33% பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்துக!

$articleData->title

33% பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்துக!

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள 33% பெண்கள் அரசியல் இட ஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் தள்ளிப்போடும் உள்நோக்கத்துடன் மோடி அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை இவற்றோடு இணைக்கும் சதித்திட்டத்தை அரங்கேற்ற முயற்சிக்கிறது. இந்த கெடு நோக்கத்தை முறியடிக்கும் விதமாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்த தேசிய பெண்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய பரப்புரை இயக்கத்தை நடத்தியுள்ளது. தில்லியில் ஊடகவியலாளர் கூட்டம் வாயிலாக பரப்புரையை தொடங்கிய கூட்டமைப்பு, அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டுவது, இணை சட்டப்பேரவை வை நடத்தி தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல வடிவங்களில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது.

தமிழ்நாட்டில், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதுடன் ஜூலை 22, அன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தியது. பல நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு காவல்துறை தடுப்பு வளையங்களை துணிச்சலுடன் உடைத்து முன்னேறினர். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்திலிருந்து தோழர்கள் கிருஷ்ணவேணி, சரோஜா, பிலோமினா, மனோன்மணி, வள்ளிமயில் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத்தலைவர் உ.வாசுகி, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு கைதாகினர்.

இதை அடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு 29-07-2026 அன்று மனு அளித்தனர். கோரிக்கை மனு கீழே:

மாண்புமிகு

திரு C.ஜோசப் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

வணக்கம்.

  இந்திய மக்கள்தொகையில் பெண்கள் சரிபாதியாக உள்ளனர். ஆனால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது. பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்தவும், ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தவும் பெண்களுக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பெண்கள் இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் முற்போக்கு அரசியல் சக்திகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாக பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை முன்னிறுத்தி அதன் அமலாக்கம் காலவரையறையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது பெண்களின் அரசியல் உரிமையை மறுக்கும் செயலாகும். இந்த நிபந்தனைகள் காரணமாக பெண்களின் உரிமை மேலும் பல ஆண்டுகள் தாமதப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

  இந்திய அரசியலமைப்பு பெண்களுக்கு சமத்துவ உரிமையை வழங்கியுள்ளது. அந்த உரிமையை நடைமுறைப்படுத்துவது அரசுகளின் கடமையாகும். எனவே, எந்தவித நிபந்தனைகளும் இன்றி, தற்போதே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழ்நாடு சட்டமன்றம் சமூகநீதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதேபோன்று, பெண்களின் அரசியல் உரிமையை நிலைநாட்டும் வகையில், ஒன்றிய பாஜக அரசு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில்  சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பின் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

  மேலும், நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு  ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிப்பதே உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகும். எனவே, பெண்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உறுதியான ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

அனைத்து பெண்கள் கூட்டமைப்பில்  இடம்பெற்றுள்ள அமைப்புகள்:


அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்,

இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,


17 August, 2026