மாற்றத்தை வரவேற்போம்; தொடர்ச்சியை எச்சரிப்போம், எதிர்ப்போம்!

$articleData->title

மாற்றத்தை வரவேற்போம்; தொடர்ச்சியை எச்சரிப்போம், எதிர்ப்போம்!

முப்பத்தைந்து பேர் கொண்ட விஜய் அமைச்சரவையில், அவர் உட்பட 34 பேர் புதியவர்கள். தமிழ்நாட்டின் முதல் கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் (22.8%). 4  பெண் அமைச்சர்கள்! மிக முக்கியமான மாற்றம்தான். தவெக ஆட்சியமைக்க முதலில் ஆதரவுக் கரம் நீட்டிய காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்கள். விசிகவின் வன்னியரசு  சமூக நீதித்துறை அமைச்சராகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து திமுக அரசு, முறையாக அரசாணை வெளியிட்டு, ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளை சமூக நீதி மாணவர் விடுதிகள் என மாற்றியது.  இப்போது தவெக அரசு,  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் பெயரை, அமைச்சர் பொறுப்பேற்ற அன்றைய நாளிலிருந்து சமூக நீதித்துறை என மாற்றியுள்ளது. தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, தவெகவின் மாவட்ட, வட்ட நிர்வாகிகளும்கூட அம்மா உணவகங்கள், அரசுஅலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிற்கு சென்று ஆய்வு நடத்துகிறார்கள். அதில், அவர்களின் ஆர்வக் கோளாறும் அனுபவமின்மையும் வெளிப்படுகிறது. சிலர் இதை திட்டமிட்டு செய்வதும் தெளிவாகத் தெரிகிறது.

இவை ஒரு புறம் இருக்க, தவெக அரசு பதவியேற்று  15 நாட்களுக்குள் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள். முன்பொருமுறை கருணாநிதி அவர்கள் சொன்னது போல் ‘ஈரல் கெட்டுப் போன காவல் துறை’, ஊழல் மலிந்த, கரடு தட்டிப் போன அரசு நிர்வாகம், ஜெயலலிதா, பழனிச்சாமி, ஸ்டாலினால் விஜய்க்கு கையளிக்கப்பட்டிருக்கும் போது அதை வைத்துக் கொண்டு எதையும் உடனடியாக மாற்றிவிடவோ, குற்றங்களை உடனடியாக தடுத்துவிடவோ முடியாதுதான். ஆனாலும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கூருணர்வும் குறைந்தபட்ச பொறுப்புணர்வும் கடமையுணர்ச்சியும் வேண்டும்தானே. தேர்தலின்போது தாங்கள் என்ன பேசினோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டாமா? கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டது கண்டு நாடே பதறியது. “குதிரை வேக அரசின்” முதலமைச்சர் ஆமை வேகத்தில் இரண்டு நாள்கள் கழித்து அறிக்கை விடுகிறார். முதல் தொழில் துறை பெண் அமைச்சரான கீர்த்தனா, அரசியல் கேள்விகளை  அப்புறம் பார்க்கலாம் என்கிறார். அமைச்சர் அருண்ராஜ், இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தாயிற்று இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டு அதிர்ச்சியளிக்கிறார். அந்தச் சிறுமியின் உடல் அவரின் தாயிடம் காட்டப்படாமலேயே அவசர அவசரமாக எரிக்கப்பட்டது மட்டுமின்றி, அந்த தாய் மீதே அவதூறு பரப்பப்படுகிறது. இதெல்லாம் எதற்காக? யாரைக் காப்பாற்ற?. ‘பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பு' பற்றிய விழிப்புணர்வும் கூருணர்வும் முதலில் மேலிருந்து - முதலமைச்சர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினரிடம் இருந்து வரவேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு சமூகத்தின் பொறுப்பு என்றால் சமூகத்தின் பிரதிநிதியான அரசாங்கத்தின் பொறுப்பு. 'பெண்களின் காவலன்' என்று சொல்லிக் கொள்ளும் தவெக அரசாங்கம் செயல்படவும் வேண்டும்.

நடக்கிற பல குற்றச் செயல்களுக்கு மதுவும் போதையுமே காரணமாக இருக்கும்போது ‘மதுவிலக்கு’ எப்போது என்று கேட்டால், மது விலக்கை கொண்டு வந்தால், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால், கள்ளச் சாராயமும் போதை கலாச்சாரமும் பெருகிவிடும் என்று தவெக அமைச்சர் விக்னேஷ் சொல்கிறார். முந்தைய அதிமுக, திமுக அமைச்சர்களும் இதையேதான் சொன்னார்கள். புதிய அமைச்சர் ‘டாஸ்மாக்’கிற்கான கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இருக்குமென்கிறார் சில நிறுவனங்களில் இருந்து மட்டும் என்றில்லாமல், எல்லா நிறுவனங்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படுமென்கிறார். “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” வாங்குவது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் நடக்கிறது என்று அருமையாக விளக்கமளிக்கிறார் அமைச்சர். ஆனால், 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாகச் சொல்லும் தவெக அரசு, அதில் வேலை பார்த்த தொழிலாளரின் வேலை, வாழ்க்கை பற்றி பேச மறுக்கிறது. 

