மக்கள் அவஸ்தையும் மோடி அறிவுரையும்

$articleData->title

மக்கள் அவஸ்தையும் மோடி அறிவுரையும்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலையோ ஆயிரங்களில் ஏறியுள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96 க்கும் அதிகமாக உயர்ந்து கொண்டே போவதால், ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைவாசி அதிகரிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது. வருமானம் மிகக்கடுமையாக சரிகிறது. அதிகரித்துவரும் விலைவாசியின் காரணமாக, வாழ்க்கை நடத்த முடியவில்லை என குஜராத் மாநில சூரத் நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வேலையை விட்டு, அந்த ஊரை விட்டு வெளியேறிய துயர வீடியோ வைரல் ஆனதைக் கண்டோம். டெல்லியைச் சுற்றியுள்ள பல மாநிலத் தொழில் நகரங்களில் – ஹரியானாவின் மானேசர், உத்தரபிரதேசத்தின் நோய்டா உள்ளிட்ட பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் நகரங்களில் – தொழிலாளர் கலகங்கள், அதன்மீதான ஒடுக்குமுறைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர், சமூக செயல்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது போன்றவையும் தொடர்வதைக் காண்கிறோம்.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே குறைந்த வருமானத்தில் வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை தியாகம் செய்ய சொல்கிறார் பிரதமர் மோடி. அப்படித் தியாகம் செய்வதுதான் ‘பொருளாதார தேசபக்தி’ என்று சொல்வதன் மூலம், அப்படிச் செய்யாவிட்டால் ’தேச துரோகம்’ என சொல்லாமல் சொல்கிறார்.

கோவிட் வந்தாலும் சரி, பணமதிப்பகற்றல் என்றாலும் சரி, உக்ரேன் போர் என்றாலும் சரி, தற்போது சந்திக்கும் ஈரானின் மீதான அமெரிக்கப் போரானாலும் சரி, தியாகம் செய்ய வேண்டியவர்கள் சாமான்ய மக்கள்தான்.

”தேசம் முதலில், வசதியைவிட கடமை முதலில்” என நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் மோடி.’பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்’ என்பது மக்களுக்கு மட்டும்தான். மோடிக்கு கிடையாது. அவரது கார்ப்பரேட் நண்பர்களுக்கு கிடையாது.

வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் என்கிறார் மோடி. நாட்டிலுள்ள தொழிலாளர்களில் 93 சதவீதத்திற்கும் மேலானவர்கள் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள். தினசரி வீட்டிலிருந்து வெளியே சென்று வேலை செய்தால்தான் அவர்கள் வீட்டு அடுப்பு எரியும். வீட்டிலேயே எப்படி இருக்க முடியும். மோடி கட்டளைகள் பணம் படைத்தவர்களுக்கு ஒரு பெரிய விசயம் இல்லை. ஆனால், அன்றாடம் காய்ச்சிகளுக்கு அது பெரும் சோகம்.

தங்கம் வாங்காதீர்கள் என்கிறார் மோடி. மக்கள் பயந்து போய், திருமணத்திற்கு தாலி கூட கிடைக்காதோ என பதறிப்போய் இருக்கிறார்கள். தங்க வியாபாரிகளின் பதுக்கல் நடவடிக்கையைத்தான் தூண்டி விட்டிருக்கிறார் மோடி.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்கிறார் மோடி. ஆனால், அவர் பின்னால் செல்லும் கார்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. காரில் 5 பேர் பயணம் (கார் பூலிங்) செய்யுங்கள் என்கிறார். கார் வைத்திருக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு காரில் செல்வதே அவர்களுக்கு பெரும் பாடு.

விமான பயணத்தை குறையுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் உலகம் முழுவதும் தனி விமானத்தில் சுற்றுப்பயணம் சென்று விட்டார்.

மின்சார வண்டிகளுக்கு மாறுங்கள், ரயிலில் பயணம் செய்யுங்கள், ரசாயன உரங்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்றெல்லாம் கட்டளைகள் போட்டிருக்கிறார் மோடி.

மக்கள் பொறுப்பு, மக்கள் தியாகம் பற்றி பேசும் பிஜேபி அரசு, தன் பங்கு என்ன என்பதைப் பற்றி, என்ன கொள்கை மாற்றங்கள் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறது.

