இளம் பெண் போராட்டக்காரர்கள் தன்னையும் தன் தாயாரையும் அவதூறாகப் பேசுவதாக நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் ஒரு அபாயச் சங்கை ஊதினார். இது துணிச்சலுடன் குரலெழுப்பும் இந்தியாவின் ஜென்-ஸீ (இசட் தலைமுறை) பெண்களுக்கு எதிராக இணையத்திலும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களும் வசைகளும் பெருவெள்ளமெனப் பாயத் தூண்டுதலாக அமைந்தது. பிறகு, செங்கோட்டையில் தனது சுதந்திர நாள் உரையில், ‘திமாகி நக்சல்களை’ (அறிவார்ந்த நக்சல்களை) உடனடியாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார். இதன் விளைவாக, இந்திய பள்ளிகளை ஆய்வு செய்து தணிக்கை செய்ய முயன்ற செயல்பாட்டாளர்கள் மீது உடல்ரீதியான நேரடி தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன; அத்துடன் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாதவ்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் தலைமையில் சங்க் பரிவாரக் காடையர் கும்பல் ஒன்று கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்குள் நள்ளிரவில் புகுந்து ‘கோரத்தாண்டவம்’ ஆடி வன்முறைத் தாக்குதலை அரங்கேற்றியது. மோடியின் மறைமுக சமிக்ஞைகள் வெறும் வெற்றுரைகளல்ல; அவை அவரது தொண்டர்களை 'செயலில் இறக்குவதற்கான' நேரடிக் கட்டளைகள் என்பது தெளிவானதாகும். மங்கிவரும் தன் அதிகாரத்தைத் தக்கவைக்க மோடி அரசாங்கம் முன்பை விட அதிக அளவிலான அச்சுறுத்துதலையும் வன்முறையையும் ஏவத் துணிந்துள்ளது போல் தெரிகிறது; ஆனால் அச்சத்திலிருந்து விடுதலைக்கான இளம் இந்தியாவின் பிரகடனமே ஜந்தர் மந்தர் போராட்டத்தின் மாபெரும் செய்தியாகும்.
தில்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களின் மீது 2019–20 காலகட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சங்க் பரிவாரின் இந்த நள்ளிரவு தாக்குதல் நமக்கு நினைவூட்டுகிறது. ஜேஎன்யு-வில் சாதித்தது போல, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள் அல்லது ஊழியர்கள் மத்தியில் பாஜகவால் இன்னும் ஊடுருவ முடியவில்லை; எனவேதான் இத்தாக்குதல் முக்கியமாக வெளியிலிருந்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால், தாக்குதல் நடத்தியவர்களுக்குக் காவல்துறை முழு சுதந்திரம் அளித்ததும் உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் முன்னின்று வழிநடத்தியதும் அக்கும்பலின் ஆபத்தான கொடூர நோக்கத்தையும் வலிமையையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. முதன்மை நுழைவு வாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்தப் பாசிசக் குண்டர் படையிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்றியது ஒரேயொரு சுருக்கு வாயில் மட்டுமே. லெனின் இறந்து இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தியப் பிரிவினைக்கு அவரே காரணம் என்று பழிசுமத்தி, லெனின் சிலையை உடைக்கும் நோக்கில் இதே போன்றதொரு கும்பல் ஓரிரு நாட்களுக்கு முன்புதான் முதன்மை வாயிலுக்கு வெளியே கூடியிருந்தது.
இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நகலை வரைந்து வடிவமைத்த மாபெரும் ஓவியர் நந்தலால் போஸால் உருவாக்கப்பட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழக இலச்சினையை இந்த சங்க் பரிவார் கும்பல் அடித்து நொறுக்கிக் கால்களால் மிதித்து அவமதித்தனர். இருப்பினும், விடுதலைப் போராட்டக் காலம் தொட்டே மகத்தான வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கல்விச் சிறப்பையும் கொண்ட ஒரு முதன்மை நிறுவனமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மீதான இத்தாக்குதலை, மேற்கு வங்கத்தின் பொதுச் சமூகம் உடனடியாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் மிக வன்மையாகக் கண்டித்தது; இதனால் பாஜக தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஏபிவிபி-க்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறி ஏபிவிபி-யின் செயலுக்குப் பொறுப்பேற்க மறுத்தார்; விடிய விடிய அழித்தொழிக்கும் வேட்டை நடத்துவோம் என்று அச்சுறுத்திய அதே பாஜக சட்டமன்ற உறுப்பினர் ('கோரத் தாண்டவம்' என்பது அவர் பயன்படுத்திய அச்சுப் பிசகாத சொல்), மறுநாளே அந்த வன்முறைக்கு பாஜக கொடிகளைப் பயன்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் சதிகாரர்கள்தான் காரணம் என்று பழிபோட்டார்! ஆயினும் தேசவிரோதக் கருத்துக்களின், சக்திகளின் கோட்டை என ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தொடர்ந்து தீயதாக சித்தரிப்பதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஜாதவ்பூர் வளாகத்திற்குள் 'தேசியவாதத்தின்' மேலாதிக்கத்தை நிலைநாட்டுவோம் என்றும் சூளுரைக்கிறார்!
