அமெரிக்க புலம்பெயர் சமூகத்தில் இந்துத்துவத்துக்கு எதிரான போராட்டம்!

நியூயார்க் நகரில் மோகன் பகவத், அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்-இன் கட்டமைப்பு, அதற்கு எதிரான போராட்ட ஒருங்கிணைப்பு சலாம் (தெற்காசிய இடதுசாரி அமைப்பு)

$articleData->title

நியூயார்க் நகரில் மோகன் பகவத்,

ஆகஸ்ட் 29 அன்று, நியூயார்க் நகரில் உள்ள 'உலகின் மிகவும் புகழ்பெற்ற அரங்கம்', ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வரவேற்று உபசரித்தது. இதே மேடிசன் ஸ்கொயர் பூங்காவில் தான் பிப்ரவரி 1939-இல் நாஜி ”ஸ்வஸ்திகா” கொடிகளுக்கு நடுவே 'ஜெர்மன் அமெரிக்கன் பண்ட்' (பிரிட்ஸ் ஜூலியஸ் குன் என்பவரால் வழிநடத்தப்பட்ட, ஜெர்மானிய வம்சாவளியினரைக் கொண்ட ஓர் அமெரிக்க நாஜி அமைப்பு) அமைப்பின் பேரணியும் நடந்தது. இம்முறை, இந்திய-அமெரிக்க மேல்தட்டு வர்க்க செல்வந்தர்களின் நிதி ஆதரவோடு, "உலகளாவிய ஒருமைப்பாடு" குறித்து பகவத் பேசுவதைக் கேட்பதற்காக ஐயாயிரம் பேர் அந்த அரங்கில் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தை AHEAD (சமூகப் பங்கேற்பு மற்றும் கலந்துரையாடலுக்கான அமெரிக்க இந்துக்கள் அமைப்பு) என்ற குழு ஏற்பாடு செய்திருந்தது. நெருக்கமான புலம்பெயர் கட்டமைப்புகளான இந்துக் கோயில்கள் மற்றும் சமூக மையங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் திரட்டப்பட்டு பேருந்துகளில் அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். பறை முழக்கங்களும் நடனமும் நிறைந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ரபிகள் (யூத மதகுருக்கள்) மற்றும் இமாம்களுக்கு மத்தியில் பகவத்தை அமர வைத்த ஒரு 'மதநல்லிணக்க' உச்சிமாநாடாக மாறியது. பின்னர் அவர் "வேற்றுமையில் ஒற்றுமை" குறித்து நாற்பது நிமிட நீண்ட உரையை ஆற்றினார்; இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைவரை மையமாகக் கொண்ட ஒரு பன்மைத்துவ வேடம் பூணும் நிகழ்வாக அந்தப் பிற்பகல் நிறைவடைந்தது.

அரங்கிற்கு வெளியே, அந்தப் போலி முகமூடி உடைந்து நொறுங்கியது. சலாம் (தெற்காசிய இடதுசாரி) அமைப்பும் அதன் தோழமை அமைப்புகளான இடதுசாரிகள், தலித்துகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சாதி எதிர்ப்பு அமைப்புகள், 'முற்போக்கு' இந்துக்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளால் திரட்டப்பட்ட 250-க்கும் மேற்பட்டோர், இந்த நிகழ்வுக்கு எதிராகவும் அதற்குத் தலைமை தாங்கிய மோகன் பகவத்துக்கு எதிராகவும் மேடிசன் ஸ்கொயர் கார்டனின் நுழைவாயிலில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரங்கை நிரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் ”பன்முகக் கலாச்சாரம்” என்ற பதத்தை பயன்படுத்தியிருந்தது; ஆர்.எஸ்.எஸ் என்றால் என்னவென்று தங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் இதில் பங்கேற்றிருக்க மாட்டோம் என்றும், பகவத்துடன் மேடையைப் பகிரும் வகையில் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம் என்றும் அமெரிக்காவின் பல மதத் தலைவர்கள் பின்னர் கருத்து தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் இந்துத்துவத்தின் உண்மை முகத்தை, அதாவது, இந்துத்துவா என்பது சுரண்டப்படும் மக்களின் அதிகார வர்க்கத்திற்கு எதிரான கோபத்தை, சக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திசைதிருப்பக்கூடிய, சுரண்டலை தீவிரப்படுத்தக் கூடிய, ஆக்கிரமிப்பு மற்றும் சாதி ஆதிக்கத்தின் ஒரு திட்டம் என்பதை அம்பலப்படுத்தினர்.