மாறாக, முதலாளிகளும், விமான நிறுவனங்களும் ஈரான் மீதான அமெரிக்க போரினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 181 பில்லியன் மூலதன நிதியுடன் கூடிய ஒரு கடன் திருப்பும் உறுதியை வழங்கிடும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்தாலும் பணவீக்கம் 50 அடிப்படைப் புள்ளிகள் ஏறும், வளர்ச்சி அடிப்படைப் புள்ளிகள் 15 சதவீதம் இறங்கும் என ரிசர்வ் வங்கியின் நிதி அறிக்கை கூறி இருக்கும் போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், விலைவாசி உயர்வு சுமையை மக்கள் மீதே திணிக்கிறது.

உலக எண்ணெய் விலை குறைந்த போதும் கூட, ஒன்றிய அரசு வரியை அதிகரித்ததனால், அந்த விலை குறைவின் பயன் மக்களுக்கு கிட்டவில்லை. அந்த நேரத்தில் இதர நாடுகள் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்ய தடை இருந்ததால், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு மலிவான விலையில் இறக்குமதி செய்து அதனை உலக நாடுகளுக்கு விற்று பெரும் லாபம் சம்பாதித்தது அம்பானிதான். ஆனால், மக்களை தியாகம் சொல்லும் மோடி, பெரும் முதலாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக சலுகைகளை வாரி வழங்குகிறார்.

வளமான இந்தியா படைப்பதாக சொன்னதை விடுத்து இப்போது அதனை மக்களின் சிக்கன இந்தியாவாக உருமாற்றி வருகிறார் மோடி. ’நல்ல நாள்’, ’அமிர்த காலம்’ எல்லாம் காற்றில் கரைந்து போய், இப்போது ’பேரழிவின் காலம்’ என நமக்குச் சொல்கிறார் மோடி. ஈரான் மீதான போரால் சிலிண்டர் கேஸ் விலை உயர்ந்தால் என்ன செய்ய முடியும் என மோடிக்காகப் பரிந்து பேசுகிறார் தமிழ்நாட்டின் தொழில் அமைச்சர் மாண்புமிகு கீர்த்தனா அவர்கள்.

கொரோனா ஒரு பேரிடர். ஆனால், தற்போதைய விலைவாசி உயர்வை அதனோடு ஒப்பிட்டு மக்களை தியாகம் செய்யச் சொல்வது, அதுதான் தேசபக்தி என்பது ஒரு மோடி மஸ்தான் வேலைதானே தவிர வேறில்லை. பிஜேபி அரசும் மோடியும் தாம் கடைபிடிக்கும் கொள்கைகளை, அதன் உள்நாட்டு காரணங்களை, தமது கொள்கைத் தவறை மறைப்பதற்காக, அரசின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு தந்திரமே அது.

2014ல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபோது, பெட்ரோல் விலையும் சரி, டாலர் மதிப்பும் சரி, ரூ.60 அளவில் இருந்தது. தற்போது, இரண்டும் ரூ 90ஐ தாண்டிவிட்டன.

ஈரான் மீதான அநியாயமான போர் இந்தியாவிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும், போர் தொடுக்கும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா ஏன் நிறுத்தப்பட வேண்டும்? அதனால் திணிக்கப்படும் சுமையை ஏன் மக்கள் ஏற்க வேண்டும்? அமெரிக்க கட்டளைகளுக்கு அடிபணிந்து இந்தியாவின் பொருளாதார வர்த்தக முடிவுகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தை ஏன் அடகுவைக்க வேண்டும்? அதானி செய்த ஃபிராடுக்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வரும் வழக்கிலிருந்து அவரைக் காப்பதற்காக கொடுக்கப்படும் விலைதான் நாட்டின் நீண்டகால சுதந்திரத்தை, பொருளாதார நலன்களை அமெரிக்காவிடம் அடகு வைப்பதா? 

பிஜேபி அரசின், மோடியின் தவறான கொள்கைகள் காரணமாக, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் காரணமாக, அமெரிக்க ஆதரவு கொள்கைகள் காரணமாக எழுந்துவரும் நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்பதற்கு மாறாக, அந்த நெருக்கடியின் சுமை சாமான்ய மக்கள் மீது திணிப்பதில்தான் அரசு குறியாக இருக்கிறது. 

07 June, 2026