தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கை: காவிரியில் மேக்கேதாட்டு அணைத் திட்டம் வேண்டாம்!

$articleData->title

தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கை: காவிரியில் மேக்கேதாட்டு அணைத் திட்டம் வேண்டாம்!

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாலைவனமாகும்!

மேக்கேதாது திட்டம், தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயத்திற்கும், குடிநீர் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். காவிரி ஆற்று பாசனத்தை நம்பியே,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 24 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இலட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளரின் வாழ்வாதாரம் காவிரியை சார்ந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக அரசு புதிய அணை அமைக்க முயற்சிப்பது, தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீரை குறைத்து, ( ஏற்கனவே காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை, சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்) டெல்டா மண்டலத்தை பாலைவனமாக்கிவிடும்.

காவிரி நீர், விவசாயத்திற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே, மேக்கேதாட்டு அணைத் திட்டம் தமிழகத்தின் எதிர்கால குடிநீர்பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.

மேக்கேதாட்டு அணை ஏன் கூடாது?

மேக்கேதாட்டு அணை / நீர்த்தேக்கம் விரிவான திட்ட அறிக்கையின்படி, இந்த அணை தமிழ்நாட்டின் எல்லையிலிருந்து 4 கி.மீ தொலைவில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மற்றும் அர்க்காவதி நதி ஒன்றுசேரும் மேக்கேதாட்டு பள்ளத்தாக்கு அருகில் கட்ட கர்நாடக அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. கர்நாடக மாநில எல்லை முடிந்து, காவிரி ஆறு தடையின்றி தமிழ்நாட்டிற்குள் பாயும் கடைசிப் புள்ளிதான் மேக்கேதாட்டு. இந்த இடத்தில் அணை கட்டுவது, தமிழ்நாட்டுக்கு வரும் மொத்த காவிரி ஆற்றின் நீரையும் திசைத்திருப்பி கொள்ளையடிப்பதற்கு ஒப்பானதாகும்.

இது சுமார் 99 மீட்டர் உயரம் மற்றும் சுமார் 735 மீட்டர் நீளம் கொண்ட கான்கிரீட் கிராவிட்டி வகைப்பட்ட மிகப்பெரிய அணைத் திட்டமாகும். முன்மொழியப்பட்ட நீர்தேக்க திறன் சுமார் 66.8 டிஎம்சி  ஆகும். அதாவது அந்த நீர்த்தேக்கம் 66.8 ஆயிரம் மில்லியன் கனஅடி அல்லது சுமார் 66.8 பில்லியன் கனஅடி நீர் அல்லது சுமார் 1,890 பில்லியன் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டதாகும். (1 டிஎம்சி அளவிலான நீர் கூட, மக்கள் தொகை மற்றும் நீர் பயன்பாட்டை பொறுத்து, ஒரு பெரிய நகரத்திற்கு பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் வரை குடிநீர் வழங்கப் போதுமானதாகும்.)


 பெங்களூருவின் குடிநீர் ஆதாரம்

பல்லாண்டுகளாக, பெங்களூருவின் 85% குடிநீர் காவிரி ஆற்றிலிருந்து பெறப்பட்டு குழாய் வழியாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து 100 கி.மீ தூரத்திலிருந்து நீர் கொண்டு வரப்பட்டு, 900 மீட்டருக்கும் மேல் உயரத்திற்கு பம்ப் செய்யப்பட்டு பெங்களூர் நகரத்திற்கு  கொண்டு செல்லப்படுகிறது. பெங்களூர் வாட்டர் சப்ளை அண்ட் சுவரேஜ் போர்டு (BWSSB) நிறுவனம் தினமும் சுமார் 2,225 MLD அளவிலான காவிரி நீரை பெங்களூருக்கு வழங்குகிறது. MLD என்பது நாளொன்றுக்கு மில்லியன் லிட்டர் ஆகும். மேலும், பெங்களூரைச் சுற்றியுள்ள பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தினமும் சுமார் 500 MLD க்கும் கூடுதலான நீரை பயன்படுத்துகின்றன. இது பெங்களூரு மொத்த நீர் தேவையில் சுமார் 20% ஆகும்.

ஆனால், நகரமயமாக்கத்தாலும் தொழில்மயமாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளாலும், கர்நாடக அரசின் அலட்சியத்தாலும் நகரத்திலிருந்து குடிநீர் ஆதாரங்கள் பெருமளவில் ஒழிக்கப்பட்டுவிட்டன; பழைய உள்ளூர் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளும் கூட மறைந்து போய்விட்டன.

பெங்களுரு பெருநகரத்திற்கு, புறநகர் பகுதிகளுக்கு ஏற்கனவே தினமும் சுமார் 2,225 மில்லியன் லிட்டர் காவிரி நீர் வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் புதியதாக ஒரு  ‘மேக்கேதாட்டு குடிநீர் வழங்கல் திட்டம்’ என்பது பெங்களூருவின் வளர்ந்து வரும் தொழிற்துறை விரிவாக்கத்திற்கு சேவை செய்வதற்காகவே ஆகும்.

