ஏஐசிசிடியு தேசியக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு:
ஒன்றிய அரசின் நவ தாராளமய கொள்கைகள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், விலைவாசி உயர்வு, ஊதிய வெட்டு, பணிப் பாதுகாப்பின்மை, ஒப்பந்த முறை ஆகிய காரணங்களால் நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்கள் கடும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர். போர் நெருக்கடிகளை கையாளுவதில் ஒன்றிய அரசின் தோல்வியும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அடிபணிவதும் சேர்ந்து இதனை மேலும் மோசமாக்கி உள்ளது. கண்ணியமான ஊதியம், மனிதநேயமிக்க பணிச்சூழல், பணிப் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வட இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் நடத்திய மாபெரும் போராட்டங்களானது ஒன்றிய அரசுக்கு வரவிருக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பின் ஒரு சிறு முன்னோட்டக் காட்சியாக அமைந்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் ஏஐசிசிடியு வின் தேசியக் கவுன்சில் கூட்டம் பாட்னாவில் ஜூன் 20, 21- 2026 தேதிகளில் நடைபெற்றது. 12 பேர் கொண்ட தலைமைக் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து தோழர் சங்கர பாண்டியன் இடம்பெற்றிருந்தார்.
இந்திய தொழிலாளர் வர்க்க இயக்கம் சந்திக்கும் சவால்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறை பற்றியும் ஆலோசகர் தோழர் குமாரசாமி உரையாற்றினார். அகில இந்திய தலைவர் தோழர் சங்கர் பல்வேறு அரங்க வேலைகளை முன்னெடுக்கவும் விரிவாக்கவுமான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார். தேசிய கவுன்சில் முடிவுகளை திறம்பட அமல்படுத்த அழைப்பு விடுத்தார். தோழர் ராஜீவ் டிம்ரி தமிழ்நாட்டிலிருந்து தோழர் புவனேஸ்வரியை ஏஐசிசிடியு மத்திய பணிக்குழுவிற்கும் தோழர்கள் ஏ கோவிந்தராஜ், ராஜேஷ் ஆகியோரை தேசியக் கவுன்சிலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு தேசியப் பணிக்குழு முடிவுகளை முன்வைத்து தேசியக் கவுன்சிலின் ஏற்புடைமையைப் பெற்றார்.
தீர்மானங்கள்:
1) மோடி ஆட்சியின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும், 2026 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தைக் கட்டமைக்கவும் ஏ ஐ சி சி டி யு தீர்மானிக்கிறது. இந்தப் பிரச்சார இயக்கமானது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்தல், குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 42,000 வழங்குவது, ஒப்பந்த முறையை ஒழித்துக் கட்டுதல், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சொல்லப்படுகிற அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்குதல், தனியார்மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகள் மீது நடைபெற்று, ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் மாநிலப் பேரணிகளில் நிறைவு பெறும்.
2) 8 மணி நேர வேலை நேரத்தை உயர்த்த நடைபெறும் எல்லா முயற்சிகளுக்கு எதிராகவும் ஏ ஐ சி சி டி யு நிற்கிறது. 8 மணி நேர வேலையை உறுதி செய்வதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த தீர்மானிக்கிறது.
3) தொழிலாளர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களாக, முறைசாரா தொழிலாளர்களாக மாற்றும் பல்வேறு வழிமுறைகளுக்கு எதிராகவும், நியாயமான, கண்ணியமான பணிச் சூழலை அனைவருக்கும் உறுதி செய்யவும் ஏ ஐ சி சி டி யு தீர்மானிக்கிறது.
4) தேசிய தலைநகர் மண்டலம், மானேஸ்வர் மற்றும் பிற பகுதிகளில் நடந்து வரும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஏ ஐ சி சி டி யு தனது உறுதியான ஆதரவைத் தெரிவிக்கிறது. மேலும், தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறை, வன்முறை, சிறைவாசத்தைக் கண்டிப்பதுடன் தொழிலாளர்கள் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வெவ்வேறு சிறையிலடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
5) தொழிற்சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதலாளிகளின், அரசின் அலட்சியமே காரணம் என்று ஏ ஐ சி சி டி யு கண்டனம் தெரிவிக்கிறது. உயிரிழந்த, காயமடைந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகிறது.
6) ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு, இன்ன பிற திட்டப் பணியாளர்களுக்கான போராட்டத்தை ஏ ஐ சி சி டி யு தொடர்ந்து முன்னெடுக்கும். அவர்களை பணி வரன்முறை செய்து தொழிலாளர்களாக அங்கீகரிப்பதுடன் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், கண்ணியமான பணிச் சூழல் கூடவே சமூக பாதுகாப்புத் திட்ட பலன்களை வழங்கவும் கவுன்சில் கூட்டம் கோருகிறது.
7) தீவிர வெப்ப அலைகள், காற்று மாசுபாடு, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை, சுற்றுச்சூழல் பேரிடர்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவதிப்படுவது குறித்து ஏ ஐ சி சி டி யு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிகழ்வுகளால் நேரிடும் மரணங்களையும் துன்பங்களையும் தடுக்க கொள்கைகள் உருவாக்கப்பட்டு, முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என ஏ ஐ சி சி டி யு வலியுறுத்துகிறது.
8) மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதை ஏஐசிசிடியு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், பாஜக அரசாங்கத்தின் இந்து மேலாதிக்க கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் எந்த ஒரு முயற்சியை எதிர்த்தும் போராட உறுதி பூண்டுள்ளது.
9) அனைத்து தொழிலாளர்களுக்குமான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உறுதி செய்ய ஏ ஐ சி சி டி யு தீர்மானிக்கிறது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பெறப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது, தொழிலாளர் ஈட்டுறுதிக்கான வருமான வரம்பை உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளுக்காக ஏ ஐ சி சி டி யு போராடும்.
10) புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஏ ஐ சி சி டி யு, நாடு முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான அமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