அமெரிக்காவில் அதிக வருமானம் ஈட்டும் இனக்குழுவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர். இந்தப் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர், தொழில்துறை மற்றும் சமூக வாழ்வில் ஆர்.எஸ்.எஸ்-உடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள். அவர்கள் அதிக வளங்களையும் கட்டமைப்பு அமைப்புகளையும் கொண்ட ஒரு வலைப்பின்னலை உருவாக்கியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-இன் சர்வதேசப் பிரிவான 'விஸ்வ விபாக்'கின் நிதி மற்றும் அரசியல் செயல்தந்திர தலைமை மையமாக அமெரிக்கா விளங்குகிறது. ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு உறுப்பினர் பதிவேடும் இல்லாத, பதிவு செய்யப்படாத ஓர் அமைப்பாகச் செயல்படுகிறது; ஆட்களைச் சேர்த்தல், நிதி திரட்டுதல், அரசியல் ஆதரவு மற்றும் லாபி செய்தல், மற்றும் இவை அனைத்திற்கும் அடித்தளமாக அமையும் பள்ளி நேரத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய பணிகளை செய்து வருகிறது. வரிவிலக்கு பெற்ற அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்களைக் கொண்ட ஓர் அமெரிக்கக் கட்டமைப்பின் மூலமாகவே அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டமைப்பின் தலைமையாக 'இந்து சுயம்சேவக் சங்கம்' (HSS) உள்ளது; இது அமெரிக்காவின் 33 மாகாணங்களில் 267 ஷாக்காக்களை நடத்துகிறது, இது இந்தியாவிற்கு வெளியே உள்ள மொத்த ஆர்.எஸ்.எஸ் கிளைகளில் தோராயமாக ஆறில் ஒரு பங்காகும். இதனுடன் இணைந்து விஷ்வ இந்து பரிஷத்தின் அமெரிக்கப் பிரிவான வி.எச்.பி.ஏ (VHPA) செயல்படுகிறது.

"பழங்குடியினர் கல்வி" மற்றும் "பேரிடர் நிவாரணம்" என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்-க்கு பணத்தை மடைமாற்றும் 'ஏகல் வித்யாலயா' மற்றும் 'சேவா இன்டர்நேஷனல்' போன்ற பினாமி அமைப்புகளை அவர்கள் நடத்துகின்றனர். இந்திய-அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களின் உழைப்பிலிருந்து வரும் பணம், இனப்படுகொலைகளுக்கான உள்கட்டமைப்புகளுக்கு நிதி அளிப்பதற்காக, அந்த அமைப்புகள் மூலமாகத் திருப்பிவிடப்படுகிறது. ஏகல் அமைப்புக்கு அனுப்பப்படும் பணம், மத்திய இந்தியாவில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளை உருவாக்குகிறது; இது ஆதிவாசி இளைஞர்களை அவர்களின் பூர்வகுடி கலாச்சாரத்திலிருந்து பிரித்து, பிராமணிய இந்து வலைபின்னலுக்குள் கொண்டுவருவதற்கும், அவர்களைத் தங்களின் காலாட்படை வீரர்களாக வளர்ப்பதற்குமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை, தலித்துகளைக் கூட்டாக படுகொலை செய்தல், தேவாலயங்களை எரித்தல், உழைக்கும் வர்க்க மக்களின் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் இடித்தல் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி அமைப்புகளுக்கு 'சேவா' அமைப்பு நிதியளிக்கிறது. புலம்பெயர்ந்தோரின் டாலர்கள்தான் இந்த ஆர். எஸ். எஸ் கர சேவகர்களை வளர்க்கின்றன.

