உச்சநீதிமன்றத்திற்குள் கரப்பான் பூச்சிகள் நுழைந்துவிட்டன

$articleData->title

உச்சநீதிமன்றத்திற்குள் கரப்பான் பூச்சிகள் நுழைந்துவிட்டன

இறுதி நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என்பதால், விசாரணைக்கு வரும் வழக்குகளில் தரப்பினர்கள் இல்லாதவர்கள் மீது பொதுவாக சேற்றை வாரி இறைக்க, வழக்கில் தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றி நினைத்ததை எல்லாம் பேச தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக, தலைமை நீதிபதி திரு சூரியகாந்த் கருதுகிறார்.

போராட்டக்காரர்களை "அந்தோலன் ஜீவி" என்று பழித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேலை வெட்டி இல்லாமல், நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்தையும் எதிர்ப்பதாகக் கடிந்து கொண்டார். கொடி பிடிக்கும் சங்கங்களால்தான் தொழில்கள் முடக்கப்படுகின்றன எனக் கருத்துரை வழங்கினார். இப்போது இந்தியாவின் இளைஞர்களை இளம் வழக்கறிஞர்களை, சமூக ஊடக / தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர்களை, "கரப்பான் பூச்சிகள்" "ஒட்டுண்ணிகள்" என இளக்காரமாகவும் அகங்காரமாகவும் சாடி உள்ளார்.

திருமிகு  தலைமை நீதிபதி தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தின் இன் ஹவுஸ்  (ln House) அதாவது நீதிமன்றத்திற்கு உள்ளேயே நீதிபதிகள் பற்றிய புகார்களை விசாரிக்கும் முறை தொடர்பாகவும், ஆர்த்தி ராகவன்  என்ற மும்பை வழக்கறிஞர் SERVING JUSTICES BUT NOT JUSTICE  "நீதிபதிகளுக்கு சேவை நீதிக்கு சேவை அல்ல" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை தி இந்து நாளேட்டில் எழுதினார்.

அவர் குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் தொடர்பாக.

திரு.ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, 2019ல் அவர் மீது நீதிமன்ற பெண் பணியாளர் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அந்தப் பெண் விசாரணை ஏதும் இல்லாமல் வேலை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார், உச்ச நீதிமன்றத்திற்கும், நீதித்துறை சுதந்திரத்திற்கும் எதிரான சதி என, ஆவேசமாய் பேசினார்கள். இன் ஹவுஸ் விசாரணையில், அதாவது, நான்கு சுவர்களுக்குள் காதும் காதும் வைத்தாற் போல், அந்த பெண்ணின் புகார் மீது, அந்த பெண்ணின் பங்கேற்பு இல்லாமல் விசாரணை முடிக்கப்பட்டு, விசாரணை அறிக்கையை அந்த பெண்ணுக்கு தராமலே, அவரது புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்தப் பெண்ணின் புகாரே மாபெரும் சதி என்று சத்தம் எழுந்ததே தவிர, சாரமோ சாட்சியமோ இல்லாமல், சதி புகார் வெற்று புகார் ஆனது. திருமிகு கோகாய் ஓய்வு பெற்ற பிறகு, அந்தப் பெண் முழு பின் சம்பளத்துடன் மீள வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். மனிதர்கள் பொய் சொல்லலாம் சூழ்நிலைமைகள் பொய் சொல்லாது என்ற சாட்சியக் கோட்பாட்டிலிருந்து, உச்ச நீதிமன்றம், அந்தப் பெண்ணின் புகாரை நியாயமாக விசாரித்ததா அல்லது தலைமை நீதிபதியை பாதுகாக்க முயன்றதா என, வாசகர்கள் முடிவுக்கு வரலாம்.

அதிகாரம் எதுவரை பாயும் என திரைப்படம் எடுக்கத்தக்க, உச்சநீதிமன்ற வரலாற்றின் இந்த அத்தியாயம் பற்றி, நீதித்துறை நெடுக ஒரு கனத்த மவுனம் கடைபிடிக்கப்படுகிறது.