கர்நாடகா மாநிலத்தின் குறிப்பாக பெங்களூரு முதலீட்டு மையத்தின் தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை விரிவாக்கம், குறிப்பாக கிழக்கு பெங்களூருவின் வைட்ஃபீல்ட், மகாதேவபுரா, ORR பகுதி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ஆகியவற்றின் நிலத்தடி நீருக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளவே, தொழிற்துறைக்கு நீர் வழங்கவே 'மேக்கேதாட்டு குடிநீர் வழங்கல் திட்டம்” அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பாதிப்புகள்

விரிவடைந்து வரும் பெங்களூரு பகுதிக்கு, (குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு) நீர் வழங்குதல் மட்டுமல்லாமல், 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதும் திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.

இந்த நீர்மின் திட்டத்தால் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் வனப்பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட அல்லது நீரில் மூழ்க வாய்ப்புள்ளது.

2026 மே மாத நிலவரப்படி, இந்த மேக்கேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் / அணைத் திட்டத்திற்கு, இந்தியாவின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) நடைமுறையின் கீழ் இதுவரை இறுதியான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. இத்திட்டம் தற்போது முன்மொழிவு மற்றும் மதிப்பாய்வு நிலையிலேயே உள்ளது.

ஆனால், திட்டப் பணிகளை சட்டபூர்வமாகத் தொடங்குவதற்கு முன், அவசியமான சட்டப்பூர்வ அனுமதிகள் பலவும் தேவைப்படுகின்றன; சுற்றுசூழல் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

*மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திலிருந்து (MoEFCC) சுற்றுச்சூழல் அனுமதி (EC) பெற வேண்டும்.

*வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறை அனுமதி பெற வேண்டும்.

*இத்திட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், குறிப்பான அனுமதியை பெற வேண்டும்.

*காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) ஒப்புதல் பெற வேண்டும்.

*மத்திய நீர்வள ஆணையத்தின் (CWC) தொழில்நுட்ப அனுமதி பெற வேண்டும்.

இவற்றுக்குப் பிறகும் மேதா பட்கர் போன்ற சுற்றுசூழல் போராளிகள் - அமைப்புகள், உள்ளூர் மக்கள் அமைப்புகள், பாதிக்கப்படும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், கார்ப்பரேட் நலன்களுக்காக இத்திட்டத்தை அமலாக்க கர்நாடக அரசாங்கம் பிடிவாதமாக முயற்சிக்கின்றது.


கர்நாடக அரசின் பிடிவாதம் அநீதியானது!

'கர்நாடகம் காவிரியில் மேகதாது அணையை கட்டினால் தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய தண்ணீர் பங்கு கிடைக்காது' . மேக்கேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 24.05.2026 ல் தள்ளுபடி செய்துள்ளது.

'அணை கட்டும் திட்டத்திற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்' என்றும், கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் (தற்போது முதலமைச்சர்) கூறியுள்ளார். 'கர்நாடகத்தில் அணைக்கட்ட தமிழகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை' என்றும் அவர் கூறியுள்ளார். இது அநீதியானது.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவு உள்ளது. இந்தளவு தண்ணீர் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் கூறியுள்ள மேற்கண்ட கருத்து காவிரி தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீர் பகிர்வு தீர்ப்புக்கும், நதிநீர் பிரச்சனைகள் தொடர்பான சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானது. மேலும் ஆறுகள் தோன்றி பாயும் பகுதிகளில் உள்ள நாடுகள் கடைமடை பகுதியில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி அணைகளைக் கட்டுவது கூடாது. இது காவிரி நீரில் உள்ள தமிழ்நாட்டின் பங்கை, சட்டப்பூர்வமான உரிமையை, சர்வதேச நதி நீர் விதிமுறைகளை மறுப்பதாகும்.

 எனவே,

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பது சட்டபூர்வமானது. அதை கர்நாடக அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ஒன்றிய மோடி அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சரின் பிரதமருடனான 10 நிமிட முதல் சந்திப்பில் இந்தப் பிரச்சனையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். நல்லது. ஆனால் இது போதாது. நீண்டகாலமாக தொடரும் காவிரி சிக்கலில் இருமாநில மக்களிடையே எந்த தரப்பிலிருந்தும் கசப்பையும் பிளவையும் கொண்டுவரும் அணுகுமுறை கூடாது. மேக்கேதாது அணைப் பிரச்சினை மீது அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டிட வேண்டும். 

இதுபோன்ற சிக்கல்களில் பாஜக ஒன்றிய அரசாங்கம் அரசியல் விளையாட்டுகளை நடத்துவது வழக்கம். அதற்கு இடமளிக்காமல் தமிழக மக்கள், விவசாயம், விவசாயிகளின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் புதிய அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்துடன் நட்பு அடிப்படையில் பேச வேண்டும். தமிழ்நாட்டின் நீதி மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


07 June, 2026