பாஜகவின் இரட்டை வேடம்:
மன்னராட்சி காலத்தில் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், 1963 இனாம் ஒழிப்புச் சட்டப்படி விவசாயிகளுக்கே உரிமையாக்கப்பட்டிருந்தன. ஆனால், கரூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள, 4 கோயில்களின் 3084.95 ஏக்கர் நிலம் இனாம் சட்டத்துக்குப் புறம்பாக, கோவிலுக்குச் சொந்தமென்று சொல்லி பத்திரப் பதிவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலங்களை, உழவடை செய்துவரும் விவசாயிகளின், குடியிருப்போரின் நில உரிமையை அங்கீகரித்து ஜூலை 9 ம் நாள் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் தலைவர்கள் "ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா?" என த.வெ.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்; மறுபுறம் இதே முகாமைச் சேர்ந்த, பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.கே.கார்வேந்தனும், பாஜகவின் முன்னாள் தலைவரும், இந்நாள் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலையும் அரசின் நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட இனாம் நிலங்களின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், நிலத்திலிருந்து எங்களை வெளியேற்றக் கூடாது என்று வலியுறுத்தியே கரூர் வெண்ணைமலைப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இந்தப் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகின்றனர்; சிலர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருவதாகச் சொல்கின்றனர். அதற்கான அரசு ஆவணங்களையும் காட்டுகிறார்கள்.
இந்த நிலங்கள் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என திருத்தொண்டர் (இந்துத்வா தொண்டர்) சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வாதாடி வருகிறார். 2015ல், அதிமுக ஆட்சியின் போது இந்தப் பிரச்சனையைத் துவக்கினார். 2018இல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து, 2019இல் குடியிருப்போருக்கு விவசாயிகளுக்குப் பாதகமாக தீர்ப்பையும் பெற்றார். பாஜகவுடன் கூடிக்குலாவுவதில் மும்முரமாக இருந்த அன்றைய அதிமுக அரசு இந்தப் பிரச்சனையில் அலட்சியமாக நடந்துகொண்டது. அன்றிலிருந்து குடியிருப்போரை அகற்றுவதற்கான முயற்சிகளும், அதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதேபோல, தாந்தோணிமலைப் பகுதியிலும் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற புதிய சர்ச்சையையும் ராதாகிருஷ்ணன் உருவாக்கி இருக்கிறார்; அந்தப் பகுதியிலும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் போராட்டங்களில் இடதுசாரிகளும், விசிகவும்.
ஏற்கனவே 2025, செப்டம்பரில் திமுக அரசு, இனாம் நிலங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு ராதாகிருஷ்ணன் நீதிமன்றத் தடையாணை பெற்றார். பின்னர் அந்த அரசாணையையே திமுக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. கரூர் வெண்ணைமலைப் பகுதியில் மக்கள் போராட்டங்கள் நவம்பரில் தீவிரம் பெற்றன. 20.11.2025 அன்று மக்கள் குடியிருப்புக்கு சீல் வைத்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் மூர்க்கத்தனமாக முயற்சித்தன. இதை எதிர்த்து சிபிஐ, சிபிஐஎம், சிபிஐஎம்எல், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், பகுதிவாழ் மக்களும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் இரா.பொன்னுத்துரை, மாவட்ட நிலைக்குழு உறுப்பினர்கள் மு.இராமச்சந்திரன் எஸ்.லட்சுமி உள்ளிட்ட இடதுசாரி, விசிக தோழர்களும் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும் அப்போது கலந்துகொண்டனர். இப்போது பாஜக எதிர்க்கிறது. அதன் இரட்டை வேடம் கலைந்து விட்டது.
இனாம் நிலங்கள் பிரச்சனையில் திமுக, தவெக அரசுகள்
திமுக ஆட்சியின் அரசாணைக்கு தடை கேட்ட ராதாகிருஷ்ணன் தவெக அரசின் உத்தரவுக்கும் தடை கேட்டிருக்கிறார். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாஜக களத்திற்கு வந்திருக்கிறது. இனாம் நிலங்கள் பிரச்சனையில், தவெக அரசின் நடவடிக்கைகளை, திமுக அரசின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சட்டத்திருத்தங்களுக்காக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக திமுக, இந்துத்வா அமைப்புகளின் கருத்துகளை முரசொலி பத்திரிகையில், அதுவும் முதல் பக்கத்தில் வெளியிடுவது தேர்தலுக்குப் பிந்தைய ‘திராவிட மாடலோ’? என்ற ஆச்சரியம் எழுகிறது.