தேசியவாதத்திற்கான ஒரு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை பாஜக எவ்வாறு மதிப்பிடுகிறது? தேசபக்திக்கான புதிய சோதனையாக, பெரிதும் அறியப்படாத 'வந்தே மாதரம்' பாடலின் நீண்ட வடிவத்தை மோடி அரசாங்கம் ஒரு ஆயுதமாக்கத் தொடங்கியுள்ளது. நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் அசல் 'வந்தே மாதரம்' கவிதைக்கு இசையமைத்துக் காங்கிரஸ் மாநாட்டில் பாடியவர் வேறு யாருமல்ல, தாகூர்தான்; மேலும் அக்கவிதையின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே நாட்டுப் பாடலாகப் பயன்படுத்தப் பொருத்தமானவை என்று பரிந்துரைத்ததும் அதே தாகூர்தான். சொல்லப்போனால், கவிதையின் மூல வடிவத்தில் இந்த இரண்டு பத்திகள் மட்டுமே இருந்தன; 'ஆனந்த மடம்' நாவலின் தேவைக்கேற்ப அக்கவிதையை மாற்றியமைத்ததன் மூலமே அதன் நீண்ட வடிவம் உருவானது. இப்போது மோடி அரசாங்கம் அந்த நீண்ட வடிவத்தை இந்தியாவின் தேசியப் பாடலாக மாற்றி ஆயுதமாக்கவும் ஒட்டுமொத்த நாட்டையும் இந்த புதிய தேசபக்தி சோதனைக்கு உட்படுத்தவும் துடிக்கிறது. மனுஸ்மிருதியின் அப்பட்டமான பெண் வெறுப்பை ராகுல் காந்தி வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்கியதைத் தொடர்ந்து, அடிமைத்தனத்தின் சட்டப்புத்தகமான அந்த மனுஸ்மிருதியை அண்ணல் அம்பேத்கர் பொதுவெளியில் எரித்ததன் நூற்றாண்டு நினைவை இந்தியா இன்னும் ஓராண்டில் எட்டவுள்ள நிலையிலும் பாஜக இப்போது மனுஸ்மிருதியை ஒரு 'நாகரிகச் (கலாச்சார) சோதனைக்கான' ஆயுதமாக்கக்கூடும்.
கல்வி, கல்விச் சுதந்திரம், வளாக ஜனநாயகத்தின் மீது சங்க் பரிவார் கும்பல் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நிறுவனங்களின் அலட்சியத்திற்கும் அநீதிக்கும் எதிரான மாணவர் போராட்டங்களும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. 'பள்ளிகளைச் சீரமைப்போம்' என்ற முழக்கம், அவசரக் கல்விச் சீர்திருத்தங்களுக்கான நாடு தழுவிய இயக்கமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. தில்லி ஐஐடி-யில் இரண்டாம் ஆண்டு மாணவர் ரிஷிகேஷ் குமாரின் மர்ம மரணத்தைக் கண்டித்து மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற முதன்மைக் கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அச்சுறுத்தும் வகையில் உயர்ந்துள்ளது. கடந்த இருபதாண்டுகளில் ஐஐடி-களில் மட்டும் 160-க்கும் மேற்பட்ட மாணவர் தற்கொலைகள் பதிவாகியுள்ளன; இதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டுமே 70-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் கல்வி வளாகங்களுக்கு அப்பால், அரசாங்கத்தின் சொந்த நிதி ஆயோக் அமைப்பாலேயே 'நீட்' என வகைப்படுத்தப்பட்ட 8.7 கோடி இளம் இந்தியர்கள் உள்ளனர். இங்கே 'நீட்' என்பது கல்வி, வேலைவாய்ப்பு அல்லது எந்தவொரு பயிற்சியிலும் ஈடுபடாத 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் இந்தியர்களைக் குறிக்கிறது. 37 கோடி இளைய மக்கள் தொகையில் 8.7 கோடி பேர் என்றால், ஒவ்வொரு நான்கு இளம் இந்தியர்களில் ஒருவர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 'வந்தே மாதர'த்தையும் மனுஸ்மிருதியையும் வேண்டுமானால் அரசாங்கம் ஆயுதமாக்கலாம்; ஆனால் ஆல்ஃபா (ஜென் ஆல்ஃபா) தலைமுறையினர் அனைவருக்கும் தரமான கல்வியும் இசட் (ஜென் ஷீ) தலைமுறைக்குப் பாதுகாப்பான, கண்ணியமான வேலைவாய்ப்பும் கிடைக்கும் வரை இந்திய மக்கள் ஓயாது தொடர்ந்து போராடுவார்கள்!
எம்எல் அப்டேட்- தலையங்கம்.
25 – 31 ஆகஸ்ட் 2026
தமிழாக்கம்: விஜி
