ஜூன் 2025-இல் பீகார் தேர்தல்களுக்கு முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தற்போது முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. அது, பெரும் எண்ணிக்கையில் வாக்குரிமை பறிப்பு, பல அடுக்கு தேர்தல் மோசடிக்கான ஒரு கருவியாகியுள்ளது. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் என்ற அடிப்படை அரசமைப்புச்சட்ட வாக்குறுதியின் மீது — இந்திய தேர்தல் ஜனநாயக அச்சாணியின் மீது — இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய இந்தத் துல்லியத் தாக்குதல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சிதைத்துவிட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்திற்குரிய இருண்ட செயல்பாடுகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட கொந்தளிப்புதரத்தக்க புலனாய்வு அறிக்கையும் அதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கங்களும் இந்த அரசமைப்புச்சட்ட நிறுவனத்திற்குள் நிலவும் அதிர்ச்சிகரமான சீர்குலைவையே உறுதிப்படுத்தியுள்ளன. இதுநாள்வரை தலையிட மறுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட சுதந்திரம் வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீதும் சந்தேக நிழல் படர்ந்துள்ளது. 1975-ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகு மிக மோசமான அரசமைப்புச்சட்ட நெருக்கடியை இந்தியா இப்போது எதிர்கொள்கிறது.
நடுநிலையான தேர்தல் ஆணையம் என்ற கருத்தின் இதயத்தில் பேரிடியை இறக்கியது தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் 2023 ஆம் ஆண்டின் சட்டத் திருத்தம். அதிலிருந்துதான் இந்தக் கேடு தொடங்கியது. தனக்கு அடிபணிந்து சேவையாற்றும் தேர்தல் ஆணையத்தைத் தேர்ந்தெடுக்க அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட சுதந்திரமும், தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் முழுவதற்குமான நீதித்துறை பாதுகாப்பும், அரசாங்கத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான ஒரு தீய, கள்ளக் கூட்டணியை உறுதிப்படுத்தியது. அதன் மூலம், தனது நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றின் ஒவ்வொரு சாயலையும் இந்தியத் தேர்தல் ஆணையம், பிஜேபி-க்கு சாதகமாக கைவிட்டது. பிஜேபி-யோ தலைமைத் தேர்தல் ஆணையரை முழுமையாக பாதுகாத்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்தார் என்பதையும் நிகழ்ச்சி நிரல், விவாதக் குறிப்புகள் எதுவும் முறையாகப் பதிவு செய்யப்படாமல், கூட்டங்கள் முறைப்படி நடத்தப்படவில்லை என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணைய குறிப்பு இப்போது ஒப்புக்கொண்டுள்ளதால், எஸ்ஐஆர் என்ற பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எந்த சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லை. இயல்பாகவே, தன்னிச்சையான, ஒளிவுமறைவான முறையில் செயல்படும் ஒரு தேர்தல் ஆணையத்தால் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்கள், நம்பகத்தன்மையையும் சட்ட அங்கீகாரத்தையும் இழந்துவிட்டன.
உச்ச நீதிமன்றத்தின் பங்கும் அதிர்ச்சிகரமான வகையில் பொறுப்பற்றதாகவே இருந்து வருகிறது; வாக்காளர்களின் மோசமாக பாதிக்கப்பட்ட வாக்குரிமை மீது நீதிமன்றம் எந்த அக்கறையையும் காட்டவில்லை. மேற்கு வங்கத்தில், நீதித்துறை அதிகாரிகளால் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்ட இலட்சக்கணக்கான வாக்காளர்களின் முறையீடுகள் தீர்ப்பாயங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த மேல்முறையீடுகளைத் தீர்ப்பாயங்கள் தீர்ப்பதற்கு பல்லாண்டுகள் ஆகும் என்பது தெளிவாகியபோதும் மேல்முறையீடுகள் நிலுவையில் இருக்கும் காலத்தில் வாக்காளர்களின் வாக்குரிமையை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, இது வெறும் தற்காலிக உரிமை இழப்பு தான் என்று கூறி வாக்கு மறுப்பின் பாதகத்தை உச்ச நீதிமன்றம் குறைத்து கூறியது. வரவிருக்கும் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, தீர்ப்பாயங்களில் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ள 18,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதை, இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இன்றியமையாததல்ல என சொல்லி, உச்ச நீதிமன்றம் வாக்குரிமையை மீண்டும் சிறுமைப்படுத்திவிட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலமாக்கிய தகவல்களின் வெளிச்சத்திலும் தேர்தல் ஆணையம் தனது சொந்த செப்டம்பர் 26 செய்திக் குறிப்பின் மூலம் தனது குற்றத்தை திறன்மிக்க வகையில் ஒப்புக்கொண்டதாலும், ஞானேஷ் குமார், தான் தலைமைத் தேர்தல் ஆணையராக தொடர்வதற்கான அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டார். அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும், இந்திய அரசமைப்பையும் தேர்தல் அமைப்பையும் சீர்குலைத்த குற்றத்திற்காக அவர்மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை இப்போது நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இயல்பாகவே எழுப்பப்படுகிறது. எஸ்ஐஆர் ரத்து செய்யப்பட வேண்டும்; அதனால் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கிணையாக அவசரமானதாகும். தவறாக நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரின் வாக்களிக்கும் உரிமையும் எவ்விதத் தாமதமுமின்றி, எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்ப வழங்கப்பட வேண்டும். வாக்குப் பதிவு அதிகாரிகளின் உரிமைகளும் திரும்ப வழங்கப்பட வேண்டும். மேலும் டிஜிட்டல் வழிமுறை மூலம் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் செயல்பாட்டில் திணிக்கப்பட்ட மத்தியத்துவப்படுத்தல் ரத்து செய்யப்பட வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு, எஸ்ஐஆர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் தேர்தல் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களால் தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளிலும் தேர்தல்கள் புதிதாக நடத்தப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் கோரிக்கை. தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான 2023 ஆம் ஆண்டின் சட்டம், தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட விதிகளுடன் சேர்த்து ரத்து செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி, நடுநிலைமை, பொறுப்புணர்வுக்கு அரசமைப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். தேர்தல் மோசடியை விட பெரிய ஊழல் வேறெதுவுமில்லை. தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் இல்லாததாலும் மக்களின் ஒவ்வொரு மனக்குறை, கோபம், எதிர்ப்புகளிலிருந்தும் பாதுகாப்பாக விலகி இருப்பதாலும் பிஜேபி அரசாங்கங்கள் மேலும் மேலும் அதிக ஆணவமும் சர்வாதிகாரமும் கொண்டவையாக மாறிவிட்டன. மோடி-ஷா-ஞானேஷ் குமார் கூட்டணியால் ஜனநாயகம் சிதைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா ஒன்றிணைந்து எழ வேண்டும்.
