உலகெங்கிலும் உள்ள பல பொருளாதாரங்களை சீர்குலைத்த வர்த்தகப்போருக்குப் (Tariff War) பிறகு, வெனிசுலா ஜனாதிபதியை சிறைப்பிடித்து டிரம்ப் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினார். மேலும் ஈரானின் உச்சத் தலைவரைக் கொன்று ஒரு போரைத் தொடங்கினார். வெனிசுலா அரசாங்கம் சரணடைந்து அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது, ஆனால், ஈரான் அவ்வாறு செய்யவில்லை. ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியும், ஹார்முஸ் நீரிணையை முடக்கியும் பதிலடி கொடுத்தது.
அமெரிக்காவின் பலவீனம்
கடந்த இரண்டு மாத காலப் போர் அமெரிக்காவின் நிதி மற்றும் இராணுவப் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது பாரம்பரிய ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் நேட்டோ (NATO) கூட்டணியின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தது மட்டுமின்றி, அவர்களில் சிலர் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களை இக்காலத்தின் நாஜிக்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் வளைகுடா நாடுகள், தென் கொரியா, ஜப்பான் ஆகியவை இனி எதிர்காலத்திலும் அதைத் தொடர முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளன.
நிதி ரீதியாக, அமெரிக்கா இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு 38 நாட்கள் நீடித்த இந்த மோதலின் ஒட்டுமொத்த நிதிச் செலவு 28 பில்லியன் டாலர் முதல் 35 பில்லியன் டாலர் வரை (நாளொன்றுக்கு சுமார் 1 பில்லியன் டாலர்) இருக்கும் என இரண்டு சுதந்திரமான குழுக்கள் மதிப்பிட்டுள்ளன. ஏப்ரல் 2026 நிலவரப்படி, 2027 ஆம் நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை இல்லாத அளவிலான 1.5 டிரில்லியன் டாலர்களைக் கோரியுள்ளார், இது சுமார் 40% முதல் 44% வரையிலான அதிகரிப்பாகும்.
இராணுவ ரீதியாகப் பார்த்தால், அமெரிக்காவின் ஏவுகணை இருப்பில் ஏறக்குறைய பாதி பயன்படுத்தப்பட்டுவிட்டது, ஏவுகணை இருப்பை மீண்டும் நிரப்புவதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என்று இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க இராணுவப் பாதுகாப்பு அமைப்பின் வலிமை பலவீனமடைந்துள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு போர் விமானங்கள், வளைகுடாவில் உள்ள ரேடார் நிலையங்கள், மற்றும் நீண்ட காலமாக உருவாக்கப்பட்ட இராணுவத் தளங்கள் ஈரானின் எதிர் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிகரித்த நிதிச்சுமை அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. அமெரிக்காவில் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்கள் லட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். டிரம்பின் ஆதரவாளர்களிடையேயும் அதிருப்தி வளர்ந்து வருகிறது.
மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை, காசாவில் நடக்கும் போரினால் இஸ்ரேலின் பொருளாதாரம் ஏற்கனவே அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய போரின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் 3.5% குறைவு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ ரீதியாகவும் அது தனது ஏவுகணை இருப்புகளில் பெரும்பாலானவற்றைத் தீர்த்துவிட்டது. இராணுவத்தில் 12,000 வீரர்கள் பற்றாக்குறை உள்ளது, இது விரைவில் இன்னும் அதிகரிக்கலாம். நெதன்யாகு கோருவது போல் ஹிஸ்புல்லாவை இராணுவத்தால் நிராயுதபாணியாக்க முடியாது என்று இஸ்ரேலிய இராணுவத் தளபதியே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் ஒட்டுமொத்த நிலைமை இதுதான். ஈரானிலும் பெரிய அளவிலான அழிவுகள் நிகழ்ந்துள்ளன. அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள், மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனை உள்கட்டமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல அழிக்கப்பட்டுள்ளன, 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு அழிவுகள் ஏற்பட்ட போதிலும், அமெரிக்க-சியோனிச ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது போர் நோக்கங்களை நிறைவேற்றுவதை ஈரான் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.
இலக்குகளை மாற்றுதல்
போரின் தொடக்கத்தில், ஈரானில் ஆட்சி மாற்றமே போரின் நோக்கம் என்று டிரம்ப் கூறினார். இது சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததும், அவர் தனது இலக்குகளை மாற்றத் தொடங்கினார். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவது என்றும், பின்னர் ஏவுகணை இருப்புகளையும், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனையும் அழிப்பது என்றும் அறிவிக்கப்பட்ட நோக்கங்கள் மாறின. இதற்கிடையில் அமெரிக்காவும் சியோனிச காலனித்துவவாதிகளும் பெரும் இழப்புகளை சந்தித்தனர். போரின் தாக்கத்தைப் பரப்பவும், அதனை ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாற்றவும், ஈரான் மிக முக்கிய உத்தியாக ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக முடக்கியது. இந்த சமச்சீரற்ற போரில், ஈரான் அதனை நீட்டித்து தனது எதிரியை பலவீனப்படுத்தவும், அமைதி ஒப்பந்தத்தின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்களை வற்புறுத்தவும் முயற்சிக்கிறது. பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் முடிந்தாலும், தார்மீக ரீதியாக ஈரானே முதன்மை நிலையில் உள்ளது.
