விபி கிராம் ஜி சட்டம் வேண்டாம்; மேம்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டமே வேண்டும்

$articleData->title

விபி கிராம் ஜி சட்டம் வேண்டாம்; மேம்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டமே வேண்டும்

திகாலையில் எழுந்து, "இன்று உழைத்தால் தான் அடுப்பெரியும்" என்ற நிலையில் வேலைக்குச் செல்லும் கிராமப்புரத் தொழிலாளர், ஒரு ஸ்மார்ட்போன் வழியாகப் படம் எடுத்து அனுப்ப முடியாத தொழில்நுட்பக் கோளாறால் வேலை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அவலம் இன்று தமிழகக் கிராமங்களில் அன்றாடம் அரங்கேறி வருகிறது. ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் நடைமுறைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை எப்படிச் சூறையாடுவதாக மாறியுள்ளன.

உரிமையாக இருந்த வேலைத்திட்டம்

2005-ல் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் கிராமப்புர ஏழைகளின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கியது. உடல் உழைப்பு தரத் தயாராக இருக்கும் ஒவ்வொரு கிராமவாசிக்கும் குறைந்தது 100 நாட்கள் வேலை, வேலை அளிக்கத் தவறினால் இழப்பீட்டுக் கூலி என அது தொழிலாளரின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வேலைக்கான அனுமதியைப் பெற, தொழிலாளியிடம் ஒரு 'வேலை அட்டை' இருப்பதும், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் வருகைப் பதிவேடு ஒன்று இருப்பதும் போதுமானதாக இருந்தது.

 புதிய சட்டமும் விபி கிராம் ஜி டிஜிட்டல் திணிப்பும்

 பழைய சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் விபி கிராம் ஜி என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை "வளர்ந்த பாரதம் - ஊரக வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்தரவாத இயக்கச் சட்டம், 2025" என்று சொல்கின்றனர். நடப்பு நிதியாண்டில் (2026-2027) நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இச்சட்டம், 125 நாட்கள் வேலை அளிப்பதாகக் கூறினாலும், நிதி ஒதுக்கீட்டையும் வேலை அளிப்பதையும் ஒன்றிய அரசே தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதனால், மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் அளித்த "கேட்கும்போது வேலை" என்ற உழைப்பவர்களுக்கான அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இனி வேலை வழங்கப்படும்; சட்டப்படி அறிவிக்கப்பட்ட 125 நாட்கள் வேலையைக் களத்தில் உள்ள தகுதியான தொழிலாளர் அனைவருக்கும் வழங்க வேண்டுமானால், இத்திட்டத்திற்கு தோராயமாக  ₹3.84 லட்சம் கோடி நிதி தேவைப்படும். ஆனால், அதில் பாதியைக் கூட ஒதுக்காமல் 125 நாட்கள் என்று அறிவிப்பது நயவஞ்சக வேலையாகும். 2024-25 ல் சராசரியாக 50 நாள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள விவரம் நமது கேள்வியை வழிமொழிகிறது.

 டிஜிட்டல் மயமாக்கலும் வேலை உரிமை பறிப்பும்

NMMS (தேசிய செல்லிடபேசி கண்காணிப்பு முறை) என்ற மொபைல் செயலி முறை கட்டாயமாக்கப்பட்ட பின்னர், 2025-2026 ஆண்டில் வேலை நாட்களில் தமிழ்நாடு அதிகபட்ச வீழ்ச்சியை (42.8%) சந்தித்துள்ளது. ஹரியானா போன்ற பிற மாநிலங்களிலும் (41.7% சரிவு) காணப்பட்டது.

புதிய சட்டத்தில் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (R-13011/3/2025-NIC-DRD), மாநிலங்கள் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. இதன்படி, NMMS செயலி மூலம் தொழிலாளரின் புகைப்படம், விவரங்களை நிகழ்நேரத்தில் ஒப்பிட்டுச் சரிபார்த்தால் மட்டுமே வருகைப் பதிவு சாத்தியம். இவை 'விக்சித் பாரத் தேசிய ஊரக உள்கட்டமைப்பு' உடன் இணைக்கப்படுகின்றன. இது தொழில்நுட்ப வளர்ச்சி போலத் தோன்றினாலும், கள எதார்த்தம் மிகவும் கொடூரமானது. சாரைசாரையாய் வேலைக்குச் செல்வது என்பது தலைகீழாக மாறியுள்ளது. சாரைசாரையாய் வெளியிலிருந்து வேலையிலிருந்து வெளியேற்றப் படுகின்றனர்.

 பறிக்கப்படும் மனித மாண்பும் கள எதார்த்தமும்

 நிர்வாகச் சுற்றறிக்கையின் மூலம் 'முகப்படம் எடுப்பது கட்டாயம்' என அரசுகள் வற்புறுத்துகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள்:

1. மாற்றுத் திறனாளிகளின் அவலம்: பார்வையற்ற தொழிலாளரும் விழியைத் திறக்க முடியாதவர்களும் கூட கேமராவிற்காகக் கண்களை உருட்டிக் காட்டக் கட்டாயப்படுத்தப்படுவது மனித மாண்பை இழிவுபடுத்துவது. முகப்படம் எடுக்கும் முறையினால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்று அரசின் நிர்வாகச் சுற்றறிக்கை சொன்னாலும், நடைமுறையில் அவர்களுக்கு வேலை மறுக்கப்படுவது அதிகரிக்கிறது.

