இந்திய- அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) முறியடிப்போம்!

$articleData->title

இந்திய- அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) முறியடிப்போம்!

கடந்த 2026 பிப்ரவரியில், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்த உடனேயே, அமெரிக்க அதிகாரி ஒருவர் 'அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் சில மாதங்களில் கையெழுத்தாகும்' என அறிவித்தார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், 'இந்திய விவசாயச் சந்தை முழுமையாக அமெரிக்காவிற்கு  திறந்துவிடப்பட்டு,  அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் தங்குதடையற்ற சூறையாடலுக்கு இந்திய விவசாயம் உள்ளாகும் என்பதால் இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் உருவாகின.எனினும், ஒன்றிய பிஜெபி அரசாங்கம், விவசாயிகள் விரோத, மக்கள் விரோத இந்திய–அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட துடித்துக் கொண்டு இருக்கிறது. 'ஒப்பந்தம் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டதாகவும்,  தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க வர்த்தக விசாரணைகளால்தான் தாமதம் ஏற்படுகிறது' என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு நிதி மற்றும் பயிர் பாதுகாப்பு உள்ளது. விலை வீழ்ச்சி அடையாமல் இருக்க அரசு ஏராளமான மானியங்களை வழங்குகிறது. இதனால், (பணமதிப்பின் அடிப்படையில் பார்த்தால்) அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியாளராக இருக்கிறது.


ஆனால், இந்திய விவசாயிகள் கட்டுப்படியாகக் கூடிய விலை, பயிர் காப்பீடு, இயற்கை சீற்றங்களுக்கான நிவாரணங்கள் போன்றவை கிடைக்காததால், கடன் சுமைகளில் சிக்கிக்கொண்டு தற்கொலைகள் செய்து வருகிறார்கள். இத்தகைய சமனற்ற நிலையில், புதியதாக உருவாகும் வர்த்தகப் போட்டியில் இந்திய விவசாயிகள் சிக்கிக் கொண்டால், ஒழித்துக் கட்டப்படுவார்கள்.

இந்திய- அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலானால்:-

1) இந்திய வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைகளைப் பாதிக்கும்:-

அமெரிக்க வேளாண் பொருட்கள் (கோதுமை, சோயா உள்ளிட்ட தானியங்கள், பழங்கள், பால் போன்றவை) இறக்குமதி அதிகரித்தால், இந்திய வேளாண் பொருள்கள் / விவசாயப் பயிர்களுக்கான உள்நாட்டுத் தேவை குறையும்;  உள்நாட்டுச் சந்தை விலைகளில் சரிவும் ஏற்படும். இதன் தொடர் விளைவாக, உணவுப் பொருள்கள் போன்ற சில வேளாண் பொருட்களுக்கு, தற்போது அமலில் உள்ள 'குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அடிப்படையிலான அரசு கொள்முதல்' என்ற நடைமுறையை கடுமையாகப் பாதிக்கும். 

2) பால் உற்பத்திக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படும்:-

'பால் உற்பத்தித் துறை பாதுகாக்கப்படும்' என்று மோடி அரசு அறிவித்திருந்தாலும், இந்தத்  தடையற்ற ஒப்பந்தம் வழியாக, அமெரிக்காவின் பெரிய பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய பால் சந்தை திறக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், பால் உற்பத்தி செய்யும் இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் வாழ்வாதாரம் அடிவாங்கும்.

3) உணவுப் பாதுகாப்பை ஒழித்துக் கட்டும் :-

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களை அதிகமாகச் சார்ந்திருப்பது, நீண்ட கால நோக்கில், உள்நாட்டு உணவு தானிய உற்பத்தியை குறைக்கும், அரிசி கோதுமை போன்ற இந்தியாவின் உணவுத் தானியங்கள் தன்னிறைவை கடுமையாகப் பாதிக்கும்.

4) கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்படும் : -

இந்த ஒப்பந்தம், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய வேளாண் வணிக நிறுவனங்களுக்கே அதிக நன்மை அளிப்பதாகும். சிறு உற்பத்தியாளர்களை அழித்து, உள்நாட்டு சந்தையை உலகப் பெருநிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடும். இந்திய விவசாயத்தின் மீது கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும்.

மொத்தத்தில், இத்தகைய கொள்கைகள் - ஒப்பந்தங்கள், இந்திய மக்களின் தற்சார்பு, இறையாளுமை ஆகியவற்றை சீர்குலைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள், வேளாண்மை மற்றும் தொழில்துறை உற்பத்தி ஆகிய அனைத்தையும் அழிக்கும்.

உலகப் பெருநிறுவனங்களின் நலன்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியும் வகையில் செயல்படுவதை பிஜெபி அரசாங்கம்  கைவிட வேண்டும். 

இந்திய- அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) ரத்து செய்ய வேண்டும்! 

நாடு முழுவதும்  விவசாயிகள் எழுச்சியை கட்டமைப்போம்;  விவசாயிகள்- தொழிலாளர்கள்  இணைந்த கூட்டுப் போராட்டங்களையும் தீவிரப்படுத்தி, உழைக்கும் மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட்  பெருநிறுவன வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்டுவோம்! முறியடிப்போம்!


17 August, 2026