எனக்கு நீண்ட காலமாக கோபம் இருக்கிறது. ஆனால், அந்த மாணவர்கள் போலவே கோபத்தோடு நானும் சிரித்தேன் - அருந்ததிராய்

(டில்லி ஜந்தர் மந்தரில் Scroll.in இணைய இதழின் சுப்ரியா சர்மாவின் அருந்ததி ராயுடனான நேர்காணலில் இருந்து… தமிழாக்கம் – புவனா )

$articleData->title

அருந்ததி ராய்

நீங்கள் கடைசியாக இங்கு எப்போது வந்தீர்கள்?

நான் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இங்கு இருந்தேன். அதாவது, அந்த மனிதர் பதவி விலகியதற்கு முந்தைய நாள்.

அப்போது நிலைமை எப்படி இருந்தது?

அங்கே மிக நீண்ட வரிசை இருந்தது; என்னால் கூட்டத்தின் மய்யத்துக்குச் செல்ல முடியவில்லை. நான் வெளியில் சுற்றிக்கொண்டிருந்தேன். முகக்கவசம் அணிந்திருந்தேன். அந்த இடம் குப்பையாக இருந்தது, மகிழ்ச்சி தந்தது. நகைச்சுவை, அரசியலின் சாரம் என்று நான் கருதுகிறேன்.

24 ஆண்டுகளாக பிரதமர் நெருடலான ஒருவராக இருந்திருக்கிறார்; எனவே, இந்த செய்தி ஆசுவாசப்படுத்துவதாக இருந்தது. இப்படியொன்று நடப்பதை பார்ப்பதற்கு முன்பு இறந்துவிடுவேன் என்று நினைத்திருந்தேன். அற்புதம். ஆனால் இப்போது அது சற்று அச்சம் தருகிறது. இப்படி எதுவும் நடக்கவில்லை என்பது போன்ற அமைதி நிலவுகிறது.இதை உண்மை என்றே நம்ப முடியவில்லை. எல்லாம் ஒரு வார காலத்துக்குள் நடந்துவிட்டது. அதற்கு முன்பே அது உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால் கடைசி வாரத்தில்தான் அது உச்சத்தை எட்டியது.

தொடக்க நாட்களில் நீங்கள் இங்கு வந்திருந்தீர்களா?

தொடக்க நாட்களில் நான் வந்தேன். அதன் பிறகு சில நாட்கள் வரவில்லை. தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு கோரிக்கையைக் கொண்டதாகத் தெரிகிற இந்த இயக்கம், தீவிரமானவை என்று கருதப்படும் எனது எழுத்துகளுடன் இணைத்துப் பார்க்கப்படக் கூடாது என்று நான் கருதினேன். அதனால்தான் இந்த இயக்கம் இவ்வளவு பரந்த ஆதரவைப் பெற்றிருந்தது. இந்த இயக்கம் என்னுடன் இணைத்துப் பார்க்கப்படாமல் இருப்பதில் நான் கவனமாக இருந்தேன்.

கரப்பான் ஜனதா கட்சி தொடர்பாக நடப்பவை பற்றி, தொடக்கத்தில் எச்சரிக்கையாக இருந்ததாக கடந்த வாரம் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில், சொல்லியிருந்தீர்கள். அதில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆம். அன்னா அசாரே இயக்கமும், அதில் வலதுசாரிகள் ஊடுருவியிருந்ததும் எனக்கு எச்சரிக்கை உணர்வைத் தந்தன. இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்கள் அந்தச் சூழலில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது, என்ன முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன, என்ன குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்க்க வேண்டும் என்று கருதினேன். என் பெயர் காலித் என்று இருந்திருந்தால், அவர்கள் என்னை போராட்டம் நடத்த அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று அபிஜித் திப்கே சொன்னபோது எனக்கு நம்பிக்கை வந்தது. மிக ஆழமான ஒரு விசயத்தை அவர் மிகவும் எளிமையாகச் சொன்னார்.

நாம் அனைவரும் சந்தித்துக்கொண்டிருக்கும் கொடூரமான தேசியவாத, இந்து தேசியவாத வெற்றுப் பேச்சை அது நேரடியாக எதிர்கொண்டது. அது எனக்கு நம்பிக்கையளித்தது. அப்போதுதான் நான் இங்கு வர முடிவு செய்தேன்.

