திருவள்ளூர் மாவட்டம்: அமோனியா வாயு கசிவு விபத்தா? படுகொலையா?

$articleData->title

திருவள்ளூர் மாவட்டம்: அமோனியா வாயு கசிவு விபத்தா? படுகொலையா?

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் புனித பீட்டர் பால் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் 13 வெளிமாநில பெண் தொழிலாளர் இறந்துள்ளனர். எண்ணிக்கை கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிறுவனம், கடல் இறால், நண்டு, மீன் வகைகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு ராயபுரத்திலும் ஒரு கிளை உள்ளது. இந்நிறுவனத்தில் கேரளா, பீகார், ஒடிஷா, உத்தரபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், நேபாளத்தில் இருந்தும் கூட வந்துள்ள 350 தொழிலாளர் பணியாற்றுகின்றனர். 15 வயதே ஆன குழந்தைத் தொழிலாளரும் வேலை செய்கின்றனர்.

உள்ளூர் தொழிலாளர் 50 பேர், தூய்மைப் பணி, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படும் வேலைகள் அனைத்தும் வெளிமாநிலத் தொழிலாளரைக் கொண்டே செய்யப்படுகின்றன.

21.06.2026 அன்று இரவு ஷிப்ட் வேலை பார்த்துவிட்டு தொழிற்சாலை மாடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். கிடங்கு போலிருக்கும் இந்த அறையில் பொருட்களை அடுக்கி வைக்கும் அலமாரிகள் போன்ற 40 - 50 ரேக்குகள்தான் தொழிலாளரது படுக்கைகள். திடீரென பெரும் சத்தத்துடன் தொழிற்சாலையிலிருந்து அமோனியம் வாயு கசிந்து வெளியேறி தொழிலாளர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அறைகள் முழுவதும் பரவியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் ஒலித்திருக்க வேண்டிய அபாய எச்சரிக்கை மணி ஏற்பாடு ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. அதன் காரணமாகவே உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர் உடம்புக்குள் அமோனியா வாயு நுழைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, காதிலும் மூக்கிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளனர். தொழிலாளர் சிலரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொழிற்சாலை நிர்வாகம் செய்திருக்க வேண்டிய வேலையை பொதுமக்களே செய்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் மயங்கிய நிலையில் இருந்த 82 பேரை மீட்டு, அருகில் உள்ள மஞ்சாங்கரனை வேல்ஸ் மருத்துவமனையில் 45 பேர், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில்  20 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர் என அனுமதித்துள்ளனர். ஜூன் 25 நிலவரப்படி 13 தொழிலாளர் உயிரிழந்துவிட்டனர், சிகிச்சையில் இருக்கும் 67 பேரில் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏஅய்சிசிடியு - அவிகிதொச உண்மை அறியும் குழுவின் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், ஆர்.முருகன், வெங்கடேசன், தேவகுமார், ராமதாஸ் உள்ளிட்டோர் 22.06.2026 அன்று பெரும்துயரத்தை உருவாக்கிய ஆலைக்குச் சென்றோம். தொழிற்சாலை உள்ளே சென்று தொழிலாளர் குடியிருந்த அறைகளைப் பார்வையிட்டோம். ஆலை மூடப்பட்டுவிட்டதாகவும் தொழிலாளர் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் செய்திகள் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் அங்கு சென்று பார்த்த போது, ஆலை இயங்கிக் கொண்டிருந்தது!  25 பெண் தொழிலாளர் வேலை செய்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அங்கு இருந்த பல்வேறு பொருட்களை கண்டெய்னர் மூலம் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த காவல்துறையினரிடம் ஆலை செயல்படுவது பற்றி உண்மையறியும் குழு கேள்வி எழுப்பியபோது, மழுப்பலான பதிலே வந்தது. ஆலையில் செயல்பாடு நிறுத்தப்படவில்லை என்றால், போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்த பிறகே ஆலை வாயில் மூடப்பட்டது.

பெரியபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தொழிலாளரை ஏஅய்சிசிடியு - அவிகிதொச தோழர்கள் நேரடியாக சென்று சந்தித்தனர். அங்கு ஆலையைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுள்ள பெண் தொழிலாளர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர் அதே மண்டபத்தில் பக்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் முரட்டுத்தனம் செய்தனர். இதைக் கண்டித்து ஊடகங்களுக்கு செய்தி அளித்தோம். அடுத்ததாக வேல்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளரை சந்தித்தோம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலம் மூன்று மாதம் வரை தள்ளிப் போக அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படுவதாக பதறவைக்கும் செய்திகளும் அங்கு கிடைத்தது.

