பிணை - சிறைவாசம் - மாறி மாறி வரும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.

$articleData->title

 உச்ச நீதிமன்றம்,  தீர்ப்பு வழங்கினால் மட்டும் போதாது,  உச்சநீதிமன்றம் நீதி வழங்க வேண்டும் என்ற தலைப்பில், ஜனவரி 16- 31 மா-லெ தீப்பொறி, ஒரு கட்டுரையை வெளியிட்டது.

 05.01.2026 அன்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் அஞ்சாரியா அமர்வம், விசாரணையின்றி 28.01.2020 மற்றும் 01.10.2020 முதல் சிறையில் இருக்கும் உமர் காலித் மற்றும் ஷர்ஜில் இமாமுக்கு பிணை மறுத்ததை,  நீதி மறுப்பு என விமர்சனம் செய்திருந்தோம்.

எல்லா தீர்ப்புகளும் நீதி வழங்குவதில்லை எனக் கட்டுரையின் தலைப்பில் சொல்லும் போது, சட்டப்படியான சம்பிரதாய ஜனநாயகம் / சமத்துவம் என்பவையும் நிஜ வாழ்க்கையின் ஜனநாயகம் / சமத்துவம் என்பவையும்  வேறு வேறு ஆகும் என்ற மார்க்சிய / அம்பேத்கரிய புரிதலையும் சேர்த்தே சொல்கிறோம்.

 உச்ச நீதிமன்றத்தின் பிணை மறுப்பு தீர்ப்பு தவறு என்பதற்கு, அரசியல் காரணங்களாக மட்டுமே அல்லாமல், சட்டபூர்வமான விமர்சனங்களையும் குறிப்பிட்டோம். 05.01.2026 தேதிய தீர்ப்பு தவறானது, நமது நிலைப்பாடே சரியானது என, 18.05.2026 அன்று உச்சநீதிமன்றம், "சய்யது அந்த்ராபி எதிர் தேசிய புலனாய்வு முகாமை ஜம்மு" என்ற வழக்கு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் புலப்படுத்தும்.

* 18.05.2026 தேதிய தீர்ப்பை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புய்யான் வழங்கி உள்ளனர். அவர்கள் உமர் காலித்துக்கு பிணை மறுக்க, நீதிபதிகள் அரவிந்த் குமார் அஞ்சாரியா அமர்வம் சொன்ன காரணங்களுடன் உடன்படவில்லை.

* அ. படிநிலை வரிசையில் மேலே உள்ள நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு அதற்கு அடுத்து உள்ள நீதிமன்றங்கள் கட்டுப்பட வேண்டும். ஆ.ஒரே நிலை நீதிமன்றம் என வரும்போது, கூடுதல் எண்ணிக்கை அமர்வ தீர்ப்புக்கு குறைவான எண்ணிக்கை அமர்வம் கட்டுப்பட வேண்டும் என்பதே ஸ்டெயிர்  டெசிசிஸ் ( STARE DECISIS) கோட்பாடாகும்.

நஜீப் தீர்ப்பின் சாரம்

1.நஜீப் வழக்கு தீர்ப்பு, உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வத்தால் வழங்கப்பட்டது. அதன்படி, அரசமைப்புச் சட்ட உயிர்வாழும் உரிமை, தனிநபரின் சுதந்திரம் தொடர்பான பிரிவு 21க்கு உட்பட்டே, பிணை தொடர்பான கடுமையான பிரிவுகள் கொண்ட UAPA, PMLA, NDPS சட்டங்கள் அணுகப்பட வேண்டும்.

2.பிணை வழங்குவதற்கான அரசமைப்புச் சட்ட அடிப்படை அணுகுமுறை, தண்டிக்கப்படும் வரை, எவர் ஒருவரும் நிரபராதி என்பதேயாகும்.

3.பிணையே விதியாகும், சிறைவாசம் விதிவிலக்காகும்.

4.விசாரணை இன்றி நீண்ட காலம் சிறைவாசம் தொடர்வது, விசாரணை விரைந்து முடிய நீண்ட காலமாகும் என்ற விஷயங்களை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, அரசமைப்புச் சட்டப்பிரிவு 21 மீறப்படுவது தெளிவாக புலப்படும்.

