமாக இருக்கும்.
தவெக விஜய் அவர்களே, வாக்குறுதிகளை நிறைவேற்றுக !
அது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இன்னும் நிறைவேற்றிடவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ 2500, 6 சிலிண்டர்கள், மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசப் பயணம், இளைஞர்களுக்கு வேலை, வேலை கிடைக்கும் வரை ரூ 4000 நிவாரணம், அனைவருக்கும் கிடைக்கத்தக்க கல்வி, நீட் ரத்து, 5 ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பட்ஜெட்டில் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றிடவும், இந்த ஆகஸ்ட் இயக்கத்தில், நாம் போராடுவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. இந்தித் திணிப்பை எதிர்ப்பதாக சொல்லும் தவெக, சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருப்பதை மாற்றிட இன்னும் ஏதும் செய்திடவில்லை. தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகள் இன்னும் நின்றபாடில்லை. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, விபி-கிராம்-ஜிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். கல்வி மாஃபியாக்களிடமிருந்து கல்வியை விடுதலை செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் கூட எழுப்புவதாக இந்த ஆகஸ்ட் இயக்கம் அமைந்திட வேண்டும். வேலை – கல்விக்கான இயக்கமாக, சுதந்திரம் – ஜனநாயகம் காக்கும் இயக்கமாக அது அமைந்திட வேண்டும்.
மக்களுக்கு எதிரான பாசிச சர்வாதிகார மோடியே, பதவி விலகு!
முதல்வர் விஜய் அவர்களே, வாக்குறுதிகளை நிறைவேற்றுக!
