கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன்களுக்காக, வேளாண் நிலங்கள் கிராமப்புற ஏழைகள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை முறியடிப்போம்!

$articleData->title

கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன்களுக்காக, வேளாண் நிலங்கள் கிராமப்புற ஏழைகள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை முறியடிப்போம்!

காவிரி டெல்டாவில், இறால் பண்ணைகள் மற்றும் அனல் மின்திட்டங்களுக்காக விவசாயிகள் விவசாய நிலங்களை இழந்த வரலாறு:-


தமிழ்நாட்டின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக நஞ்சை விவசாய  விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டன. கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட அனல், கேஸ் மின்நிலையங்களுக்காக, பினாமி மிராசுதார்களிடம்/ நிலப்பிரபுக்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக வாங்கப்பட்டுள்ளன.  

மயிலாடுதுறை மாவட்டத்தில், 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்சவரம்பு சட்டத்தை ஏய்த்த உயர்சாதி நிலப்பிரபுக்கள்,  இத்தகைய பினாமி பெயரில் வைத்துள்ள பண்ணைகளை ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை மின்நிலையங்கள் போன்ற பெருந்திட்டங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

1990 களில், மயிலாடுதுறை எம்.பி யாக இருந்த திரு. மணிசங்கர் அய்யர் 'இந்தத் தொகுதியை துபாயாக மாற்றுகிறேன்' என்று மயிலாடுதுறை மாவட்டம் கடலோரப்பகுதியில் விவசாய நிலங்களில் இறால் பண்ணைகள் கொண்டு வருவதற்கு முனைப்பாக செயல்பட்டார். இதனால், சீர்காழி தாலுகா, பெருந்தோட்டம் ஊராட்சியில் மட்டும் இறால் பண்ணைகள் அமைக்க சில தனியார் முதலாளிகள், சுமார் 400 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் வாங்கினார்கள். அப்போது, 90 களில், 'இறால்பண்ணைகள் வந்தால், விவசாயம் - சுற்றுச்சூழல் அழியும்' என அதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்தப் பின்னணியில்,'லாப்டி' தொண்டு நிறுவன காந்தியவாதிகள் ஜெகநாதன் - கிருஷ்ணம்மாள் இறால் பண்ணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றனர். இதனால், இறால் பண்ணைகளுக்காக வாங்கிய நிலங்கள் இன்றுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அதற்குப் பிறகு, 2008 ல் சிந்தியா பவர்பிளான்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனம் பெருந்தோட்டம் ஊராட்சியில் சுமார் 900 ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கியது. இந்த நிலங்களில் பெரும்பகுதி, வெளியூர்களில் குடியேறிவிட்ட பண்ணையார்கள், பினாமிகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவற்றில் குத்தகைக்கு சாகுபடி செய்த ஏழை தலித் விவசாயிகளுக்கு அற்ப சொற்ப நிவாரணம் கொடுத்துவிட்டு, அந்த நிலங்களை சிந்தியா பவர்பிளான்ட்டுக்கு விற்றுவிட்டு, அவர்களை வெளியேற்றி விட்டார்கள்.

சிந்தியா பவர்பிளான்ட் நிறுவனம், பெருந்தோட்டம் ஊராட்சியில் எஞ்சியிருந்த சிறுகுறு விவசாயிகளின் நிலத்தையும் வாங்குவதற்கு பல தந்திரங்களை கையாண்டனர்; 'அங்கு பயோடீசல் கம்பெனி ஆரம்பிக்க உள்ளதாகவும், நிலத்தை தங்களுக்கு விற்றுவிட்டாலும், வேளாண் நிலம் விவசாயிகளிடமே இருக்கும் எனவும், விதை உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களையும் தருவோம்,  தொடர்ந்து விவசாயம் செய்து,  ஆமணக்கு விளைவித்து தங்களிடம் தரவேண்டும்'  என்று கூறியதை நம்பி அனைத்து ஏழை விவசாயிகளும் தங்கள் நிலத்தையும் பவர்பிளாண்டிற்கு கொடுத்து விட்டார்கள். அதன் பிறகுதான் அங்கு அனல்மின் நிலையம் அமைய இருப்பது தெரியவந்து அனல்மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைக் கட்டமைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக,தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த அனல் மின்நிலையத் திட்டத்திற்குத் தடை விதித்தது. 

