ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நாடுகளில் திட்டமிடப்பட்ட சர்வதேசப் பிரச்சாரப் பயணத்தின் இறுதிப் பகுதியான, மோகன் பகவத்தின் பிரிட்டன் பயணம், அச்சம், ரகசியம் மற்றும் குழப்பங்களால் சூழப்பட்டிருந்தது. பரந்த புலம்பெயர் அமைப்புகளின் கூட்டமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்கள், சங் பரிவாரத்தின் திட்டமிட்ட பிரச்சாரச் செய்திகளைத் தவிடுபொடியாக்கியது. ஒரு காலத்தில் இந்துத்துவத்தின் கோட்டையாக பிரகடனப்படுத்தப்பட்ட புலம்பெயர் சமூகங்கள் மத்தியிலும் அவர்கள் தீவிர நெருக்கடியை எதிர்கொள்வதை வெளிப்படுத்தியது.
மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற ‘மதநல்லிணக்க’க் கூட்டத்தை மையமாகக் கொண்டு, பகவத்தின் அமெரிக்கப் பயணம் மிக பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டிருந்தது; ஆனால், போராட்டங்கள், அரசியல் ரீதியிலான எதிர்ப்பு மற்றும் பிற மதத் தலைவர்களைப் பங்கேற்க வைக்க ஏற்பாட்டாளர்கள் கையாண்ட ஏமாற்று வேலைகள் அம்பலமானதன் மூலம், அப்பட்டமாக ஒரு போலி பிம்பத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சி, அதன் பின்னாலுள்ள ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிசத் தன்மை முழுமையாகத் தோலுரிக்கப்பட்டது.
இது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, கனடாவிலும் (அவர் அடுத்து செல்லவிருந்த இடம்), பிரிட்டனிலும் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் கூட்டமைப்புகள், அவர் வருகைக்கு முன்னதாகவே, மக்களைத் திரட்டத் தொடங்கின.
பிரிட்டனில், 21 புலம்பெயர் அமைப்புகள் அந்நாட்டின் மத சுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான அரசுத் தூதரகத்துக்கும், பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கும் கடிதம் எழுதின. அதில் ஐரோப்பிய பாசிசத்தை மாதிரியாகக் கொண்டு உருவான ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்றும், தற்போது அது ‘உலகின் மிகப்பெரிய தீவிர வலதுசாரி கட்டமைப்பின்’ மையமாக உள்ளது என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான அதன் நீண்டகால தொடர் வன்முறைகளையும் சுட்டிக்காட்டின; மேலும் 2011-இல் நார்வேயில் நவ-நாஜி ஆண்டர்ஸ் பிரீவிக் நடத்திய படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் தூண்டுதல், 2022-இல் லெசீஸ்டரில் அதன் புலம்பெயர் பிரிவான ஹெச்.எஸ்.எஸ் (HSS) தூண்டுதலால் நடந்த இஸ்லாமிய வெறுப்பு வன்முறை, மற்றும் உலகளாவிய அளவில் விமர்சகர்களையும், மாற்றுக் கருத்துடையோரையும் ஒடுக்கும் சர்வதேச அடக்குமுறை நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ் சார்ந்த புலம்பெயர் அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றையும் அக்கடிதம் விரிவாக எடுத்துரைத்தது.
“பிரிட்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் நிதர்சனமானவை, தீவிரமானவை மற்றும் தொடர்ச்சியானவை. மோகன் பகவத்தின் வருகை, வெறுப்புப் பேச்சுகளைப் பரப்பிட, புலம்பெயர் சமூகத்தை மேலும் பிளவுபடுத்திட, நாடு முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட எளிய சமூகங்களுக்கு அச்சமூட்டிட, மிரட்டிட, அத்தகைய ஒரு சூழலை உருவாக்கிட, பிரிட்டனில் உள்ள ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு ஒரு துணிச்சலை கொடுக்கும்” என்று குறிப்பிட்ட அந்தக் கடிதம், பகவத் மற்றும் பிற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு எதிராகப் புறக்கணிப்பு, கண்டனம் மற்றும் தடைகளை விதிக்குமாறு கோரியது.