மாறியுள்ள உலக ஒழுங்கு
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், பொருளாதாரத் துறையில் சீனாவின் முன்னேற்றம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI tech), தகவல்தொடர்பு, ரோபாட்டிக்ஸ், எலக்ட்ரானிக் பேட்டரிகள், பசுமை ஆற்றல் ஆகியவற்றில் அது முன்னணியில் உள்ளது, மேலும் பல முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவை முந்தியுள்ளது. ஆழ்கடல் சுரங்கம் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கூட, அமெரிக்கா பெருமளவு பின்தங்கியுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா உருவெடுத்துள்ளது. இரயில்வே, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளின் கட்டுமானத்தை சீன மூலதனம் இயக்குகிறது; அதே வேளையில் அரிய வகை பூமிக் கனிமங்கள் (rare earths) மற்றும் பிற மூலோபாய கனிமங்கள் மீதான தனது கட்டுப்பாட்டையும் அது சீராக விரிவுபடுத்தி வருகிறது. சீன நாணயம் யுவானின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இராணுவத் துறையிலும் சமநிலை மாறி வருகிறது. சீனா ஒரு வலிமையான படையை உருவாக்கி வருவதோடு, அமெரிக்காவை விட ஐந்து முதல் ஆறு மடங்கு வேகமாக ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. பெருமளவிலான 'மூன்றாம் உலக' நாடுகளை தனது விரிவான பெல்ட் மற்றும் ரோடு (Belt and Road) திட்டத்தில் இணைத்து, ஒப்பீட்டளவில் பலவீனமடைந்து வரும் அமெரிக்காவிற்கு எதிராக, வளர்ந்து வரும் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக தனது நிலையை அது வலுப்படுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அதிகரித்து வரும் முரண்பாடு மற்றும் நேட்டோவின் இருப்பு குறித்த கேள்விக்குறியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் நிலைப்பாடு
இங்கு இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் நிலையற்றதாக உள்ளது. ஒருபுறம் ஏகாதிபத்தியப் பொருளாதாரங்களுக்கு அது அடிபணிந்து கிடப்பதாலும், மறுபுறம் பல-துருவ உலக அமைப்பால் இந்தியாவுக்கு பேரம் பேசும் வாய்ப்பு கிடைப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய சந்தை, மலிவான உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை ஏகாதிபத்தியவாதிகள் குறிவைக்கின்றனர். இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் முரண்பாடுகள் இந்த இடைவெளியைச் சுருக்கும். இந்தியா தீர்க்கமாக ஒரு முகாமைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்காவின் வர்த்தக கட்டணங்களுக்கு (tariffs) இந்தியா முழுமையாகச் சரணடைவதையும், அமெரிக்க-சியோனிச முகாமுக்கு பகிரங்கமாக ஆதரவளிப்பதையும் நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம். பயங்கரவாத அமெரிக்காவால் மினாப்பில் 168 பள்ளி மாணவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கூட இந்தியா கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தான் மத்தியஸ்தராக இருக்கும் ஒரு சூழ்நிலையில், மோடியின் "விஸ்வகுரு" வாய்வீச்சு அவமானப்பட்டு நிற்கிறது.
இந்தியாவின் சரணடைவை, அமெரிக்காவின் மீதான அதன் பொருளாதாரச் சார்புநிலையின் வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி இலக்கு அமெரிக்காவாகும். அந்நிய நேரடி முதலீட்டைப் (FDI) பொறுத்தவரை, மொரீஷியஸ் (182.2 பில்லியன் டாலர்) மற்றும் சிங்கப்பூருக்குப் (179.48 பில்லியன் டாலர்) பிறகு, அமெரிக்கா மூன்றாவது இடத்தில் (76.26 பில்லியன் டாலர் - ஏப்ரல் 2000 முதல்) உள்ளது. சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸில் இருந்து வரும் முதலீடுகளில் பெரும் பகுதி, அடிப்படையில் வரியைத் தவிர்ப்பதற்காக திருப்பி விடப்படும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் முதலீடுகளே என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் மொத்தப் பன்முகக் கடன்கள் (multilateral loans) 80.77 பில்லியன் டாலர்களாகும். இதில் 38% அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் (IMF)-லிருந்து வருகிறது; ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான ஜப்பான், மிகப் பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக உள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்கம்