சுற்றுச்சூழல் சீர்கேடு

தொழிற்சாலை கழிவு நீர் அங்குள்ள விளை நிலங்களில் விடப்படுவதாகவும், அதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த அத்துமீறல்களைக் கண்டித்தும், அந்த தொழிற்சாலையை மூடக் கோரியும் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்றத்தில் தொடர்ச்சியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன. மேலும், சமீபத்தில் நடந்த ஜமாபந்தியில் (வருவாய் தீர்ப்பாயம்) திருவள்ளூர் ஆர்டிஓ விடமும் மனு வழங்கப்பட்டுள்ளதாகவும் பகுதி மக்கள் சொல்கின்றனர். தற்போதைய விபத்தால் அதிர்ச்சியுற்றுள்ள பகுதி மக்கள் இந்தத் தொழிற்சாலைக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

நிலைமைகளை நேரில் கண்டு கொண்டதிலிருந்து, 1961ல் இந்த தொழிலில் கால்வைத்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஆலை உரிமையாளர், எவ்விதமான அடிப்படை சட்டவிதிகளையும் பின்பற்றவில்லையென தெரிகிறது. 2007ல் முறையாக பதிவுசெய்திருப்பினும் அமோனியா போன்ற ரசாயன பொருளைப் பயன்படுத்தும் ஆலை பின்பற்ற வேண்டிய தொழில் பாதுகாப்பு விதிகள், தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் எதையும் நிர்வாகம் பின்பற்றவில்லை. குழந்தைத் தொழிலாளரை பயன்படுத்துதல், சட்டக்கூலி விதிகள், ஈஎஸ்அய், பிஎப் போன்ற சமூக பாதுகாப்பு விதிகளை மீறுதல் போன்ற பல குற்றங்களை செய்துள்ளதாகவேத் தெரிகிறது. ஆண்டுக்கு 300 முதல் 500 கோடிவரை வருமானம் பார்க்கும் இந்நிறுவனத்துக்கு சென்னை ராயபுரம் காசிமேட்டில் தலைமை அலுவலகம் உள்ளது.

ஒடிஷா போன்ற மாநிலங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து ஏஜண்ட்கள் மூலம் சிறுமிகளை அழைத்துவந்து கடுமையாக சுரண்டுவதையும் ஏடுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தொழிலாளர் ஏஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. 1979, புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை அரசுகள் காற்றில் தூக்கி எறிந்து விட்டன. அதுவே, புனித பீட்டர் ஆலை தொழிலாளர் 17 பேர் படுகொலைக்கு காரணம். தமிழ்நாட்டில், அமோனியா பயன்படுத்தும் இதுபோன்ற தொழிற்சாலைகள் 60 க்கு மேல் இருப்பதாக ஏடுகள் தெரிவிக்கின்றன. 6669 ஆபத்தான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. தொழில்துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தொழிலாளர்துறை, வெளிமாநில தொழிலாளர் ஏஜன்ட், தனியார் ஆலைகளின் கொடூர கூட்டணியே தொடரும் தொழிலாளர் படுகொலைக்கு காரணம். 2024 எண்ணூர் ஆலை வாயு கசிவுக்குப்பிறகு அமைக்கப்பட்ட உயர்மட்ட தொழிலக பாதுகாப்புக்குழு ஆலோசனைகள் பின்பற்றியிருந்தால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத இத்தகைய உயிர்பேரிழப்பு நடந்திருக்காது. தொழில் நிறுவனங்களுக்கு லாபமே முக்கியம். தொழிலாளர் உயிர்பாதுகாப்பு அல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமாகியுள்ளது.

1 ட்ரில்லியன் பொருளாதாரம் (திமுக ஆட்சி), 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் (தவெக ஆட்சி) என்பதே ஆட்சியாளர்களின் லட்சியம். எந்தவொரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ 42 ஆயிரம் தரவேண்டும். புனித பீட்டர் ஆலை பெண் தொழிலாளருக்கு அதிகபட்சமாக 15,000 மட்டுமே தரப்பட்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்தத் தொழிற்சாலையை ஆய்வு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவம் குறித்து அரசுக்கு முழு அறிக்கை அளிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதை உடனடியாக அரசு பொதுவெளியில் முன்வைக்க வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளருக்கு தலா 1 கோடி நிவாரணமும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.

விபத்துக்குக் காரணமான  தனியார் நிறுவன முதலாளி மீதும் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் தொழிற்சாலை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ஆலை மூடப்பட வேண்டும்.

பிறமாநில தொழிலாளர் பதிவு, வேலைப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, கண்ணியம் இவற்றை உறுதி செய்ய 1979 சட்டம் தீவிரமாக செயல்படுத்த வேண்டும், மேம்படுத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 24.06.2026 அன்று ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலையில் ஏஅய்சிசிடியு - அவிகிதொச  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள்……பேசினர். இந்த பிரச்சனையில் முதலாவதாக தெருவுக்கு வந்த நமது நிகழ்ச்சி ஊடக கவனத்தையும் பெற்றது.

 

09 July, 2026