தேச விரோத, மக்கள் விரோத, வெறுப்பு அரசியல் நஞ்சை பரப்புகிற, நரேந்திர மோடி அரசு பதவி விலக வேண்டும்!

$articleData->title

தேச விரோத, மக்கள் விரோத, வெறுப்பு அரசியல் நஞ்சை பரப்புகிற, நரேந்திர மோடி அரசு பதவி விலக வேண்டும்

இந்தியத் தொழிலாளர் வர்க்க இயக்கம் மிகவும் பரந்துபட்டது; விரிவானது. தொழிற்சங்க இயக்கம், அதில் ஒரு பகுதி மட்டுமே. அந்தப் பொருளில், தொழிற்சங்க இயக்கம் குறுகியதே. அது உழைக்கும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வாய்ப்பில்லை.

அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில், இணைப்பு சங்கங்களைத் தாண்டி, அவை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிலாளர்கள் தாண்டி, பரந்துபட்ட இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களின் மீது அக்கறை கொண்டதாகும்.

நேரு காலத்தில், சுதந்திரத்திற்குப் பிந்தைய சில பத்தாண்டுகளில், பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் சிகரங்களின் உயரத்தில் இருந்தன. அப்போதிருந்த தொழிற்சங்க இயக்கத்திற்கும் அரசுக்கும் இடையில் எழுதப்படாத ஒரு சமூக ஒப்பந்தம் இருந்தது. அந்தக்  காலத்திலிருந்தே, ஒன்றிய அரசின் பிரதமர் அல்லது தொழிலாளர் அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு இந்தியத் தொழிலாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவை ஒரு வகை நிறுவனங்களாகும். அதற்குரிய சமூக அந்தஸ்தை, அந்தத் தொழிலாளர் மாநாடுகள் பெற்றிருந்தன. கூட்டுபேர உரிமை, இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரை, தொழிற்சங்க இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து, தொழிற்சங்க இயக்கத்தில் ஆகக்கூடுதலான உறுப்பினர்கள் இருந்து, அவை ஆகத்துடிப்போடு ஆகக்கூடுதல் விளைவுகள் தரும் காலம் வரை கூட, தொழிற்சங்கங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் பெரிய, நடுத்தர தொழிற்சாலைகள், இதர வர்த்தக நிறுவனங்களில், தொழில்களில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியிலேயே செயல்பட்டு வந்தன. அந்த வகையில், கூட்டுபேர உரிமை என்பது, உள்ளார்ந்த விதத்திலேயே அதன் வீச்சு மற்றும் ஆழ அகலத்தில் பலவீனத்தைக் கொண்டிருந்தது. இப்போது, மோடி அரசின் தாக்குதல்கள், அந்த மிச்சம் மீதி இருக்கிற அரித்துப்போன கூட்டுபேர உரிமையையும் அடித்து நொறுக்குவதை நோக்கமாக கொண்டவையாகும். நான்கு புதிய சட்டத்தொகுப்புகள் இந்தக்  குறிக்கோளுடன்தான் இயற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தொகுப்புகள், ஒப்பனை/ அலங்கார அளவில் மட்டுமே அமைப்புசாரா, முறைசாரா தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்துகின்றன. இந்தச்  சட்டங்களுக்கும், அந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குதல், பாதுகாப்பான, கவுரவமான பணி நிலைமைகள், தொழிலாளி/ஊழியர் என அங்கீகரித்து, நல்ல சம்பளம் வழங்குதல் ஆகியவற்றிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது.

மோடி 2014ல் பிரதமர் ஆனார். அவரது ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் வர்க்கம் மீதான தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. அவை தொழிலாளர்களுக்கு இருந்து வருகின்ற பாதுகாப்புகளை அகற்றி வெட்டிச் சுருக்கின. இப்போது, அந்த முயற்சிகளுக்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல், நான்கு சட்டத்தொகுப்புகள் வந்துள்ளன.

இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் என்று, நமது அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும்தான், இந்தியாவிலேயே மிகப்பெரிய வேலையளிப்பவர்கள் ஆவார்கள். இவர்கள்தான், தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத, கூட்டுபேர உரிமை விரோத நடவடிக்கைகள் எடுப்பதில், தனியார்/கார்ப்பரேட் முதலாளிகளுக்கு முன்மாதிரி என்று சொல்வது மிகச்சரியான கூற்றாகவே அமையும். உச்சநீதிமன்றம், முன் மாதிரி வேலையளிப்பவராக (மாடல் எம்ப்ளாயர்) அரசு இருக்க வேண்டும் என்று சொன்னதை, ஒன்றிய மாநில அரசுகள், அவர்களது மூலதன விசுவாச கொள்கைகளால், வேறுவிதமாக புரிந்து கொண்டு விட்டன.