இந்த மோதலின் மிகப் பெரிய சுமையை, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கமே சுமக்கிறது. எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு எரிவாயு (LPG) நெருக்கடியைத் தூண்டி சிலிண்டர் விலைகளை உயரச் செய்துள்ளது. சூரத்தில் உள்ள ஜவுளித் துறையில் மட்டும், தொழிற்சாலைகள் தங்களது செயல்பாடுகளைக் குறைத்ததால், சுமார் 1,50,000 தொழிலாளர்கள் (மொத்தத் தொழிலாளர் தொகுப்பில் 30%) தங்களது கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர். ஒரு முக்கிய பீங்கான் உற்பத்தி மையமான மோர்பியில், ஆலை மூடல்கள் மற்றும் பணிநீக்கங்கள் காரணமாகத் தொழிலாளர்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர். இந்தியாவின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் (remittances) வளைகுடா நாடுகள் 38% பங்களிப்பை வழங்குகின்றன. அங்கிருந்து மார்ச் மாத இறுதிக்குள் 3,75,000-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்; இதற்கு முன்பும் பல்லாயிரக்கணக்கானோர் திரும்பிய நிலையில், இது ஏற்கனவே இந்த வருகையை உள்வாங்க முடியாத கிராமப்புறப் பொருளாதாரங்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்ந்து வரும் எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் (யூரியா சுமார் 30% அதிகரித்துள்ளது), ஒரு முக்கியமான நடவுப் பருவத்தின் போது விவசாயிகளுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கின்றன. எரிசக்தி இறக்குமதிகளில் ஏற்பட்ட இடையூறு மற்றும் குறைந்து வரும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் ஆகியவற்றின் காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 94.8 ஆக வீழ்ச்சியடைந்தது. குறைந்த வளர்ச்சி, அதிகப் பணவீக்கம் மற்றும் பலவீனமான நாணயம் ஆகிய மூன்றின் கலவையை இந்தியா எதிர்கொள்கிறது என்று கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) எச்சரித்துள்ளது. எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 என்ற அளவில் நீடித்தால், 2027 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.6% ஆகக் குறையக்கூடும், அதுவும் கூட தெளிவற்ற அரசாங்கத் தரவுகளின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இஸ்லாமியக் குடியரசு
போர் தொடங்கியபோது, ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் கோபத்தைப் பயன்படுத்தி, தாக்குதலுக்குப் பிறகு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அமெரிக்கா தவறாகக் கருதியது. ஆனால் அந்தத் தவறான கணக்கீடு ஆட்சிக்கு எதிரான மக்களின் மாபெரும் எதிர்ப்பை நிராகரித்து விடாது. ஜனவரி போராட்டத்தின் போது மக்களின் கோபம் வெடித்ததை நாம் பார்த்தோம். ஜனவரியில் போராடிய சில எதிர்ப்பாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். இப்போது உள் முரண்பாடுகளுடன் ஒப்பிடுகையில், ஈரானிய மக்களுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய அச்சுக்கும் இடையிலான முரண்பாடு மேலான நிலையை எடுத்துள்ளது. ஈரானில் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன, பணவீக்கம் 40% ஆக உயர்ந்துள்ளது. வேலை செய்யத் தகுதியானவர்களில் கிட்டத்தட்ட 50% பேருக்கு வேலை இல்லை. இந்த நெருக்கடியில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் முக்கியப் பங்கு வகித்தாலும், ஈரானிய ஆளும் வர்க்கத்தின் சுரண்டலும் ஒரு பெரிய காரணியாகும்.
ஈரான் நாட்டின் 1% மக்கள் 30% செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். இஸ்லாமிய ஆட்சியின் கருத்தியல் ஆயுதப் பிரிவான IRGC (இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை), ஒரு இராணுவ அமைப்பு மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. எண்ணெய் துறையின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் அதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஈரான் அடிப்படையில் அதன் மேல்தட்டினரால் ஆளப்படுகிறது, எனவே அது அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கிறது என்பதற்காகவே அதை அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடாக வகைப்படுத்துவது தவறாகும். அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளின் போது கூட ஈரானிய அரசு பிற மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இப்போது அது ரஷ்ய மற்றும் சீன ஏகாதிபத்தியவாதிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அவர்கள் போரில் ஈரானுக்கு வெளிப்படையாக உதவி செய்கிறார்கள்.
ஈரான் நாடானாது ஏகாதிபத்திய கட்டமைப்புக்குள் நின்றாலும், இது ஒரு ஒடுக்கப்பட்ட நாடாகும். எனவே, அமெரிக்க-சியோனிச ஆக்கிரமிப்புக்கு எதிராக அதன் ஆட்சியாளர்கள் நடத்தும் எதிர்ப்புப் போர் நியாயமானதாகும், மேலும் இது சர்வதேச முற்போக்கு சக்திகளால் ஆதரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அதன் மக்கள்-விரோத மற்றும் சார்புத் தன்மையைப் புறக்கணிக்கக் கூடாது. ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து ஈரானின் விடுதலையை தற்போதைய தலைமையால் அடைய முடியாது, அது சில மறுசீரமைப்புகளுக்கு மட்டுமே வழிவகுக்கும். இருப்பினும், இந்த எதிர்ப்புப் போராட்டம் மேற்கு ஆசியாவிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தடுத்து அதன் நோக்கங்களை முறியடிப்பதில் ஈரான் அடைந்த வெற்றி, அரசியலிலும் மக்களின் போராட்டங்களிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். ஈரானிலேயே இது ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வுக்கு வழிவகுக்கலாம்.
தமிழாக்கம் - தேசிகன்
