எடப்பாடியின் தேர்தல் வாக்குறுதிகள்: பாஜகவின் பிற்போக்கு, ஏமாற்று உத்திகள்

$articleData->title

எடப்பாடியின் தேர்தல் வாக்குறுதிகள்

தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி எடப்பாடி அதிமுகவின் ஆட்சியா அல்லது அமித்ஷா சொல்லும் தேஜகூவின் இரட்டை எஞ்ஜின் ஆட்சியா என்ற விவாதம் தேஜகூவினுள்ளே முடிவுறாமல்  நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி "பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க" என்பது போல, தமிழ்நாட்டு மக்களுக்கு 3 தவணைகளில் 16 வாக்குறுதிகளை தந்திருக்கிறார். எடப்பாடியின் கடந்த  கால "பொற்கால"  ஆட்சியை,  நிகழ்காலத்தில் எதிர்க்கட்சியாக அவர் ஆற்றிய "அரும்பணிகளை" சற்றே நினைவுபடுத்திக் கொண்டு அவரின் வாக்குறுதிகளை பரிசீலிக்க வேண்டும். 

முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக  எடப்பாடி: 

நான்கரை ஆண்டு கால எடப்பாடி ஆட்சியானது,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தலித் வன்கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், கந்து வட்டிக் கொடுமையால், கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள், உச்சத்தைத் தொட்ட காவல் கொட்டடிக் கொலைகள், பொருளாதாரச் சீரழிவு நிறைந்த மோசமான  ஆட்சியாகவே இருந்தது. அது மட்டுமல்ல ஒன்றிய பாசிச மோடி அரசு கொண்டுவந்த  ஜிஎஸ்டியிலிருந்து சிஏஏ வரை, கார்ப்பரேட் காவி கல்விக் கொள்கையிலிருந்து  தொழிலாளர் - விவசாயிகள் விரோத சட்டங்கள் வரை ஒன்றுவிடாமல்  ஆதரித்த அரசு எடப்பாடி அரசுதான்.

கடந்த அய்ந்து  ஆண்டுகளாக, திமுக ஆட்சியில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், அதன் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை எதிர்த்தும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடும் குற்றங்களுக்கு நீதி கோரியும், அந்தக் குற்றங்கள் திமுக ஆட்சியிலும் தொடர்வதை எதிர்த்தும்,  மக்கள் இயக்கங்களும், இடது, ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. ஆனால்  எடப்பாடியின் அதிமுக, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும்,  திமுக அரசுக்கு எதிராக மக்கள் நலன் சார்ந்து எந்தக் காத்திரமான போராட்டத்தையும்  நடத்தவில்லை என்பது மட்டுமல்ல அதனுடைய  திமுக எதிர்ப்பு நடவடிக்கையே  வலதுசாரி தளத்திலிருந்து எழுவதாக மக்கள் விரோதத் தன்மை கொண்டதாகதான் இருந்தது.

முதல் தவணை  வாக்குறுதிகள்:

குல விளக்குத் திட்டம். 

குலவிளக்குத் திட்டம் என்ற பெயரே பிற்போக்குத்தனமானது; பெண்ணடிமைத்தனத்தையும் இந்துமத சார்பையும் வலியுறுத்துகிறது.  ஒருவேளை,  மதச்சார்பின்மையும் மகளிர் உரிமையும் பாஜகவுக்கு பிடிக்காது என்பதால்  இந்தப் பெயரை எடப்பாடி  சூட்டியிருக்கலாம். மகளிருக்கு மாதம் ரூ.1000/- என்று திமுக அறிவித்தபோது  இந்தத் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என்ற எடப்பாடி, சேமநலத் திட்டங்களே  வளர்ச்சிக்கு எதிரானது என வசைபாடும், அவற்றை ஒழித்துக்கட்ட சதிசெய்யும்  பாஜகவுடன் சேர்ந்துகொண்டு  இன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000/- வழங்குவோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றவே. 

ஆண்களுக்கும்  கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: 

பொருளாதார ஏற்றத்தாழ்வை, சமூக ஏற்றத்தாழ்வை கணக்கில்கொண்டு உருவாக்கப்படும் சேமநலத் திட்டத்தின் அடிப்படையை தகர்க்கிற திட்டம்தான் எடப்பாடியின் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்; இது பெண்களுக்கு முன்னுரிமை தேவை என்பதை நிராகரிக்கிறது; அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கு  கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் நாம் கோரும்போது அது  ஆண்களுக்குமானதுதான். அங்கே வர்க்க அடிப்படையில் கோருகிறோம்; பொத்தாம்பொதுவாக அல்ல. 

அம்மா இல்லத் திட்டம்: 

சொந்த வீடற்ற அனைவருக்கும்,  விலையில்லா வீடு என்பது மிக அவசியமான திட்டம்தான். நில உரிமையை, நிதி உரிமையை அன்றாடம் பறித்துக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடாமல், அடிபணிந்து செல்கிற எடப்பாடியின் மாநில அரசால் இதை எப்படிச்  சாதிக்க முடியும்? அரசே இடம் வாங்கி கட்டித் தரும் என்கிறார் எடப்பாடி.  நில உச்சவரம்பைக் குறைப்பது, சட்டத்தைக் கறாராக நடைமுறைப்படுத்துவது, பஞ்சமி நிலங்களை மீட்பது, கோவில், மடம், அறக்கட்டளை, பெருநிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து நட்ட ஈடு இல்லாமல், நிலங்களைக் கையகப்படுத்துவது உள்ளிட்ட நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளாத, மேற்கொள்வதற்கான அரசியல் உறுதி இல்லாத எடப்பாடியால்  இதை சாத்தியப்படுத்த முடியுமா?

"ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது  அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்" என்றும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.  நல்லதுதான். சம்மந்தப்பட்ட மகன் சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமா? ஒரே வீட்டில் பெற்றோருடன் சேர்ந்துவாழும் திருமணமான மகளுக்கு ஏன் வீடு வழங்கக்கூடாது?  என்பதையும் எடப்பாடி சேர்த்துச் சொன்னால் நல்லது. 

100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்:

எடப்பாடியின் வாக்குறுதிகளிலேயே மிகவும் மோசடியானது  இது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருந்த வேலை உரிமையை  ஒழித்துக்கட்டுகிற, வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய 90% நிதியை 60%ஆக குறைத்திருக்கின்ற, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்தத் திட்டத்தையே இல்லாமல் ஆக்குவதற்கு சதிசெய்கிற மோடி அரசின் புதிய விபி கிராம் ஜி திட்டத்தை எடப்பாடி வரவேற்பது மட்டுமல்ல, கிராமப்புர ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், தலித், பழங்குடியினருக்கு எதிரான இந்தப் புதிய திட்டத்தை எதிர்த்துப் போராடும் எதிர்க்கட்சிகளையும் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிற எடப்பாடி, 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று சொல்வது மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டாரோ?

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு விபி கிராம் ஜி என்று மோடி அரசு பெயர் சூட்டியிருக்கிறது. காந்தியைக் கொன்றவன் நாதுராம் கோட்சே. காந்தி  பெயரில் இருக்கும் திட்டத்தைக் கொன்று ‘ ராம்’ என வருமாறு மாற்றியுள்ளது மோடி அரசு. அதனால்,  மகாத்மா காந்தியில் பெயரிலேயே முந்தைய திட்டமே தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்  போராடும்போது, எடப்பாடியோ, காந்தி பெயர் நீக்கத்தை கண்டிக்கத் துணிவில்லாமல்,  எந்த பெயர் இருந்தால் என்ன, வேலைதானே வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்:

மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்கிறார் எடப்பாடி. அம்பானியின் பெட்ரோல் விற்பனையை அதிகரிக்கவா? பெட்ரோலையும் மகளிருக்கு மானியத்தில் வழங்கச் செய்வாரா எடப்பாடி? மகளிருக்கு கட்டணமில்லா நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதும்  குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்துவதும்தான் இன்றைய தேவை. சுற்றுச் சூழலுக்கும் கூட அதுவே நல்லது. 

இரண்டாவது, மூன்றாவது தவணை வாக்குறுதிகள் 

ஓய்வூதியம், உதவித்தொகையை மாதம்  ரூ.2000/-ஆக உயர்த்துவது, மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர், படித்த வேலை வாய்ப்பில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை என அறிவிப்புகள் வரிசை கட்டுகின்றன.

அனைத்திற்கும் மேலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித்தொகை ரூ.10,000/-  அறிவிக்கப்பட்டிருக்கிறது. (கருணைத் தொகை என்றதற்கு எதிர்ப்பு எழுந்த பின்னணியில் உதவித்தொகை என்று பெயர் மாற்றப்பட்டது). ஆனால், ஒரே ஒரு முறை மட்டும்தான் வழங்குவோம் என்றும் சொல்லிவிட்டார் எடப்பாடி. இந்தத் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள் என்றதற்கு, “வரியை உயர்த்துவதில் பல்வேறு வழிகள் இருக்கின்றது. நிதித்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மூலமாக ஆய்வு செய்து எந்தெந்த வகையில் வரியை உயர்த்த முடியுமோ அவ்வாறு உயர்த்தி, நிதியைப் பெற்று அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவோம்” என்கிறார். மக்களுக்கு வரிச்சுமையை ஏற்றும், மாநிலத்தின் வரிவருவாயை பறிக்கும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவளித்தபோது கலந்தாலோசனை செய்த நிபுணர்கள் கைவசம் இருக்கிறார்கள் போலும்.

இஸ்லாமியர்களின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த எடப்பாடி, இன்று “இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்” என்று சொல்வது கேலிக்கூத்து இல்லையா? உதய் மின்திட்டத்திற்கு ஆதரவளித்துவிட்டு நெசவாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும் என்கிறார் எடப்பாடி. ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்தாலும் பரவாயில்லை, அரச பதவி இருந்தால் போதும் என்றிருந்த சாவர்கர் வழி வந்த பாசிச பாஜகவின் அடிமையாக இருந்து கொண்டு, மக்களை ஏமாற்ற வாக்குறுதிகளை அள்ளிவிடும் எடப்பாடிக்கும் அவரின் கூட்டாளிகளுக்கும் பதினொராவது முறையாக தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத் தருவார்கள்

08 March, 2026