ஒன்றிய அரசு மிகப்பெருமளவில் பெண்கள் பணியாற்றும் ஆஷா அரங்கில் (சமூக மருத்துவம்), லட்சக்கணக்கானவர்களை தொழிலாளர்கள் என்று கூட அங்கீகரிக்கவில்லை. சம்பளம், கூலி என்ற சொற்களைக்கூட பயன்படுத்தவில்லை. கவுரவத் தொகை என்று சொல்லி, லட்சக்கணக்கானவர்களை வஞ்சிக்கின்ற, அகவுரவமான நடவடிக்கையில் தான் ஈடுபடுகிறது. திட்டத் தொழிலாளர் என்று அழைக்கப்படுபவர்கள், அங்கன்வாடி, சத்துணவு தொழிலாளர்கள், மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்ற அனைத்து சமூக நலத்துறைகளிலும் பணியாற்றுகிற தொழிலாளர்கள், நாடெங்கும் தொகுப்பூதியத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒப்பந்தமயமும், தனியார்மயமும் பேராபத்தாக உள்ளன. அரசுத் துறையிலிருந்து தனியார் துறை வரை ஒப்பந்தத் தொழிலாளர் முறை, நிரந்தரமின்மை என்பவை சில பத்தாண்டுகளாக தீராத நோய்களாக இந்தியாவில் உழைக்கும் மக்களைப் பீடித்துள்ளன.

இந்திய உழைக்கும் மக்களில், இப்போது புதிய இளைய தொழிலாளர்கள் வருகிறார்கள். இந்திய மக்களில் கணிசமானவர்கள் 35 வயதுக்கு கீழானவர்கள். இந்தப் பல கோடி பேரில் பொறியியல் பட்டதாரிகள், இதர பட்டதாரிகள் இருக்கிறார்கள்; இவர்களில் கிக் - பிளாட்பார்ம் - டிஜிட்டல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்; இவர்களில் முறைசாரா தொழிலாளர்கள் இருக்கிறார்கள்; இவர்களில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றுகிற தொழிலாளர்கள் இருக்கிறார்கள்; இவர்களில் கிராமப்புறங்களில் விவசாயம் சாராத வேலை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்; இவர்களில் நிரந்தரமற்ற ஒப்பந்த பணி செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு விதத்தில், இவர்கள்தான் புதிய இந்தியாவாக, புதிய இளைய இந்தியாவாக இருக்கிறார்கள். இவர்கள் உழைப்புச் சந்தையில் இடம் பெற்றுள்ளனர். கூலி உழைப்பும், மூலதனமும் சந்திக்கிற, உழைப்புச் சந்தையில் இந்தத் தொழிலாளர்களே நிறைந்துள்ளார்கள்.

பெரும் தொழில் குழும பாசிசம் நாடாளும் போது, செல்வம் குவிவதும், அதிகாரம் மய்யப் படுவதும், அவற்றின் உச்சங்களுக்குச் செல்கின்றன. வேலையின்மையும் குறை வருமான வேலைகளும், மூலதனத் திரட்சிக்கு முன்நிபந்தனையாகவும், நெம்புகோலாகவும் உள்ளன.

இவர்கள் நலன்களை முன்னெடுப்பதில், மய்ய தொழிற்சங்கங்கள் வெற்றி பெறவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் தெரியும். நாம் இந்த வகை தொழிலாளர்களை எப்படி புரிந்து கொள்கிறோம்?. இவர்களோடு உரையாடவோ, உறவாடவோ நம்மால் முடிகிறதா? திட்டத் தொழிலாளர்கள் மத்தியில், வடஇந்தியாவில் குறிப்பாக, உத்தர் கண்ட், உத்தரபிரதேசம், பீகாரில் நாம் செய்கிற வேலைகள், கர்நாடகம், தமிழ்நாடு, பீகார் போன்ற மாநிலங்களில் நாம் தூய்மைப் பணியாளர் மத்தியில் செய்கிற வேலைகள் தாண்டி, நமக்கு இந்தத் தொழிலாளர்களோடு எந்த அளவுக்கு உறவுகள் உள்ளன?