அமெரிக்க சங் பரிவார், இந்த ஏகாதிபத்திய அதிகார மையத்தில் தனது ஆதிக்கத்தைக் கட்டமைப்பதில் முதலீடு செய்துள்ளது. இதன் கட்டமைப்பு, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தல் பிரச்சார நிதியளிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி தேசிய அளவு வரையிலான அதிகாரிகளிடம் ஆதரவு திரட்டுகிறது, மேலும் தாராளவாத குடிமைச் சமூகக் குழுக்களுடன் பிணைப்பை உருவாக்குகிறது. வாஷிங்டனில் ஆதரவு திரட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களைச் செலவழித்துள்ள 'இந்து அமெரிக்கன் பவுண்டேஷன்' (HAF), பாஜகவின் இராஜதந்திர கேடயமாகச் செயல்படுகிறது; அதே நேரத்தில் 'இந்து யுவா' போன்ற கல்லூரி வளாக அமைப்புகள் அடுத்த தலைமுறை புலம்பெயர் மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்குகின்றன. HSS ஆவணங்களில் ஆண்டுக்கு சுமார் 36 லட்சம்  சம்பாதிக்கும் "யோகா பயிற்றுவிப்பாளர்" என்று பதிவு செய்யப்பட்ட சௌமித்ரா கோகலே போன்ற நபர்கள், உண்மையில், ஆர்.எஸ்.எஸ்-இன் வெளிநாட்டுப் பிரிவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் பயணம் செய்து சங்கத்தின் உயர்மட்டக் கூட்டங்களைக் கூட்டுகின்றனர்.  சௌமித்ரா கோகலே போன்ற நபர்களால்தான் இந்தக் கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது.

சங் பரிவாருக்கு எதிரான எதிர்ப்பிற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அது முற்போக்கு ஆதரவுச் செயல்பாடு, ஆராய்ச்சி மற்றும் தேசிய அளவில் ஆதரவு திரட்டும் முயற்சிகள் தொடங்கி, வட்டாரங்களிலும் நகரங்களிலும் பாசிச எதிர்ப்புத் தளங்களை உருவாக்குவது வரை பரந்து விரிந்துள்ளது. நியூயார்க்கில் நடந்த பகவத்தின் பேரணிக்குப் பிறகு, முற்போக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 90 தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களை அணுகி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நன்கொடைகளை நிராகரிக்குமாறு வலியுறுத்தின. சங்கத்தின் பரந்த கட்டமைப்பை வெளிப்படுத்துவது அவசியமானதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவது பயனுள்ளதாக இருக்கும்தான். ஆனாலும், இந்த உத்திகள் மட்டுமே போதுமானவை அல்ல. இந்திய அரசாங்கத்தை நடத்திக்கொண்டே, புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளில் ஆழமாக வேரூன்றி, பெரும் வளங்களுடனும் குறிப்பிடத்தக்க கட்டமைப்புடனும் இயங்கும் ஒரு மாபெரும் சக்தியை நாம் எதிர்கொள்கிறோம். அதை வீழ்த்துவதற்கு அதன் நிறுவனப் போர்வைகளை அம்பலப்படுத்துவதும், பணியிடங்கள், சமூக மையங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் அன்றாட சமூக நிகழ்வுகளில் அதற்கு எதிராக மக்களைத் திரட்டுவதும் அவசியமாகும். எடுத்துக்காட்டாக, நியூயார்க் மாகாண அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெனிஃபர் ராஜ்குமார் இந்துத்துவ சார்புடைய நன்கொடையாளர்களுடனும் ஆதரவுக் கொள்கைகளுடனும் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பின் காரணமாக, அவரைத் தோற்கடிக்க DRUM Beats-இன் (நியூயார்க் நகரில் வசிக்கும் தெற்காசிய மற்றும் இந்தோ-கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்க மக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும்) உழைக்கும் வர்க்க தெற்காசிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த ஆண்டு ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