சட்ட சர்ச்சை

நஜீப் தீர்ப்பை ஏற்கவில்லை / ஏற்க முடியாது என நீதிபதிகள் அரவிந்த் குமார் அஞ்சாரியா அமர்வம் சொல்லவில்லை. சொல்ல முடியாது. ஏனெனில், இரண்டை விட மூன்று பெரியது.

18.05.2026 தீர்ப்புக்கு முன்பும் பின்பும்

அ.05.01.2026 உமர் காலித் தீர்ப்பின் அடிப்படைகள், பின்வருமாறு அமைந்தன: அ.அரசமைப்பு சட்ட 21 ஆம் பிரிவு வாக்குறுதி, கட்டற்ற சுதந்திரம் தொடர்பானதல்ல, அது சுதந்திரம் பறிப்பது, மனம்போன போக்கிலானதாக, மனசாட்சி ஏற்க முடியாததாக, அநியாயமாக இருக்க முடியாது என்று தான் சொல்கிறது.

ஆ.நஜீப் தீர்ப்பு, மனசாட்சி ஏற்க முடியாத கைதுக்கு எதிரானது மட்டுமே ஆகும்.

இ.சிறப்பு சட்டங்களின் கீழ், வழக்கு தாமதமாவது மட்டுமே பிணை வழங்க தீர்மானிக்கும் அம்சமாக இருக்கும் என்ற எந்த இயந்திரத்தனமான விதியையும், நஜீப் தீர்ப்பு வகுக்கவில்லை.

அந்த்ராபி 18.05.2026 தீர்ப்பின் மறுப்பு.

அ.பிணை வழங்க சாதகமான ஒற்றை காரணமாக நீண்ட சிறைவாசத்தை கருதுவதற்கு எதிரான எச்சரிக்கையே, நஜீப் தீர்ப்பு என்று கருதுவது தவறு.

ஆ. மாறாக, அரசமைப்புச் சட்டக் கோட்பாடுகளை ஓரம் ஒதுக்கி, தொடர் சிறைவாசத்தை நியாயப்படுத்த, சிறப்பு சட்ட தடையை ஒரே காரணமாக நிறுத்துவதற்கு  எதிரான எச்சரிக்கையாகவே, நஜீப் தீர்ப்பு அமைந்துள்ளது.

இ.நஜீத் தீர்ப்பு, ஏற்க முடியாத தாமதம் நீண்ட சிறைவாசம் என்ற நிலைமைகளில் 43 D(5) உபா சிறப்பு சட்ட பிரிவு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 அய் கீழ் தள்ளிவிடாது என்கிறது.

ஈ. நஜீப் தீர்ப்பு படிநிலை வரிசையில், அரசமைப்புச் சட்ட பிரிவு 21, சிறை சட்ட பிரிவு 43 D(5) க்கு மேலே உள்ளது என்ற நிலையை மீட்டெடுத்துள்ளது.

நஜீப் தீர்ப்பு தெளிவுபட, நீண்ட சிறை வாசமும் தாமதமான வழக்கு விசாரணையும் அரசமைப்புச் சட்ட மீறலாக இருக்கும் பட்சம், பிரிவு 43 D(5) உருகி கரைந்து விடும் (MELT DOWN) என்கிறது.

உ.அரசமைப்புச் சட்ட கோட்பாடுகள் அடிப்படையில் காணும் போது, நஜீப் தீர்ப்பு, 43 D(5) சட்ட தடையிலிருந்து சுதந்திரமாகவும், சட்ட தடை இருந்த போதும், அரசமைப்புச் சட்ட பிரிவு 21 அய் உயர்த்திப் பிடிக்கிறது.

18 5.2026 தீர்ப்புக்கு பிறகு

மே 22 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் பி.பி வராலே அமர்வம், 05.01.2026 தீர்ப்பு மற்றும் 18.05.2026 தீர்ப்புகளுக்கு இடையிலான வேறுபட்ட நிலைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் எண்ணிக்கையில் கூடுதலான நீதிபதிகள் கொண்ட அமர்வம் அமைத்து தீர்ப்பு பெற, தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளது.

அந்த்ராபி வழக்கு மற்றும் உபா சட்ட வழக்குகள் விவரங்கள்.

•ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5-2019 அன்று நீக்கப்பட்டது. அதனையடுத்து அரசியல் செயல்பாட்டில் இருந்த அந்த்ராபி 07.08.2019 முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

* தடுப்பு காவலுக்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கு 12.03.2020 அன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. 25.04.2020 அன்று அரசு தடுப்புக் காவலை ரத்து செய்தது. 26.06.2020 உச்ச நீதிமன்றம் காவல் உத்தரவை ரத்து செய்தது.