நாம் நிச்சயமாக சில அரங்கங்களை தேர்வு செய்து, சில பிரிவு தொழிலாளர்களை தேர்வு செய்து, அங்கு சில குறிப்பிடத்தக்க தகர்த்து முன்னேறுதல்களைச் சாதித்தாக வேண்டும். வளர்ச்சிக்கு வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை.

இந்தியத் தொழிலாளர் வர்க்கம், இந்திய சமூகத்தின் முதன்மை வர்க்கமாக, முன்னணி வர்க்கமாக, முதலாளி வர்க்கத்தோடு போட்டி போட்டாக வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுமென்றால், மிகவும் இயல்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஜனநாயக இலட்சியங்களோடு பயணம் செய்தாக வேண்டும்.

இந்தியாவில், ஏகாதிபத்திய ஆதரவு, பெரும் தொழில் குழும விசுவாச, மதவாத, வெறுப்பு அரசியல் சக்திகள் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறது.

மாற்றுக் கருத்து (Dissent),  பன்மைத்துவம் (Diversity ), ஜனநாயகம் (Democracy ) ஆகியவை கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. தொழிலாளர் வர்க்கம் இந்தப் பிரச்சனைகளில் தலையிட்டாக வேண்டும்.

மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் ஒடிசா, பீகார், வங்கம், அசாம் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். வாக்காளர்களை பட்டியலிருந்து பல லட்சக்கணக்கில் வெளியேற்றினார்கள். தேர்தல் முடிவுகளை திருடினார்கள். மக்களைப் பிளவுபடுத்தி, திசை திருப்பி, நிறுவனங்களை அழித்து இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள்.

ஆனால், மோடி பலவீனம் அடைந்து வருகிறார். சர்வதேச அளவில், மோடி பக்தர்கள் அவரை உலகிற்கே ஆசான் என்று ஏற்றிப்போற்றி பேசினார்கள். மோடி பதிலுக்கு, டிரம்பும் நெத்தன்யாகுவும்தான், தனக்கு மிகச்சிறந்த நண்பர்கள் என்று அடித்துச் சொன்னார். டிரம்ப், ஈரானில் பலத்த அடி வாங்கியுள்ளார். சர்வ வல்லமை வாய்ந்தாக கருதப்படும் அய்க்கிய அமெரிக்கா, ஈரானை மண்ணுக்குள் புதைத்து விடுவேன் என பேசிய அய்க்கிய அமெரிக்கா, பலத்த அடி வாங்கியுள்ளது. எல்லா துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி, உலகிற்கு நம்பிக்கை தரும் விதத்தில் ஈரான் இந்தப் போரில் அடிபணியாமல் நின்றது. உலகின் மிகப்பெரிய தீய சக்தியான இஸ்ரேல், இதுவரை இல்லாத அளவிற்கு தனிமைப்பட்டுள்ளது. டிரம்ப்புக்கு கூட, இஸ்ரேலை தாங்கி நிற்பது சுமையாக மாறியுள்ளது. மோடியின் கூடா நட்பு இந்தியாவுக்கு எந்த நல்ல விளைவுகளையும் தரவில்லை.

இந்தியாவோடு ஒப்பிடும்போது, இத்தாலி பொருளாதார அளவிலும் புவிபரப்பு அளவிலும் மிகச் சிறிய நாடு. அந்த நாட்டின் பிரதமர் மெலோனி, டிரம்பின் பொய்களை துணிந்து தோலுரிக்கிறார். இத்தாலி நாடோ, அவரோ ஒரு போதும் டிரம்புக்கு பணிந்து போக மாட்டார்கள் என, அறுதியிட்டுச் சொல்கிறார். ஆனால், மோடியோ, இந்திய நலன்களை அய்க்கிய அமெரிக்காவிடம் அடகு வைக்கிறார். டிரம்ப், இந்தியாவுக்கு கட்டளை போடுகிறார். இந்தியாவின் மீது, இந்தியா கேட்காத 500 பில்லியன் டாலர் (ரூ.4,50,000 கோடி) பொருட்களை வாங்கியாக வேண்டும் என, நிர்பந்தித்துள்ளார். இந்தியா எரிசக்தி விசயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை வாஷிங்டன் சொல்கிறது; புதுடெல்லி கேட்கிறது.