இதனால், பெருந்தோட்டம் ஊராட்சியில்  மட்டும், சுமார் 1300 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன; இந்த நிலங்களை,நிலமற்ற கிராமப்புற ஏழைகளுக்கு பிரித்துத்தர வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்.

இத்தகைய பின்னணியில், சிந்தியா பவர்பிளாண்ட் தனது நிலங்களை இந்தோ நேஷனல் லிமிடெட் பெயருக்கு மாற்றம் செய்தது. 2025 ல், அதன் கூட்டு நிறுவனமாக நிப்போ கிரீன் எனர்ஜி உருவாக்கப்பட்டு, ஒரு பெரிய சோலார் / சூரிய ஒளி மின்திட்டம் கட்டமைக்க முயற்சி செய்கிறது; இதற்கு எதிராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தோட்டம் ஊராட்சி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். அரசின் அடக்குமுறை மற்றும் வழக்குகளையும் சந்தித்து வருகிறார்கள்.

பெருந்தோட்டத்தில், பெரியதொரு சோலார் மின்திட்டம் யாருக்காக?

அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் சகோதரர் ஓபுல் ரெட்டி நிறுவிய சிந்தியா பவர் ஜெனரேட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (SPGCPL) கம்பெனி, சீர்காழி தாலுகா, பெருந்தோட்டம் ஊராட்சியில், 1320 மெகாவாட் (2 X 660 மெகாவாட்) நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையத்தை நிறுவி செயல்படுத்தியது.  அனல் மின்நிலையத்திற்கு எதிர்ப்பும், நீதிமன்றத் தடைகளும் உருவானதால், சோலார் / சூரியஒளி மின்திட்டங்கள் உருவாகின.

நிப்போ கிரீன் எனர்ஜி பி லிமிடெட் (Nippo Green Energy private limited) கார்ப்பரேட் அப்பல்லோ மருத்துவமனையின் துணை நிறுவனம் ஆகும்;  அப்பல்லோ கார்ப்பரேட் நிறுவனத்திற்கு  சலுகை விலையில்  மின்சாரம் பெறுவதற்காகவே இந்த சோலார் நிறுவனம் துவக்கப்படுகிறது. 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட், நிப்போ கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்டில் 26% பங்கு மூலதனத்தை (Equity Stake) கொண்டுள்ளது. அதேவேளை, இந்தோ நேஷனல் லிமிடெட் 74% பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. நிப்போ கிரீன் நிறுவனம் இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி (Joint Venture) நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டம் பகுதிக்கு அருகாமையில் உள்ள (பிள்ளை பெருமாநல்லூர் முதல் தரங்கம்பாடி வரை)  PPN மின் நிலையம், (PPN Power Generating Company Private Limited) என்கிற Gas plant நிறுவனத்தை அப்பல்லோ குழுமம் தான்  (Apollo Infrastructure Projects Finance Company Pvt. Ltd.)  நிறுவியுள்ளது. அதில், 97.26% பங்குகள் அப்பல்லோ மருத்துவமனை உரிமையாளர்களுடையது ஆகும்.

நிப்போ கிரீன் எனர்ஜி நிறுவனத்தின், பெருந்தோட்டம் சோலார் மின்நிலையம் சட்டப்படியானதல்ல!

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் ஆவணங்கள் , 'நிப்போ கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், இந்தோ நேஷனல் லிமிடெட்டிடமிருந்து திட்டத்திற்கான நிலத்தை 25 ஆண்டுகள் குத்தகை (Lease) அடிப்படையில் பெற்றுள்ளது. திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக, அந்த நிலம் தொடர்புடைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான ஒப்புதல்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.' என கூறியுள்ளது.நீதிமன்றம் அது உண்மைதானா என உறுதிப்படுத்தியதாக கூறவில்லை.

மாண்பமை உயர்நீதிமன்றம், கம்பெனி பெற வேண்டிய அனுமதிகள் மற்றும் அமைவிடம் குறித்த பல்வேறு அடிப்படை அம்சங்களை மனதில் கொள்ளாமலேயே, சோலார் மின்நிலைய கட்டுமானப் பணிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க உத்தரவிட்டது.


