யுபிஐ வரி: இந்திய மக்கள் மீது மோடியின் பிறந்தநாள் தாக்குதல்

$articleData->title

யுபிஐ வரி

நீண்ட காலம் ஆட்சியிலிருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று ‘சாதனை’ கொண்டாட்டம் நடத்தி வெறும் மூன்று மாதங்களுக்குள்ளாகவே, மோடி அரசாங்கமும் பாஜக தலைமையிலான பல்வேறு மாநில அரசாங்கங்களும், ஒட்டுமொத்த சங்-பாஜக அமைப்பும் மோடியின் 76வது பிறந்தநாளை பிரம்மாண்டமான நாடு தழுவிய கொண்டாட்டமாக நடத்துகின்றன. அதிகார மமதையையும் தனிநபர் துதியையும் அரசு ஆதரவுடன் இவ்வளவு கொச்சையாகவும் அப்பட்டமாகவும் திணிக்கப்படும் இதுபோன்றதொரு கொண்டாட்டத்தை இதற்கு முன்பு இந்தியா ஒருபோதும் கண்டதில்லை. மோடியின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விளக்கேற்ற மக்களைக் கட்டாயப்படுத்துவதற்காக, பெருமளவு பொதுப்பணம் செலவிடப்பட்டது. அரசு நிறுவனங்களின் நடைமுறைகளும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. ஜம்மு ஐஐஎம்-மில், இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளையும் தாண்டி, இந்த ‘கண்கவர்காட்சி’ படுதோல்வியடைந்தது. தனது படுதோல்வி, திறமையின்மை, அக்கறையின்மை காரணமாக மோடி அரசாங்கம் அனைத்துத் தளங்களிலும் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. நெருக்கடியிலிருக்கும் இந்த அரசாங்கத்தால் மக்கள் மீது திணிக்கப்பட்ட கொண்டாட்டத்திற்கு மக்களிடமிருந்து தன்னிச்சையான ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. நாட்டின் பரந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு தெற்கு டெல்லியில் பாதுகாப்பற்ற வாடகை விடுதிகளின் ‘புறாக்கூண்டு’களில் அடைபட்டுக் கிடந்த மாணவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருந்த (இந்த சம்பவம் நகராட்சி நிர்வாகத்தின் முழுமையான தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும்) பின்னணியில், உண்மையில், இந்த ஆட்சியின் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், இந்தியாவின் தற்போதைய இந்த யதார்த்தத்தையே கேலி செய்வது போல அமைந்திருந்தன.


பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சிமாநாடு நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் பிரிக்ஸ் பங்களிப்பு மிகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கால வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் ஒரு துணை அமைப்பாக இந்தியாவை மாற்றிவிட்டது. அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியா தாமதமான, கட்டுப்பாடான இரங்கல் தெரிவித்தது. அதேவேளை, ஈரான் மீதான போர் குறித்தும் காசாவில் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவது குறித்தும் இந்தியா வெட்கக்கேடான வகையில் மௌனம் காக்கிறது. எனவே, உலகத் தலைவர்களுடனான தனது ஊதிப் பெரிதாக்கப்பட்ட ‘தனிப்பட்ட உறவை’ நரேந்திர மோடி வெளிப்படுத்திக் கொள்ளக் கிடைத்த மற்றுமொரு புகைப்பட வாய்ப்பு, உலக அமைதிக்கும் மனிதகுலத்திற்கும் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்க-இஸ்ரேல் போர்க்கூட்டணியை வெளிப்படையாகக் கண்டிக்காமல், ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து பேசிய, கவனமாகத் தயாரிக்கப்பட்ட ‘ஒருமித்த கருத்து’ கொண்ட பிரகடனம், இவை தவிர, புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை.


இதற்கிடையில், மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் இந்தியாவை அச்சுறுத்தியது; இம்முறை 100% வரை வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் வந்தது. ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளை விதிக்கவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்கவும் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய மசோதா மூலம் இந்த அச்சுறுத்தல் வந்தது. இந்த வரி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், மோடி அரசாங்கம் இந்தியாவின் ‘சுதந்திர வெளியுறவுக் கொள்கையை’ சுட்டிக்காட்டி முறையாகப் பதிலளித்துள்ளது. ஆனால், வார்த்தைகளைவிட செயல்களே உரத்துப் பேசுகின்றன. அந்த வகையில் பார்த்தால், அரசாங்கம் மீண்டும் ஒருமுறை அமெரிக்க அழுத்தத்திற்கு பணிந்துள்ளது. 


அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு மோடி அரசு அடிபணிந்ததை அப்பட்டமாக சுட்டிக்காட்ட, மோடி அரசாங்கத்தின் அண்மைய வழிப்பறி வரி (யுபிஐ) உத்தரவைவிட, வேரெந்த உதாரணமும் தேவையில்லை. புதுடெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு முடிவடைந்த உடனே, மோடியின் பிறந்தநாளையொட்டி விளக்கேற்றும் நிகழ்ச்சிக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பணப்பரிமாற்ற தளமான, ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் ₹2,000-க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வணிகப் பரிவர்த்தனைக்கும் 0.4% வரி விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்த வரி, ‘தள்ளுபடி விகிதம்’ என்றும் அதுவும் ‘வணிகர்களுக்கு’ மட்டுமே என்றும் மூடிமறைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ‘தள்ளுபடி’ என்பது ₹2,000-க்கும் குறைவான பரிமாற்றங்களுக்கான வரம்பை மட்டும்தான் குறிக்கிறது; அவற்றுக்கு இப்போது எந்தக் கட்டணமும் கிடையாது. மேலும் ‘வணிகர்’ என்பது இங்கு நுகர்வோர் என்பதற்கான சங்கேத வார்த்தையாகும்; ஏனெனில் எந்தவொரு வணிகரும் இந்தச் சுமையை வாங்குபவரின் மீது சுமத்தாமல் தாமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இந்தியாவின் இலவச யுபிஐ பணப்பரிமாற்ற முறையைப் பற்றி அமெரிக்காவின் முன்னணி கடனட்டை நிறுவனங்களான மாஸ்டர்கார்ட், விசா ஆகியன நீண்ட காலமாகப் புகார் தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே. பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 2016-ல் யுபிஐ முறையை மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அது படிப்படியாக இந்தியாவில் நேரடிப் பணப் பரிவர்த்தனைக்கு மிகப்பெரிய மாற்று முறையாக மாறியது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட மாபெரும் சீர்குலைவின் சுமையை சாமானிய மக்களும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரும் சுமக்க வேண்டியிருந்தது. ஆனால், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றதன் மூலம் கருப்புப் பண ஒழிப்பில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை. உண்மையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காணத்தக்க ஒரே நீண்டகால விளைவு, பணப் பயன்பாட்டுக்கு மாற்றாக இந்தியாவில் யுபிஐ ஒரு இயல்பான வழியாக உருவெடுத்தது மட்டும்தான். மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய ‘தற்சார்பு’ வெற்றிக் கதையாக யுபிஐ இருந்தது. தற்போது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனையாக யுபிஐ மீது இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது என பரவலாகக் கருதப்படுகிறது. யுபிஐ பயன்பாட்டை அரசாங்கமே ஊக்கமிழக்கச் செய்து, மீண்டும் பணப் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கும். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மோடி அரசாங்கம் முதன்முதலில் செயல்படுத்திய ‘அதிர்ச்சி வைத்தியம்’ ஆகும். 2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சற்று முன்பு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய பங்காற்றியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, முழுமுடக்கம் முதல் எஸ்ஐஆர், தற்போது யுபிஐ வரி வரையிலும் மோடி காலம் இந்திய மக்களுக்கு தொடர்ச்சியான அதிர்ச்சிகளைக் கொண்ட காலமாக அமைந்துள்ளது. ஆனால், மோடி காலம் இந்தியாவின் மிகவும் நினைவுகூரத்தக்க, வலிமையான சில போராட்ட இயக்கங்களுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. பிரிவினைவாத, பாரபட்சமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டம், இந்திய வேளாண்மையை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் சட்டங்களுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்குவதற்கு மோடி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்த சில நாட்களுக்கு முன்னர் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முன்னெப்போதும் இல்லாத ஜென் ஷீ தலைமுறையின் எழுச்சி ஆகியவை இதில் அடங்கும். எஸ்ஐஆர் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும் யுபிஐ வரியைத் திரும்பப் பெறச் செய்யவும் அதே அளவிலான ஒற்றுமையுடனும் உறுதியுடனும் இந்தியா மீண்டும் ஒருமுறை எழுந்து நிற்க முடியாதா?


13 October, 2026