கொண்டாடப்படும் "இந்திய அமெரிக்கர்களின் வெற்றிக் கதை" என்பது புலம்பெயர்ந்தோரின் விடாமுயற்சியால் உருவான செல்வத்தை சார்ந்ததல்ல. பல நூற்றாண்டுகளாக நிலங்களை அபகரித்த பிராமணிய ஆதிக்கம், கல்வி ஏகபோகம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களது உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றை உலகளாவிய தொழில்நுட்ப மூலதனமாக மாற்றியதை சார்ந்தது. நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லில் உள்ள BAPS கோயில் வளாகம் (நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ராபின்ஸ்வில்லில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அக்சர்தாம்  கோயிலைக் குறிக்கிறது) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தக் கோயில் வளாகத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட ஒரு தேசிய வழக்கு, இந்தியாவில் இருந்து விளிம்புநிலைச் சாதியைச் சேர்ந்த கல் செதுக்கும் தொழிலாளர்கள் கொடூரமாகக் கடத்தி வரப்பட்டதை அம்பலப்படுத்தியது. இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய நவீன இந்துக் கோயிலைக் கட்டுவதற்காக, அத்தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிக்கப்பட்டு, காவலாளிகள் உள்ள வளாகங்களுக்குள் அடைக்கப்பட்டு, வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, வெறும் 120 ரூபாய் கூலிக்கு அவர்கள் கட்டாய வேலை வாங்கப்பட்டதை அம்பலப்படுத்தியது. சட்டங்கள், பள்ளிகள் குறித்த விசயத்திலும் இதே அரசியல் தான் காணப்படுகிறது. சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்புச் சட்டங்களைத் தோற்கடிக்கவும் (கலிபோர்னியாவின் SB 403 மற்றும் பிற மாகாணங்களின் மசோதாக்கள்), பள்ளிப் பாடப்புத்தகங்களிலிருந்து சாதி பற்றிய குறிப்புகளை நீக்கவும் HAF முயன்றபோது, அது "இந்துஃபோபியா" (இந்து வெறுப்பு) என்ற சொல்லாடலை ஆயுதமாகப் பயன்படுத்தியது. ஆதிக்க சாதிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைப்பதற்கும், விளிம்புநிலை மக்களின் உழைப்பைச் சுரண்டுவதைப் பாதுகாப்பதற்கும், சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியிட நிறவெறி போன்றதொரு பாகுபாட்டைத் திணிப்பதற்குமான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே இதுவாகும்.

மேடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு வெளியே தெற்காசியக் குழுக்களுடன் துணைநின்ற பாலஸ்தீன அமைப்பாளர்கள் வெறுமனே அடையாளத்திற்காக ஆதரவு தெரிவிக்கவில்லை; ஒரே நேரத்தில் சித்தாந்த ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிணைந்துள்ள ஓர் உண்மையான உறவை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்துத்துவமும் சீயோனிசமும் தங்களின் உறவை ஒரு சித்தாந்தக் கற்பனையாகத் தொடங்கி, பின்னர் ஒரு உறுதியான நடைமுறைக் கூட்டணியாக மாற்றிக்கொண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. இஸ்ரேலின் ஆயுதத் தொழில்துறையின் மிகப்பெரிய தனி வாடிக்கையாளராக இந்தியா உள்ளது; மேலும் இந்திய மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் இந்திய மண்ணிலேயே அந்த ஆயுதங்களை அதிகளவில் இணைந்து உற்பத்தி செய்கின்றன. காஷ்மீரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கட்டமைப்பை இந்திய அரசு எவ்வாறு ஆராய்ந்து நடைமுறைப்படுத்தியது என்பதை ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்துத்துவ ஆதரவு வலைப்பின்னல், இஸ்ரேல் ஆதரவு அமைப்புகளைப் படித்தும் அவற்றுடன் கூட்டு சேர்ந்தும் தன்னை உருவாக்கிக்கொண்டது. யுஎஸ்-இந்தியா அரசியல் நடவடிக்கை குழு (2002), அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (AIPAC) மற்றும் அமெரிக்க யூதக் குழுவின் நிறுவன மாதிரியை அப்படியே பின்பற்றுகிறது. ஸ்டீவ் பானனை கௌரவ இணைத் தலைவராகக் கொண்டு 2015-இல் தொடங்கப்பட்ட 'ரிபப்ளிகன் இந்து கூட்டணி', தன்னை "மிகவும் வெற்றிகரமான ரிபப்ளிகன் யூதக் கூட்டணியின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது" என்று அறிவித்துக் கொண்டது. 1993-ஆம் ஆண்டிலேயே, வாஷிங்டனின் அரசியல் அதிகார கட்டமைப்புக்குள் வழிநடத்துவதற்காக, பதவியில் இருந்த AIPAC சட்டமன்றத் தொடர்பாளரை ஓர் இந்திய-அமெரிக்க அரசியல் நடவடிக்கை குழு பணியமர்த்தியது.