நிப்போ கிரீன் எனர்ஜி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ள மின்சாரத்தை விநியோகிக்க தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்புதல் பெற்றுள்ளதே தவிர, ஒரு மின்நிலையத்தை துவங்கத் தேவையான சட்டப்பூர்வமான விதிகள் / நிபந்தனைகள் பலவற்றையும் பூர்த்தி செய்யவில்லை.முதன்மையாக, வேளாண் சாராத நிலங்களே அதனிடம் இல்லை; 

சோலார் மின்திட்டத்திற்காக குத்தகைக்கு வாங்கியுள்ள  நிலங்கள் நன்செய் நிலங்கள் ஆகும். அவை, நஞ்சை அல்லாத நிலவகையாக இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. தற்போதுதான் அதற்கான அறிவிப்புகளை வருவாய்துறை மேற்கொண்டுள்ளது; ஆனால், தொழில் துவங்கத் தேவையான ஒப்புதல்கள் எல்லாம் வழங்கப்பட்டதாக, நீதிமன்றத்தில் பொய் தகவல்களை தெரிவித்து கட்டுமானப் பணிகளை துவக்கியுள்ளது.

நஞ்சை நிலங்களை பயன்படுத்துகிறது என்பதால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் மீதான Social impact assessment ஆய்வை மேற்கொள்ளவில்லை. மேலும், பெருந்தோட்டம் ஊராட்சி கிராமசபையின் அனுமதி பெறப்படவில்லை.


பொதுமக்கள் கருத்து கேட்பு public hearings  நடத்தப்படவில்லை.TNPCB மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறப்படவில்லை.

கடலோர பகுதிக்கு மிக அருகாமையில் கம்பெனி அமைய இருப்பதால், CRZ Coastal Regulatory Zone களுக்கு உரிய விதிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. கடல்வாழ் உயிரினங்கள், மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மீதான, EIA சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை.

CRZ முகமையிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை


காவிரி டெல்டா பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலத்தில் பெரும் சோலார் மின்திட்டங்கள் வேண்டாம்!

ஒரு மெகாவாட் 1 MW சோலார் மின் திட்டத்திற்கு குறைந்தபட்சம் 4 ஏக்கர் நிலம் அவசியம் வேண்டும். 100 MW திட்டம் எனில் 400 ஏக்கர் வேண்டும். பெருந்தோட்டம் ஊராட்சியில் அமையவுள்ள திட்டம் சுமார் 200 MW எனத் தெரிகிறது; பழைய சிந்தியா தற்போதைய இந்தோ நேசனல் லிமிடெட் தனது 900 ஏக்கர் நஞ்சை நிலத்தை நிப்போ கிரீன் எனர்ஜிக்கு 25 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கியுள்ளது. 

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட காவிரி டெல்டா பாதுகாக்கபட்ட வேளாண் மேம்படுத்துதல் மண்டலத்தில் இந்த கம்பெனி அமைகிறது. நஞ்சை நிலங்களில் கம்பெனிகள் அமைக்கப்படுவதால், நெல் உற்பத்திக்கு (உணவு தானிய உற்பத்தி) கடும் பாதிப்பு ஏற்படும்.

தமிழக அரசு

1."காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மேம்படுத்துதல் மண்டலத்தில் விவசாய விரோத பெருந் தொழில் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்!" என்ற  உறுதியை விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்திட வேண்டும்.


2.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பெருந்தோட்டம் ஊராட்சிகளில், விவசாய விரோத நிப்போ கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் சோலார் மின் திட்டத்திற்கு தடை விதித்திட வேண்டும்

3.தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி வேளாண் மேம்படுத்துதல் மண்டலத்தில் வீழ்ச்சியடைந்துள்ள உணவு (நெல்) உற்பத்தியை அதிகரிக்க, முதலாளித்துவ தொழில் நிறுவனங்களின் பிடியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நஞ்சை நிலங்களை, தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி ஏழை விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும்!

4.மயிலாடுதுறை மாவட்ட மண், மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்க* காவிரி வேளாண் மண்டல விவசாயத்தைப் பாதுகாக்க - பெருந்திரள் மக்கள் இயக்கம் எழட்டும்!

 

09 July, 2026