“காந்தி படுகொலை முதல் 2002 குஜராத் கலவரம் வரையிலும், இன்று மோடி ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வரையிலும் நிகழ்ந்த, இந்து மேலாதிக்க வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் பொறுப்பு. மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்வதேசப் போலி பிம்பத்தை உருவாக்கிடவும், பிரிட்டனில் உள்ள தெற்காசியர்களிடையே பதற்றத்தைத் தூண்டிவிடவும் அனுமதிக்கக் கூடாது” என்று தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழு கருத்துத் தெரிவித்தது.
யுவர் பார்ட்டி (Your Party) தலைவரும் மூத்த இடதுசாரி எம்.பி.யுமான ஜெரெமி கோர்பின், பகவத்தின் லண்டன் நிகழ்வுகளைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், “தீவிர வலதுசாரி வன்முறையின் கொடிய வரலாற்றைக் கொண்ட ஒரு வெறுப்புக் குழுவின் தலைவருக்கு பிரிட்டன் விருந்தளித்து உபசரிக்கக் கூடாது. இது மத சுதந்திரத்தை ஒடுக்கி, சிறுபான்மையினர் மீதான பயங்கரமான தாக்குதல்களுக்குத் தூண்டுதலாக அமைந்த ஒரு தீவிர எதேச்சதிகார அமைப்பாகும். மக்களை விலக்கிவைக்கும், பாகுபாட்டை ஏற்படுத்தும் அமைப்பாகும். நமது நகரத்தில் இத்தகைய வெறுப்புக்கு இடமளிக்கக் கூடாது – மேலும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுவது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டார்; அதே நேரத்தில் தொழிலாளர் கட்சி எம்.பி. நதியா விட்டோம், இந்த வருகைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றையும் எழுப்பினார்.
இதற்கிடையில், லண்டன் மேயர் சாதிக் கானுக்கும் புலம்பெயர் அமைப்புகள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதின; அதில் இந்த வருகையுடன் லண்டன் மேயர் அலுவலகமோ அல்லது கிரேட்டர் லண்டன் அசெம்பிளியோ (GLA) எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், GLA-க்குச் சொந்தமான இடங்களையோ வளாகங்களையோ இந்த நிகழ்விற்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உறுதிமொழி கோரப்பட்டது.
பிரிட்டனிலும் எதிர்ப்பு வெளிப்படையாக வலுத்ததால், பகவத்தின் பிரிட்டன் சந்திப்புகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன; அவை நெருக்கமான, நம்பகமான ஆதரவாளர்களுடனான சந்திப்புகளாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டன; இதனால் நியூயார்க்கில் ‘பொய் சொன்ன’ பகவத் லண்டனில் ‘பதுங்கிவிட்டார்’ என்று பாசிச எதிர்ப்புப் பிரச்சாரகர்கள் சுட்டிக்காட்டினர்.
அவரது பயணத் திட்டம் இந்தியப் பத்திரிகையாளர்களுக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை; மேலும் அவர் எந்தவொரு செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.
சங் பரிவாரிடம் இருந்து நிதி பெறுபவரும் பத்மஸ்ரீ விருதாளருமான, தீவிர வலதுசாரி இஸ்ரேல் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன், பகவத் வந்தடைந்தவுடன் அவரைச் சந்தித்த இந்துத்துவ ஆதரவுத் தலைவர்கள், தொழிலதிபர்கள் அடங்கிய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இதன் பின்னர், செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமையன்று பகவத்தின் முக்கிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அங்கு அவர் ‘சமூகத்தினரை’, அதாவது பிரிட்டன் இந்துத்துவக் கட்டமைப்பின் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்திப்பதாக இருந்தது.
அந்த இடம் ரகசியமாக வைக்கப்பட்டது; பத்திரிகையாளர்கள் கலந்துகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு, முன்கூட்டியே இடம் அறிவிக்கப்படாமல், இறுதியில் அவர்கள் ‘ஒரு தனி அறையில் அமர்ந்து ஆன்லைனில் பார்க்கலாம்’ என்று கூறப்பட்டது.