 

புலம்பெயர் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகள், இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை சீயோனிசத்திற்கு எதிரான அணிதிரட்டலுடன் மிக அதிகமாக இணைத்து வருகின்றன. அக்டோபர் 2024-இல் நியூயார்க்கில் சலாம் அமைப்பினால் தொடங்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட "டாடா பை பை" பிரச்சாரம், ஆயுத உற்பத்தி (டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்), கவச வாகனங்கள் (ஜாகுவார் லேண்ட் ரோவர்) மற்றும் இஸ்ரேலிய ராணுவத்திற்கான தகவல் தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் இணைய சேவைகள் (TCS) ஆகியவற்றின் மூலம் இஸ்ரேலின் போர் இயந்திரத்திற்கு ஆதரவளிக்கும் டாடா குழுமத்தை, நியூயார்க் நகர மாரத்தான் புரவலர் பொறுப்பில் இருந்து நீக்க கோருகிறது (TCS அதன் முதன்மை நிதி ஆதரவாளராக உள்ளது). பாசிசத்தை எதிர்ப்பது என்பது அதன் விநியோகச் சங்கிலிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதாகும் என்பதை இத்தகைய பிரச்சாரங்கள் வலியுறுத்துகின்றன: அதாவது அதற்கு ஆதரவளிக்கும் மூலதனம் (டாடா), அதைத் தாங்கி நிற்கும் 'சமூக சேவை' கட்டமைப்பு (ஆர்.எஸ்.எஸ்), மற்றும் அதை நிலைநிறுத்தும் புவிசார் அரசியல் (இந்தியா-இஸ்ரேல் கூட்டணி) ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதாகும்.

மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ்-ஐ அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்துவதற்காக நியூயார்க்கிற்கு வரவில்லை. அது ஏற்கனவே தன் வசப்படுத்திய அதன் பகுதிகளை ஆய்வு செய்வதற்கும் பலப்படுத்துவதற்குமே வந்தார். ஆனால் மேடிசன் ஸ்கொயர் பூங்காவிற்கு வெளியே வேறொன்று வெளிப்பட்டது: தங்களின் "சமூகத்தை" இவர்களிடம் ஒப்படைக்க மறுக்கும் ஓர் உழைக்கும் வர்க்க, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதியாதிக்க எதிர்ப்பு கொண்ட ஓர் தெற்காசியப் புலம்பெயர் சமூகம் அங்கு தெளிவாகத் தெரிந்தது. புலம்பெயர் மேல்தட்டு வர்க்கத்தின் வெற்று வார்த்தைகளுக்கு பின்னால் புல்டோசரால் இடிக்கப்பட்ட வீடுகளும், சாதிய வன்முறைகளும், பறிக்கப்பட்ட நிலங்களும் அமைதியாகப் புதைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், "உலகளாவிய ஒருமைப்பாடு" என்ற போலி முகமூடியைக் கிழித்தெறிவது மட்டும் போதாது. இந்த ஏகாதிபத்திய மையத்தில் கள அளவிலான நேரடி எதிர்ப்பு அரசியலையும், பகுதி பகுதியாக, நகரம் நகரமாக மக்களைத் திரட்டுவதே நமது பணியாகும்.

13 October, 2026