அதேபோல், தேர்தலுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம், தனியார்மயமாக்க எதிர்ப்பு கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்த விஜய் இப்போது முதலமைச்சராகியுள்ளார். தொழிலாளரின் கோரிக்கை அப்படியே இருக்கிறது. வரிசை கட்டி வரும் கார்ப்பரேட் முதலாளிகளைப் பார்க்கும் முதலமைச்சர் விஜய், “ஏன் தொழிலாளர் பிரதிநிதிகளை, தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து பேசக்கூடாது? என்று பொருத்தமாகவே கேட்கிறார் ஏஅய்சிசிடியு-உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி. 

தமிழ்நாட்டில் மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது என்று சொல்லும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், ஏழைகளுக்கான அரசு மருத்துவமனைகளை  மேம்படுத்துவதை பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், அமைச்சரானவுடன் முதல் வேலையாக, 8000 தனியார் மருத்துவமனைகள் திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இது மருத்துவத் துறையை தனியார்மயமாக்குவதை நோக்கித் தள்ளும் நடவடிக்கையல்லவா.

  ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன் உத்தரவாதம் அளித்திருந்த திரு.விஜய், இப்போது ரூபாய் ஐம்பதாயிரம் வரையிலான கடன் மட்டுமே முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதை விவசாயிகளின் போராளியும் திருவண்ணாமலைத் தொகுதி தவெக வேட்பாளருமான அருள் ஆறுமுகம் கண்டித்துள்ளார். தவெக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொழில் துறை அமைச்சரும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கீர்த்தனா, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய உத்தியாக, விளம்பர வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். ஆறாயிரம் கோடியில் விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி கொண்டுவரப்படும் என்கிறார். அவர், தனக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆண்டுதோறும் பலரது உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தடுக்க, தனக்கு வாக்களித்த அம்மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் நடத்தப்பட்ட கொலை போல், இப்போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நெட்டூரில் ஆதிக்க சாதிவெறிக் கும்பல், தலித் குடும்பத்தினரின் திருமண வீட்டிற்குள் புகுந்து கொலை வெறித் தாக்குல் நடத்தியுள்ளது.  6 பேர் கொடுங்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பவம் நடந்து மூன்று நாள்கள் ஆகியும் அரசுத் தரப்பில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். தவெக அரசு, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், இந்த சாதியாதிக்க வெறியர்கள் விரைந்து தண்டிக்கப்படுதை உறுதி செய்வதோடு, எதிர்காலத்தில் சாதியாதிக்க வெறித் தாக்குதல்கள், கொலைகள் நிகழாமல் தடுத்திட காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுமிகள், பெண்கள், தலித்துகள் மீது நடத்தப்படும் கொடுங்குற்றங்களுக்கு, தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகளைப் பொறுப்பாக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியாதிக்க, ஆணவப் படுகொலைகள் தடுப்பு சிறப்புச் சட்டம் வேண்டுமென்று இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இடதுசாரிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக, இந்தக் கோரிக்கையை உடன் நிறைவேற்றி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இருப்பதை பொருளுள்ளதாக ஆக்க வேண்டும். 

அரசியல் ஆதாயம் தேடி, திமுக, அதிமுக, மதிமுக கட்சிகளுக்குள் மாறுவது என்பது புதியது கிடையாது. ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள், பதவியேற்ற பதினைந்தே நாளில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே வேகத்தில் ஆளுங்கட்சியில் சேர்ந்துள்ளனர். உத்தரவாதம் எதுவுமில்லாமலா, பதவியைத் துறந்து தவெகவில் தஞ்சமடைந்தார்கள்? ஆனால் இது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் கூட்டுத் துரோகமல்லவா?  ‘தவெக, அடிப்படையில் மாறுபட்ட கட்சி’, என்ற பிரகடனம் மாறிவிட்டதா? மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ‘கால அவகாசம்’ கேட்ட விஜய், இதுபோன்று ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் செயல்களைச் செய்வதில் ‘குதிரை வேகம்’ காட்டுவது ஏன்?

திருச்செந்தூர் கோயிலில், முருகப் பெருமானை முன்னின்று தரிசிக்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என அறநிலையத்துறை அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியதைக் கண்ட மக்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், 10 ரூபாய் வாங்கிய தூய்மைப் பணியாளருக்கு பணி நீக்கம், அர்ச்சகருக்கு மன்னிப்பா? என்ற கேள்வி வைரலானவுடன் அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அமைச்சர் ரமேஷின் செயலைக் காட்டிலும் அந்த ஊழல் அர்ச்சகர்களுக்கு ஆதரவாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் இறங்கியதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் தீர்ப்பை தவெக அரசு தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. அவர்கள் ‘உண்மையான மாற்றத்தை’ எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள். உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரவில்லையென்றால் மக்கள் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்.வார்கள். அதற்கு இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் முன் களத்தில் நிற்பார்கள்.

 

07 June, 2026