2. தொழில்நுட்பக் கோளாறுகள்: பணித்தளப் பொறுப்பாளரின் செல்போன் திறன் போதாமை, சிக்னல் இல்லாமை, சர்வர் முடக்கம் போன்றவற்றால் ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர் வேலையின்றித் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

3. வாழ்வாதார இழப்பு: காலையிலேயே வேலைக்கு வந்துவிடும் தொழிலாளருக்கு அன்று வேலை மறுக்கப்படுவதால், மாற்று வேலை தேடிச் செல்லும் வாய்ப்பும் பறிபோகிறது.

பரிசோதனை எலிகளாகும் ஏழைத் தொழிலாளர்!

அரசியல் சாசனத்தின் 21-வது கூறு ஒவ்வொரு குடிமகனுக்கும் 'வாழ்வாதார உரிமையை' உறுதி செய்கிறது.  ஓய்வுபெற்ற நீதிபதி புட்டுசாமி எதிர் இந்திய அரசு (2017) வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முன் முறையான சட்ட ஏற்பாடுகளும் பாதுகாப்புக் கட்டமைப்புகளும் இருக்க வேண்டும். அதை விடுத்து, அன்றாடக் கூலியை நம்பி வரும் தொழிலாளரை பரிசோதனை எலிகளாக்குவது நியாயமல்ல. வேலைக்கு வந்தவர்களை வெறும் கையோடும் வெறித்த விழியோடும் அனுப்புவது மனிதத் தன்மையற்ற செயல்

தொழில்நுட்பம், மக்களின் சேவகனாக இருக்க வேண்டும். மோடி ஆட்சியில் தொழில்நுட்பம் கிராமப்புர தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் கொடூர எஜமானனாக மாறிவிட்டது.

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு சரிவு

புதிய விபி கிராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடைக்கால நிதி  ₹7,585.49 கோடி மட்டுமே.

அரசுத் தரவுகளின்படி, தமிழ்நாட்டிற்கான வேலை உறுதித் திட்ட நிதி ஒதுக்கீடு கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2023 - 2024 நிதியாண்டில்  ₹12,698 கோடியாக இருந்தது, 2024 - 2025 நிதியாண்டில் ₹10,156 கோடியாக மாறி,  2025 - 2026 நிதியாண்டில்  (கடந்த ஆண்டு) ₹5,878 கோடியாக சுருங்கியது.

'நிர்வாகக் கட்டுப்பாடுகள்' மற்றும் டிஜிட்டல் வருகைப்பதிவு (NMMS) போன்ற கெடுபிடிகளால் தொழிலாளர் ஈடுபாடு குறைக்கப்பட்டதே இந்த நிதிச் சரிவுக்கு முதன்மைக் காரணியாகும். புதிய 'நெறிமுறை சார்ந்த ஒதுக்கீட்டு முறை' (Normative Allocation Model) காரணமாக, நடப்பு நிதியாண்டிலும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மேலும் பாதிக்கப்படலாம்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

கிராமப்புரத் தொழிலாளர்களின் வருமானம் கவலை அளிப்பதாக உள்ளது.  கிராமப்புரங்களில் உணவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அவர்களது வாங்கும் திறனும் வாழ்வாதார நிலையும் தேங்கி நிற்கிறது.

இந்தக் கொடூர சட்டத்தால் ஏற்படும் நெருக்கடியை எதிர்கொள்ள, கிராமப்புர மக்களைப் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டி, அமைப்பாக்கிப் போராட வேண்டும். மக்களின் போராட்டம் தரும் நெருக்கடி அதிகரிக்கும்போது மட்டுமே நமக்கான வேலை நாட்களும், கூலியும் முறைப்படி வந்து சேரும்.

நமது முதன்மைக் கோரிக்கைகள்:

1. மக்களின் வேலையையும், கூலியையும், உரிமைகளையும் பறிக்கும் 'விபி ஜி ராம் ஜி' சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் ஊதியம்  ₹700உடன் மேம்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புர வேலை உறுதிச் சட்டத்தை மீண்டும் கொண்டுவா!

2.:டிஜிட்டல் முகப்படம் எடுப்பதையும், பயோமெட்ரிக் முறைகளையும் உடனடியாக ரத்து செய்! வேலை கேட்கும் அனைவருக்கும் தடையின்றி வேலை கொடு! 

3.தொழில்நுட்பக் கோளாறால் திருப்பி அனுப்பப்பட்ட தொழிலாளருக்கு, வருகைப் பதிவேட்டில் பெயர் இருந்தால், விடுபட்ட நாட்களுக்கான முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

4.e-KYC போன்ற தயாரிப்புப் பணிகளைத் தொழிலாளரின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தனியே மேற்கொள்ள வேண்டும்.

ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை அகில இந்திய அளவில் நடைபெறும் அவிகிதொச உறுப்பினர் சேர்ப்பு, பரப்புரை கிளர்ச்சி இயக்கத்தின் போது இந்தக் கோரிக்கைகளுடன் கிராமப்புர தொழிலாளரை பெரும் எண்ணிக்கையில் சந்திக்க வேண்டும். அமைப்பாக்க வேண்டும். கிளர்ச்சியில் அணிதிரட்ட வேண்டும். மோடி ஆட்சிக்கு எதிராக சக்திமிக்க எதிர்ப்பைக் காட்ட வேண்டும். கோடிக்கணக்கான தமிழக கிராமப்புர தொழிலாளரின் குரலாக தவெக அரசாங்கம், சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றி மோடி அரசை வற்புறுத்த வைக்க வேண்டும்.




22 June, 2026