ஒரே குரலில் பேசும் இந்துத்துவவாதிகளும், நீதிபதிகளும்:
ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் பத்திரப் பதிவு தடை நீக்கம் பற்றி கூறும்போது,“முதல்வர்(விஜய்) கரூர் வருவதற்குள் இது நடக்க வேண்டும்; கோயில்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; குறைந்தது 10,000 வாக்குகளையாவது அள்ள வேண்டும் என்பதே நோக்கமாக இருந்திருக்குமோ?” என்று கேள்வி எழுப்புகிறார். உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வெண்ணைமலை இனாம் நிலங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு “ஏழை (சில நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்பு மட்டுமே உள்ள) தெய்வத்துக்கு ஓட்டுரிமை இல்லை என்பதால் கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லையா? அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு (போராடும் 1200 குடும்பத்தினரும் பொதுமக்கள் அல்லவாம்) ஓட்டுரிமை உள்ளதால் அவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியது.
மன்னராட்சி காலத்திய நடைமுறைக்கு தவெக முடிவு கட்ட வேண்டும்:
மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தபோது இனாம்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலங்கள் இனாம்தாரர்களுக்கு வழங்கப்பட்டன. அதே சமயம் நிலத்தில் நேரடியாக உழைப்பைச் செலுத்திய தலித் நிலமற்ற, ஏழை விவசாயிகளுக்கு இந்தப் பலன் பெரிதும் சென்றுசேரவில்லை என்ற கசப்பான உண்மையும் இருக்கிறது. எனவே கோயிலின் ஆதிக்கத்திலிருந்து நிலத்தை மீட்டெடுப்பதற்காக பல்வேறுபட்ட வர்க்கப் பிரிவினர் சேர்ந்து நடத்தும் போராட்டங்களை ஆதரிக்கும் அதே சமயம், ஏழை, நிலமற்ற, தலித் பிரிவினரின் வீட்டுமனை, விவசாய நிலம், பொதுப் பயன்பாட்டுக்கான நிலத்திற்கான போராட்டத்தை இடதுசாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
கரூர் இனாம் நிலங்கள் தொடர்பான ஒரு கேள்விக்கு நீதிமன்றத்தில் பதில் அளித்த கோவில் தரப்பு வழக்கறிஞர் “பத்திர பதிவுக்கு தடைநீக்கம் செய்யப்பட்ட நிலங்கள் 3084.95 ஏக்கர் மட்டுமே; கோவிலுக்குச் சொந்தமாக 15,000 ஏக்கர் நிலங்கள் தனியாக உள்ளன” என்று தெரிவித்திருக்கிறார். கோவில் நிலங்களை அரசு கையகப்படுத்தினாலே கரூர் மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான சொந்த வீடற்ற மக்களுக்கு வீட்டுமனையை உறுதி செய்ய முடியும். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கவும், சாதிய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மன்னரின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குமான ஏற்பாடாக அன்று கடவுளின் பெயரால் கோவிலுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. மக்களாட்சி முறையில் காலத்திற்கு ஒவ்வாத இந்த மன்னராட்சி முறைக்கு தவெக அரசு முடிவு கட்ட வேண்டும்.
இனாம் நிலங்களை மக்களுக்குச் சொந்தமாக்க, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டத் திருத்தங்கள் வேண்டும்:
தவெக அரசு, கரூர் மாவட்டத்தில் உள்ள, அதுவும் வழக்கில் இல்லாத ஒரு பகுதி இனாம் நிலங்களில் மட்டும் மக்களின் நில உரிமையை உறுதி செய்திருக்கிறது. இப்போது இந்த நிலங்களும் நீதிமன்ற வழக்கிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.
தவெக அரசு அதன் நடவடிக்கையை அடுத்துவரும் கரூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வெற்றி என்ற எல்லைக்குள் நிறுத்தவிடாமல், இனாம் நிலங்களில் மக்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் இடதுசாரி இயக்கங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து இனாம் நிலங்களிலும், வழக்கில் உள்ள நிலமாக இருந்தாலும் சரி, கோயிலுக்குச் சொந்தமாக்கப்பட்ட நிலங்களாக இருந்தாலும் சரி, அவற்றை மக்களுக்குச் சொந்தமாக்க, கொள்கை முடிவெடுத்து, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தவெக அரசை இகக(மாலெ) வலியுறுத்துகிறது.
பக்தர்களின் காணிக்கைகள் கோவிலுக்குச் சொந்தமாகட்டும்!
நிலங்கள் மக்களுக்குச் சொந்தமாகட்டும்!
