தில்லியில் உள்ள சிபிஐ(எம்எல்) கட்சியின் மத்திய அலுவலகமான சாரு பவனில், சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ(எம்எல்) ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளின் தலை வர்கள் ஜூலை 28 அன்று சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
தோழர் சாரு மஜும்தாரின் 54-ஆவது நினைவு நாளையொட்டி, தலைவர்கள் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி செவ்வணக்கம் செலுத்தினர். இக்கூட்டத்தில் சிபிஐ தலைவர்கள் து. ராஜா, ராமகிருஷ்ண பாண்டா, டாக்டர் கிரீஷ் ஆகியோரும், சிபிஐ(எம்) தலைவர்கள் எம்.ஏ. பேபி, அருண் குமார் ஆகியோரும், சிபிஐ(எம்எல்) சார்பில் திபங்கர், ரவி ராய், சஞ்சய் சர்மா, சுச்சேதா டே, ஸ்வேதா ராஜ், பிரபாத் சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் மூலம் மாணவர் இயக்கம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியை மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டாக வரவேற்றன. காவல்துறையின் அடக்கு முறைகளைத் தாண்டி, துணிச்சலுடனும் படைப்பாற்றலுடனும் போராடி ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்ய வைத்த இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் சிஜேபி ஆர்வலர்களுக்குத் தலைவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
ஜந்தர் மந்தர் ஒப்பந்தத்தை அனைத்து மாநில பாஜக அரசுகளும் மதிக்க வேண்டும் என்றும், மாணவர்-இளைஞர் இயக்க ஆர்வலர்கள் மீதான அனைத்து வகையான பழி வாங்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கல்வி மற்றும் தேர்வு முறையில் முறையான சீர்திருத்தங்களை நிலைநாட்டுவதற்கும், பாதுகாப்பான மற்றும் கவுரவமான வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறுவதற்கும் ஜந்தர் மந்தர் போராட்டத்தின் எழுச்சி தொடர வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தொழிற்சங்கம், விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை மேலும் வளர்த்தெடுக்க மூன்று கட்சிகளும் ஒப்புக்கொண்டன.
ஏகாதிபத்திய தாக்குதல்கள் மற்றும் கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்குவதுடன், மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சங்-பரிவார் மற்றும் பாஜக தலைமையிலான இரட்டை என்ஜின் அரசுகளின் பாசிசத் தாக்குதல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியமும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