எல்லாமே ஒரு நகைத்துணுக்கிலிருந்து தொடங்கியது. அதுதான் இன்னும் நம்ப முடியாததாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, சன்கிளாஸ் அணிந்த கரப்பான் பூச்சியின் படத்துடன், சமூக ஊடக நையாண்டியாகத்தானே இது தொடங்கியது?

இந்த மிகப்பெரிய விவாதத்தில், சில விதங்களில், பிரதான ஊடகங்களால்  ஓரஞ்சாரத்திற்கு தள்ளப்பட்டவர்களாக, சாத்தான்மயமாக்கப்பட்டவர்களாக இருந்த நம் அனைவருக்கும் இது புதிது. இது கட்டமைக்கப்பட்ட விதங்கள் புதிது. இதிலிருந்தும், இவர்களிடமிருந்தும் மக்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

அவர்கள் நமக்கு ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறார்கள். அது என்னவாக மாறப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதன் இலக்கை விட கூடுதலாகவே அது சாதித்துவிட்டது. ஏனென்றால், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது ஒரு வகையில் ஒரு சம்பிரதாய கோரிக்கை. அதை வென்றுவிட்டார்கள். ஆனால், நமக்குத் தெரியும்; புதிய கல்வி அமைச்சர் வந்திருக்கிறார்; ஏய், நீதான் புதிய கல்வி அமைச்சர் என்று அவருக்குப் பணிக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். மலக்குன்றின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அடையாளம் தட்டிவிடப்பட்டு, அதற்குப் பதிலாக இன்னொரு அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மலக்குன்று அப்படியே இருக்கிறது. கல்வியை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், தனியார்மயம், வினாத்தாள் கசிவு, நீட்.... எல்லாம் தொடர்கிறது.

தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்கள் அங்கிருந்து படிப்படியாக  வெளியேற்றப்படுகிறார்கள். ஒட்டுமொத்த பாடத்திட்டமும் ஒருவித முடக்குவாதமாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் முட்டாள்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதில் தோற்றுப் போகிறார்கள். ஏனென்றால், வீதியில் திரண்ட இந்த இளம் தலைமுறை, அளவுகடந்த நகைச்சுவை உணர்வும் நம்ப முடியாத திறனும் கொண்டது என்பதை காட்டியிருக்கிறது. ஆனால் அமைச்சகத்தில், கல்வி முறையில், இன்னும் தீர்க்கப்படாமல் பல பிரச்சனைகள் உள்ளன. பதவி விலகிய அமைச்சரை பாஜகவின் சமூக ஊடகக் கணக்குகள் பாராட்டுகின்றன. அவர் அவமானப்படுத்தப்பட்டு பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டவர்; ஆனால், மாணவர் நலனுக்காகத் தியாகம் செய்த தியாகி போல அவரை காட்டுகிறார்கள். இரண்டு பக்கங்களிலும், ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.

இந்தத் தலைமுறை அளவுகடந்த நகைச்சுவை உணர்வு கொண்டது என்று நீங்கள் சொன்னீர்கள். ஊடகங்கள், திரைப்படங்கள், பாடப்புத்தகங்கள் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் தகவல்கள் புகுத்தப்பட்டுள்ளன. இதையெல்லாம் அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு அவற்றின் ஊடாகப் பார்க்கிறார்கள்?

தொடக்கத்தில் இந்த இயக்கம் அவ்வளவு தேர்ந்து தெளிந்ததாக இல்லை. மிகவும் சாதாரணமானதாக இருந்தது; அந்தக் குழந்தைகள் எதுவும் செய்துவிட முடியாது என்று பலரும் கருதினார்கள். ஆனால், அவர்கள் செய்து முடித்தார்கள். பரப்புரை சீக்கிரமே காலாவதியாகிவிடும். டில்லியில் வீடுகளும் குடிசைகளும் புல்டோசர்களால் இடிக்கப்பட்ட போதும், நாங்கள் மீண்டும் மோடிக்கு வாக்களிப்போம் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி வருகிறது; ஏனென்றால், மறுபுறம் யதார்த்தம் இருக்கிறது. மோடியின் பக்தர்களாக இருக்கும் பெற்றோர்கள்கூட தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படுவதைப் பார்க்கிறார்கள். நீட் அல்லது மற்ற தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகப் போராடுகிறீர்கள். ஆனால் மருத்துவமோ, பொறியியலோ, வேறு எந்தப் படிப்பாக இருந்தாலும், ஐந்து ஆண்டுகள் படித்து முடித்த பிறகும் வேலைவாய்ப்புகள் இல்லை.