டாலரோடு ஒப்பிடும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போகிறது. இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையில்லாமல், அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் செய்கிற Portfolio investmentகள்  பெரிய அளவுக்கு திரும்பப் பெறப்படுகின்றன. இந்தியப் பெரும்தொழில் குழும நிறுவனங்கள் பண மாமலைகளின் மீது அமர்ந்து கொண்டிருக்கும்போதும், இந்திய பொருளாதாரத்தில் முதலீடு செய்ய மறுக்கிறார்கள். இந்தியாவில், தனிநபர் நுகர்வு, பலத்த அடி வாங்கியுள்ளது. தங்கம் வைத்திருக்கிற இந்தியர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள், தங்கத்தை அடகு வைக்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. இந்திய மக்கள் துயருற்றுள்ளனர்.

இந்தியா என்ற கருத்தாக்கமே, இந்திய அரசியலமைப்புச் சட்டமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவின் அரசியல் நிறுவனங்கள் நீதித்துறை, நம்பகத்தன்மையை இழந்துள்ளன. இந்த நேரத்தில், நெருக்கடிகளின் சுமைகளை வசதிபடைத்த பிரிவினர் உழைக்கிற மக்களின், வறிய மக்களின் தோள்களில் சுமத்தப் பார்க்கிறார்கள்.

ஒளிக்கீற்றாய் நாட்டின் தலைநகர் மண்டல தொழிலாளர்கள் வெடித்து எழுந்தார்கள். தமக்கு இழைக்கப்படுகிற அநீதிகளை ஏற்க மறுத்தார்கள். மாறாத கூலி, கூடுதல் பணிச்சுமை, மிகை நேர பணிக்கு உரிய ஊதியம் இல்லை, நிரந்தரத்திற்கு இடமே இல்லை என்ற நிலைமைகளை ஏற்க மறுத்தார்கள். இரயில்வே போராட்டத்திற்கு பிறகு, சில ஆயிரம் பேர் சிறை வைக்கப் படுவது, இப்போது இந்தப் போராட்டத்தில் நடந்துள்ளது. இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கிற உத்தரபிரதேசத்தில், ஹரியானாவில், ஒரு பக்கம் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கும் ஆட்சியாளர்கள், மறுபக்கம் குறைந்தபட்ச சம்பளம் ரூ.12,000, ரூ.16,000 என அறிவித்துள்ளனர். புதிய சட்டத் தொகுப்பு வந்த பிறகு, முதல் முறையாக அறிவிக்கப்படுகிற, இந்தக் குறைந்தபட்ச சம்பள அறிவிப்புகளில், திறன் வாய்ந்த தொழிலாளிக்கும் சம்பளம் ரூ.20,000த்தை எட்டாது என்பது காணத்தக்கதாகும். தலைநகர் மண்டலத்தில் துவங்கியுள்ள இந்த போர், இந்தியா முழுவதும் நிச்சயம் நடக்கும்.

இந்திய இளைஞர்களுடைய சீற்றம், ஆதங்கம் ஆகியவை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியாக வெளிப்பட்டுள்ளது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும், கட்சி மாறிகளுக்கு இடமிருக்கக் கூடாது, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், நீட் வேண்டாம், தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். பல லட்சக் கணக்கான இந்த இளைஞர்கள், வழமையான அரசியலுக்கு வெளியில் ஒதுங்கி நின்ற இந்த இளைஞர்கள் இப்போது, அவர்கள் விரும்பும் மாற்றத்திற்காக பொது வெளியில் கோரிக்கை வைக்கிறார்கள். வீதிக்கு வரவும் துவங்கி உள்ளனர். இதுவும் நம்பிக்கை தருகிற ஒரு ஒளிக்கீற்றுதான்.

மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் இதற்கு மேல் பெரிதாக வெற்றி பெற ஏதுமில்லை. அவர்களது பொருந்தாத வெற்றிகளின் சுமையே, அவர்களை அழுத்தும் பாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாடு ஒரு புதிய எழுச்சியின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது.

அன்று 1942ல், இந்தியாவின் விடுதலை இயக்கம் வெள்ளையனே வெளியேறு என முழங்கியது. தியாகம் பல செய்து, களம் பல கண்டது. இப்போது, இந்த 2026 ஆகஸ்ட் மாதம் தேச விரோத, மக்கள் விரோத, வெறுப்பு அரசியல் நஞ்சை பரப்புகிற, நரேந்திர மோடி அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தோடு, இந்தியாவின் அனைத்து பகுதி உழைக்கும் மக்களோடும் கரம் கோர்த்து, ஏஅய்சிசிடியு களம் காண வேண்டும்.  


09 July, 2026