மோ-ஷா ஆட்சியின் அறிவிக்கப்படாத அவசரநிலையும் இரண்டாம் கொடிப் போராட்டமும்

$articleData->title

அக்டோபர் 12 அன்று இந்தியா கூட்டணி நடத்திய உச்ச நீதிமன்றம் நோக்கிய பேரணி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஸ் ரங்கா இருவரும் தேசியக் கொடியோடு ஜந்தர் மந்தர் சென்றார்கள்  என்பதற்காக அவர்களைக் கைது செய்து ஐந்து நாள்கள் சிறையிலடைத்துவிட்டு உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட இந்தியாவின் போராட்டக் களமான டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்தக் கூடாது என்று மோ-ஷா அரசு அறிவித்தைத் தொடர்ந்து, களத்தைக் கைப்பற்றுவோம் எனவும், ஒவ்வொரு இடத்தையும் ஜந்தர்மந்தராக மாற்றுவோம் எனவும்  அறிவித்தார்கள் நேஹாவும் அபிஜித்தும். அக்டோபர் 16ம் தேதி தேசியக் கொடியுடன் களம் காண அழைப்பு விடுக்கப்பட்டது. அக்டோபர் 10ம் தேதி டெல்லி மாநகரை கதவடைப்புக்குள்ளாக்கி, ஞானேஷ்குமாரை பதவி விலகச் சொல்லி நடத்திய போராட்டம் தோல்வி என்று தனக்குத்தானே பாராட்டிக் கொண்ட மோடி-ஷா அரசும் அதன் அதிகாரிகளும் மக்களின் கோபத்தால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஞானேஷ் குமாரைக் காப்பாற்ற, தங்கள் வாக்குத் திருட்டு அம்பலமானதை மறைக்க, அமைதியாகப் போராடும் மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்டக் களத்திற்கு வரவிடாமல் செய்வதற்காக ரயில்களை, பேருந்துகளை எல்லாவற்றையையும் பாஜக அரசே முடக்கி ‘பந்த்’ நிலையை உருவாக்கியது. 


அக்டோபர் 12 அன்று இந்தியா கூட்டணி நடத்திய உச்ச நீதிமன்றம் நோக்கிய பேரணி அதிர்வலையை ஏற்படுத்தியது. தோழர் நேஹா முன்னணித் தலைவர்களில் ஒருவரானார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க மறுத்தார்கள். வழக்காடிகளை நீதிபதிகள் சந்திப்பது முறையல்ல என்றார்கள். ஆனால், ஞானேஷ் குமாரின் வாக்குத் திருட்டை மட்டும் உடனடியாக தடுத்து நிறுத்த முடியாது என்றார்கள். ஏற்கனவே வாக்களிக்க முடியாமல் போனவர்களைப் பார்த்து அடுத்த முறை வாக்களித்துக் கொள்ளுங்கள் என்றார்கள். இந்தியக் குடிமக்களின் வாக்குரிமை, ஜனநாயக உரிமையை மீட்டுத் தர வேண்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வாக்குத் திருட்டைச் செய்ய வைத்த, செய்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பேசுகிறபோது, அவர்களிடம் நியாயம் கேட்க மக்களோடு மக்களாக எதிர்க்கட்சித் தலைவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார்கள். வழக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். அதன் விளைவுதான் அக்டோபர் 16ம் தேதி அறிவிக்கப்பட்ட  தேசியக் கொடி பேரணி. தேசப் பற்று பற்றி, தேசிய உணர்வு பற்றியெல்லாம் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் சங்கிகளும் மோ-ஷாவின் காவல் துறையும் மூவர்ணக் கொடியைப் பிடித்தவர்களையெல்லாம் தடி கொண்டு தாக்கினார்கள். பெண்களை பெண் போலீஸாரே அவமானப்படுத்தினார்கள். ஒரு பெண்ணை ஒன்பது பேர் சேர்ந்து, தர தரவென்று இழுத்துச் சென்றார்கள். அமைதியாக கொடி பிடித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை, பயங்கரவாதிகள் போல் சுற்றி வளைத்துப் பிடித்தார்.  பெண்களின் ஆடைகள் அவிழ்வது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லாமல் மானபங்கப்படுத்தினார்கள். ஆர்எஸ்எஸ் சங்கிக் குண்டர்கள் காவலர் சீருடையில் வந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது உச்சநீதிமன்றம். ‘எனக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையே போய்விட்டது’ என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கூறினார்.  


நேஹா, அபிஜித், பிரசாந்த் பூசன், பிரசாஷ் ராஜ், ஆயிஷே கோஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். அங்கு வந்த மோடி-ஷா மீடியாக்கள் நேஹாவிடம் வம்பிழுத்தார்கள். தோழர் நேஹா அசரவில்லை. திட்டமிட்டபடி ஜந்தர் மந்தரை மீட்டெடுக்க தேசியக் கொடியுடன் இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ரவிராய், தோழர் நேஹா, தோழர் சாய் பாலாஜி உள்ளிட்ட தோழர்களுடன் இளைஞர், மாணவர், பெண்கள் பெரும் பேரணியாக தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து வந்தார்கள். குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களைக் கூட பெண் போலீஸார் தர தரவென்று இழுத்துச் சென்றார்கள். ஒட்டு மொத்த காவல்துறையின் கண்ணும் தோழர் நேஹா மீது இருந்தது. அவரை முன்னேற விடாமல் செய்வதிலேயே  குறியாக இருந்தார்கள். அவர்களின் தடைகளையெல்லாம் தாண்டி நேஹா முன்னேறினார். ஆனால், மோ-ஷாவின் காவல்துறை அவரை சுற்றி வளைத்துக் கழுத்தை நெரித்துப் பிடித்து, குண்டுக் கட்டாக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று காருக்குள் திணித்தது. அவரை கடத்திச் சென்றார்கள். எங்கு கொண்டு செல்கிறார்கள் என்று யாருக்கும் சொல்லவில்லை. நேஹாவைப் பிடித்ததுபோலவே தோழர் அபிஜித்தையும் கைது செய்து கொண்டு சென்றார்கள். தோழர்கள் நேஹா, அபிஜித் மோ-ஷாவின் காவல்துறையால் கடத்தப்பட்டது தெரிந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ராகுல் காந்தி, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தோழர் திபங்கர், தோழர் எம்.ஏ.பேபி, தோழர் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் அபிஜித், நேஹா எங்கே? உடனடியாக விடுதலை செய்யுங்கள் என குரல் கொடுத்தார்கள். முற்போக்கு ஜனநாயக சக்திகளும் பொது மக்களும் மாணவர், இளைஞர்களும் குரல் கொடுததார்கள். அதன் விளைவாக, மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட தோழர் நேஹாவை ஐந்து மணி நேரத்திற்குப் பின்னர் இரவு 10 வாக்கில் வழக்கறிஞர்களைச் சந்திக்க மட்டும் அனுமதித்தார்கள் டெல்லி காவல்துறையினர். நேஹாவிற்கு உடல் நிலை சரியில்லை, அவருக்கு மருத்துகள் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு மறுத்துவிட்டுள்ளார்கள். ஒரு பெண்ணை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில்  இருக்க வைக்கக் கூடாது என்று சட்டமும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் இருப்பினும் எது பற்றியும் கவலைப் படாமல் இரவு முழுவதும் நேஹாவை காவல் நிலையத்தில் வைத்திருந்து விட்டு விடுவித்துள்ளனர். 


இந்தப் போராட்டம் இரண்டாம் சுதந்திரப் போராட்டம். இந்த நாட்டின் இறையாளுமையை, அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம். இது தொடரும்.   


28 October, 2026