திரு. சூரியகாந்த் அவர்கள், நவம்பர் 2025 ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனார். அவர் பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பிணை வழங்கப் பணம் பெற்றார், சட்டவிரோதமாய் சொத்து குவித்தார் என்ற புகார்கள் இவர் மீது எழுந்தன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கெஹார், திரு சூரியகாந்துடன் நீதிபதியாய் சில வருடங்கள் பணியாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ.கே.கோயலிடம் விசாரித்தபோது, திரு ஏ.கே.கோயல் சொத்து குவிப்பு, அடுத்தடுத்த நிலை நீதிபதிகள் நியமனத்தில் ஊழல் சாதீயம் என்ற புகார்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்றார். உச்ச நீதிமன்றம் திரு. சூரியகாந்தை இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்க பார்த்தபோது திரு ஏ.கே.கோயல் தலைமை நீதிபதிக்கு திரு சூரியகாந்த் மீதான புகார்களை விசாரிக்குமாறு கடிதம் எழுதினார். அந்த புகார்கள் என்ன ஆனது என, இதுவரை தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை, கருத்து சுதந்திரம் வெளிப்பாட்டு சுதந்திரத்தின் ஒரு பகுதி எனவும், அது பங்கேற்பு ஜனநாயகத்தின் ஒரு பகுதி எனவும், திரும்பத் திரும்பச் சொல்லி உள்ளது.  ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்ணப் கோஸ்வாமி "நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது"  என அன்றாடம் சொல்வார். இது வரை உயர்மட்ட நீதித்துறை தொடர்பான எண்ணற்ற புகார்கள் எழுந்துள்ளன. புகார்கள் என்ன ஆயின என நாட்டிற்கு தெரியாது. முதலமைச்சர்கள், மத்திய / மாநிலஅமைச்சர்கள்,  தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்று வரை எந்த ஒரு நீதிபதியும் தண்டிக்கப்படவில்லை. குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் NCERT என்ற நிறுவனம் உள்ளது. கல்வி, சமூகம், அறிவியல் போன்ற விஷயங்களில் தேர்ந்த அறிஞர்கள் பாடத்திட்டம் வகுக்கும் பணியும், இங்கு நடக்கிறது. எட்டாம் வகுப்பு பாடத்தில், சமூகத்தில் நீதித்துறையின் பங்கு என்ற ஒரு பாடமும், அதில் நீதித்துறையில் ஊழல் என்று ஒரு துணைத் தலைப்பும் இருந்தது. இது தொடர்பான செய்தி ஒன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வந்தது. நீதித்துறை பற்றி நூற்றுக்கணக்கான புகார்கள் வந்துள்ளன என்றும், நீதித்துறையின் வெவ்வேறு மட்டங்களில் ஊழல் இருப்பதை மக்கள் காண்கின்றனர் என்றும், சில வரிகள் இடம் பெற்றுள்ளன. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உடனே, அந்த புத்தகத்தின் எல்லா பிரதிகளையும் பறிமுதல் செய்யுமாறும், இந்த புத்தகம் பொதுவெளியில் எந்த வகையிலும் இருக்கக் கூடாது என்றும், NCERT  இயக்குநர் எங்கு எப்படி யாரால் இந்த மாபெரும் தவறு நடந்தது என விவரங்கள் தருமாறும் 26.02.2026 அன்று உத்தரவிட்டது. 11.03.2026 அன்று, தனது 26.02.2026 உத்தரவு பற்றியும் பொறுப்பில்லாமல் எழுதுகிறார்கள் என்றும், அவர்களை அரசாங்கம் அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பாட தயாரிப்பில் ஈடுபட்ட மூவரிடமிருந்தும் ஒன்றிய மாநில அரசாங்கங்கள் விலகி நிற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. புத்தகத்திற்கு தடை. பாடம் எழுதியவர்களுக்கு எவரும் வேலை கொடுக்கக் கூடாது என தடை.

விசாரணை இல்லாமல் எவரும் தண்டிக்கப்படக்கூடாது, புத்தகங்களை கருத்து உரிமைகளை பறிக்கக் கூடாது என்ற கோட்பாடுகளை தலைமை நீதிபதி திரு. சூரியக்காந்த் தலைமையிலான அமர்வம் பொருட்படுத்தவே இல்லை. 22.05.2026 அன்று இந்த மூவரும் வேண்டும் என்று எழுதவில்லை என்றும், அவர்களுக்கு வேலை தடை போட்டதை அகற்றுவதாகவும், பெரிய மனதுடன் சொன்னது. ஆனால் ஒன்றிய அரசாங்கம் இனி அந்த மூவருக்கும் வேலை தரப்போவதில்லை என சொன்னது. நடைமுறையில், கருப்பு பட்டியலில் அவர்கள் தொடர்வார்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்கள், 13ஆம் வயதில் இருப்பவர்கள். ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள். அவர்களுக்கு கரப்பான் பூச்சி பற்றியும், தலைமை நீதிபதி பேசுவது பற்றியும் கூட, தெரிந்து கொள்ள நிறையவே வாய்ப்புண்டு.