மோகன் பகவத் லண்டனின் புறநகர்ப் பகுதியான பாட்டர்ஸ் பாரில் முடங்கிப் பதுங்கியிருந்த அதே சமயத்தில், லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square), ஆர்.எஸ்.எஸ் பாசிசத்திற்கு எதிராக ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவுடன் இணைந்து, பிரிட்டன் இந்திய முஸ்லிம் கவுன்சில், மனித உரிமைகளுக்கான இந்துக்கள் அமைப்பு (Hindus for Human Rights), இந்தியத் தொழிலாளர்கள் சங்கம், கேஸ்ட்வாட்ச் யூகே (Caste Watch UK) மற்றும் பல இந்திய மற்றும் காஷ்மீரி புலம்பெயர் அமைப்புகள் இப்போராட்டத்தில் கைகோர்த்தன; இதில் பங்கேற்றவர்கள் ‘மோகன் பகவத்தே உன்னால் ஓடி ஒளிய முடியாது: ஆர்.எஸ்.எஸ் என்றால் இனப்படுகொலை’, ‘பாசிஸ்டுகள் யார்? பாஜக! ஆர்.எஸ்.எஸ்!’ போன்ற வலுவான முழக்கங்களை எழுப்பினர்; மேலும் ‘இந்திய பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபட்ட புலம்பெயர் சமூகம்’ என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர், பகவத் கூறும் ‘உலகளாவிய ஒருமைப்பாடு’ என்ற வாதத்தின் உண்மை முகத்தை விளக்கும் போது: “இது உலகளாவிய பாசிசத்தின் ஒருமைப்பாடு; இது உலகளாவிய இஸ்லாமிய வெறுப்பின் ஒருமைப்பாடு; இது உலகளாவிய சீயோனிசத்தின் ஒருமைப்பாடு!” என்று முழங்கினார்.
‘United Against RSS’ (ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக ஒன்றுபடுவோம்) என்ற வாசகத்தின் எழுத்துக்களைத் தாங்கிய மனிதச் சங்கிலியுடன் இந்தப் போராட்டம் நிறைவடைந்தது.
அடுத்த நாள் மாலையில், பிரிட்டனில் பகவத்தின் கடைசி நாள் நிகழ்வில், மேற்கு லண்டனில் அமைந்துள்ள ஆடம்பர ‘பென்ட்லி ஹோட்டலில்’ ஆர்.எஸ்.எஸ்-இன் கோடீஸ்வர நன்கொடையாளர்களுக்கான ஒரு ரகசியக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்; இந்த ஹோட்டல் சங் பரிவார் ஆதரவு பெற்ற, ‘இந்து ஃபோரம்’ (Hindu Forum) அமைப்பின் புரவலர்களான, சங்கர் குடும்பத்தினருக்குச் சொந்தமானதும், முன்னதாக சுஷ்மா சுவராஜுக்கும் தப்பியோடிய லலித் மோடிக்கும் இடையிலான ரகசிய சந்திப்பு நடந்த இடமுமாகும்.
ஆனால் பாசிச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அவரை இங்கும் பின்தொடர்ந்து சென்று, ‘மோகன் பகவத்தே வெட்கக்கேடு! உன் கைகளிலும் ரத்தக்கறை படிந்துள்ளது!’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ மற்றும் ‘பாசிஸ்டுகளுக்கு இங்கு இடமில்லை!’ உள்ளிட்ட தொடர் முழக்கங்களை எழுப்பி அந்தக் கூட்டத்திற்கு இடையூறு செய்தனர்.
தங்களின் வழக்கமான காலனித்துவ பாணியில், புலம்பெயர்ந்த இந்தியர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ், பிரிட்டிஷ் காவல்துறையை துணைக்கு அழைத்தது; இதனால் ‘மோகன் பகவத் பயப்படும் போதெல்லாம் காவல்துறையை முன்னிறுத்துகிறார்’ (Jab Mohan Bhagwat darta hai, police ko aage karta hai) என்ற முழக்கங்கள் அங்கே பலமாக எதிரொலித்தன.