அப்படியானால், உங்கள் எதிர்கால வாய்ப்புகள்தான் என்ன?

எதிர்கால வாய்ப்புகள்தான் என்ன? பழங்குடியினர் தங்கள் நிலங்களில் இருந்து அகற்றப்படுவது பற்றி நாம் எழுதுகிறோம். இப்போது நர்மதையின் நீர்மட்டம் உயர்கிறது; அந்த வெள்ளம் நடுத்தர வர்க்கத்தையும் எட்டியுள்ளது. தனியார்மயம் மய்யப்படுத்தப்படுவதால் வணிகர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதானி அம்பானி தவிர மற்றவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஆக, வெவ்வேறு மட்டங்களில், எல்லோரும் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகள் இயக்கத்தின் போது ஒருவர் சொன்னார்: நாட்டை நான்கு பேர் நடத்துகிறார்கள்; அவர்களில் இரண்டு பேர் வாங்குகிறார்கள்; மற்ற இரண்டு பேர் விற்கிறார்கள்; அந்த நான்கு பேரும் குஜராத்திகள் - நரேந்திர மோடி, அமித்ஷா, கவுதம் அதானி, முகேஷ் அம்பானி. இது உருவகம் அல்ல. இது உண்மை.

அழுகல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. புள்ளிவிவரங்கள்கூட பொய்களாக இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய பொய்களையே, தங்கள் பொய்ப் பிரச்சாரத்தையே நம்பத் தொடங்குகிறார்கள். எனது மனதில் இருக்கும் கேள்வி என்னவென்றால்: தன்னைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பது மோடிக்குத் தெரியுமா? அல்லது அவை பற்றி அவருக்குத் தெரிவதே இல்லையா? இதில் எது மோசமானது? நீங்கள் பிரதமராக இருக்கிறீர்கள்; நீங்கள் எப்படி கேலிக்குள்ளாகிறீர்கள் என்பது பற்றி உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், உங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரியுமா?

எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், 24 ஆண்டுகளாக, உண்மையில் 2002ல் இருந்து, தனது பிம்பத்தை மிகவும் கவனமாக உருவாக்கிய ஒருவர், பத்திரிகையாளர் சந்திப்பையே எதிர்கொள்ளாத ஒருவர், ஒரு டெலிப்ராம்ப்டர் உதவியுடனோ அல்லது ஒரு துண்டுச் சீட்டின் உதவியுடனோ பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், இன்னமும் விஷ்வ குரு, விஷ்ணுவின் அவதாரம் என்று எல்லாம் அழைக்கப்படுகிற ஒருவர், திடீரென்று இரண்டே வாரங்களில் இந்தக் குழந்தைகளால் உரித்துப்போடப்பட்டுவிட்டார்.நான் யோசித்துப் பார்க்கிறேன். இன்ஸ்டாகிராம் இப்போதுதான் வந்தது. ஆனால், வரலாற்றில் இதுவரை எந்த ஒரு மனிதரும், இந்த அளவுக்கு ஏளனம் செய்யப்பட்டதில்லை.

அப்படியானால், அவர் எப்படி வெளியே வந்து மக்களை எதிர்கொண்டு மீண்டும் அதே முட்டாள்தனமான விசயங்களையெல்லாம் சொல்லப்போகிறார்? அவரது பழைய உரைகளை மீண்டும் வெளியே எடுத்து அவர்கள் ஏளனம் செய்தார்கள்; உருண்டு புரண்டு சிரித்தார்கள்.  இது முந்தைய தலைமுறையையும் கொஞ்சம் முட்டாள்தனமானதாகக் காட்டுகிறது. ஏனென்றால், நீங்கள் உண்மையிலேயே இந்தக் குப்பையையெல்லாம் விழுங்கினீர்கள் அல்லவா? 

என்னைப் பொறுத்தவரை, இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதைவிடப் பெரிய விசயம். தெளிவாக சராசரி அறிவாற்றல்கூட இல்லாத, நமது பிரதமராக இருக்கும் ஒருவரைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த அறிவற்ற சுவரை அகற்றிவிட்டார்கள்.

31 August, 2026