  எட்டாம் வகுப்பு மாணவர்கள் பதின்ம வயதினர். அவர்கள் மீது தந்தை வழி கட்டுப்பாடு, தார்மிகக் காவல் தேவையில்லை. பாரதியின் பாப்பா பாட்டு வரிகளைச் சற்று கவனப்படுத்தி கொள்வோம்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!  

பாப்பாக்களே, பாதகம் செய்பவர்களை பிரித்துப் பார்த்து அணுக முடியும் என்றால், பதின் பருவத்தினரால் ஊழல் பற்றி பகுத்துப் புரிந்து கொள்ள முடியாதா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி.பருச்சா, 20 சதவீதம் நீதிபதிகள் ஊழல் வயப்பட்டவர்கள் என்றார். மிகுந்த மரியாதைக்குரியவரான நீதிபதி கிருஷ்ண அய்யர் குடியரசு தலைவருக்கு 2011 ல் எழுதிய கடிதத்தில், "ஊழலை தண்டிக்கும் மாபெரும் அதிகாரம் படைத்த நீதித்துறை என்ற புனிதமான கருவியையே ஊழல் பாதித்துள்ளது. ஒரு ஊழல் நீதிபதி கூட பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டார். சட்ட அமைச்சராக இருந்த மூத்த வழக்கறிஞராகக் களம் பல கண்ட சாந்தி பூஷன் 16  தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பாதிப்பு உள்ளவர்கள் என்றார். விசாரிக்குமாறும், தான் சொன்னது தவறு என்றால் தண்டிக்குமாறும், கேட்டுக் கொண்டார். சட்ட அமைச்சர் கடந்த 10 வருடங்களில், தலைமை நீதிபதியிடம், நீதிபதிகள் மேல் 8,630 புகார்கள் வந்ததாக குறிப்பிடுகிறார்.

அப்படி இருக்க,  நீதித்துறையில் ஊழல் என்று படித்தாலே, மாணவர்கள் எல்லா நீதிபதிகளும் ஊழல் பாதிப்புடையவர்கள் என நம்புவார்கள் எனக் கருதுவது, மாணவர்களின் பகுத்தறிவைக் குறைத்து  மதிப்பிடுவதாகாதா?

கரப்பான் பூச்சிகள் எப்படி எந்த சூழலில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தோன்றினார்கள்? ஊடகங்களைச் சந்தித்து, அவர்கள் கேள்விகளைச் சந்திக்கக் கூட விரும்பாத பிரதமர் உள்ள நாட்டில், மாற்று கருத்துள்ளவர்களும் சிறுபான்மையினரும் வேட்டையாடப்படும் நாட்டில், டபுள் இன்ஜின் புல்டோசர் ஆளும் நாட்டில், கார்ப்பரேட் எடுபிடி-கைத்தடி ஊடகங்கள் உள்ள நாட்டில், உழைப்புக்கு மதிப்பில்லாத நாட்டில்தான் திரு.சூரியகாந்த் இளைஞர்களை, வழக்கறிஞர்களை சமூக ஊடக / தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர்களை கரப்பான் பூச்சிகள், போலி பட்டதாரிகள், ஒட்டுண்ணிகள் என்று விமர்சிக்க முடிந்துள்ளது.

இந்திய மக்கள் சார்பாக, இந்தியா சார்பாக, நாம் திரு.சூரியகாந்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்று சொல்லப்படுகிறது. அரசியல் மீது, பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மீது, அதிருப்தி கொண்டுள்ள, விலகி நிற்கிற சில கோடி புதிய தலைமுறையினரை, இந்தியாவின் சமூக பொருளாதார அரசியல் நிலைமைகள் பற்றி, கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல்லால் யோசிக்க வைத்ததற்காக, இந்திய ஜனநாயகம் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது.


07 June, 2026