தலையங்கம்

ஜனநாயகனின் ஜனநாயகம்

$articleData->title

தமிழ்நாட்டின் காவல்துறை பள்ளி, கல்லூரிகளுக்குள் வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களைக் கைது செய்தது.

  தில்லி, ஜந்தர்மந்தரில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தை துவங்கியிருந்தபோது, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, இங்குள்ள இளைஞர், மாணவரை விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவிற்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி அறிவித்திருந்த அந்த நாளில், ஒன்றிய பாஜக அரசு, தன் நாட்டு மாணவர், இளைஞர், பெண்கள், குழந்தைகள் மீது கொடுந்தாக்குதலை அரங்கேற்றியது. அதைக் கண்டித்து வீதிகளிலும் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் மீது முதல்வர் விஜய்யின் கையில் உள்ள காவல்துறை காட்டு தர்பார் நடத்தியது; கைது செய்தது. மாணவர் அமைப்புகள் போராட்டத்திற்கு அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது; பொது இடத்தில் மட்டுமல்ல, தனியார் இடங்களிலும்கூட அமைதியான போராட்டத்தை நடத்த அனுமதிக்கவில்லை. சட்டத்திற்குப்புறம்பாக இதுவரை இல்லாத வகையில், தமிழ்நாட்டின் காவல்துறை பள்ளி, கல்லூரிகளுக்குள் வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களைக் கைது செய்தது. கல்வி நிறுவனங்களின் வளாகத்திற்குள்ளே காவல்துறை செல்லக் கூடாது என்கிறபோது, பள்ளி, கல்லூரிகளுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை அடித்து இழுத்துச் சென்றது. ஆனால், போராடுவதற்கு முறையாக அனுமதி பெறாததால்தான் கைது செய்தோம் என்று கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூச்சமில்லாமல் பொய் சொன்னார். அதோடு மட்டுமின்றி, சாலைகள் போராடுவதற்கு அல்ல என்று கூறினார். அவர் தலைவரின் ஜனநாயகன் படத்தின் கொண்டாட்டத்திற்கு மட்டும்தான் போலும். ஜந்தர் மந்தர் தாக்குதலைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் உக்கிரமாக, மெரினா கடற்கரையில் மாணவர், இளைஞர்கள் கூடிவிடக் கூடாது என்பற்காக, மெரினா கடற்கரையை சீல் வைத்து விட்டது விஜய்யின் காவல்துறை. நிழலில் நீதிக்காக புரட்சியாளராக திரைப்படங்களில் வசனம் பேசும், போராட்டங்களைத் தலைமை ஏற்றும் நடத்தும் விஜய், நிஜ வாழ்க்கையில், தன் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கும்போது நியாயத்திற்காகப் போராடுபவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டார்.


    பாஜக கொள்கை எதிரி, நீட் தேர்வுக்கு நாங்கள் எப்போதும் எதிரி” என்றெல்லாம் சொல்லி இளைஞர், மாணவர் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்த விஜய், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும், ஜந்தர்மந்தர் கொடுமைக்கு மோடி - அமித் ஷா பதில் சொல்ல வேண்டும் என்று போராடுபவர்களுக்கு இடம் கொடுக்கக் கூட மறுத்துவிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் அமைதியான முறையில் போராடியபோதும் காவல்துறையும் விஜய்யின் ரசிகப் பெருமக்களும் அதற்கு பல இடைஞ்சல்கள் கொடுத்தார்கள். நாடெல்லாம் மாணவர்கள் கொந்தளித்துப் போய் இருக்க, தவெகவின் அமைச்சர்கள் அத்தனை பேரும் விடுமுறை! எடுத்துக் கொண்டு, தன் தலைவரின் கடைசிப் படக் கொண்டாடத்தில் மூழ்கிப் போய் இருந்தனர். கண்ணீர் விட்டு கதறி மூக்கு சிந்தியதை ரீல்ஸ் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். சட்டப்பேரவைத் தலைவர், ‘ஜனநாயகன்’ படம் பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகும் என்றார். சபாநாயகர் மூளை எந்தளவு சுறுசுறுப்படைந்துள்ளதென்பது பட்ஜட்கூட்டத்தொடரில் தெரிந்துவிடும். பள்ளி, கல்லூரிக்குள் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்துவதைத் தடுக்கிறது தவெக அரசு. தனது கட்சிக்காரர்களும் அமைச்சர்களும் பள்ளிகளுக்குள் சென்று விஜய் படப் பாடலைப் பாடச் சொல்வதும் டிவிகே, டிவிகே என்று தமது கட்சிப் பெயரை கத்தச் சொல்வதும் பொறுப்புள்ள அரசாங்கத்தின் செயல் அல்ல. இது அரசமைப்புச் சட்டத்திற்கு பொருத்தமானதல்ல. இப்படிச் செய்பவர்கள் தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை பாயும் என்று சொன்ன அமைச்சர் ராஜ்மோகன், காரைக்குடி பள்ளியில் நடந்த சம்பவத்திற்காக அமைச்சர் பிரபு மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமா? பிரதான் பதவி விலகிய பிறகு ‘பாலன் இல்லம்’ சென்று நீட்டை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ‘NO FAIR NEET- BAN NEET’ என்று போராடும் இளைஞர்களுக்கு பொது இடத்தில் இடம் கொடுக்கத் தயாரில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக் கழக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாகத்தான் பாடப் போகிறோம் என்று துணைவேந்தர் முன்னமே அறிவித்துவிட்டபோதும் தவெக அரசு கண்டு கொள்ளவில்லை.  ஆளுநருக்கு கருப்புக் கொடி அறிவிப்புக்காக, புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் சுந்தர்ராஜன்  வீட்டுக்காவலில் வைக்கப் பட்டார்!


     காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் வேதனை. மின்வெட்டு அதிகரிப்பு. மின்கட்டணக் குளறுபடிகள். அன்றாட நிகழ்வாக சாதியாதிக்கக் கொலைகள். இப்படி மக்கள் அன்றாடப் பிரச்சனையில் அல்லாடிக் கொண்டிருக்க, எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதில் இரவு நேரப் பணி செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு. ‘ஜனநாயகனுக்கு’ ஜனநாயகம் (கொண்டாட்டம்);  ஜனநாயகத்துக்கு தடை, தடியடி! பதிலளிக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் வேறு திசையில் கொண்டுசெல்ல கடுமையாக முயற்சிக்கின்றன. இந்நிலையில் இடதுசாரிகளே மக்கள் அரசியலுக்கு தலைமை தாங்க வேண்டும். இடதுசாரிகளின் திருச்சி பேரணி கம்யூனிஸ்ட்டுகள் வலுவாகத் தடம் பதிக்கும் அடையாளமாக வேண்டும்.



17 August, 2026