* இதற்கிடையில் 11.06.2020 அன்று, அவர் போதைப் பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

* அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக 04.01.2022 முதல் 10.03.2022 வரை இடைக்கால பிணை வழங்கப்பட்டது.

* அவரது முறையான பிணை கோரும் மனு சிறப்பு நீதிமன்றத்தால் 2024 ல் தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றவியல் மேல்முறையீடு 19.08.2025 அன்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

5 வருடங்கள் 11 மாதங்களாக சிறையில் இருந்த அவர் வழக்கில், அரசு தரப்பு 350 சாட்சிகளை விசாரிக்க வேண்டி இருந்தது.

* மேலே தரப்பட்ட விவரங்களையும் உபா வழக்குகளில் மிகவும் குறைவான தண்டனை சதவீதம், 90 முதல் 95 சதம் விடுதலை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு, உச்ச நீதிமன்றம் 18.05.2026 பிணை வழங்கியது.

உச்ச நீதிமன்றம், அமைச்சர் தந்த உபா சட்ட விவரங்களையும் கணக்கில் கொண்டது.

உபா சட்டம் இந்தியா  முழுவதும்

ஆண்டு         கைதானவர்கள்     தண்டிக்கப்பட்டவர்கள்     தண்டனை %

2019             1948                             34                                               1.75

2020             1321                             80                                               6.06

2021             1621                             62                                               3.82

2022             2636                             41                                               1.56

2023             2914                             118                                             4.05

 

உபா சட்டம் இந்தியா ஜம்மு காஷ்மீர்

ஆண்டு       கைதானவர்கள்    தண்டிக்கப்பட்டவர்கள்       தண்டனை %

2019             227                         0                                      0

2020             346                         2                                             0.58

2021             645                         0                                             0

2022             1238                       11                                           0.84

2023             1206                       10                                           0.83

 

விசாரணை இயக்கப் போக்கே தண்டனையா?

IS PROCESS ITSELF A PUNISHMENT?

பிரிவு 21 சுதந்திரத்தை உறுதி செய்வதா அல்லது வரம்புக்குட்படுத்துவதா?

உச்ச நீதிமன்றம், பிரிவு 21 கட்டற்ற சுதந்திரம்  தொடர்பானதல்ல எனவும், அடிப்படை உரிமை பறிப்பை நெறிப்படுத்துவது மட்டுமே எனவும் காண்கிறது. எவர் ஒருவரின் வாழ்வுரிமையும் சுதந்திரமும், சட்டம் வகுத்துள்ள முறைகள் மூலம் அல்லாமல், பறித்திட முடியாது என, இலக்கண ரீதியான விதத்தில், எதிர்மறையாக பிரிவு 21 காணப்படுகிறது. நேர்மறையான அரசமைப்புச் சட்ட தரிசனம் எவ்வாறு இருக்க வேண்டும்? "எல்லோருக்கும் உயிர்வாழும் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பது உறுதி செய்யப்படுகிறது; சட்டப்படியான முறைகளில் அல்லாமல், இந்த உரிமைகளை பறிக்க முடியாது"  இந்த தரிசனம் மட்டுமே, அரசு அதிகாரம் முன்பு, ஆள் தூக்கி சட்டங்கள் முன்பு நீதித்துறை தலை நிமிர்ந்து நிற்க உதவும். எவர் ஒருவரும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே என்பது, வெற்று முழக்கம் அல்ல. அது பிணை தொடர்பான அரசமைப்புச் சட்ட உத்தரவாதமாகும். நீண்ட பல வருடங்கள் விசாரணைக் காலம், தாமதமாகும் விசாரணை என்ற PROCEDUREஅதனளவிலேயே தண்டனையாகிவிடும். அத்தகைய விசாரணை இயக்கப் போக்கே, பிரிவு 21 க்கு புறம்பானது. சட்டப்படி நிரபராதிகள் என்ற தீர்ப்பு பல வருடங்கள் சிறைவாசத்திற்கு பின் வருமானால், சிறைவாச காலத்திற்கு யார் பொறுப்பேற்பது? எப்படி பொறுப்பேற்பது?


07 June, 2026